சாதியும் நானும் - நூல் அறிமுகம்
"சாதியும் நானும்" -எழுத்தாளர் திரு.பெருமாள்முருகனின் வீட்டில் 2005 முதல், மாதம் ஒருமுறை நடக்கும் "கூடு ஆய்வுச் சந்திப்பின்" 50ஆம் நிகழ்வின் நிமித்தகமாக 32 நபர்களால் எழுதப்பட்ட அனுபவ கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. 2013 இல் வெளியாகியுள்ளது.
கட்டுரையாளர்கள் அனைவரும் பட்டதாரிகள். பெரும்பாலானவர்கள் முனைவர் பட்டம் பெற்றவர்கள். கல்வி தான் சாதியை விமர்சனபூர்வமாக அணுகும் பக்குவத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்பது திண்ணம்.
இதில் பலர் தங்கள் சாதியை குறிப்பிட்டும், சிலர் குறிப்பிடாமலும், சிலர் மறைமுகமாக குறிப்பிட்டுமே தங்களின் அனுபவங்களை எழுதியுள்ளார்கள். சாதியை விமர்சனபூர்வமாக எழுதியதே வரவேற்கத்தக்கது. பார்ப்பனர்களில் தொடங்கி இடைநிலைசாதிகள், தலித்துகள் என அனைவரும் ஏதோ ஒரு வகையில் சாதியால் தாக்கம் பெற்றவர்களாகவே இருக்கிறார்கள். சிலர் ஒடுக்குபவராக இருந்து தங்களின் குற்றஉணர்வுகளை பகிர்ந்துள்ளார்கள், பலர் ஒடுக்கப்பட்டவர்களா இருந்து வலிகளையும் அதிலிருந்து மீண்டு வந்த அனுபவங்களையும் பதிவுசெய்துள்ளார்கள்.
ஒரு சில கட்டுரைகளை படித்துவிட்டு, மேலும் படிக்கமுடியாமல் புத்தகத்தை மூடிவைத்து விட்டு சாதியை திட்டிக்கொண்டதும் உண்டு. எனக்கு நேர்ந்த சில அனுபவங்களையும் இக்கட்டுரை தொகுப்பு நினைவூட்டியது.
1990களுக்கு பிறகான தலைமுறையை சேர்ந்தவன் என்பதால் முன்பை விட சொற்ப அளவிலேனும் சாதியின் புற தாக்கம் குறைந்த சமூகத்தில் தான் நான் வளர்ந்தேன். 21ஆம் நூற்றாண்டின் தலைமுறைகள் அதன் தாக்கத்தை மேலும் குறைவாக உணரக்கூடும். ஆனால் இந்த தாக்கத்தின் குறைபாடு என்பது சாதியின் ஒழிந்து வரும் தன்மையாக நாம் சொல்லிவிட முடியாது, சாதி தண்ணீரை போல் அதன் பண்பினை சூழலுக்கேற்றார் போல் மாற்றிக்கொண்டே வருகிறது, நவீன சூழலுக்கேற்ப தன்னை தகவமைத்து கொள்கிறது. புரிந்துகொள்ளளவே சிக்கலான ஒரு அக காரணியாக தான் சாதி தன்னை நிலைநிறுத்தி கொண்டிருக்கிறது.
பிறப்பு என்பதே ஒரு விபத்து என்றெடுத்துக்கொண்டால், அந்த விபத்தில் ஏற்பட்ட வடு தான் சாதி, இறக்கும் வரை இந்த சமுகத்தில் இருக்கும் அனைவரும் ஏதோ ஒரு வகையில் அதை வலியுடன் தூக்கி சுமந்தக வேண்டி இருக்கிறது.
சாதி பற்றிய எதிர்மறையான உரையாடலுக்கு நாம் தயாராக இருக்கிறோமா? என்ற கேள்வியை நாம் நமக்கே கேட்டு கொள்ளவேண்டும், சுய சாதி அடையாளத்தை விடுத்து சாதியை நாம் அறிவுபூர்வமாக அணுக வேண்டும்.
இந்த கட்டுரைகள் அதை தான் வலியுறுத்துகின்றன, கசப்பான அனுபவங்களுக்கான அடிப்படை காரணம் சாதி தான், அதை உதிர்ப்பது கடினம் தான். ஆனால் சாதியை பின்னுக்கு தள்ள முடியும். பிற ஆக்கபூர்வமான விஷயங்களை முதன்மைப்படுத்துவதன் மூலம் சாதியை நம்மால் நிச்சயம் பின்னுக்கு தள்ள முடியும். முற்றிலும் ஒழிக்க முடியுமா என்பதை சாதியின் பின்னேற்றத்தை வைத்து தீர்மானிக்கலாம். அதற்கும் கல்வியின் வாசத்தை நுகர்ந்த அனைவரும் முன்னுக்கு வர வேண்டும்.
இந்த கட்டுரைகள் எல்லாம் வலிகளின், குற்றஉணர்வுகளின், சாதிக்கு எதிரான ஆற்றாமையின் விளைவுகள் தான். அனுபவக்கட்டுரை என்ற காரணத்தால் நமக்கு நடந்த நினைவுகளையும் அது கிளறிவிட்ட வண்ணமே இருக்கிறது. வாசித்துவிட்டு, பித்துபிடித்த நிலையில் தான் இருக்கிறேன், என்ன செய்வது இந்த சாதியை!!!!
மனிதனின் அழிவு சாதியை நிச்சயம் அழித்து விடும், அதுவரை என்ன செய்வது?
சாதியும் நானும்
காலச்சுவடு
Comments
Post a Comment