திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908
பூவின் இதழை தான் தொட்டேன் அது என்னை மரத்தின் வேருகே கூட்டிச் சென்றது. திரு.சலபதி எழுதிய “ஆஷ் அடிச்சுவட்டில்” புத்தகத்தில் ஆஷ் பற்றிய கட்டுரையை படித்துவிட்டு ஆஷ் பற்றி தேட தொடங்கினேன். பின்னர் திரு. ஆ சிவசுப்பிரமணியன் எழுதிய "ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்" நூலை படித்தேன். அதன் பின்னர் திருநெல்வேலி எழுச்சி பற்றிய உண்டான ஆர்வத்தால் "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908" என்ற நூலை படித்தேன். ஒரு தாவரத்தை அறிந்துகொள்ள பூ எவ்வளவு முக்கியமோ வேரும் அவ்வளவு முக்கியம்.
காலனியத்தின் தாக்கங்களை உள்ளடக்கிய ஒரு சமூகத்தில் வாழ்ந்துவந்தாலும், நேரடியாக காலனியத்தின் ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்படாத தலைமுறையை சேர்ந்தவர்கள் நாம். (சில விதி விலக்குகள் இருக்கலாம்)
காலனியம் பற்றி தெரிந்துகொள்ள இலக்கியங்களும், வரலாற்று ஆவணங்களும், எழுத்துருவற்ற செவிவழி செய்திகளுமே நமக்கான ஆதாரங்களாக இருக்கின்றன. இதில் பெரும்பாலான வரலாற்று ஆவணங்கள் காலனிய ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்டது. அதில் வெளிப்படுவதெல்லாம் அவர்களின் பார்வையே. நமக்கானவையாக சில சுதேசி பத்திரிகைகளும், விடுதலை இயக்க தலைவர்களால் எழுதப்பட்ட புத்தகங்களுமே மிஞ்சி இருக்கின்றன.
விடுதலை இயக்க நடவடிக்கைகளில் ‘தூங்குமூஞ்சி மாகாணம்’, ‘இருண்ட மாகாணம்’ என்றெல்லாம் சொல்லப்பட்ட தமிழ்நாட்டில் 1908லேயே விடுதலை எழுச்சி நடந்துள்ளது . அது கலகமாக மாறி பின்னர் ஒடுக்குமுறைக்கு இரையாக்கப்பட்டது. எழுச்சி ஒடுக்கப்பட்ட பின்னர் திமிரை அடக்க ‘திமிர் வரி’யும் விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அங்கு காவல் துறையின் கண்காணிப்பும் வேகமெடுத்தது.
காவல்துறையின் இத்தகைய தலையீடு என்பது அந்த பகுதிகளில் சாதியின் தாக்கத்தை கூர்தீட்டியது மட்டுமல்லாமல் பின்னாட்களில் முதுகளத்தூர் கலவரம் போன்ற சாதிய கலவரங்கள் நடப்பதற்கும் ஆதார சுருதியாக விளங்கியது. (Radha Kumar, Police Matters: The Everyday State and Caste Politics in South India, 1900–1975)
திருநெல்வேலி எழுச்சி நடப்பதற்கு வ.உ.சி என்ற சட்டம்படித்த வக்கீல் முக்கிய காரணமாக இருந்துள்ளார் என்பது அன்றைய சூழலில் சுதேசி இயக்கத்தின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது. “ஒரு எரி நட்சத்திரம் போல் தென்கோடியில் வ.உ.சியின் அரசியல் வாழ்வு தோன்றியது” என்று இந்த நிகழ்வை சிலாகித்து சொல்கிறார் திரு. சலபதி.
