The Icon and the Iconoclast



இன்றைக்கு பெரியார் திடலில் social justice film fest  சார்பாக “The Icon and the Iconoclast”  திரைப்படம் திரையிடப்பட்டது. திரைப்படம் வெளியான சமயத்தில் தவறவிட்ட காரணத்தினால், இன்றைக்கு தான் பார்த்தேன். திரைப்படம் பார்த்துவிட்டு ஒரு அறிமுகம் எழுதவேண்டும் என்று முடிவு செய்திருந்ததால், பேனா நோட்டுடன் படம் பார்க்க உட்கார்ந்தேன்.  திரையிடல் முடிந்ததும் என்னுடைய சில கருத்துக்களையும், கலந்துரையாடலில் பகிர்ந்துகொண்டேன். 


படம் முடிந்ததும் எனக்கு ஏற்பட்ட சில எண்ணங்களை கூறிவிட்டு திரைப்படம் பற்றி சொல்கிறேன், பெரியாரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் ஆவணப்பட தொடர்(Documentary series) எடுக்கும் அளவுக்கு உள்ளடக்கம் நிறைந்த ஒன்று. தமிழை விட ஆங்கில மொழிபெயர்ப்பில் பெரியாரின் எழுத்துக்கள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆங்கிலத்தில்(தமிழிலும்) பெரியாரை எடுத்துச்செல்ல புத்தகங்களை விட  ஆவணப்படங்கள் முக்கிய பங்களிப்பாக இருக்கும் என்பது  என் அவதானிப்பு.   உரையாடலை மையமாக வைத்து சம்பத்தில் வெளியான "One Night in Miami(2021)" என்ற திரைப்படத்தோடு “The Icon and the Iconoclast” திரைப்படத்தை என்னால் ஒப்பிடமுடிகிறது. 


இந்த திரைப்படம் 1927 மைசூர் மாகாணத்தில் (பெங்களூர்) நடந்த பெரியார் - காந்தி இடையிலான உரையாடலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒன்று. குடிஅரசு(1927) இதழில் இந்த உரையாடல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. பெரியாராக  கிஷோர் நடித்துள்ளார், சால்மின்  ஷெரிப் காந்தி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெரியாரின் நெருங்கிய நண்பரான S. ராமநாதன் கதாபாத்திரத்தில் சுவாமி என்பவர் நடித்துள்ளார். 


1920கள், இந்திய தேசிய இயக்கம் தீவிரமாக இயங்கிய காலம், தேசிய இயக்கத்தின் முகமாக காந்தி அறியப்பட்டார். பெரியார் காங்கிரஸ் இயக்கத்தை விட்டு வெளியேறியது தேசிய இயக்கம் உச்சத்தில் இருந்த சமயத்தில் தான். “சாதி, மத, காங்கிரஸ், காந்தி, ஒழிப்பு தான் என் கொள்கை” என்று காங்கிரசை விட்டு வெளியேறிய பெரியார், தனது நண்பர் S .ராமநாதனுடன் சேர்ந்து சுயமரியாதை இயக்கத்தில் இயங்குகிறார். 


காந்தியுடன்  உரையாட பெரியாரும் தயாராக இருந்தார் என்பது உரையாடல் தொடங்கும் முன் "My biggest challenge is there" (Periyar meant Gandhi as his biggest challenge) என்று தனது நண்பர் S.ராமநாதனிடம் சொல்வதிலிருந்து உணர முடிகிறது. 


இருவரும் Time Sensitive ஆளுமைகளாகவே இருந்துள்ளார்கள். நேரம்தவறாமையின் மீது இருவரும் கொண்டிருந்த அக்கறை அழகாக காட்சிப்படுத்தப் பட்டிருந்தது. பெரியார்-காந்தி  உரையாடல் தொடங்கும் முன், பெரியார் 1927 சமயத்தில் கொண்டிருந்த சில கோட்பாடுகளை விளக்கும் வகையில் திரைக்கதை அமைந்திருந்தது. நீதிக்கட்சியை அவர் விமர்சனங்கக்குடன் ஏற்றுக்கொண்டிருந்தார். ரஸ்சியாவிலும் ஐரோப்பாவிலும் செயல்பட்ட நாத்திக இயக்கங்கள் குறித்த விழிப்புணர்வு பெரியாரிடம் நிரம்பவே இருந்தது.  பார்ப்பனர்- சூத்திரர்- பஞ்சமர் ஆகியோர் பற்றிய சித்தாந்த தெளிவு அவரிடம் இருந்தது. என்றைக்கும் அதிகாரமற்றவரின்(Powerless) குரலை பிரதிபலிக்க வேண்டும் என்பதில் பெரியார் தெளிவாக இருந்தார். 


