தமிழ்நாட்டு தன் வரலாறு நூல்கள்
“Everyone has three lives: a public life, a private life and a secret life.” - Gabriel García Márquez
தன்வரலாறு/ சுயசரிதங்கள்(Autobiographies) என்பவை தனிமனிதனின் அனுபவங்களை வைத்து எழுதப்படும் இலக்கிய படைப்பு. அனைத்துவிதமான இலக்கிய வடிவங்களிலும் சுவைமிகுந்தது சுய சரித்திரம் தான் என்கிறார் பிரெஞ்சு அறிஞர் மாந்த்ரே மாரோ. சுய சரித்திரம் எழுத எவ்வித இலக்கணமும் இல்லை, தன்வரலாறு என்பதால் தான் அறிந்த நிகழ்வுகளின் அடிப்படியில் எழுதிக்கொள்ளலாம். பெரும்பாலும் தான்(எழுதுபவர்) உண்மை என்று நினைப்பதை பதிவுசெய்வதால் சுவாரசியமான ஒன்றாகவும் தன் வரலாறு புத்தகங்கள் காட்சி அளிக்கின்றன.
உலக மொழிகளில் குறைந்த அளவில் வெளிவந்த இலக்கிய படைப்புகளும் சுய சரித்திரங்கள் தான். அதுவும் இந்தியா போன்ற கீழை நாடுகளில் சொல்லவே வேண்டாம். குழு மனப்பான்மை சுயத்தை உணர செய்வதில் தோல்வி அடைகிறது . இதன் காரணமாக மனிதன் பெரும்பான்மை அடையாளங்களை தன் மீது வழிய திணித்துக்கொள்கிறான். சாதி, மதம், இனம், மொழி, தேசியம் போன்ற அடையாளங்கள் எல்லாம் இதன் விளைவே. சுய சரித்திரம் எழுத தைரியமும், மன வலிமையையும், அடக்கமும், மான அவமானங்களை ஒன்றுபோல அணுகும் பக்குவமும் வேண்டும்.
வரலாறு நம்மை எப்படி மதிப்பிடும் என்பது பற்றி சந்தேகம் இருப்பவர்கள் சுயசரித்திரம் எழுதி தங்கள் பார்வையையும் அணுகுமுறையையும் சரியென நிறுவிக்கொள்கிறார்கள்.சிலர் இதை பற்றி எல்லாம் கண்டுகொள்வதில்லை என்பதால் தன் வரலாற்றின் மீது பெரிதாக ஆர்வம் செலுத்துவதில்லை
இங்கு நடந்த அரசியல் இயக்கங்களின் விளைவாக அரசியல் ஆளுமைகளின் தன் வரலாறு என்பது ஒரு இயக்கத்தின் வரலாறோடும் இணைந்தே செயல்படுகிறது. பல இடங்களின் இந்த ஆளுமைகள் இயக்கத்தின் போக்கையே மாற்றி அமைக்கும் செயல்களில் எல்லாம் ஈடுபட்டிருக்கிறார்கள். எனவே இத்தகைய தன் வரலாறுகள் அந்த இயக்கத்தின் வரலாறையும் முக்கிய நிகழ்வுகளையும் சேர்த்தே எழுதப் படுகிறது.
தமிழின் முதல் தன் வரலாறு புத்தகத்தை துபாஷி ஆனந்தரங்கப் பிள்ளை, தினசரி நாட்குறிப்பாக எழுதி இருந்தார். உ.வே.சாமிநாதையரின் "என் சரித்திரம்" அவர் வாழ்ந்த காலத்தில் தமிழ்நாட்டு மக்களின் கலாச்சாரம் மற்றும் சமூகவாழ்க்கையை துல்லியமாக அறிந்துகொள்ள முக்கிய ஆவணமாக திகழ்கிறது.
வ.உ.சிதம்பரனார் தனது தன்வரலாறு புத்தகமான "தற்சரித்திரம்" நூலை அகவற்பாவில்(கவிதை நடையில்) எழுதியுள்ளார். சுப்ரமணிய பாரதியும் தனது சுய சரித்திரமான "கனவு" என்ற புத்தகத்தை கவிதை நடையிலேயே எழுதியுள்ளார்.
