சாதிக்குப் பாதி நாளா? ராஜாஜியின் கல்வித் திட்டம்


 


Modified Scheme of Elementary Education ( M.S.E.E.)என்று பெயர்கொண்ட ஒரு திட்டம் இன்றைய தமிழ் சூழலில் "குலக்கல்வி" திட்டம் என்று அறியப்படுவதை வைத்து 1950களில் திராவிட இயக்கம் கொண்டிருந்த சமூகவியல் தாக்கத்தை அளவிடமுடிகிறது. குலக்கல்வி திட்டம் அதை தொடர்ந்து நிகழ்ந்த எதிர்வினைகள் எல்லாம் காங்கிரஸின் பார்ப்பனிய தலைமையை ஒட்டுமொத்தமாக நீக்கிவிட்டது விட்டது. பெரியார், திரு.வி.க, பெ.வரதராஜலு நாயுடு ஆகியோர் முயன்று பார்த்து முடியாமல் போன ஒன்றை காமராஜர் நிகழ்த்தி காட்டினார் என்கிறார் இந்நூலின் பதிப்பாசிரியர் திரு. சலபதி. காமராஜரின் எழுச்சி முழுமை அடைவது இந்த இடத்தில் தான். அரசியல் ரீதியாகவும் இந்நிகழ்வு முக்கியத்துவம் கொண்டது. கல்வி துறையில் இன்றைக்கு தமிழ் நாடு பெற்றிருக்கும் வளர்ச்சியிலும் இத்திட்ட கைவிடுதல் நடவடிக்கை முக்கியபங்காற்றியுள்ளது.


படிக்க தொடங்கியது முதல் கீழே வைக்க வேண்டாம் என்கிற வாசிப்பனுபவத்தை இந்நூல் கொடுத்தது. அதன் வரலாற்று பின்புலம்மும், ஆய்வு முறையும், எளிமையான எழுத்துநடையும் இத்தகையக அனுபவத்தை ஏற்படுத்தியது எனலாம். இந்நூல் திரு தே. வீரராகவனின் M.Philபட்ட ஆய்வாகும். இவர் கண் பார்வை அற்றவர் என்பதும். தமிழ்நாட்டில் PhD பெற்ற முதல் பார்வையற்ற மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்காக அவர் எந்த சலுகைகளையும் எதிர்பார்த்ததில்லை என்ற செய்தி அவர் கொண்டிருந்த மனஉறுதியையும், தன்னம்பிக்கைக்கும் ஒரு சான்று.தனது 23 வயதில் இந்த ஆய்வை அவர் மேற்கொண்டார் என்று அறியும்போது வியப்பாக தான் உள்ளது. இந்நூல் திரு.சலபதி எடுத்த முயற்சியின் காரணமாக முதலில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது பின்னர் தமிழ் மொழிபெயர்ப்பு திரு.அரவிந்தன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. சலிப்புத்தட்டாத எழுத்துநடை.

நூலின் முதல் பகுதி கிடைக்காத காரணத்தால், அதை நூலின் பதிப்பாசிரியரே ஆய்வின்மூலம் இட்டுநிரப்பியுள்ளார். பிற பகுதிகள் பற்றிய ஒரு அடித்தளத்தை இந்த பகுதியே தெளிவாக விளக்கிவிடும் காரணத்தால் நூலின் உள்ளடக்கத்தை புரிந்துகொள்வதற்கு எளிதாக உள்ளது.

நூலாசிரியர் இடதுசாரி சார்புகொண்டவர் என்பதால், திராவிட இயக்க ஓவ்வாமை இயல்பாகவே இவரிடம் இருந்தது , அது நூலை வாசிக்கும்போதே புலப்படுகிறது. இந்த தகவல்களை எல்லாம் பதிப்பாசிரியர் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதே நூல் பற்றிய எதிர்மறை பார்வை ஏற்படாமல் இருக்க முக்கிய காரணம் எனலாம்.

மேற்கத்திய கல்விமுறையில் தொடங்கி, அது இந்தியாவில் எப்படி புரிந்துகொள்ளப்பட்டது, அதன் போக்கு எப்படி இருந்தது, இந்திய விடுதலை போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்கள், கல்வி பற்றிய எத்தகைய பார்வையை கொண்டிருந்தனர் என்பது பற்றிய ஒரு அறிமுகத்தை நூலின் முதல் இயல் நமக்கு விளக்குகிறது.

திட்டத்தின் தொடக்கம், அமலாக்கம், எதிர்வினைகள் ஆகியவற்றை இரண்டாம் இயலில் நூலாசிரியர் பதிவுசெய்துள்ளார். இத்திட்டம் 1937-1939இல் ராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதமராக இருந்த சமயத்திலே அவர் கொண்டிருந்தார் என்ற செய்தி சுவாரசியமானது. மேலும் அதை மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியிலும் செயல்படுத்திப் பார்க்கப்பட்டுள்ளது. பின்னர் இரண்டாம் உலகப்போரில் இந்திய பங்கேற்கக்கூடாது என்று காங்கிரஸ் ராஜினாமாவால் இத்திட்டம் கைவிடப்பட்டிருக்கிறது.

இந்த திட்டத்திற்கு எதிராக எழுந்த போராட்டங்கள் , காங்கிரஸ் கட்சிக்குள்ளும், தமிழ்நாட்டு அரசியல் போக்கிலும் , ஆந்திர மாநில உருவாக்கத்திலும் செலுத்திய தாக்கத்தை பற்றி நூலின் மூன்றாம் மற்றும் நாங்கள் பகுதிகள் பேசுகின்றன.

