The Province of The Book: Scholars, Scribes and Scribblers in Colonial Tamilnadu

    



 தாத்தா வாங்கி கொடுத்த "பெரியார் பிஞ்சு" படித்து தான் வாசிப்புக்கு நான் அறிமுகமானேன். சிறுவர் மலர், சுட்டி விகடன்,Twinkle போன்ற சிறார் இதழ்கள் எல்லாம் அவ்வப்போது விரும்பி வாசிப்பதுண்டு. தினகரன் பத்திரிகையில் விளையாட்டு பக்கம் மட்டும் படித்த போது நான் வளர்ந்தும் வளராமலும் இருந்தேன். விளையாட்டு பருவத்தை கடந்த பிறகு இந்து தமிழ் திசையில் வெளிவரும் நடுப்பக்க கட்டுரைகளை மட்டும் திருடி(விடுதி நாட்கள் என்பதால் ) வாசித்திருக்கிறேன். 


ஆங்கிலம் கற்றுக்கொள்ளவேண்டும் என்றும், காதல் தோல்வியில் இருந்து மீளவும் ஆங்கில புனைவிலக்கியங்களை வாசிக்க தொடங்கினேன். Harry Potter, Hunger Games, God Father போன்ற புத்தகங்களை வாசித்தேன். Agatha Christie, John Green, Elizabeth Gilbert, Haruki Murakami போன்றவைகளின் எழுத்துக்களும் எனக்கு அறிமுகமாகியிருந்தது. 


அரசியல், தத்துவம், வரலாறு  புத்தகங்களை வாசிக்க தொடங்கியது 2019க்கு பிறகு தான். கல்லூரி படிப்பை முடித்து, வெளியுலக சூது வாதுகளுக்கு பழக்கப்பட்டிருந்தேன். அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ், தமிழ் தேசியம்   என ஆரம்பகட்ட அரசியல் ஆர்வம் உள்ள ஒரு சராசரி  தமிழ்நாட்டு  இளைஞன் என்னவெல்லாம் வாசிப்பானோ அதை எல்லாம் நானும் வாசித்திருக்கிறேன்.


படிக்காமல் பாதியில் விட்ட புத்தகங்கள், கடன் வாங்கி படித்தவை, மழை காலத்தில் புகைப்படம் எடுக்க வேண்டுமென்றே படித்தவை, சர்ச்சை காரணமாக படித்தவை, அதீத ஆர்வத்தால் ஒரே நாளில் படித்தவை, படிக்கவேண்டும் என்று படித்தவை, நண்பர்களுக்காக படித்தவை, பிறந்தநாள் கடிதம் எழுதவேணும் என்று படித்தவை  என புத்தகங்கள் பற்றிய கதைகள் ஏராளம். ஒரு பண்பட்ட மனிதனாக என்னை மாற்றியதில்/மாற்றிக்கொண்டிருப்பதில்  புத்தகங்களே முதன்மையானவை. 


ஒரு நூல் அறிமுகத்துக்கு இவ்வளவு சொந்த கதை தேவையா என்றால் தேவை தான், புத்தகம் பற்றி ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது, புத்தகங்கள் என் மீது செலுத்திய தாக்கத்தை எப்படி குறிப்பிடாமல் இருக்க முடியும். 


தமிழ் சமூகத்தில் வாசிப்பு பழக்கம் என்பதும் புத்தகம் என்பதும், அது சார்ந்த தொழில் முறை செயல்பாடுகள் என்பதும்  எப்படி பரிணமித்து வந்துள்ளது என்பதை ஆய்வு நோக்கில் பதிவு செய்யும் புத்தகம் தான் “The Province of The Book: Scholars,Scribes and Scribblers in Colonial Tamilnadu” . இந்த புத்தகம் பேசும் கால வரம்பு காலனித்துவ காலத்துக்கு உட்பட்டு இருந்தாலும் அதை பற்றி அறிந்துகொள்வது ஆர்வமூட்டும் ஒன்றாகவே இருந்தது. 


இந்த புத்தகத்தில் முன்னுரை முடிவுரை உட்பட மொத்தம் 9 அத்தியாயங்கள் (Chapters)இருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயம் குறித்த  சில தகவல்களை மட்டும் இந்த அறிமுகத்தில் பகிர்கிறேன். 


ஒரு ஐரோப்பிய மொழி அல்லாத மொழியில் காகித அச்சு  பிரதி என்பது தமிழில் தான் தான் முதல்முதலில் வெளிவருகிறது. 1577 இல் ‘தம்பிரான் வணக்கம்’ என்ற நூல் கோவாவில்(Goa) அச்சிடப்படுகிறது. 1556 முதல் 1800  வரை 266 தமிழ் புத்தகங்கள் வெளியாகியுள்ளது. இந்த சமயத்தில் கிழக்கிந்திய(Oriental Languages) மொழிகளில் வெளியான 672 நூல்களில் 40 சதவிகிதம் தமிழ் நூல்களாகவே இருந்தன. இந்த சமயத்தில் ஒரே ஒரு சமஸ்க்ரித நூல் தான் வெளியாகி இருந்தது என்பது துக்கடா செய்தி.  காலனியத்தின் வருகை தான் அச்சு பண்பாட்டை நமக்களித்துள்ளது என்பது தெளிவு. 