இவை போக சிறு சிறு நிகழ்வுகள் கூட தன் வரலாறு புத்தகங்களாக பதிவுசெய்யப்பட்டுள்ளன. திரு.வி.க எழுதிய "வாழ்க்கை குறிப்புக்கள்" நாமக்கல் கவிஞர் ராமலிங்கப் பிள்ளையின் "என் கதை". மா. பொ. சி எழுதிய "எனது போராட்டம்" நெ. சு. சுந்தர வடிவேலு எழுதிய "நினைவு அலைகள்" த. ஜெயகாந்தன் எழுதிய "ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்", கலைஞரின் “நெஞ்சிக்கு நீதி” போன்றவை தமிழில் குறிப்பிட்டு பேசப்படும் சுய சரித்திரங்களாக திகழ்கின்றன.
தமிழகத்தின் முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவரான திரு. AN சட்டநாதன் ஆங்கிலத்தில் எழுதிய தனது சுய சரித்திர நூலுக்கு “A Sudhra Story” என்றே பெயர் வைத்திருப்பர். இது முழுமைபெறாமல் இருந்து பின்னாளில் அவரது பேத்தி Uttra Natrajanனால் தொகுத்து வெளியிடப்பட்டது.
கலைஞர் எழுதிய "நெஞ்சுக்கு நீதி" புத்தகம் தான் தமிழில் வெளிவந்த தன் வரலாறு புத்தகத்திலேயே நீண்ட நெடிய ஒன்று. 6 பாகங்கள் 5000 பக்கங்கள் என பெரிய தன் வரலாறு நூல் . தினமணி கதிரில் முதல் பாகம் தொடராக வெளிவந்தது பின்னாளில் இது புத்தகமாக வெளியிடப்பட்டது.இரண்டாம் பாகம் குங்குமம் இதழில் தொடராக வெளியானது. அடுத்தடுத்த பாகங்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருந்தன.
கலைஞர் தனது நெஞ்சுக்கு நீதி புத்தகத்தை அவரது தாய் தந்தையருக்கும், பெரியார் மற்றும் அண்ணாவுக்கும் சமர்பித்திருப்பார். தனிமனிதரின் வரலாறு என்பதோடு சேர்த்து திராவிட இயக்கத்தின் வரலாறும் நெஞ்சிக்கு நீதியில் தெளிவாக பதிவுசெய்யப் பட்டிருக்கும்.
“நான் ஏன் பிறந்தேன்” என்ற விசித்திரமான தலைப்புகளுடன் எல்லாம் தமிழில் சுயசரிதைகள் வெளியாகியுள்ள. எழுதியவர் எம்.ஜி.ஆர்.
இனொன்றையும் இங்கே குறிப்பிட நினைக்கிறேன். Malcolm Xன் சுய சரித்திர புத்தகத்தை அவர் சொல்ல பதிவுசெய்து எழுதியவர் Alex Haley ஆவார். அந்த புத்தகமே “The Autobiography of Malcolm X as told to Alex Haley” என்று தான் இருக்கும். இப்படி புது புது முயற்சிகளும் தன் வரலாறு புத்தகங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது .
நினைத்ததை எழுதும் சுதந்திரம் தன்வரலாறு புத்தகங்களுக்கே உரியது . பிறர் மனம் நோகும் என்று நினைப்பவர்கள் நல்ல செய்திகளை மட்டும் பதிவுசெய்து மேற்சொன்ன கூற்றுக்கு விதிவிலக்காகவும் இருக்கிறார்கள்.
இந்த வகையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எழுதி வெளியிட்ட தன் வரலாறு நூலான "உங்களில் ஒருவன் பாகம் 1" புத்தகம் வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் மாறுபட்ட ஒன்று.
புகைப்படங்கள் நிரம்பவே இடம்பெற்றுள்ளன, ஒரு நிகழ்வை விவரித்து பின் அந்த புகைப்படத்தைய் பார்க்கும்போது கற்பனை செய்ய எளிமையாக இருக்கிறது.
