தமிழக நாடார்கள் - Robert L. Hardgrave

 



  தமிழ்நாட்டின் சமூகவியல் மற்றும் அரசியல் கண்ணோட்டத்தில் ஆய்வுகளை மேற்கொண்டதில் இரண்டு மேலை நாட்டு ஆய்வாளர்கள் முக்கியமானவர்கள். திராவிட இயக்கம் பற்றி ஆய்வு செய்த Marguerite Ross Barnett ஒருவர், “The Nadars of Tamilnadu”, “The Dravidian Movement”ஆகிய புத்தகங்களை எழுதிய Robert L. Hardgrave மற்றொருவர் . இருவர் மேற்கொண்ட ஆய்வுகளும் கிட்டத்தட்ட ஒரே அமைப்புமுறையை(Structure) கொண்டவை.


வெளியாட்கள்(Outsiders) குறிப்பாக மேற்கத்திய ஆய்வாளர்கள் நம் சமூகத்தை ஆய்வு செய்யும்போது சார்புகள்(Bias) தவிர்க்கப்படுகிறது இது நேர்மறையான அம்சம். அதே சமயம் இவை மேலோட்டமான ஆய்வுகளாகவே இருந்துவிடுகின்றன. நுணுக்கமாக ஆய்வதில் பெரியளவிலான ஈடுபாடு இல்லாமல் இருப்பதாகவே தெரிகிறது. செவி வழி செய்திகள்மூலமும் இங்கிருக்கும் ஆவணங்களை வைத்துமே அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இவர்கள் இருவரும் மேற்கொண்ட ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

“The Nadars of Tamilnad” என்ற இந்நூல் , நாடார்களின் வரலாறு குறித்தும், நாடார் சமூக மேம்பாடு குறித்தும் அவர்கள் இன்றைக்கு அடைத்திருக்கும் வளர்ச்சிக்கான காரணங்கள் குறித்தும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு புத்தகம்.

சாதிகள் பற்றிய ஆய்வுகள் முக்கியமானவை. அரசியல் அடிப்படையிலும் சரி சமூகவியல் அடிப்படையினும் சரி. தொடக்ககாலத்தில் நாடார்களிடையே இந்நூல் எதிர்ப்பை சந்தித்தபோதிலும் பிற்காலத்தில் இதன் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். சாதிய இழிவுகள் மூலம் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு சாதி குழு, தனக்கு ஏற்பட்ட எதிர்பாராத வாய்ப்புகள் மூலமும் சுய முனைப்பின் விளைவாகவும் சமூக-அரசியல் மற்றும் பொருளாதார துறைகளில் எவ்வித முன்னேற்றங்களை அடைந்தது என்பதை தெளிவாக விளக்குகிறது இந்நூல்.

தென் தமிழநாட்டில் இருக்கும் பெரும்பான்மை சாதி குழுக்களில் நாடார் சாதியும் ஒன்று, பனைமரம் ஏறுவதையும் அது சார்ந்த வேலைகளையும் தங்களின் முதன்மை தொழிலாக கொண்டிருந்தார்கள், இது தவிர்த்து விவசாய நிலங்கள் வைத்திருந்த நாடர்களும் அப்பகுதியில் இருந்தார்கள்.

பிரிட்டிஷ் வருகைக்கு பிறகு, இங்கு மிஷனரிகளின் செயல்பாடுகளும் நடைபெறுகிறது , இதன் காரணமாக தங்களின் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து மீளும் முனைப்பின் விளைவாகவும் கிறிஸ்துவ மிஷனரிகள் செலுத்திய தாக்கத்தின் காரணமாகவும் பெரும்பாலான நாடார்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். நாடார் சமூக முன்னேற்றத்தில் இந்த நிகழ்வு முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. இந்த நிகழ்வின் காரணமாக ஒரு பக்கம் கல்வி, மருத்துவம் போன்ற நவீன துறைகளின் தாக்கத்தினால் நேர்மறையான மரபு மீறல்கள் நடக்கிறது.

