அயோத்திதாசர் வாழும் பௌத்தம் - நூல் அறிமுகம்
பண்டிதர் அயோத்திதாசர் பற்றி எனக்கு மூன்றுவிதமான அறிமுகங்கள் ஏற்பட்டது. முதலாவது MSS Pandian எழுதிய “Brahmin and Non-Brahmin: Genealogies of the Tamil Political Present ”புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் அயோத்திதாசர் பற்றிய பகுதி. இரண்டாவது V. Geetha, S.V. Rajadurai ஆகியோர் எழுதிய “Towards a Non-Brahmin Millennium: From Iyothee Thass to Periyar” புத்தகம் . மூன்றாவது” Tamil Characters” என்ற AR Venkatachalapathyன் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த அயோத்திதாசர் பற்றிய கட்டுரை. இவை மூன்றும் ஆங்கில புத்தகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
G. Aloysius வெளியிட்ட அயோத்திதாசரின் “தமிழன்” இதழ் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஜெயமோகன், ரவிக்குமார் போன்றவர்கள் அயோத்திதாசரை பெரியாருக்கு எதிராக நிறுத்தி வியாக்கியானம் செய்த காரணத்தினால் அயோத்திதாசரை வாசிக்க வேண்டும் என்று தோன்றியதில்லை. இணையத்தில் நடக்கும் விவாதங்களோடு அவர் பற்றிய தேடல் நின்றுவிடும். அயோத்திதாசர் பற்றி ஒரு தொகுப்பாக நான் வாசிக்கும் முதல் நூல் இதுதான்.
உள்ளபடியே நிறைவான வாசிப்பையும், புரிதலையும் இந்நூல் வழங்கியது. இதில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள் வெவ்வேறு இதழ்களுக்கு எழுதப்பட்டு பின்னர் நூலாக தொகுக்கப்பட்ட ஒன்றாகும்.
பௌத்தம் பற்றிய கதையாடல்களை மரபு சார்ந்து பார்ப்பனியத்திற்கு எதிராக நிறுவியதில் அயோத்திதாசரின் பங்கு முக்கியமானது. "ஆதி வேதம்" என்று அவர் எழுதி வெளியிட்ட புத்தகமும், “தமிழன்” இதழ் மூலமாகவும், ‘சாக்கிய பௌத்த சங்க; நடவடிக்கைகள் மூலமும் அவர் பரப்பிய பௌத்த கோட்பாடுகளும் பண்பாட்டு ரீதியில் முக்கியமானவை.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தான் தமிழ்நாட்டில் பல்வேறு சாதிகள் சங்கங்களை உருவாக்கி "சத்ரிய" அடையாளத்தை உரிமைகோரி கொண்டிருந்தார்கள். அப்போது தொன்மம் என்றும், மரபு என்றும் அவர்களுக்கான பழம்பெருமை சார்ந்த மாற்று கதையாடல்கள் உருவாக்கப்பட்டது . ஆனால் அதே காலகட்டத்தில் வாழ்ந்த ஒருவர் பார்ப்பன சாதி அமைப்புக்கு வெளியில் "சாதியற்ற தமிழன்" என்று மரபு சார்ந்து தன்னை முன்னிறுத்தினார் என்றால் அது முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையே. பறையர்களை மட்டும் தான் அவர் முன்னிறுத்தினார் என்றாலும் அந்த காலகட்டத்தில் சாதி சார்ந்த எல்லைக்குள் தான் செயல்பட்டிருக்க முடியும். எப்படி மறைமலையடிகள் சைவ வெள்ளாளர் என்ற அடையாளத்திற்குள் சுருங்கினாரோ இதையும் அப்படி தான் புரிந்துகொள்ள வேண்டும்.
நவீன சிந்தனை அடிப்படையிலும், எழுதப்பட்ட வரலாற்றின் அடிப்படையிலும் அயோத்திதாசரை ஏற்றுக்கொள்வது கொஞ்சம் கடினமானது தான். அவர் முன்வைக்கும் பண்பாட்டு பௌத்தம் என்பது மக்களிடையே நிலவி வரும் தொன்மங்கள் மூலமும் மொழியியல் மூலமுமே அர்த்தப்படுத்த படுகிறது. “எழுதப்படுவது மட்டுமே வரலாறு” என்ற நவீன கருத்தியல் அயோத்திதாசரை புரிந்துகொள்ள உதவாது. அவர் வாழ்ந்த காலகட்டமும், அவர் கற்ற மரபார்ந்த கல்வியும், அப்போது நிலவிய சமூக- அரசியல் சூழலையும் நாம் புரிந்துகொண்டால் அவரை ஒரு சிந்தனையாக உள்வாங்குவது எளிது என்கிறார் நூல் ஆசிரியர்.
