ஒரு நகரமும் ஒரு கிராமமும் -நூல் அறிமுகம்





 ஒரு கிராமத்திலும் நகரத்திலும் 50 ஆண்டுகளில் நடந்த மாற்றங்களை விவரிக்கும் புத்தகம் தான் முனைவர் திரு எஸ்.நீலகண்டன் எழுதிய "ஒரு நகரமும் ஒரு கிராமமும்". தலைப்பை பார்த்தவுடனேயே ஏதோ புனைவிலக்கியம் போல் இருந்தது. பிறகு துணை தலைப்பை (“கொங்கு பகுதியில் சமூக மாற்றங்கள்”) படித்ததும் தான் தெரிந்தது இது மாற்றங்களை கண்டும் கேட்டும் உணர்ந்த ஒருவரால் ஆவணமாக்கப்பட்ட புத்தகம் என்று.


இதற்கு முன்னர் ஆய்வு நோக்கில் கிராமம் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களை வாசித்திருக்கிறேன், திரு.ஜெயரஞ்சன் எழுதிய “திராவிட ஆட்சி மாற்றமும் வளர்ச்சியும்” என்கிற நூல் அதில் முதன்மையானது. Slater Villageஐ அடிப்படையாக கொண்டு நூற்றாண்டுகளில் நடந்த சமூக பொருளாதார மாற்றங்களை சில ஆய்வுக்கட்டுரைகள் மூலம் பதிவுசெய்திருப்பார். ஆனால் ஒரு ஆய்வுநூலை விட இந்த நூல் படிப்பதற்கு எளிமையாகவும் நெருக்கமாகவும் இருந்தது.

அதே சமயத்தில் பல்வேறு மாற்றங்களை கோர்த்து எழுதும் தன்மை நூலின் முக்கிய அம்சமாக பட்டது. இந்நூலின் முதல் பதிப்பு 2008இல் வெளியாகியது, பின்னர் 2019இல் MIDSநிறுவனத்தோடு சேர்ந்து காலச்சுவடு வெளியீடாக இந்நூல் இரண்டாம் பதிப்பை கண்டுள்ளது.

2008இல் இந்த புத்தகத்தை படித்துவிட்டு அந்த நகரத்திற்கும்(கரூர்) கிராமத்திற்கும்(செட்டிபாளையம்) சென்று பார்க்கும் அளவுக்கான தாக்கத்தை வாசகனுக்கு ஏற்படுத்தி இருப்பதை அறிந்தேன். இப்போது கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கடந்தோடி விட்டது, எத்தனை மாற்றங்கள் நடத்திற்கும் என்பதை யூகித்து பார்க்கவே வியப்பாக உள்ளது.

மதுரைக்கு பேருந்தில் செலும்போதேல்லாம் கரூரை கடந்து தான் சென்றுள்ளேன் என்றாலும், உன்னிப்பாக அந்த நகரத்தை கவனித்ததில். இனி ஒரு நகரின் மாற்றங்களையும் அது நிகழ்ந்த/ நிகழும் விதத்தையும் கவனிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை இந்நூல் உண்டாகியுள்ளது.

சமீபகாலமாக இங்கு ஒரு பொதுப்புத்தி திரும்ப திரும்ப வெளிப்பட்டு கொண்டே வருகிறது. ஒரு பகுதியின் வளர்ச்சிக்கு அங்கு வசிக்கும் குறிப்பிட்ட சாதி குழு தான் காரணமென்று, இது மிகையான மதிப்பீடு. இத்தகைய பார்வை அங்கு நடந்த மாற்றங்களுக்கான உண்மைக்காரணங்களை நீர்த்துப்போக செய்வதாகும். இப்படிப்பட்ட வாதங்கள் எல்லாம் சாதி பெருமையை நவீனமாக்க தான் பயன்படுமே ஒழிய மாற்றங்களுக்கான உண்மைக்காரணங்களை அறிந்துகொள்ள துளியும் உதவாது.

கரூர் நகரத்தின் வளர்ச்சி அங்கு வசிக்கும் பெரும்பான்மை சாதிகள் தொடக்க காரணமாக அமையவில்லை, எதிர்பாராத நிகழ்வுகள் மூலம் ஏற்பட்ட வாய்ப்புகளை அவர்கள் பயன்படுத்தி கொண்டார்கள் என்பதே உண்மை . கரூரில் முதன்மை தொழில்களாக இருக்கும், ஜவுளி தொழில், பேருந்து உடல்கூடு கட்டும் தொழில், சாய பட்டறை தொழில் ஆகிய மூன்றுமே அங்கு வசிக்கும் பெரும்பான்மை சாதி அல்லாதவர்களால் தொடங்கப்பட்ட ஒன்று.