நாடார் சமூக தொன்மங்கள் குறித்த ஆய்வுகளும் நடைபெறுகிறது. இத்தகைய தொன்ம ஆய்வுகள் அவர்களை பாண்டிய மன்னர்களின் வாரிசுகளாக நிறுவ முயல்கிறது. இந்த பழம்பெருமை சமூக இழிவை போக்கும் கருவியாக பய்னபடுத்தப்படுகிறது. ஒரு கட்டத்தில் இது சமஸ்கிருதமயமாக்கல்(sanskritization) என்ற அளவிற்கு சென்று பின்பு மதசார்பற்ற(secular) தன்மையை அடைகிறது. இதை ஒரு முழு சுழற்சி(Cycle) என்று சொல்லலாம், சாதிகளின் நவீனப்படல்(modernization) என்பது இப்படி தான் நடந்துள்ளது.

ஆலய நுழைவு போராட்டம் , தோள் சேலை போராட்டம் போன்றவை ஒருபுறம் நடைபெற தொடங்குகிறது. கல்வி, வியாபாரம், மருத்துவம், சட்டம் போன்ற துறைகளிலும் நாடார்கள் நல்ல நிலையை அடைய தொடங்குகிறார்கள்.

நாடார்களின் வளர்ச்சி, பிற முன்னேறாத அதே சமயம் பெரும்பான்மை சமூகங்களுக்கு ஒருவித அக ரீதியான அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது. அவர்களை அடக்கி வைக்க வேண்டும் , ஆதிக்கம் செலுத்தவேண்டும் போன்ற எண்ணங்களின் எழுச்சியினால் மறவர்களுக்கும் நாடார்களுக்குமிடையே பகை உணர்ச்சி அதிகரிக்கிறது. நெல்லை பகுதியில் வெள்ளாளர்கள்-நாடார்கள் இடையே வன்முறை வெடிக்க தொடங்குகிறது. இந்த எதிர்ப்புணர்வு நாடார்களிடையே இருக்கும் ஒற்றுமை உணர்வை அதிகப்படுத்துகிறது.

1910இல் நாடார்களுக்கான ஒரு அமைப்பாக ‘நாடார் மகாஜன சங்கம்’ தொடங்கப்படுகிறது. இதற்கு முன் சமஸ்க்ரிதமயமாக்களின் விளைவாக ‘சத்திரியர் மகாஜன சங்கம்’ என்ற அம்மைப்பு நாடார் சாதி வியாபாரிகளால் 1895ல் ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அது நிலைக்கவில்லை.

நாடார் மகாஜன சங்கம் என்பது மதசார்பற்ற ஒரு அமைப்பாக செயல்பட்டது. இந்து நாடார்கள் கிறிஸ்துவ நாடார்கள் என அனைவரும் அதில் பங்குகொண்டர்கள். மகிமை நிதியின்(Economic Capital) மூலமும், உறவின்முறை(Social Capital) என்ற அமைப்பின் மூலமும் ‘நாடார் மகாஜன சங்கம்’ தன்னை உயிர்ப்புடன் வைத்துக்கொண்டது.

நாடார்களின் முன்னேற்றத்தில் கிறிஸ்துவத்தின் வருகை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, நாடார் மகாஜன சங்கத்தின் வருகையும் முக்கியமானது. பள்ளிகள், கல்லூரிகள், உயர்கல்வி பயிலும் நாடார் சமூக மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை என பல்வேறு வசதிகளை நாடார் மகாஜன சங்கம் ஏற்படுத்தியது. அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு அமைப்பாக அது செயல்பட்டது. இந்த பள்ளி கல்லூரிகளில் பிற சமூகத்தாரும் படிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

நீதிக்கட்சி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இயக்கம், சுயமரிதை இயக்கம் என பல்வேறு அரசியல் இயக்கங்களில் இருந்தவர்களும் இந்த சங்கத்தின் உறுப்பினர்களாகவும் இருந்தார்கள்.

நேரடி தேர்தல் அரசியல் ஆதரவு நிலையை சங்கம் ஒருநாளும் எடுத்ததில்லை என்றாலும் நீதிகட்சி காலத்தில் நாடார்கள் நீதிக்கட்சிக்கே அதிகம் ஆதரவு அளித்தார்கள், நெல்லை நாடார்கள் தவிர்த்து. காரணம் நெல்லை பகுதியில் வெள்ளாளர்கள் நீதிக்கட்சியின் தலைமை பொறுப்புகளை வகித்தார்கள். மதுரை, ராமநாதபுரம் போன்ற இடங்களில் நாடார்களிடம் நீதிக்கட்சி நல்ல ஆதரவுபெற்ற ஒன்றாக இருந்தது, காரணம் மறவர்கள் காங்கிரஸ் ஆதரவு நிலையை எடுத்திருந்தார்கள். முத்துராமலிங்க தேவர் தொடக்ககாலத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சௌந்தரபாண்டிய நாடார் திராவிட இயக்கத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்துவந்தார். தங்களின் வியாபார காரணத்திற்காக ஆங்கிலேயர் ஆட்சியையும் சங்கம் ஆதரித்தது.

