திசையறியா சூத்திரர்கள் // Book review


  

Kancha Ilaiah Shepherd எழுதி The caravan பத்திரிகையில் வெளியான”where are the sudhras?” என்ற  ஆங்கில கட்டுரையின் தமிழ்  மொழியாக்க வடிவம் தான் இந்நூல், நேர்த்தியான மொழிபெயர்ப்பு என்றே சொல்லவேண்டும். 32 

பக்கங்களை கொண்டே சிறு நூல். மொழிபெயர்க்கப்பட்ட  புத்தகம் என்ற எண்ணம்  ஒரு இடத்தில கூட ஏற்படவில்லை. 


சாதி சார்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு புத்தகங்களை தேடி வாசித்துக்கொண்டிருந்த சமயத்தில் காஞ்சா ஐலையா வின் “Why i am not a hindu” “Buffalo nationalism” போன்ற புத்தகங்களை வாசித்திருக்கிறேன். ஆரம்பத்தில் இவரின் எழுத்துக்கள் பிடித்தன தற்போதெல்லாம் ஏனோ விமர்சனத்துடனே அணுக தோன்றுகிறது. சமீபத்தில் இவர் தொகுத்து வெளியிட்ட “The Shudra: Vision for a New Path”  நூலுக்கு பின்னர் தான் இந்த முடிவு வந்தேன். 


சூத்திரர் என்கிற வார்த்தையை இவர் நேர்மறையாகவே பயன்படுத்துகிறார்(In affirmative sense), அகில இந்திய தலித் அடையாளம் போல் அகில இந்திய சூத்திரர் அடையாளம் ஒன்று வேண்டும் என்பது இவர் வாதம். இந்துமதத்தை  எதிர்த்து சூத்திரர்கள் ஒரு எதிர் கலாச்சாரத்தை(Counter-culture), எதிர் பண்பாட்டை, எதிர் வழிபட்டு முறைகளை, எதிர் வரலாற்று பார்வையை,  எதிர் தத்துவத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இவரது கருத்துக்கள் அமையும். ஆனால் இதை எல்லாம் 1930களிலேயே செய்ய தொடங்கிய திராவிட இயக்கத்தை பற்றி இவரது சமீபத்திய புத்தகம் துளியும் பேசவில்லை. திராவிடர் கழகம் என்று பெயர் வைக்காமல் போய் இருந்தால் "சூத்திரர் கழகம்" என்றே வைத்திருப்ப்பேன் என்றவர் பெரியார். அதுவரை பௌத்தம், சைவம் என்ற அடிப்படையில் பார்ப்பன எதிர்ப்பை பேசிவந்த தலைவர்கள் மத்தியில், நவீன கருத்தியல்களான சுயமரியாதை, பகுத்தறிவு போன்றவற்றி பேசி ஒரு எதிர் தத்துவத்தை நிறுவியவர் பெரியார் தான். அகில இந்திய அளவில் பெரியாரை முன்னெடுக்காமல் விட்டது சாதி ஒழிப்பு பேசும் அறிவுஜீவிகளின் இயலாமையை/புறக்கணிப்பை  தான் காட்டுகிறது. 


இந்த விமர்சனங்களோடு தான் இக் கட்டுரையையும் அணுகினேன், சில கருத்துக்களோடு உடன்படுகிறேன்  ஆனால் பல கருத்துக்கள் ஏற்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. சூத்திரர்களின் அகில இந்திய ஒன்றிணைப்பு என்பது காலத்தில் தேவை என்பதால் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் சாத்தியமா என்பது கேள்விக்குறி. அப்படி ஒரு ஒன்றிணைவு நிகழ்ந்தால் , பிற்போக்குத்தனங்களின் அடிப்படையில் அமையக்கூடாது. நவீன கருத்தியல்களின் அடிப்படையிலும் சாதி ஒழிப்பு தத்துவத்தின் அடிப்படையிலேயே அமைய வேண்டும். 


கலாச்சாரம், பண்பாடு , வழிபாடு என மீண்டும் மரபு நோக்கி செல்வது மக்களிடம் பகுத்தறிவை மட்டுப்படுத்தி, அறியாமையை வளர்க்கவே செய்யும். சாதியிலிருந்து மனிதனை விடுவிக்கும் சக்தி நவீனத்திடம் மட்டும் தான் இருக்கிறது. 


அதிகார பரவலை, மாநில சுயாட்சியை பேசினால் இது இந்திய அரசியல் அமைப்பிற்கு எதிரானது என்று கட்டுரை எழுதுகிறார்Kancha Ilaiah. மாற்றம் வேண்டும் என்பவர் மாற்றங்களை வரவேற்க தயங்குகிறார். அகில இந்திய பார்வை எப்படி எல்லாம் கட்டுரை எழுதவைக்கிறது பாருங்கள். 


அகில இந்திய தலித் அரசியல் சாதித்தது என்ன? என்ற கேள்வியையும் இங்கே நான் முன்வைக்கிறேன். பார்ப்பனியத்தை அது வீழ்த்தியதா? இந்து மதத்தை அது என்ன செய்து விட்டது? தலித் அரசியலின் எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கும்பட்சத்தில் எதன் அடிப்படையில்  அகில இந்திய சூத்திர அடையாள ஒன்றுதிரட்டல் நடைபெறும்?  (சமூகநீதியின் அடிப்படையில் நடக்கலாம்!) 


மரபார்ந்த பண்பாடு-கலாச்சாரம்-வழிபாடு என்ற அடிப்படையில் எல்லாம் இனிமேல் நடைபெறுவது கடினம்.  அப்படி நடாத்தலும் பிற்போக்கு சக்திகளுக்கு தான் பலனளிக்குமே ஒழிய, சூத்திரர்களுக்கு எந்த நன்மையையும் ஏற்படப்போவதில்லை.  


இந்த கட்டுரை சூத்திரர்களின்  சிக்கல்களை எல்லாம் சரியாக அடையாளம் காட்டுகிறது, ஆனால் எட்டமுடியாத தீர்வுகளை முன்வைக்கிறது. Bismarck சொல்வதைப் போல் “Politics is the art of the possible, the attainable — the art of the next best”. இதை உணர்ந்தவர்கள் கற்பனை உலகை விட்டு யதார்த்த உலகிற்கு வரவேண்டும். Ilaiah கூறும் தீர்வுகளில் எனக்கு தனிப்பட்டமுறையில் உடன்பாடு இல்லை என்றாலும், வரலாறு நெடுக  சூத்திரர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை இந்நூல் நிச்சயம் வாசகனுக்கு கடத்தும். 


திராவிட இயக்கத்தை அகில இந்திய அறிவுஜீவிகள் கண்டுகொள்ளாமல் விட்டாலும், இந்த நூலை மொழிபெயர்த்து வெளியிட்ட Ravishankar Ayyakkannu, சுபாஷினி. C  ஆகியோருக்கு என் அன்பும் நன்றியும். 


நிகரமொழி பதிப்பகம் 

விலை:  30 






Comments