தமிழ் சினிமா: புனைவில் இயங்கும் சமூகம் // Book review





தமிழ்நாட்டில் சினிமாவுக்கும் அரசியலுக்கும் என்றைக்கும் ஒரு நெருக்கம் இருந்தே வந்துள்ளது. திரை அரங்குகள் இங்கு ஜனநாயக வெளிகளாகவே இருந்துள்ளன, அவரவர் செலவழிக்கும் சக்திக்கேற்ப இருக்கைகள் அமைக்கப்பட்டதே ஒழிய, சாதி அடிப்படையில் அவை அமையவில்லை. பெருந்திரளான மக்கள் சினிமாவை நுகர இத்தகைய மக்கள்மயமாக்கல் தான் தூண்டுகோலாக இருந்தது. அரசியலும் சினிமாவும் நெருக்கமானதற்கு காரணம் சினிமா மீதான இத்தகைய சமூக விழிப்பே. “தமிழ் சினிமா: புனைவில் இயங்கும் சமூகம்” புத்தகம் சினிமாவில் மறைமுகமாகவும் நேரடியாகவும் தென்படும் சாதியத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கட்டுரைகளால் ஆனது. திராவிட இயக்க விமர்சனத்திற்கு பெயர்போனவர் தான் ஆய்வாளர் திரு . ஸ்டாலின் ராஜாங்கம். ஆழமான ஆய்வு நுணுக்கம் இவரின் எழுத்துக்களில் தென்படுகிறது. சில விமர்சன சொல்லாடல்கள் கூர்மையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் நுணுக்கமாக அணுகும் நூல் ஆசிரியர், ஏனோ திராவிட இயக்கம், பெரியார் என்று வரும்போது மேலோட்டமான பார்வையையே வெளிப்படுத்துகிறார். திராவிட இயக்க ஒவ்வாமையாக இருக்கலாம், இதை தவிர்த்துவிட்டு பார்த்தால் இவரின் ஆய்வும், வாதமும் நியாமான ஒன்றாகவே தென்படுகிறது. தென் தமிழகத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் பெரும்பாலும் வன்முறை, வெட்டு, குத்து, குல பெருமை, குருதி பெருமை என்ற அடிப்படையிலே எடுக்கப்படுகிறது. ஒரு காலத்தில் யதார்த்தம் என்ற பெயரில் இந்த கதைகள் நுகர்ப்பட்டாலும். சினிமா ஏற்படுத்திய தாக்கம் என்பது அந்த மக்களிடையே நிலவிய வன்முறை வெறியாட்ட மனநிலையை திடமாக்கியே உள்ளது. 80 களில் வெளியான இந்த "மண்வாசனை" சினிமாக்கள் அந்த மக்களின் வாழ்வியலை சொல்பவையாக இருந்தாலும், அது பிற்படுத்தப்பட்ட சாதிகளின் ஆதிக்கத்தை தான் மேலும் மேலும் நிறுவ முயன்றது. இத்தகய மண்வாசனை சினிமாக்கள் அனைத்தும் நவீனத்திற்கும் நகர வாழ்க்கைக்கும் எதிரான கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போக்கு இன்றைக்கு எடுக்கப்படும் சினிமாவிலும் தொடர்வதை நம்மால் பார்க்கமுடியும். தென் தமிழக பிற்படுத்தப்பட்ட மக்களின் திரை சினிமா வருகைக்கு காரணம் 1967க்கு பின் ஆட்சியில் அமர்ந்த திராவிட முன்னேற்ற கழகம் என்றே பதிவு செய்கிறார் நூல் ஆசிரியர் . தலித்துகளின் கதைகள் எல்லாம் ஆதிக்க சாதிகளின் பார்வையில் இருந்தே திரைப்படமாக்க பட்டது என்றும் குறிப்பிடுகிறார். இப்படி தென் தமிழக சினிமா பற்றிய கட்டுரைகள் இந்நூலில் அதிகம் இடம்பெற்றுள்ளது. “இந்தி எதிர்ப்பில் இளையராஜா” என்ற