1940களில் நீதிக்கட்சியின் பலவீனமும், காங்கிரஸ் இயக்கத்தில் காமராஜ் நாடாரின் எழுச்சியும், இந்தியா விடுதலையை எதிர்நோக்கி இருந்த காரணத்தினாலும், நாடார்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரித்தார்கள். இளைஞர்களிடையே சுயமரியாதை இயக்கமும் பின்னாட்களில் திக-திமுகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. ஒரு காலத்தில் பூணூல் அணிந்துகொண்ட நாடார்கள் திராவிட இயக்கத்தின் பகுத்தறிவு- சுயமரிதை ஆகிய நவீன கொள்கை பரவல் காரணமாக அதை கைவிட்டார்கள்.

விடுதலைக்கு பிறகு, நாடார்களுக்கான வெளி(Space) அதிகரித்தது . பொருளாதார வளர்ச்சியும் சமூக அந்தஸ்தும் ஒரு புறம் ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்தது. குழு மனோபாவத்தில் இருந்தது விடுபட தொடங்கி தனியான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள தொடங்கினார்கள். சாதி உணர்வு முழுவதும் மட்டுப்படவில்லை என்றாலும் ஒரு அளவுக்கேனும் குறைந்து காணப்பட்டது. பிற சமூக மக்களுடன் இயல்பாக பழக தொடங்கினார்கள்.

மறவர்களுடனான பகை உணர்ச்சியால், ராமநாதபுரத்தில் மட்டும் நாடார்களின் ஒற்றுமை அதிகம் காணப்பட்டது. முதுகளத்தூர் கலவரம் தொடர்ந்ததற்கு பின்னால் பல நாடார் வியாபாரிகளும் அரசியல் தலைவர்களும் காரணமாக இருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 1960 களில் நடுத்தர நாடார் குடும்பங்கள் மற்றும் இளைஞர்களிடத்தில் திமுக நல்ல செல்வாக்கை கொண்டிருந்தது. சிலர் சுதந்திரா கட்சியின் பொருளாதார கொள்கைக்காக அதையும் ஆதரித்தார்கள்.

நாடார் சமூக முன்னேற்றத்திற்கு பல்வேறு காரணிகள் முக்கியமானதாக இருந்துள்ளது. அவர்களுக்கு ஏற்பட்ட அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் சரியாக பயன்படுத்தி கொண்டார்கள். சக நாடார்களுக்கு உதவ நாடார் மகாஜன சங்கம் கருவியாக பயன்பட்டது. அரசியலில் காமராஜர் நாடார்களின் ஆதர்ச நாயகனாக பார்க்கப்பட்டார். பொருளாதார வாய்ப்புகள் மூலம் பிற சமூகமக்களுடனும் நல்ல உறவே நிலவியது.

இப்படி ஒரு ஆழமான பார்வையை இந்நூல் ஏற்படுத்துகிறது. இதர சாதி குழுக்களின் வளர்ச்சி போக்கினை புரிந்துகொள்ளவும் இதுபோன்ற ஆய்வுகள் இன்றியமையாதவை. அத்தகைய ஆய்வுகள் ஏன் முக்கியம் என்ற கேள்விக்கான பதிலையும் இந்நூல் கொண்டிருக்கிறது.

தமிழ் மொழிபெயர்ப்பும் அருமையான ஒன்றாக இருந்தது . நூலின் பின் இணைப்பாக மூன்று முக்கிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன அதில் மார்ஷல் நேசமணி குறித்த கட்டுரை சுவாரசியமான ஒன்று .

வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாசிக்கவும்.


Book: தமிழக நாடார்கள் ஒரு சமுதாய மாற்றத்தில் அரசியல் பண்பாடு

Author: இராபர்ட் எல். ஹார்டுகிராவ்

Publisher: அடையாளம்

Comments