Tamil Characters: Personalities, Politics, Culture // Book Review


 


தமிழ்நாட்டின் அரசியல் - பண்பாடு - இலக்கியம் பற்றி ஆங்கிலத்தில் பொது சமூக வாசிப்புக்கென நேர்மையாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் குறைவே. தற்போது ஒரு அளவுக்கு தமிழ்நாட்டின் அரசியலை தேசிய ஊடகங்களும் அறிவுஜீவிகளும் பேச தொடங்கியுள்ளார்கள்.


தமிழ்நாடு என்றாலே ஏதோ பிரிவினை பேசும் மாநிலம், மொழி வெறியர்கள், சினிமா மோகம் கொண்டவர்கள் என்ற பிம்பம் தான் இயல்பாக பதிவுசெய்யப்படுகிறது. ஆனால் நமது தனித்துவங்களை யாரும் பேசுவதில்லை.

தமிழ்நாடு பல விசயங்களில் முன்னோடி மாநிலம், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியதில் தொடங்கி, இடஒதுக்கீடு, மொழி உரிமை , மாநில சுயாட்சி தீர்மானம், பெண்களுக்கு சொத்துரிமை,பொருளாதார வளர்ச்சி,மதிய உணவு, மருத்துவ கட்டமைப்பு என பட்டியல் நீளும்.

அப்படி தமிழ்நாட்டை பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தும் எதிர்மறையாகவே புரிந்துகொள்டுள்ள ஆங்கிலம் அறிந்த தமிழரல்லாத மக்களுக்கு தமிழ்நாட்டின் அரசியல்-பண்பாட்டை விளக்க இந்நூல் அவசியம் உதவும். முனைவர் திரு A.r. Venkatachalapathy எழுதி/தொகுத்து 2018இல் வெளியாகியுள்ளது இந்நூல்.

முதல் பகுதி பெரியாரில் தொடங்கி அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, சோ.ராமசாமி, சி.எஸ்.சுப்பிரமணியம் ஆகியோரின் அரசியல் செயல்பாடுகளை சுருக்கமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. திரு. AR. வேங்கடாசலபதியின் ஆய்வு நூல்கள் போல் அல்லாமல் இது அடிக்குறிப்புகள்(Footnotes) ஏதும் இன்றியே எழுதப்பட்டுள்ளது. வெவ்வேறு சமயங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் என்பதால், எழுதப்பட்ட காலகட்டத்தையும் அப்போது நிலவிய சமூக அரசியல் சூழலையும் நம் கண் முன் நிறுத்துகிறது.

தமிழ்நாட்டு அரசியலை பற்றி வாசித்து வருபவருக்கு இதில் அறிந்துகொள்ள வேண்டிய விசயங்கள் அதிகம். சி..எஸ்.சுப்பிரமணியம் என்று ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் இருந்தார் என்றே இந்த புத்தகத்தை வாசித்த பிறகு தான் தெரியும். (என் வாசிப்பின் குறைபாடாக இருக்கலாம், ஆனால் ஜீவானந்தம், நல்லகண்ணு, சிங்காரவேலர் போன்றவர்களை தவிர பிற கம்யூனிஸ்ட் இயக்க தலைமைகள் பொதுவெளியில் பேசப்படுவதில்லை)

நூலின் இரண்டாம் பகுதி தமிழ் இலக்கியவாதிகள் பற்றியது, தமிழ் இலக்கிய வாசிப்புக்கு பரிச்சயப்படாத எனக்கு இது பெரிதும் உதவிய பகுதியாக அமைந்தது. குறிப்பாக புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, பெருமாள் முருகன் ஆகியோர் பற்றிய கட்டுரைகள் எனக்குள் பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தியது எனலாம்.

“ஜே.ஜே.சில குறிப்புகள்” புத்தகத்தை இந்த கட்டுரைக்கு பின்னர் தான் வாசித்து முடித்தேன். பெருமாள் முருகனின் “மாதொருபாகன்” புத்தகம் சர்ச்சைக்குள்ளான சமயத்தின் பூவரச மரத்தடியில் படுத்துக்கொண்டு வாசித்த நினைவுகளை அந்த கட்டுரை தூண்டி விட்டது. புதுமைப்பித்தன் சிறுகதைகளை நாளுக்கு ஒன்றாக வாசித்து வருகிறேன்.
இந்த பகுதியில் அயோத்திதாசர், பாரதியார், ஜெயகாந்தன், அசோகமித்திரன், சோ.தர்மன், எம்.எல்.தங்கப்பா போன்றோர் பற்றிய கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன.

மூன்றாவது பகுதி தமிழ்நாட்டின் கலாச்சார பிரச்சனைகள்(Cultural Issues) பற்றியது. திராவிட இயக்க நூற்றாண்டு, செம்மொழி தமிழ், இந்தி எதிர்ப்பு, படைப்புகளின் தேசியமயமாக்களும் காப்புரிமையும், ஈழம், தலித் அரசியல் , ஜல்லிக்கட்டு, மதுவிலக்கு, தமிழ் இலக்கிய சூழல், சென்னை என்று 10 கட்டுரைகள் சுருக்கமாக இடம்பெற்றுள்ளது. நூல் ஆசிரியரின் பார்வைகளாகவே இந்த 10 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரைகள்.

ஒரு தொகுப்பாக பார்க்கும்போது பல புது தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது, சில சர்ச்சைகள் குறித்த தெளிவும் ஏற்பட்டது. இதில் விமர்சனபூர்வமான கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளது. விமர்சங்கள் கலந்த கலைஞர் பற்றிய கட்டுரை தான் நூலிலேயே நீண்ட நெடிய கட்டுரை. தெற்கிலிருந்து ஒரு தீர்க்கதரிசி என்று பெரியாரை அறிமுகப்படுத்துவது மயிர்சிலிர்ப்பை ஏற்படுத்தியது. (இந்நூல் ஆசிரியர் பெரியாரின் வாழ்க்கை வரலாறு நூலையும் எழுதி வருகிறார் என்பது கூடுதல் செய்தி)

முன்னமே சொல்லியது போல் திரு.சலபதியின் Fan-boyயாக இந்நூல் எனக்கு ஒரு பொக்கிஷம் தான். ஆங்கிலம் தெரிந்த தமிழரல்லாத ஒருவருக்கு தமிழ்நாட்டை பற்றிய ஆரம்பநிலை புரிதலுக்கு இந்நூலை பரிந்துரைக்கலாம்.

வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாசிக்கவும்.

Book: Tamil Characters: Personalities, Politics, Culture
Publisher: Pan Macmillan India

Comments

  1. இரவிசங்கர் அய்யாக்கண்ணுMay 20, 2022 at 2:42 PM

    நூலின் நுண்ணரசியலைப் புரிந்து கொள்ளாத ஒரு தட்டையான விமர்சனம் :)

    ReplyDelete

Post a Comment