அது போலவே ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் முதல்வர் கைப்பட எழுதிய சிறு குறிப்பொன்று இடம்பெற்றுள்ளது. புகைப்படங்களில் தொடங்கி புகைப்படங்களுடன் முடிகிறது ஒரு அத்தியாயம். 21ஆம் நூற்றாண்டில் எழுதப்படும் சுயசரிதம் என்பதால் அதற்கேற்றாற் போல் நவீனமாகியுள்ளது. எழுதுக்குக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் புகைப்படங்களுக்கும் வடிவமைப்பிற்கும் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களில் ஒருவன் என்ற தலைப்பிற்கேற்ப அத்தியாயங்கள் செல்ல செல்ல நம்முடன் நெருக்கமாகவே பயணிக்கிறார் முதல்வர்.
கலைஞரின் ஆங்கில சுயசரிதையின்(Biography) ‘Karunanidhi A Life’ ஆசிரியரான AS.பன்னீர்செல்வன் அவர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், "Everyone has three lives: a public life, a private life, and a secret life" என்று AS பன்னீர்செல்வன் கூறும்போதே, கலைஞர் கூறினாராம் "And a LIfe i wanted to Live" என்று. அந்த வகையில் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் வாழ நினைத்த வாழ்க்கையை ஒருஅளவுக்கேனும் நிறைவாக வாழ்ந்துள்ளார் என்பதை உணரமுடிகிறது.
நூலில் நான் கவனித்த மற்றொரு அம்சம் தமிழ்நாடு என்பது "நாடு" என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அண்ணா தமிழ்நாடு பெயர்மாற்றம் பற்றி குறிப்பிடும்போது "தமிழ்நாடு என்பது தொலைநோக்கு செயல்திட்டம்" என்றார். இந்த சொல்லாடல் ஏனோ அண்ணாவை நினைவூட்டியது. புற நிகழ்வுகளுக்கு கொடுத்த அதே முக்கியத்துவத்தை அக வாழ்க்கை நிகழ்வுகளான திருமணம், நண்பர்கள், உறவினர்கள் போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
கலைஞரின் மகன் என்பதால் பிறப்பு முதல் அனைத்து முக்கிய நிகழ்வுகளுமே அரசியல் நிகழ்வுகளாக தான் இருந்துள்ளது. அரசியல் ஆளுமைகளை பார்த்தே அவர் வளர்த்துள்ளார். நூலில் கலைஞர் பற்றிய செய்திகள் நிரம்ப இருக்க காரணம் அவரின் இருப்பு தனது வாழ்க்கை மீது ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவு. அடுத்த பாகம் மிசா கைதிலிருந்து தொடங்கும் என்று வாசகனை எதிர்பார்க்கவைக்கும் நடையிலே நூலை நிறைவுசெய்துள்ளார்.
இந்த புத்தகம் அடுத்ததலைமுறைக்காக எழுதப்பட்ட ஒன்று. சமகாலத்தவர் அறிந்திருக்கும் வரலாற்று செய்திகளே இந்நூலில் இடம்பெற்றுள்ளன, ஆனாலும் ஒரு சுவாரசியமும் ஆர்வமும் வாசிக்கும்போது ஏற்படுகிறது. அடுத்தடுத்த பாகங்களிலும் இந்த சுவாரசியம் தொடரவேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. .
தன் வரலாறு புத்தகங்களை விமர்சிப்பது சரியல்ல. அதிலுள்ள கருத்துக்களை ஏற்றுக்கொண்டு நூல் ஆசிரியரின் பார்வையை உணர்ந்துகொள்வதே முக்கியமாகும். அந்தவகையில் மிக நவீனமாக வெளியாகியுள்ள இந்த தன் வரலாறு இதற்கு முன் வெளிவந்த தன்வரலாறு புத்தகங்களில் இருந்து சற்றே மாறுபட்ட ஒன்று.
புரியாத மொழி நடையில் எழுதப்பட்ட சுயசரிதங்களில் தொடங்கி இன்றைக்கு புகைப்படங்களுடன் எளிதில் கற்பனைசெய்துகொள்ளும் நிலைக்கு இந்த இலக்கிய வகை பரிணமித்துள்ளது. நம் காலத்தில் இனி வெளியாகும் சுயசரிதங்கள் இந்த நடையை கடைபிடிக்கும். இந்நூல் அதற்கு ஒரு முன்னோடி நூலாகவும் இருக்கும்.
"உங்களில் ஒருவன்" பெயருக்கேற்ற வாசிப்பனுபவத்தையே நமக்கு ஏற்படுத்துகிறது.
Comments
Post a Comment