தொடக்ககால புத்தக பிரதி என்பது காலனியத்திற்கு முன்பான(pre-colonial) சமூக கட்டமைப்பின்(Social Structures) வழியாக தான் வெளியிடப்பட்டது. scribes -patrons-patronage  என்பது தான் அக்கால  புத்தக பண்பாட்டில் நிலவிய சமூக உறவு. இதில் எழுத்தாளர்களுக்கு உதவுபவர்களாக மன்னர்கள், ஜமீன்தார்கள், நிலப்பிரபுக்கள், சாதி தலைவர்கள், மத நிறுவனங்கள், ஆதீனங்கள் போன்றவைகளே இருந்துள்ளது. இது தான் 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரை  நிலவிய சூழல். 


தொடக்க கால பதிப்பு செயல்பாடுகள் எல்லாம் இப்படி மரபார்ந்த ஆதிக்க வர்கத்தின் உதவியினால் மட்டுமே நிகழ்ந்துள்ளது. இந்த சமயத்தில் வெளியான புத்தகங்களின் முகப்பில் எழுதியவரின் பெயரை விட நிதி அளித்தவரின்(Patron) பெயரும், வெளியிடுபவரின்(Publisher) பெயருமே முதன்மையாக இடம்பெற்றிருந்தது. 


காலனியத்தின்  விளைவால் ஏற்ப்பட்ட சமூக மாற்றத்தினால், சில தொழில்துறை வல்லுநர்கள், வியாபாரிகள், அயல்நாட்டு வர்த்தகர்கள் உருவானார்கள். இவர்களிடமிருந்து கிடைத்த/ பெறப்பட்ட சந்தாக்களின்(Subscriptions) மூலம் சில புத்தகங்கள் வெளியாகின. இது 19ஆம் நூற்றாண்டின் கடைசி இரண்டு தசாப்தங்களில் இருந்த நடைமுறை. 


நடுத்தர வர்கத்தின்(Middle class) உருவாக்கம் தான் ஆதிக்கவர்கத்தின் பிடியை தளர்த்தி, புத்தகங்களை பரவலாக்குகிறது. மறுதலடையும் காலகட்டம்(Transition Phase) என்று இதை குறிப்பிடலாம். இந்த பரவலாக்கம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே நடைபெற்று வருகிறது. நடுத்தர வர்கம் பழமையை நிராகரித்து சமகால இலக்கியங்களையும்(Contemprory Literature), பயன்பாடுடைய அறிவையுமே(Useful Knowledge) கோரினார்கள். இதன் விளைவாக பாரதியாரின் படைப்புகள் நடுத்தர வர்க்கத்தினர் இடையே    தேசிய உணர்வை தூண்டி இருந்தது. ராமானுஜாச்சாரி என்பவர்  மஹாபாரதத்தை தமிழில்  மொழி பெயர்த்திருந்தார். பழமைக்கும் புதுமைக்கும் இடையான ஒரு மையத்துவ காலகட்டமாக இக்காலகட்டம் திகழ்ந்தது 


முதல் உலகப்போருக்கு பிறகு , புத்தகம் வெளியிட புரவலர்கள் அனுசரணை என்பது தேவை இல்லாத ஒன்றாக மாறுகிறது. முழுக்க முழுக்க வாசர்களையும் சந்தையையும் நம்பியே புத்தகங்கள் வெளியாக தொடங்குகிறது. நாவல் கலாச்சாரத்தின் தொடக்கமாக இதை சொல்லலாம்.  நாவல் (புதினம், நவீனம்) என்ற பெயர்களால் இது அழைக்கப்படுகிறது. மேலைநாட்டு தாக்கத்தினால்(Western Influence) இத்தகைய நாவல் இலக்கியங்கள் வெளிவருவதால் இதற்கு கடுமையான எதிர்ப்பு தேசியவாத சுதேசிகளிடமும், தனி தமிழ் இயக்கத்தாரிடமும், பழமைவாதிகளிடமும் நிலவி வந்தது. மரபார்ந்த நடைமுறைகளுக்கு எதிராகவும், ஆணாதிக்க கட்டமைப்பை குழைக்கும் விதத்திலும் நாவல் அமைதிருப்பதால் இத்தகைய எதிர்ப்பு கிளம்பியது. 1930களில் பெண்கள் நாவல் வாசிக்க கூடாது போன்ற பிற்போக்குத்தனங்கள் எல்லாம் நிலவி வந்தது. 