ஆனால் பிற்காலத்தில் தொழில்துறையில் இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு இந்த பகுதி மக்களும் முன்னேறத்தொடங்கினார்கள். 1995 இல் கரூர் தனி மாவட்டமாக அறிவிக்கப்படுகிறது. இதற்கு அந்த நகரில் ஏற்பட்ட தொழில் துறை வளர்ச்சி முக்கிய காரணமாகும். அங்கு நடந்த மாற்றங்களை துல்லியமாக இந்நூலில் பதிவுசெய்துள்ளார் எஸ். நீலகண்டன்.

இரண்டாம் பகுதி கரூருக்கு அருகில் உள்ள செட்டிபாளையம் என்ற கிராமம் பற்றியது. கிராமத்தில் நிலவிய பிற்போக்குத்தனங்கள் தொடங்கி ஜாதி உறவுகளில் ஏற்பட்ட மாற்றம், சடங்குகள், பண்டிகைகள், சுற்றுசூழல், வாழ்வியல் ஆகியவற்றில் நிகழ்ந்த மாற்றங்களை ஆவணப்படுத்தியுள்ளார். இவரும் இப்பகுதியை சேர்ந்தவர் என்பதால் சிறிய மாற்றங்களை கூட அதற்கான காரணங்களை குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

1950களில் "மின்மோட்டார் பயன்படுத்தினால், கிணற்று தண்ணீர் சூடாகி பயிர் பாதிக்கப்படும்" போன்ற அறியாமையில் இருந்த இக் கிராம மக்கள் பின்னாட்களில் அதை அனுமதித்தவர்களாகவும், தற்போது சொட்டுநீர் பாசனத்தை உபயோகம் செய்பவர்களாகவும் இருப்பது அங்கு நடந்த பொருளியல் மாற்றங்களையும் மன மாற்றங்களையுமே குறிக்கிறது.

இப்படி எண்ணிலடங்கா ஆச்சரியமூட்டும் செய்திகளை கிராமம் குறித்த இப்பகுதி கொண்டுள்ளது . நானும் கிராமத்தை சேர்ந்தவன் என்பதால், இதை வாசிக்கும் போது என்னுடைய கிராமத்தில் நடந்த மாற்றங்களையும் சிந்தித்து பார்க்க முடிந்தது.

கிராமம் நகரம் ஆகிய இரண்டிலும் சாதி எப்படி மாறி வந்துள்ளது என்பதை அறியமுடிந்தது. தீண்டாமை என்பது நீர்த்து பொய் இருந்தாலும், சாதி குழு மனப்பான்மை என்பது இன்றளவும் சமூகத்தின் முக்கிய கருவியாக இயங்கி வருகிறது. தொழித்துறை தொடர்புகள் தொடங்கி அரசியல் செயல்பாடுகள் வரை முக்கிய முடிவுகளை சாதியே தீர்மானிக்கிறது.

மாற்றங்களின் தொடக்கமாக தனிமனிதர்களின் தீரமிக்க முயற்சிகளே முக்கிய பங்காற்றியுள்ளது. பின்னர் சமூக தொடர்ப்புகளின் நிமித்தமாக தொழில்கள் பரவி சிலருக்கு வெற்றியும் பலருக்கு தோல்வியையும் தேடி தந்துள்ளது.

செவி வழியாக அறியப்பட்ட செய்திகளையும் , சுய அனுபவங்கள் மூலம் உணர்ந்த விஷயங்களையும் ஏன் பதிவுசெய்ய வேண்டும் என்பதற்கு இந்நூல் முக்கிய சாட்சி.

MIDS நிறுவனம் இதுபோன்ற தரமான உள்ளடக்கங்களை கொண்ட புத்தகங்களை தொடர்ந்து  வெளிக்கொண்டு வரவேண்டும் என்பது என் ஆசையும் எதிர்பார்ப்பும்.


வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாசிக்கவும்.




Comments

  1. உங்கள் விமர்சனத்துக்கு நன்றி! நூலை எழுத த் தூண்டியவர் பேரா. ஆ. இரா. வெங்கடாசலபதி அவர்கள்.
    எஸ். நீலகண்டன்.

    ReplyDelete

Post a Comment