கட்டுரை, இசை துறை சார்ந்து புதிய பார்வை ஒன்றை முன்னிறுத்துகிறது. இளையராஜாவின் வருகைக்கு பின் எப்படி மக்கள் முணுமுணுத்து கொண்டிருந்த இந்தி பாடல்கள் நீர்த்து போனது என்பதை ஒரு மெய்யான எடுத்துக்காட்டின் மூலம் நிறுவுகிறார். மேலும் இந்த கட்டுரையில் தான் "1938 இல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வரவேற்ற பெரியார் 1965இல் நடந்த போராட்டத்தை எதிர்த்தார்" என்கிறார், எந்த அடிப்படையில் இந்த அவதூறு பரப்பப்படுகிறது? அவர் அந்த போராட்டத்தை அணுகிய விதத்தை குறிப்பிடாமல் இப்படி ஒரு அவதூறை பரப்புவது ஆய்வாளருக்கு அழகல்ல. (பார்க்க: ப. திருமாவேலன் எழுதிய "திரும்பத் திரும்பத் திராவிடம் பேசுவோம்!" ) “மெட்ராஸ்” திரைப்படம் பற்றி ஒரு கட்டுரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அகம் புறம் என்ற இரண்டு அம்சங்களையும் சமமாக அணுகிய திரைப்படமாகவும், கல்வியின் முக்கியத்துவத்தை சரியான வகையில் பிரதிபலித்த சினிமாவாகவும், எளியமக்களின் வாழ்வியல் எதார்த்தங்களை நேர்மையாக காட்சிப்படுத்திய சினிமாகவும் மெட்ராஸ் திரைப்படத்தை குறிப்பிடுகிறார். திராவிட காட்சிகளை சாடும் சினிமாவாக இதை முன்னிறுத்துகிறார். (21 ஆம் நூற்றாண்டில் திராவிட காட்சிகளை சீண்டாத சினிமா தான் எது, அடிப்படை அறம் துளியும் இன்றி வைக்கப்படும் அவதூறுகள் தான் தமிழ் சினிமாவில் நிரம்பி வழிகிறது) வடிவேலுவின் நகைச்சுவை பாத்திரங்கள் பற்றிய கட்டுரை அருமை. போலீஸ் கதாபாத்திரங்கள் பற்றிய மிகைப்புனைவின்(Hyper-fiction/ romanticization) மீது நூல் ஆசிரியர் வைக்கும் விமர்சனங்களின் காரணமாகவோ என்னவோ, ஜெய் பீம் , விசாரணை, ரைட்டர் போன்ற காவல்துறை வன்முறையின் எதார்த்தங்களை காட்சிப்படுத்தும் சினிமாக்கள் வர தொடங்கியுள்ளன. இதை தவிர்த்து ஏழாம் அறிவு, ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படம் பற்றிய இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது. தங்கர்பச்சன் போன்ற சாதியவாத சந்தர்ப்பவாதியின் முகத்திரையை கிழித்து எறிகிறது இந்த கட்டுரை. திரு. ஸ்டாலின் ராஜாங்கம் அவர்கள் தமிழ் சினிமாவையும் அதன் இயங்கியலையும் அணுகும் விதம் வரவேற்கப்படவேண்டிய ஒன்று, ஆனால் இதனோடு மட்டும் ஒரு கலைப்படைப்பை சுருக்கியும் விட கூடாது. அந்த வகையில் இந்நூல் முக்கியமான ஒன்று. அடுத்த தொகுப்பாக இவரின் "80களில் தமிழசினிமா" வாசிப்பு பட்டியலில் இருக்கிறது, விரைவில் எழுதுகிறேன். வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் படிக்கவும். தமிழ் சினிமாவை இப்படியும் அணுகலாம் என்ற மாறுபட்ட(கண்டுகொள்ளப்படாத) பார்வையை இந்நூல் முன்வைக்கிறது. #Do_read


Comments