திராவிட இயக்கம் இந்த திட்டத்தை எதிர்த்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே, இதை கடந்து இத் திட்டத்திற்கு இருந்த ஆதரவு மற்றும் எதிர் நிலைப்பாடுகள் சுவாரசியமானவை .

மா.பொ.சி இத்திட்டத்தை வரவேற்றார், முத்துலட்சுமி ரெட்டி அவர்களும் இதை வரவேற்றுள்ளார். ஆதாரக்கல்வி திட்டத்தின்(Wardha Scheme) ஆதரவாளர்களான ஜாகிர் உசேன், ஜி ராமசந்திரன் ஆகியோர் இத்திட்டத்தை வரவேற்றார்கள். ஆசிரியர்கள் தரப்பலிருந்து கடுமையான எதிர்ப்பு இத்திட்டத்திற்கு எழுந்தது, காந்தியின் கிராம வாழ்க்கையை அடிப்படையாக வைத்தும், ராஜாஜி கொண்டிருந்த சமூக -பொருளியல் பார்வைகளை கொண்டும் இந்த திட்டம் வகுக்கப்பட்டது எனலாம். காந்தி உயிரோடிருந்திருந்தால் இதை வரவேற்று இருப்பாரா என்பதும் சந்தேகமே. கல்கி பத்திரிகை கடைசி வரை இத்திட்டத்தை ஆதரித்து எழுதியது, அப்போதைய கல்வி துறை அமைச்சர் சி.சுப்ரமணியம் (ஆந்திர மாநிலம் பிரிந்ததற்கு பின்) இதை ஆதரித்தார். பின்னாட்களில் இவரை வைத்தே இத்திட்டத்தை காமராஜர் ரத்து செய்தார் என்பது வரலாறு.

காந்திய பொருளதார அறிஞரும் கல்வியாளருமான ஜே.சி.குமரப்பா ஆதார கல்வி திட்டமும் இத்திட்டமும் ஒன்றல்ல என்று கூறி விமர்சித்திருந்தார். கம்யூனிஸ்ட் கட்சியினர் இதை எதிர்த்தார்கள் என்றாலும் சாதியை காரணமாக அவர்கள் சொல்லவில்லை. காங்கிரஸ் கட்சி உள்ளேயே ஒரு தரப்பு இந்த திட்டத்தை எதிர்த்து வந்தது. ஒரு ஆளும் கட்சி, அரசுக்கு எதிராக இருக்கும் விசித்திரமான சூழலை இந்த திட்டம் ஏற்படுத்தி இருந்தது.

இந்த சமயத்தில் தான் ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டது, அதை பிரிப்பதில் மும்முரம் காட்டிய ராஜாஜி சில காலம் கல்வி திட்டம் பற்றிய விவாதங்களை தள்ளிப்போட்டார். ஆந்திர மாநில பிரிவினையில் ராஜாஜி ஒரு தமிழ் தேசியர் போல நடந்துகொண்டார் என்று இந்நிகழ்வை நூலாசிரியர் பதிவுசெய்துள்ளார்.

ஆந்திர மாநில பிரிவினைக்கு பின்னர் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை கொண்ட கட்சியாக விளங்கியது. இது ராஜாஜிக்கும் "நம்பிகையில்லா தீர்மானம் கொண்டுவாருங்கள் " என்று சொல்லுமளவிற்கு தைரியத்தை கொடுத்தது. இந்த திட்டடத்திற்கு எழுந்த எதிர்ப்பு அதிகரித்தது பாருலேகர் குழு அறிக்கை சமர்பித்தபிறகு தான். இந்த திட்டத்தின் விளைவுகளை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது அதன் தலைவர்(பாருலேகர்) தொடங்கி உறுப்பினர்கள் வரை அனைவரும் இந்த திட்டத்தின் ஆதரவாளர்கள் என்பது தான் நகைமுரண். அந்த குழு அறிக்கை எதிர்ப்பை வலுவாக்கியது.

வயதை காரணமாக வைத்து ராஜாஜி பதவி விலகினார், கட்சியை கைப்பற்றி இருந்த காமராஜர் ஆட்சியையும் கைப்பற்றினர். திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பெரியார் வரவேற்றார், பின்னாட்களில் காமராஜர் ஆதரவு நிலைப்பாட்டையும் அவர் கொண்டிருந்தார். தொடக்க கல்வி பற்றி ஆய்வு செய்ய டாக்டர்.அழகப்ப செட்டியார் தலைமையில் ஒரு குழுவை காமராஜர் அமைத்திருந்தார். இலவச மதிய உணவு திட்டத்தை ஒரு பரிந்துரையாக இந்த குழு குறிப்பிட்டிருந்தது.

அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் இந்த போராட்டத்தோடு சேர்ந்து நடத்திய மும்முனை போராட்டம் என்பது திமுக போட்டியிட்ட முதல் தேர்தலில்(1957) 15 சட்டமன்ற இடங்களையும் , 2 நாடாளுமன்ற இடங்களையும் கைப்பற்ற அச்சாரமாக அமைந்தது.

இப்படி இந்த திட்டம் ஏற்படுத்திய வரலாற்று மாற்றங்களின் விளைவுகள் தான் தற்கால தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார சூழலுக்கான காரணம். அதை புரிந்துகொள்ள இந்த திட்டத்தையும் அதை சுற்றி நடந்த அரசியல் விவாதங்களையும் நாம் புரிந்துகொண்டாக வேண்டும். நூலின் அறிமுக உரை அனைவரும் வாசித்தாகவேண்டிய வேண்டிய ஒன்று.

ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் கிடைக்கிறது. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அனைவரும் அவசியம் வாசித்து பயனடையவும்.

A.r. Venkatachalapathy

Comments