காலனிய ஆட்சிக்கு எதிராக திருநெல்வேலி எழுச்சி நடந்து முடிந்து சரியாக 15 ஆண்டுகள் கழித்து சேரன்மாதேவியில் குருகுல போராட்டம் நடேந்தேறியது. சுதேசி இயக்கத்தின் விளைவாக ஏற்பட்ட குருகுலத்தின் உணவு விடுதியில் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக இப்போராட்டம் நடைபெற்றது. அந்த காலத்தில் இந்தியாவில் முக்கிய பிரச்சனைகளான காலனிய ஆட்சியையும் சாதியையும் இதே வைத்தே நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஒன்று ஒழிந்தாலும் மற்றொன்று ஒழியாமல் நம்மை வருத்தி கொண்டிருப்பது அதன் தன்மைகளை சுட்டுவதாகும். இதை பற்றி இங்கு குறிப்பிடக் காரணம் திருநெல்வேலி எழுச்சியில் சாதிய வேறுபாடுகள் கடந்து மக்கள் திரளாக பங்கேற்றார்கள். அது மக்கள் போராட்டமாகவே நடந்தேறியது. காலனிய ஆட்சிக்கான எதிர்ப்பு என்பது அனைத்து தரப்பினரிடமிருந்தும் வெளிப்பட்டது. Frantz Fanonமேற்கோளோடு தொடங்கும் இந்நூலுக்கு, இந்த சம்பவங்கள் கோட்பாட்டுக்கும் நடைமுறைக்குமான நெருக்கத்தை கூறி செல்கிறது.
வின்ச், ஆஷ் ஆகிய இரண்டு ஆங்கிலேயே அதிகாரிகளால் ஒடுக்கப்பட்ட இந்த எழுச்சி என்பது பின்னாட்களில் ஒருவரை மட்டும் காவுவாங்கியது வரலாற்று விந்தையல்ல. தமிழ்நாட்டில் நடந்த முதல் விடுதலை எழுச்சி இதுவென்றால், தமிழ்நாட்டில் நடந்த முதலும் கடைசியுமான விடுதலை இயக்க அரசியல் கொலை ஆஷ் ஒருவரது கொலை தான்.
திருநெல்வேலி எழுச்சி ஏற்பட உடனடி காரணமாக வ.உ.சி மற்றும் சுப்ரமணிய சிவாவின் கைது அமைத்தாலும். அதற்கு முன்னர் அங்கு நடந்த கோரல் ஆலை வேலைநிறுத்தமும், சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கு எதிரான நடவடிக்கைகளும் காரணங்களாகும். இதை தவிர்த்து சூரத் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்று திரும்பிய வ .உ.சியின் எழுச்சி நிறுத்த உரைகளும் முக்கிய காரணமாகும்
இரட்டை ஆயுள் தண்டனைக்கு ஆளான வஉசி, அதை தொடர்ந்து சந்தித்த பொருளாதார நெருக்கடிகளும் அவரை விடுதலை இயக்கத்திலிருந்து அந்நியப்படுத்தும் அளவுக்கான தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. Also see (வ. உ. சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா)
ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிரான உணர்வு அவரிடம் தென்பட்டாலும் புரட்சி இயக்கத்தில் செயல்பட்டதை போல் வீரியமாக செயல்படும் வாய்ப்பும் விடுதலைக்கு பின் அவருக்கு அமைந்தபாடில்லை.
ஒரு போராட்டத்தில் வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு இந்நூல் சாட்சி. சுவாரசியம் மிகுந்த விறுவிறு நடை, எழுத்தில் போதை பொருளை கலந்தது போன்றான உணர்வையே உண்டாக்கியது. தரவுகளின் தன்மையும் உறுதிப்பாடு மிகுந்த ஒன்றாக இருக்கிறது.
வ.உ.சியின் 150ஆம் ஆண்டில் தமிழர்களாலும், இந்தியர்களாலும் மறக்கப்பட்ட ஒரு வரலாற்றை நம் கண் முன் இந்த புத்தகம் காட்சிப் படுத்துகிறது.
எல்லாவற்றையும் மறக்கும் நாம் இதையேனும் மறக்காமல் இருப்போமாக!
ஆ.இரா. வேங்கடாசலபதி
காலச்சுவடு
Comments
Post a Comment