MSS. பாண்டியன் சொல்வதை போல் பெரியார் ஒரு நவீனத்துவவாதி(Modernist), அவரின் சிந்தனையும் அப்படியே அமைத்திருந்தது. மாற்றங்களை அவர் விரும்பினார். மாற்றங்களை விரும்பியதால் தான் இந்து மதத்தை ஒழிக்கவேண்டும் என்ற கொள்கையை கொண்டிருந்தார். மத சீர்திருத்தங்கள் மீது அவர் நம்பிக்கை இழந்திருந்தார். 


“Hinduism must go..” என்று தான் காந்தியுடனான உரையாடல் தொடங்குகிறது. 15 நிமிட அளவிலான உரையாடல் அது. இருவரும் தங்களின் கருத்துக்களில் கொண்ட உறுதியினால் சமாதானமடையாமலே அந்த உரையாடல் முடிவடைகிறது. 


மரபின்(Tradition) பிரதிநிதியாக காந்தியும், நவீனத்தின்(Modernity) பிரதிநிதியாக பெரியாரும் காட்சிப்படுத்தபப் பட்டிருந்தார்கள். சிந்தனை அளவிலும் உடை அளவிலும் இந்த இருமை(Tradition-modernity) வெளிப்பட்டது. உரையாடல் முடிந்த இறுதி காட்சியில் பெரியார் எழுந்து சென்ற உடன் அந்த இடத்திற்கு பின்னிருந்த சுவற்றில் ஒளி மிகுந்த விளக்கு எரிகிறது, காந்தி மேஜையில்  இருந்த பகவத் கீதையை எடுத்து கையில் வைத்துக்கொள்கிறார். இந்த காட்சியின் ஒளிப்பதிவும் அருமை.  படத்தின் தலைப்பு முதல் இறுதி காட்சி வரை இந்த இருமை(Tradition-modernity) வெளிப்பட்டு கொண்டே இருக்கிறது.  


பெரியாரின் வெளிப்படையான மற்றும் கடுமையான தொனியும், காந்தியின் மென்மையான மொழி நடையும் உண்மைத்தன்மையுடன் காட்சிப் படுத்த பட்டிருந்தது. தலைப்புக்கேற்ற திரை மொழியை 19 நிமிடம் முழுவதும் அனுபவிக்க முடிந்தது. பெரியாரின் வாழ்கை வரலாறு ஒரு தொடராக(Docu-drama) எடுக்கப்பட்டால் கிஷோரின் உடல்மொழியும், குரலும், நடிப்பும் நிச்சயம் வலுசேர்க்கும். அவர் தான் சரியான தேர்வாக இருப்பார் என்பது என் கருத்து. 


திரைப்படமாக்கப்படும் சாத்தியங்களை கொண்ட நிகழ்வுகள் பெரியாரின் வாழ்க்கையில் நிறைய இருந்தாலும் அதை எல்லாம் கதையாக்க நமக்கு ஒரு Spike lee தேவை படுகிறார். அவர்களை கண்டெடுப்பது தான் இங்கு  சிரமமான காரியம். அந்த தேடலுக்கான தொடக்கமாக இந்த திரைப்படத்தை நான் பார்க்கிறேன். 


அவசியம் பார்த்து, ரசித்து, கொண்டாடப்  படவேண்டிய படைப்பு இது. பொது சமுக பார்வைக்கும் விரைவில் காட்சி படுத்தப்பட்டால் சிறப்பாக இருக்கும்.  படக்குழுவின்  இந்த முயற்சிக்கு அன்பும் நன்றியும். 


Vilasini Ramani

 Karthick RM

Comments