அயோத்திதாசரை ஒரு சிந்தனையாக நிறுவுவதில், நூல் ஆசிரியர் கொண்டிருக்கும் ஆர்வம் அவர் எழுதிய கட்டுரைகள் மூலம் புலப்படுகிறது. ஒரு தத்துவமாக தன்னை நிலைநிறுத்தி கொள்வதற்கான ஆற்றலும் சாத்தியமும் ஆயோத்திதாசருக்கு இருக்கிறது என்பதை இந்நூலில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள் மூலம் உணர முடிந்தது.
ஒவ்வொரு இந்து மத பண்டிகைகளுக்கு பின்னாலும் பௌத்தத்தின் தடயம் இருப்பதை “கார்த்திகை தீபமென வழங்கும் கரத்துல தீபவிவரம்” என்ற கட்டுரையின் மூலம் அறிய முடிந்தது. அது போலவே இம்மாத(April 2022) காலச்சுவடு இதழில் வெளியான "பொங்கல் பண்டிகையில் நீத்தார் சடங்கு" என்ற கட்டுரையும் பௌத்தம் பற்றி தமிழ் சூழலில் நடந்த/நடக்கும் ஆய்வுகளின் தாக்கத்தின் மூலம் எழுதப்பட்ட ஒன்றாகவே கருதவேண்டி உள்ளது.
“The Province of the Books” என்ற நூலை வாசித்து வரும் நிலையில் , “தமிழ் புத்தக பண்பாட்டில் தலித்துகள்” என்ற கட்டுரை ஆச்சரியமளிக்கும் ஒன்றாக இருந்தது. தலித் தரப்பில் நடத்தப்பட்ட பத்திரிகைகள், இதழ்கள், புத்தகங்கள், அறிவுத்தளத்தில் அவர்கள் இயங்கிய விதம் என அனைத்தும் வியப்பான ஒன்று.
சில கட்டுரைகளோடு, நான் கொண்டிருக்கும் கருத்தியல் காரணமாக, முரண்படுகிறேன். பண்பாட்டு ரீதியில் பௌத்தம் அணுகப்படும்போது அயோத்திதாசர் தவிர்க்கமுடியாத ஆளுமை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் பண்பாட்டு பௌத்தத்தை தலித்துகளின் விடுதலை கருவியாக முன்வைக்கும்போது மீண்டும் பிற்போக்குதனங்கள் அந்த விடுதலையை சாத்தியமில்லாது செய்துவிடுமோ என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். . அந்தவகையில் நவீன ஜனநாயக பண்புகளை கொண்ட அம்பேத்கரின் பௌத்தம் சமகால பொருத்தப்பாடுடையதாக இருக்கும். வரலாற்று அடிப்படையில் அயோத்திதாசரின் பௌத்த புத்துயிர்ப்பு நடவடிக்கைகள் அங்கீகரிக்கப்படவேண்டிய ஒன்று.
நூலின் இறுதியில் அம்பேத்கரையும்- அயோத்திதாசரையும் முன்னிறுத்தி எழுதப்பட்ட சிறு கட்டுரை ஒன்று இடம்பெற்றுள்ளது. அயோத்திதாசரின் கட்டுரை ஒன்றை அம்பேத்கர் மொழியாக்கம் செய்துள்ளார். லட்சுமி நரசு பற்றி மட்டும் தான் அம்பேத்கர் அறிந்திருந்தார் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு இந்த தகவல் வியப்பாக இருந்தது.
முரண்பாடுகளுடனே இந்நூலை வாசித்தேன், ஆனாலும் அவர் முன்வைக்கும் வாதங்கள் சில திருப்திகரமானதாகவே இருந்தது. இப்படி நூல் முழுக்க பல புதிய தகவல்களும், அறிந்திராத ஆளுமைகளும், புதிய சிந்தனைகளும் இடம்பெற்றிருக்கிறது. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாசிக்கவும்.
Stalin Rajangam
Comments
Post a Comment