1930களின் பிற்பகுதியில், ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த  கல்கியின் நாவல்களுக்கு பிறகு தான் இந்நிலை மாற தொடங்குகிறது. காரணம் சமுகத்தில் நிலவிய மரபுகளை பெரியளவில் மீறாமல் யதார்த்தங்களை தழுவியே இவை எழுதப்பட்டிருந்தது. ஆனந்த விகடனில் வெளியான கல்கியின் ‘தியாகபூமி’ நாவலுக்கு 3 லட்சம் வாசகர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. தேசிய இயக்கம், சுயமரியாதை இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம் போன்ற அறிவு இயக்க செயல்பாடுகளால் அரசியல் சார்ந்தும் நிறைய புத்தகங்கள் வெளியாக தொடங்குகின்றன.தமிழ் புத்தக பதிப்பு சூழலில் சைவ மடங்களின் பங்கும் அளப்பரியது.  இந்த சமயத்தில் தான் நூல் ஆசிரியர், பதிப்பாளர், அச்சகத்தார் ஆகிய துறைசார் நிபுணர்கள் பேசுபொருளாகிறார்கள். 


தொடக்கத்தில்(Patronage era) நூலாசிரியர் பெயருக்கு முக்கியத்துவமளிக்கப்படாமல் புத்தகத்தின் தலைப்புக்கும், பதிப்பாளரின் பெயருக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டது. Transition Phaseல் நூல் ஆசிரியர் பதிப்பாளராகவும் இருந்தார்.


1920களுக்கு பிறகான  நாவல் வெளியீட்டின் மூலமே, பதிப்பாளர்(Publisher) என்கிற ஒரு தனி  தொழில் உருவாகிறது. பதிப்பாளர் என்பவர் பெரும்பாலும் செல்வமிக்கவராக எழுத்தாளரை சுரண்டுபவராகவுமே இருந்துள்ளார். இதற்கான இலக்கிய சான்றுகளும் கிடைக்கப்பெற்றுள்ளது. பத்திரிகை நடத்துபவர்களும், இதழ் வெளியிடுபவர்களுமே தொடக்கத்தில் புத்தகங்களை வெளியிட்டு வந்தார்கள். பின்னாட்களில் புத்தகங்களுக்கென தனி அச்சகம் உருவாகிறது. 


பாடப்புத்தகங்களை வெளியிடுவதென்பது லாபம் தரும் தொழிலாக பார்க்கப்பட்டது. பதிப்பாளருக்கும் பாடநூல் கழகத்திற்குமிடையே கள்ளத்தனமான உறவு உருவாகி இருந்தது. 


வாசகர்களை பொறுத்தவரை, நாவல் கலாச்சாரத்திற்கு பிறகு தான் வாசக பரப்பு அதிகரிக்கிறது. குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி, வை.மு. கோதைநாயகி அம்மாள், அருணகிரி நாதர் ஆகியோரின் படைப்புகள் அதிகளவில் விற்பனையானது. மெட்ராஸ் மாகாணத்தை கடந்து, இலங்கை பர்மா, மலேயா போன்ற நாடுகளிலும் தமிழ் புத்தகங்கள் அதிகம் வாசிக்கப்பட்டன . நகர்ப்புறங்களில் தான் வாசகர்கள் அதிகமிருந்தார்கள். உயர் சாதிகளிடையே மட்டும் தான் புத்தகங்களின் புழக்கம் அதிகமாக இருந்தது. சொற்ப அளவில் விளிம்புநிலை மக்களும் புத்தகங்களை நுகர்ந்தார்கள். 


 இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, தெற்காசிய நாடுகளில் ஜப்பான் படையெடுப்பினால் அங்கிருந்து வந்த  நாட்டுக்கோட்டை செட்டியார்களின் முதிலீடு தமிழ் நாட்டில் அதிகரிக்கிறது. இது நிறைய புத்தகங்களை வெளிக்கொண்டு வருகிறது. வாசக பரப்பும் அதிகரிக்கிறது. இதை தாண்டி இங்கு நடந்த பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் காரணமாக  பன்மைத்துவ வாசக பரப்பை உருவாகி இருந்தது. 


பனை ஓலைகளில் இருந்து அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு மாற்றமடையும் போது, வாசிப்பு முறைகளும் மாறுபடுகின்றன. பனை ஓலை காலத்தில் சுற்றி மக்களை அமரவைத்து சத்தமிட்டு வாசிக்கும்(Loud Reading) பழக்கம் தான் இருந்தது. புத்தகங்களின் வருகை என்பது, ஒரே புத்தகத்தை வேறு வேறு சமயத்தில் பலர் படிக்கும் நெகிழ்வுத்தன்மையை உருவாக்கி இருந்தது. அமைதியான வாசிப்பு (Silent Reading )என்பது அச்சு புத்தகங்கள் வருகைக்கு பின்னே, அதுவும் குறிப்பாக நாவல்களின் வருகைக்கு பின்னே, அதிகம் பரவ தொடங்கியது. 


