Whole Numbers and Half Truths - நூல் அறிமுகம்

“The world cannot be understood without numbers. But the world cannot be understood with numbers alone.” ― Hans Rosling



பொதுவாகவே தகவல்கள் நிறைந்த புத்தகங்களை வாசிக்க அதிக நேரம் பிடிக்கும், ஒரு தகவலை உள்வாங்கி, சீர்தூக்கி பார்த்து, பின்பு செரிப்பதற்காக எடுக்கும் நேரம் அதிகம். இந்த நூல் வெளிவந்த காலகட்டமும், அதில் அடங்கி இருக்கும் கருத்துக்களும் எதார்த்தத்தை தெளிவுபடுத்துகிறது. சில எதிர்மறையான முன்முடிவுகள்(Prejudice) நேர்மறையாக மாறவும் , பல நேர்மறையான முன்முடிவுகள்(Preconceptions) எதிர்மறையாக மாறவும் இந்த நூல் பெரிதும் உதவியுள்ளது. தரவுகளை (Datas) வைத்து இவர் சொல்லும் கதைகள் எல்லாம் எளிதாக வாசகருடன் ஒரு இணைப்பை ஏற்படுத்தி கொள்கிறது, இந்தியாவின் வளமான எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இந்நூலை அணுகினால் பெரும்பாலான எதார்த்த நடைமுறைகள் அதற்கு ஒவ்வாத ஒன்றாகவே இருக்கிறது. 

 இருட்டில் இருந்து வெளிச்சத்தை அடைவதற்கான வழிகாட்டியாக நாம் இந்த தரவுகளை எடுத்துக்கொள்வதா அல்லது இருளில் சிக்கி தவிக்க போவதற்கான முன்னோட்டமாக இதை எடுத்துக்கொள்வதா என்பதை படிப்பவர் தான் முடிவு செய்யவேண்டும். இருவேறு வழிமுறைகளுக்கான தரவுகளையும் இந்நூல் கொண்டிருக்கிறது. 

 இந்தியாவில் குற்றங்கள் காவல்துறையாலும், நீதி துறையாலும் எப்படி அணுகப்படுகிறது, இந்தியர்களின் உணர்வுகள்-சிந்தனைகள்-நம்பிக்கைகள் எல்லாம் எத்தகையதாக இருக்கிறது, எதை அடிப்படையாக கொண்டு இந்தியர்கள் வாக்களிக்கிறார்கள், காதல்- கல்யாணம்- உணவுமுறை- கொண்டாட்டங்கள் - வாழ்க்கை முறை போன்றவை எல்லாம் இந்தியர்களிடம் எப்படிப்பட்டதாக இருக்கிறது, இந்தியர்களின் வருவாயும்- செலவழிக்கும் தன்மையும் எப்படிப்பட்டதாக இருக்கிறது, இந்தியா(இந்தியர்களுக்கு) எப்படி வயதாகிறது, இந்தியர்கள் எங்கு வசிக்கிறார்கள், இந்தியர்கள் எப்படி நோய்வாய்ப்பட்டு அதிலிருந்து மீள்கிறது என்பதை எல்லாம் விரிவாக பேசியுள்ளார் நூலாசிரியர். 

 நூலின் மற்றுமொரு முக்கிய அம்சமாக நான் கருதுவது, மாநிலங்களிடையே நிலவும் ஒற்றுமைகளை வேற்றுமைகளையும் மேற்சொன்ன பகுதிகளில் எல்லாம் சுட்டிக்காட்டியுள்ளார். வெறுமனே இந்தியா என்றில்லாமல் மாநிலங்களுயிடையே நிலவும் துறைசார், சிந்தனைசார், பண்புசார் வேற்றுமைகளை குறிப்பிட்டும் எழுதியுள்ளார். ஒருவொரு மாநிலங்களுக்கும் இப்படிப்பட்ட புத்தகங்கள் எழுதப்பட்டால் எதிர்காலத்தில் கொள்கைகளை வகுப்பதற்கு(Policy making) ஏதுவாக இருக்கும். 


 தரவுகள்(Data) என்று வரும்போது அதன் உண்மைத்தன்மையும்(Integirity) முக்கியத்துவம் பெறுகிறது, உண்மைத்தன்மை கொண்ட தரவுகள் வருவதே குறைந்துள்ள காலகட்டத்தில் அதன் வீச்சை மட்டுப்படுத்த அரசும் சில ஜால்ரா ஊடகங்களும் மும்முரமாக இறங்கி விடுகிறார்கள். மக்களிடமும் தரவு சார்ந்த அணுகுமுறை(Data centric approach) இன்னும் ஏற்படவில்லை, பிற்போக்கு சக்திகளின் எழுச்சியை நாம் அப்படி தான் புரிந்துகொள்ளவேண்டி உள்ளது.

