துபாஷிகள் பற்றி .....



 துபாஷி(Dubashes) என்ற சொல்லை பலரும் பல்வேறு சமயங்களில் கேள்விப்பட்டிருக்கக்கூடும், பிரிட்டிஷ் இங்கு வந்த ஆரம்ப காலங்களில் அவர்களோடு ரத்தமும் சதையுமமாக நெருக்கமான உறவை கொண்டிருந்தவர்கள் இந்த துபாஷிகள். See ( Susan Neild-Basu, The Dubashes of Madras, 1984)


துபாஷி என்றால் இரண்டு மொழி அறிந்தவர்/மொழிபெயர்ப்பாளர் என்று பொருள். பிரிட்டிஸ்காரர்கள் அனைவருமே ஒரு துபாஷியை தனது உதவியாளராக(Assistant) வைத்திருந்தார்கள். தொடக்கத்தில் மொழிமாற்றம் மட்டும் செய்து வந்த துபாஷிகள் பின்னாட்களில் அரசியல், பொருளாதார மற்றும் நிர்வாக பதவிகளிலும் கூட தாக்கம் செலுத்தினார்கள். கவர்னரின் துபாஷி கிட்டத்தட்ட கவர்னர் போலவே செயல்பட்டார் என்றால் காலனிய மெட்ராஸ் மாகாணத்தில் அவர்கள் செலுத்திய ஆதிக்கத்தை புரிந்துகொள்ள முடியும்.

19 ஆம் நூற்றாண்டில் துபாஷி என்ற பெயர் புழக்கத்தில் இல்லாமல் போகும் அளவுக்கு துபாஷிகளின் வீழ்ச்சி அமைந்திருந்தது. காரணம் ஊழல், நிர்வாக சீர்த்திருத்தம், துபாஷிகளின் செல்வ வளம், நெப்போட்டிசத்தால்(Nepotism) ஏற்பட்ட திறமையின்ன்மை ஆகியவற்றை குறிப்பிடலாம். "டுபாக்கூர்" என்ற வார்த்தை என்பது இவர்கள் செய்த சீர்கேடுகளால் பிறந்த ஒன்று என்றும் கூறப்படுகிறது.

அனந்தர்ங்க பிள்ளை ஒரு துபாஷி என்பது இங்கு பலருக்கும் தெரிந்திருக்கும், ஆனால் பச்சயப்ப முதலியார் என்பவரும் ஒரு துபாஷி தான், மெட்ராஸ் மாகாண அரசியல் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தகுந்த தாக்கம் செலுத்தியவராக பச்சையப்பர் திகழ்ந்தார்.
John Binny, Thomas Parry போன்ற பிரிட்டிஷ் வியாபாரிகளின் சொத்து மதிப்பைவிட பச்சயப்பரின் சொத்து மதிப்பு அதிகம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. துபாஷி என்பவர் கோவில் தர்மகர்த்தாவாகவும் செயலாற்றினார், இவர்களின் வீழ்ச்சிக்கு மற்றொரு காரணமாக இவர்கள் கொண்டிருந்த ஹிந்து மத சார்பு நிலை சொல்லப்படுகிறது.

இன்றுள்ள பச்சையப்பன் கல்லூரி என்பதே, பச்சயப்பரின் சொத்தின் மீது வாரிசுகளுக்கு ஏற்பட்ட சிக்கலால் நீதிமன்ற தலையீட்டின் மூலம் அமைக்கப்பட்ட ஒரு கல்லூரி தான் . பச்சயப்பரின் மறைவுக்கு பின்பு, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட அறக்கட்டளை(Trust) ஒன்றின் மூலம் பச்சையப்பன் கல்லூரி நிறுவப்பட்டது, ஹிந்து மாணவர்கள் பலனடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இது அமைந்தது. Also see ( SUMATHI RAMASWAMY, Giving Becomes Him: The posthumous fortune(s) of Pachaiyappa Mudaliar, 2018)

துபாஷிகள் பெரும்பாலும் வெள்ளாளர்,கணக்குப்“பிள்ளை”, யாதவர் ஆகிய பார்ப்பனரல்லாத சாதிகளை சேர்ந்தவராகவே இருந்தார்கள். பார்ப்பனர்கள் பிரிட்டிஷ் நிர்வாகத்தில் துபாஷி அல்லாத பொறுப்புகளை வகித்துவந்ததே இந்நிலைக்கு முக்கிய காரணம் என்று ஊகிக்க முடிகிறது. துபாஷிகளின் வீழ்ச்சி என்பது இங்கு பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை கூர்தீட்டியது, பின்னாட்களில் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் முரண் அரசியலின் எழுச்சிக்கு இந்த நிகழ்வு முக்கிய பங்காற்ற உள்ளது.


துபாஷிகளின் வாரிசுகளிடமிருந்த செல்வ வளம் தான் இந்திய விடுதலை போராட்டத்திலும் அதை தொடர்ந்து நடந்த அரசியலுக்கும் நிதி மூலமாக இருந்தது என்ற செய்தி துபாஷிகளின் முக்கியத்துவத்தை சொல்லி செல்கிறது.



Comments