"தமிழகத்தில் சாதிகள்" - தீ. ஹேமமாலினி //Book Review


 



தமிழ் சமூகத்தில் சாதி எப்படி உருவானது ? எப்படி பல்கி பெருகியது? சாதி கலப்புகள் புதிய சாதிகளின் உருவாக்கத்தில் எப்படி பங்களித்தன போன்றவற்றை எல்லாம் பேசும் நூல் தான் "தமிழகத்தில் சாதிகள்" .  திருமதி. தீ. ஹேமமாலினி அவர்களின் டாக்டர்  பட்ட ஆய்வின் ஒரு பகுதியாக இந்நூலை குறிப்பிடுகிறார். சாதிகள் பற்றி வெளியாகியுள்ள முக்கியமான புத்தகங்களில் ஒன்றாக இந்த நூலை குறிப்பிடுகிறார் திரு. பக்தவச்சல பாரதி . 


முதலில் சாதி பற்றிய அறிமுகத்தை கொடுத்துவிட்டு பின்னர் மானுடவியல் நோக்கில் அந்தந்த காலகட்டத்தில் சாதிகள் எப்படி இருந்தன என்பதை விளக்க முயல்கிறார்.சாதாரண வாசகனுக்கும் புரியும் வகையில் தான் எழுத்துநடை அமைந்துள்ளது. 


சங்ககாலத்தில்  ஒருவொரு திணையிலும் 4 -5 குடிகள் இருந்தன, இந்த திணைக் குடிகளுக்கு இடையே கலப்பு மனங்கள் எல்லாம் சாதாரணமாகவே நடைபெற்று வந்தது. தொழில் ரீதியிலேயே குடி பெயர்கள் அமைந்திருந்தது. இதற்கு பிறகு களப்பிரர்கள் காலம், இந்த காலகட்டத்திலும் கலப்பு திருமணங்கள் பெரிய அளவில் நடைபெற்றன. பல்லவர் காலத்தில் தான் சாதியின் தாக்கம் தமிழ் சமூகத்தில் அதிகரித்தது, குடிகள் எல்லாம் சாதிகளாக உருப்பெற்றன. சாதி கலப்பு திருமணம் செய்பவர்கள் ஒதுக்கிவைக்கப்பட்டும் புதிய பெயர்களாலும் அறியப்பட்டனர். 



சோழர் காலத்தில் சாதி ஒரு நிறுவனமாகவே வளந்திருந்தது, பார்ப்பனர்கள் உயர் அந்தஸ்தை பெற்றிருந்தார்கள். கோவில்கள் பெருகியதால் பார்ப்பனர்களும் வட இந்திய பகுதிகளில் இருந்த அழைத்துவரப் பட்டார்கள். 


உயர் குல ஆணுக்கும் தாழ்ந்த குல பெண்ணிற்கும் பிறந்தவர்களை  “அனுலோம “ சாதி என்றும், உயர்ந்த குல பெண்ணுக்கும் தாழ்ந்த குல ஆணுக்கும் பிறந்தவர்களை  “பிரதிலோம” சாதி என்று அழைக்கப்பட்டனர் . பிற்கால சோழர்கள் காலத்தில் தான் இடங்கை மற்றும் வலங்கை பிரிவு உருவாக்கப்பட்டது.  98 சாதிகள் இரண்டு குழுவிலும் இடம்பெற்றிருந்தனர் . இந்த பிரிவே இரண்டு வர்க்கங்கள் போல் காட்சி அளித்தன. 


சோழர்களின் வீழிச்சிக்கு பின், பாண்டியர்கள் காலத்தில் சாதியின் தன்மை பாதுகாக்கப்பட்டது. சைவ பிராமணர்கள் வைணவ பிராமணர்கள் என்ற பிரிவு இந்த காலத்தில் உருவாகி இருந்தது. வலங்கை இடங்கை என்ற பிரிவு பாண்டியர்கள் காலத்திலும் தொடர்ந்தது. சாதி கலப்பினால் பல்வேறு புதிய சாதிகள் உருவாகின. 


விஜயநகர பேரரசு காலத்தில் சாதிகளின் பெருக்கம் அதிக அளவில் நடைபெற்றது தெலுங்கு  பிராமணர்கள் இந்த சமயத்தில் தான் தமிழகத்தில் காணப்படுகிறார்கள். மேலும் தெலுங்கு சாதிகள் உருவாக்கமும் இச்சமயத்தில் தான் நடந்தது. தக்கனத்தில் நடந்த  இஸ்லாமிய படையெடுப்பால் தெற்குநோக்கிய இடப்பெயர்வு நடந்தேறியது, சாதிகளின் பெருக்கத்தில் இந்த நிகழ்வும் தக்கம்செலுத்தியது என்று சொல்லலாம். சாதி பெயர்களை பின்னொட்டாக இடும் பழக்கம் விஜயநகர பேரரசு காலத்தில் கட்டாயமாக்கப்பட்டது.  பார்ப்பனர்கள் தங்களது தலைமையை வலுவாக நிறுவி கொண்டார்கள். வைணவத்தின் பொற்காலமாக இந்த காலம் அறியப்பட்டது. 


ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகும் புதிய சாதிகள் உருவாகின, மாப்பிளை, மரைக்காயர் போன்ற சாதிகள் புலப்பெயர்வுகளால் நடந்தேறிய இனக்கலப்பால் உருவானவையே . 


புதிய சாதிகளின் உருவாக்கம் என்பது பல்வேறு காரணிகளால் நடைபெற்றது அதற்கென ஒற்றை காரணம் என எதுவும் இல்லை. 


நிறத்தின் அடிப்படையில் - இருளர் (ஒரு எடுத்துக்காட்டும் மட்டும் கொடுத்துள்ளேன்)

இடத்தின் அடிப்படையில் கொங்கு, தொண்டைமண்டல என தொடங்கும் சாதிகள் 

பூர்வீக  தன்மையின் அடிப்படையில் - ஆதி திராவிடர் , ஆதி ஆந்திரர்

தொழிலால் - கல் ஒட்டர் 

திசை அடிப்படையில் - தெற்கத்தியர்

உணவின் அடிப்படையில் - புலையன் 

விற்பனை செய்யும் பொருட்களின் அடிப்படையில் - கூல வாணிகன் 

கருவிகள் அடிப்படையில் - பாணன் 

கல்வி அடிப்படையில் - புலவர் 

மொழியால் - கன்னடியர்

பணத்தால் - காசுக்கார செட்டி

தாலியால்- அச்சுத்தாலி

தெய்வப்பற்றால் - தேவகன்னிகையார்

முன்னோர்களின் பெயரால் - வள்ளுவன் , வாணன் 

ஒழுக்கத்தால் -பரத்தையர்

பெண்ணின் பெயரால் - அருந்ததி 

தந்தையின் பெயரால் - அய்யா, அச்சன்

நெருப்பின் பெயரால் - அக்னி குல சத்திரியர் 

பூவின் பெயரால் - பூவைசியன் 

இட வேறுபாட்டால் - பரதவர், பட்டணவர்

தொகையால் - ஆயிர வைசியர் 

விலங்கு பிடிப்பால்- நரி குறவர் 

பறவை பிடிப்பால்- குருவிகாரன் 

மதம் மற்றும் சமயத்தால்-  ஆதி சைவர்  

தெய்வத்தால் -ஐயனார்

மருத்துவத்தால் - வைத்தியன் 

முனிவரின் பெயரால் - அகத்தியர் 

கட்சியால் -வலங்கை இடங்கை 

வரிசையால் -கடையர் 

அரசர் பெயரால் - தொண்டைமான் 

இட மாற்றத்தால் - முதுவர் 

இராப்பால்- நோக்கர் 

சின்னதால் - ஆனை, ஆந்தை 

தொழில் பிரிவால் - தீக்கொல்லன் 

இப்படி பல்வேறு காரணங்களின் அடிப்படையிலேயே சாதி உருவாகியுள்ளது. சாதி என்பது  தொன்மங்களின்(mythology) அடிப்படையில் நிறுவனம் பெற்ற காரணத்தால், சாதிகளின் இடையில் நிலவும் கதைகளை கருத்தில் கொண்டு சாதியின் தோற்றத்தை ஆராய்வது முக்கியமாகும். இத்தகைய தொன்ம நம்பிக்கை தான் சாதிகளின் இறுமாப்புக்கு காரணமாக இருக்கிறது. 


சில சாதிகள் காலப்போக்கில் உருவாகுவது போல் சில சாதிகள் அழிந்தும் போயுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பேரரசுகள் அனைத்தும் சாதியை நிறுவன படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளன, சாதி அடுக்கில் பார்ப்பனர்களின் தலைமை என்பது ஒரு நூற்றாண்டில் நடந்த நிகழ்வல்ல. அரசின் துணையுடன் தான் இது நடைபெற்றது. சாதிகளின் பெருக்கத்திற்கு புற திருமணங்களும்(exogamy) பங்களித்துள்ளன. 


தமிழ்நாட்டில் சாதிகளின் உருவாக்கம் பற்றிய ஒரு அறிமுகத்தை இந்நூல் முன்வைக்கிறது, நவீன ஆய்வு நோக்கிலும் மானுடவியல் கூற்றின் அடிப்படையிலும் இதன் ஆதாரங்கள் அமைந்துள்ளன. மிக முக்கியமான நூல். வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாசிக்கவும்.


இந்த புத்தகத்தை எனக்கு பரிந்துரைத்த அண்ணா அன்பும் நன்றியும். 






Comments