 இதில் பெரும்பாலான தரவுகள் அரசிடமிருந்தும் அங்கீகரிக்கப்பட்ட பொதுநல நோக்கம் கொண்ட தனியார் நிறுவனங்களிடமிருந்தும் பெறப்பட்டதாகும். அரசு சரியான தகவல்களை மூடி மறைக்க முயலும்போது தனியாரை சார்ந்திருக்கும் கட்டாயம் இயற்கையாகவே ஏற்படுவதாக குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.



வளர்ந்த மாநிலங்களில் குற்றங்கள் அதிகம் பதிவுசெய்யப்படுகிறது(சிறந்த நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மை காரணமாக)


பெண்களுக்கென தனி காவல்நிலையம் இருக்கும் பகுதிகளில் பெண்கள் மனஉறுதியுடன் புகாரளிக்க வருகிறார்கள்.

கல்விக்கும் மத நம்பிக்கைக்கும் ஒரு சம்மந்தமும் இருப்பதில்லை, படித்தவர்கள் தான் அதிகம் பக்தியோடும் பழமைவாத மனநிலையிலும் இருக்கிறார்கள்.(Educated minds are still irrational.) 64% ஹிந்துக்கள் இன்னும் “இந்தியர்களாக இருப்பதற்கு ஹிந்துவாக இருக்க வேண்டும்” என்றே நம்புகிறார்கள். நகரமயமாக்கல் எந்த வகையிலும் சாதி-மத முரண்பாடுகளை குறைப்பதில்லை. பணக்காரர்களை விட ஏழைகளும் அதிகம் படிக்காத மனிதர்களும் தான் வாக்களிக்க ஆர்வமாக இருக்கிறார்கள். இன்னும் வளர்ச்சிக்காக வாக்களிப்பவர்களை விட கொள்கை அடிப்படையில் வாக்களிப்பவர்களின் எணிக்கை அதிகமாகவே இருக்கிறது. (People still vote for ideas) இளம் வாக்காளர்கள் பாஜகவுக்கே அதிகம் வாக்களிக்கிறார்கள், காங்கிரஸ் கட்சியை விட தலித்துகளின் வாக்குகளை பாஜகவே அதிகம் அறுவடைசெய்கிறது. சாதி மறுப்பு திருமணங்கள் பணக்காரர்களை விட ஏழை மக்களிடமே அதிகம் நடைபெறுகிறது. தனியார் துறை வேலைவாய்ப்புகளில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் அதிகம் கடைபிடிக்க படுகிறது. ஆங்கில அறிவின் தரம் என்பது சாதியினாலும் மதத்தினாலுமே தீர்மானிக்கப்படுகிறது. கிராமப்புற மக்கள் எரிபொருளுக்கும் மின் விளக்குக்குமே அதிகம் செலவழிக்கிறார்கள், மாறாக நகரத்தில் வசிக்கும் மக்கள் கல்விக்கும் வீட்டு வாடகைக்கும் செலவழிக்கிறார்கள். வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை பிற வளரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைவாக இருக்கிறது. மேலும் COVID-19 பெருந்தொற்றுக்கு பிறகு அது இன்னும் குறைய தொடங்கியுள்ளது. மக்கள் தொகையின் விகிதம் குறையும்போது அது பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தையும் குறைக்கிறது, பெண் குழந்தைகளை விட ஆண்குழந்தைகளையே இந்த சமூகம் இன்னும் விரும்புகிறது. மருத்துவ சேவையை அளிப்பதில் வளர்ந்த மாநிலங்களுக்கும் வளர்ந்துவரும் மாநிலங்களுக்கும் அதிக வேறுபாடுகள் இருக்கவே செய்கிறது. இந்த மாநில வேறுபாடுகளை பொறுத்தே தனியார்- பொது மருத்துவமும் அமைகிறது, எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் பொது(Public) மருத்துவ சேவை இருக்கும் அளவுக்கு கூட பிஹாரில் தனியார்(Private) மருத்துவ சேவை இருப்பதில்லை. இதுபோல் இன்னும் ஏராளமான தகவல்கள் நூல் முழுக்க நிரம்பி கிடக்கிறது. அரசிடமிருந்து தகவல் பெரும் முனைப்பை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும், எதிர்காலத்தில் ஜனநாயகத்தின் காப்பரணாக உண்மை தன்மை கொண்ட தரவுகளே இருக்கப்போகிறது. அதை காப்பதும் நம் கைகளில் தான் இருக்கிறது. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாசிக்கவும். இந்நூலை எனக்கு அன்பளிப்பாக வழங்கிய Yazhini P Mஅக்காவுக்கும் Jeyannathann Karunanithiஅண்ணனுக்கும் "Dear gowtham, Thanks for the support” என்று கையெழுத்திட்டு கொடுத்த நூலாசிரியர் Rukmini S ஆகியோருக்கு என் அன்பும் நன்றியும். #Must_read

Comments