அமைதியான வாசிப்பு முறை பரவினாலும் பல இடங்களில் சுற்றி மக்களை அமர்த்தி கொண்டு சத்தமாக வாசிக்கு பழக்கமும் தொடர்ந்தது. (என் தாத்தா கூட என்னை இப்படி சத்தமாக படிக்க சொல்லி கேட்ப்பார்). 



நடுத்தர வர்கங்களுக்கிடையே மட்டும் வாசிப்பு பழக்கம் நின்றுவிடவில்லை, சாமானிய  மக்களிடத்திலும் வாசிப்பு கருவியாக குஜிலி இலக்கியங்கள் திகழ்ந்தது. அதற்கு குஜிலி இலக்கியங்களின் மலிவும் ஒரு காரணம். நம் காலத்து பாட்டு புத்தகங்கள் போலவே சிறிய அளவில்  அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டவை தான் குஜிலி இலக்கியங்கள். ஒரு இடத்தின் பெயர் இலக்கியத்திற்கு சூட்டப்பட்ட கதை சுவாரசியமான ஒன்று. குஜிலி என்று பெயர் வர காரணமும் ஆர்வமூட்டும் ஒன்றாகவே இருந்தது. 


புத்தகங்கள் எப்படி பதிப்பிக்கப்பட்டது?, அதில் நூல் ஆசிரியர்கள், பதிப்பாளர்கள் மற்றும்  அச்சகத்தார் ஆகியோரின் பங்கு என்ன?, நாவல்களின் வருகை சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் எத்தகையது ?, புத்தகம் என்பது குறுகிய வட்டத்திலிருந்து சந்தை பொருளாக மாற்றப்பட்டு அனைவராலும் நுகர்ப்பட காரணம் என்ன?, சாமானிய மக்களிடையே குஜிலி இலக்கியத்தின் பங்கு எதையாகாது?, இங்கு நடந்த அரசியல் நடவடிக்கைகள் பதிப்பு துறையில் ஏற்படுத்திய மாற்றம் எத்தகையது  போன்ற அனைத்து விதமான கேள்விகளுக்கும் இந்நூலில் பதிலுள்ளது. எழுதப்பட்ட விதமும் அருமையான ஒன்று. ஒரு திரில்லர் புத்தகம் வாசிப்பதை போன்ற அனுபவத்தை நமக்கு கொடுக்கிறது. அதே நேரம் சுவாரசியம் நிறைந்த வரலாற்று தரவுகளுடன் எழுதி இருக்கிறார் நூல் ஆசிரியர். 


மின்னூல்களின் வருகை அச்சு புத்தகங்களை பாதிக்குமா என்றால் அதற்கான வாய்ப்பு குறைவே, எழுத்துக்களால் ஆனது மட்டும் புத்தகமல்ல, அட்டை, அதன் நறுமணம், காகிதத்தின் தரம் என அனைத்தும்  புத்தகத்தை  நுகர்வதில் முக்கியமான அம்சங்கள் . அச்சு புத்தகங்கள் காலத்திற்கு ஏற்ப நவீன படுமே ஒழிய முற்றிலும் அழிந்து போய் விடாது. 


வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாசித்து பயனடையவும். புத்தக விரும்பிகள் தங்கள் வாழ்நாளில் வாசித்தாகவேண்டிய புத்தகங்களுள் இந்நூல் தவிர்க்கமுடியாத ஒன்றாக நிச்சயம் இருக்கும். 


வாசிப்பை நேசிப்போம்!




Comments

  1. சிறப்பான அறிமுகம் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. சிறப்பான நூல் பரிந்துரை.நூலை முழுவதும் ஆழமாக படித்துணர்ந்து, நூலில் உள்ள கருத்துக்களை எடுத்தியம்பிய விதம் அருமை தம்பி‌.வாசிப்பு முறைகளையும் புத்தகங்கள் பற்றிய பலதரப்பட்ட தகவல்கள் அடங்கிய இந்தகைய நூலை படிக்க ஆர்வத்தை எற்படுத்தியது உங்களின் நூல் பரிந்துரை.நூலை அறிமுகப்படுத்தும் முன் தங்களின் வாசிப்பு திறன் மேம்பட‌ படிப்படியாக வாசிப்பு பயிற்சியால் உயர்ந்ததை எடுத்துரைத்த விதம் அருமை.வாழ்த்துகள் தம்பி

    ReplyDelete

Post a Comment