the toilet seat - நூல் அறிமுகம்
Simone de Beauvoir தனது “the SECOND SEX” புத்தகத்தில் "பெண்கள் பிறப்பதில்லை அவர்கள் பெண்களாக ஆக்கப்படுகிறார்கள்"(One is not born, but rather becomes, a woman) என்பார்.
சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் பெண்கள் தாழ்வான நிலையிலேயே நடத்தப்படுகிறார்கள், திருமணம்-காதல்-காமம் என எல்லா உறவுகளிலும் இதே நிலை தான். புத்தகம் Gender Neutralஎன்று முகப்புரையில் குறிப்பிட்டிருந்தாலும் யாதார்தத்தை மூஞ்சில் அறைந்தது போல் எழுதியுள்ளார் நூல் ஆசிரியர் லதா.
சுய அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தகம் என்பதால் இதில் சமூகவியல் - உளவியல்- அரசியல் என பன்மைத்துவம் கொண்ட கருத்துகள் இயல்பிலேயே இடம்பெறுகிறது. மேற்கத்திய தாராளவாத(Liberal) சிந்தனையாளர் எழுதியதை போன்றே நூலின் கருத்துகள் தெரிகிறது. பல இடங்களில் குற்றவுணர்வை உண்டுசெய்தது இந்நூல். அணுகுமுறையிலும் சிந்தனையிலும் மாற்றம் வேண்டும் என்பதை அழுத்தமாகவே சொல்லி சென்றது.
நூல் ஆசிரியர் தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல்களை குறிப்பிட்டே புத்தகத்தை தொடங்குகிறார். 30 அத்தியாயங்களை இந்நூல் கொண்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்தை வசித்து முடிக்கும்போதும் ஒருவித தெளிவு பிறக்கிறது. எதையெல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும் ,எந்தெந்த முன்முடிவுகள் மறு ஆய்வுக்குட் படுத்தவேண்டும், சரி தவுறுகள் எவை எவை என்பதை எல்லாம் எளிய ஆங்கிலத்தில் புரியும் வகையில் எழுதியுள்ளார்.
செருப்பால் அடித்த உணர்வை நூலின் பல இடங்களில் அனுபவித்தேன்(ஏற்படுத்திய தாக்கம் அப்படி!!). நூலை வாசித்துக்கொண்டிருக்கும்போதே நெருங்கிய நண்பர்களுக்கு பரிந்துரைக்க தொடங்கிவிட்டேன். நூலின் பல இடங்களில் "வாழ்க்கையில் சரியாய் நேரத்தில் தான் இந்த புத்தகத்தை வாசிக்குறோம்" என்ற எண்ணம் ஏற்பட்டது. வாசிக்கும் அனைவர்க்கும் அதே எண்ணம் ஏற்பட கூடும். காதலிப்பவர்கள், திருமணமானவர்கள், தனியாக இருப்பவர்கள் என அனைவருக்கான கருத்துக்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
காமம்(Sex) பற்றிய உரையாடல்கள் இங்கு நடக்காமல் இருபதே பல சிக்கல்களுக்கு காரணியாக அமைகிறது. அதன் மீது கட்டமைக்கப்பட்ட ரகசிய பிம்பம் காமம் பற்றிய உரையாடலை நடக்க விடாமல் தடுக்கிறது.
ரகசியத்தை தேடுகிறோம் என்று திசை மாறியும், தடம் புரண்டும் ஒரு சமூகமாக நாம் பாதிப்படைகிறோம் . காமம் பற்றிய உரையாடல் குன்றிய காரணத்தால் பாலியல் வன்முறைகள் அதிகம் நடைபெறுகிறது. அடிப்படையில் மாற்றங்களை ஏற்படுத்தாமல், குற்றங்களை நடக்கவிட்டு மேம்போக்கான தீர்வுகளை தேடுவதன் மூலம் எவ்வித பயனையும் நாம் அடையப்போவதில்லை. கல்விமுறையிலிருந்தே நாம் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என்பதை ஆசிரியர் மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறார்.
காதல் மற்றும் காமம் இடையிலான உறவாடலை பல அத்தியாயங்களில் பேசுகிறார். காதலிலும் காமத்திலும் பெண்களின் நிலையை குறிப்பிடுகிறார். “Toilet Seat” என்ற அத்தியாயம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை. என்னை பொறுத்தவரை இந்த நூலை ஒரு வழிகாட்டி(Guide) புத்தகமாக அணுகலாம். உறவுகளில் சிக்கல்கள் ஏற்படும்போது Reference புத்தகமாகவும் இந்நூல் பயன்படும்.
Masturbation, Possessiveness, Male ego, Desperation, Food and sex, Friendship as the basis போன்ற பகுதிகள் எல்லாம் உள்ளபடியே ஆரோக்கியமான பரிந்துரைகளை வழங்குகிறது. "Rules for a Good Relationship” என்ற பகுதியும் அனைவர்க்கும் உதவ கூடும்.
சிலருக்கு இது தகவல் தரும் புத்தகமாக தெரியலாம், சிலருக்கு உறவு சிக்கலை தீர்க்க முற்படும் வழிகாட்டி நூலாக தெரியலாம், வேறு சிலருக்கு உளவியல் புத்தகமாக தெரியலாம், இன்னும் சிலருக்கு பெண்ணியம் பேசும் புத்தகமாக தெரியலாம். எல்லாருடைய சிக்கலும் வேறானவை என்பதால் நூலின் சாரமும் அதற்கேற்பவே சென்றடையும். ஏதோ ஒருவகையில் அனைவரின் காமம்-காதல்-உறவு சார்ந்த அணுகுமுறையில் இந்நூல் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழியிலும் புத்தகம் கிடைக்கிறது. மின்னூல் வடிவிலும் கிடைக்கிறது.
சிந்தனை அளவில் ஒரு பெரும் தாக்கத்தை என்னுள் ஏற்படுத்திய புத்தகம் என்பதால். என் நட்பு பட்டியலில் இருக்கும் அனைவரும் அவசியம் வாசித்து பயனடையுங்கள்.
தங்களின் பரிந்துரையின்படி சில புத்தகங்கள் வாசித்து வருக்குறேன். ஒவ்வொன்றும் பல ஸ்வாரசியமான தாக்கங்களை எனக்குள் உருவாக்கியுள்ளதை பார்க்கிறேன். இந்த புத்தகம் அந்த பட்டியலில் முதல் இடம் பதித்து இருக்கிறது என்றே குறிப்பிடலாம். இன்னும் பல புத்தகங்கள் வாசித்தும், உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் என் வாழ்த்துக்கள்.
ReplyDelete