Tamil Brahmans: The Making of a Middle-Class Caste // நூல் அறிமுகம்

 “Ours is essentially a movement of love & not of hate” - பிட்டி தியாகராயர்




சமீபத்தில் பார்ப்பனர்களின் வெளிநாட்டு இடப்பெயர்வுக்கு திராவிட இயக்கம் தான் காரணம் என்ற விவாதம் நடந்தது, அதை ஒட்டி பல்வேறு எதிர்வினைகளும் அறிவுத்தளத்தில் நடைபெற்றது. பார்ப்பனர்கள் இடப்பெயர்வுக்கு மூல காரணமாக திராவிட இயக்கம் இருந்ததில்லை என்பதே உண்மை. இடஒதுக்கீட்டை குறை சொல்ல இப்படி ஒரு வியாக்கியானதை பார்ப்பனர் ஆதரவு தரப்பு முன்னெடுத்தது வேடிக்கையான ஒன்று. பார்ப்பனர்களின் இடப்பெயர்வுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இந்த ஆய்வு நூல் அதன் அடிப்படையில் அமையவில்லை என்றாலும், அதற்கான சில அவதானிப்புகளை முன்வைக்க இந்நூல் உதவக்கூடும்.

மேலும் Ajantha Subramanian எழுதிய “The Caste of Merit: Engineering Education in India” என்ற புத்தகமும், உலக அளவில் குறிப்பாக கல்விப்புலத்தில் பார்ப்பனர்களின் வலைப்பின்னல்களை(Network) தெள்ள தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. திராவிட இயக்க எழுச்சியின் சமகாலத்தில் பார்ப்பனர்களின் நிலையை புரிந்துகொள்ள M.S.S Pandian எழுதிய “Brahmin and Non-Brahmin: Genealogies of the Tamil Political Present” என்ற புத்தகம் பயன்படக்கூடும்.

இந்த கட்டுரை ஒரு நூல் அறிமுகம் என்ற அளவிலேயே அதன் எல்லைகளை சுருக்கிக்கொண்டாலும், இதற்கான சில புரிதல்களை மேற்சொன்ன இரு ஆய்வு நூல்களின் மூலமே நான் பெற்றேன்.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் தலித்துகள் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அளவுக்கு கூட பார்ப்பனர்கள் பற்றிய ஆய்வு நடைபெறவில்லை. “Tamil Brahmans - The Making of a Middle-Class Caste”என்ற இந்நூலை இருவர் இணைந்து எழுதியுள்ளார்கள், அதில் ஒருவர் பார்ப்பனர்(Haripriya Narasimhan) மற்றொருவார் மேலைநாட்டு மானுடவியல் ஆய்வாளர்(C.J Fuller ), இந்நூல் ஒரு நல்ல ஆய்வு நூலா? என்பதில் எனக்கு மாற்று கருத்துள்ளது. மற்றபடி பார்பனர்கள்பற்றிய ஆரம்பகட்ட வாசிப்புக்கும் வாதங்களுக்கும் உதவும் முக்கிய ஆய்வு தான்.

சாதி போன்ற மரபார்ந்த ஆதிக்க சமூக நிறுவனங்களிலும், நீதி துறை, தொழில் துறை, தகவல் தொழில்நுட்ப துறை, குடிமைப்பணி, போன்ற நவீன செகுலர் நிறுவனங்களிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் இன்றளவிலும் நிரம்பியே உள்ளது. இதிலும் தாம்ப்ராஸ்(TambrahmS) என்ற தமிழ் பார்ப்பனர்களே முன்னோடிகளாக திகழ்கிறார்கள்.

தமிழ் பார்ப்பனர்கள் சாதி ரீதியாகவும் வர்க்க ரீதியாகவும் உயர்ந்தவர்களாக எப்படி தங்களை நிலைநிறுத்தி கொண்டார்கள் என்பதையே இந்நூல் பதிவுசெய்கிறது. Making of a Middle Class Caste என்ற துணை தலைப்பே நூலின் சாரத்தை உணர்த்திவிடும்.

நிலவுடைமை சாதியாக இருந்து, காலனிய அரசின் நிர்வாகத்திலும் பங்கெடுத்து, விடுதலை இயக்கத்திலும் குறிப்பிடத்தகுந்த பங்கினை செலுத்தி, பின்னர் இந்திய குடியரசில் முக்கிய பதவிகளையும் வகித்து, 1990களுக்கு பின்னர் நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப துறையிலும் தலைமை பதவிகளை வகிப்பது வரை தமிழ் பார்ப்பனர்களின் பரிணாமத்தை இந்நூலில் பார்க்கலாம்.

நவீன துறைகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டாலும், மரபார்ந்த பண்பாட்டு மாற்று கலாச்சார துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் குளுவாகவே பார்ப்பனர்கள் இருந்துள்ளார்கள்.

தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் வருகைக்கு பிறகு, அரசியலில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் என்பது குறைய தொடங்குகிறது. இந்த இடைவெளியை அவர்கள் கலாச்சார துறைகளான இசை மட்டும் நடனம் ஆகியவற்றை வைத்து நிரப்பிக்கொள்கிறார்கள். மெட்ராஸ் மியூசிக் அகாடெமி, கலாஷேத்ரா போன்றவை எல்லாம் இக்காலத்தில் தோன்றியவையே.

இசை மற்றும் நடனம் என்பது பார்ப்பனர்களின் ஆதிக்கம் நிறைந்த துறையாக இருந்த சமயத்தில் தான் நாடகம் மற்றும் சினிமா ஆகியவற்றை எளியமக்கள் அணுகக்கூடிய ஒன்றாக திராவிட இயக்கம் மாற்றுகிறது.

மேலும் பார்ப்பனர்கள் பேசும் தமிழ் என்பது சாமானியர் பேசும் தமிழை விட வேறுபட்ட ஒன்றாகவே இன்றளவும் இருந்து வருகிறது. உடையில் மாற்றங்கள் நடந்தாலும், உடைக்குள் இருக்கும் நூலினால் தங்களை வேறுபட்டவர்களாக காட்டிக்கொள்கிறார்கள். வெளித்தோற்றத்தில் நவீனமாக காட்டிக்கொண்டும், உள்ளுக்குள் சாதிய பழக்கவழக்கங்களை கடைபிடிப்பவர்களாகவுமே பார்ப்பனர்கள் தென்படுகிறார்கள்.

பெரும் ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கும் இன்னல்களுக்கும் ஆளானவர்களாக பார்ப்பன பெண்களே இருந்துள்ளார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் அத்தகைய பிற்போக்கு பழக்கவழக்கங்களை தீவிரமாக கடைபிடிக்க முடியவில்லை என்றாலும் இன்றளவும் பார்ப்பன பெண்களிடத்தில் அதன் கூறுகளை பார்க்கமுடியும். பெண்களின் நிலைபற்றி இந்நூல் ஆழமாகவே அலசியுள்ளது.

பார்ப்பனர்களின் அய்யர் அய்யங்கார் என்று இரு பிரிவு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அவர்களுக்குள்ளும் , பல்வேறு துணை பிரிவுகள் இருக்கின்றன. 1891இல் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், பார்ப்பனர்களின் இரண்டு முக்கிய பிரிவு உள்ளது ஒன்று ஸ்மார்த்தர்கள்(அய்யர் ) மற்றொன்று ஸ்ரீ வைஷ்ணவர்கள்(அய்யங்கார்). அய்யங்கார்களில் வடகலை, தென்கலை என்ற இரு பிரிவு உள்ளது. ஸ்மார்த்தர்களில் Vadama, Brahacharanam, Ashtasahasram, and Vattima என்ற நான்கு பிரதான பிரிவுகளும், ஆதிசைவர், சோழியர் போன்ற சிறு குழுக்களும் இடம்பெற்றுள்ளது. ஸ்மார்த்தர்கள்(67.9%) பெரும்பான்மையினராகவும் வைஷ்னவர்கள்(32.1%) சிறிய அளவிலும் இருக்கிறார்கள்.

பார்ப்பனர்கள் உயரடுக்கு வர்க்கமாக இருக்கும் காரணத்தால் எல்லாம் அவர்களுக்கே முதன்மையாக கிடைத்துள்ளது, வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துக்கொண்டும் அதன்மூலம் ஒரு வலைப்பின்னலை(Network) ஏற்படுத்தி கொண்டும் ஆதிக்கம் செலுத்தும் வகுப்பாக பரிணமித்துள்ளார்கள். நவீனமா மரபா என்று வந்தால் சந்தர்ப்பவாதிகளாகவும், மரபை மீறுபவர்களாகவும் பார்ப்பனர்களே இருக்கிறார்கள். திருமணத்தில் தொடங்கி கடல் கடந்த பயணம், உணவு பழக்கம் என்பது வரையிலான மரபு மீறல்களை அவர்கள் தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள்.

இந்த புத்தகத்தில் திராவிட இயக்கத்தை Anti-Brahmin Movement என்று அடையாள படுத்தியுள்ளார்கள் , நீதிக்கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான பிட்டி தியாகராயர் சொல்வார் “Ours is essentially a movement of love & not of hate, or love based upon a sense of what is due to the various classes which constitute the population of this vast & ancient land.” என்று. இப்படிப்பட்ட இயக்கம் எப்படி ஒரு எதிர்ப்பு இயக்கமாக இருக்கமுடியும், அப்படி நடந்த எதிர்ப்பினால் பார்ப்பனர்கள் அடைந்த இன்னல்கள் தான் எத்தகையவை? அவர்கள் இழந்தது தான் என்ன? இன்றைக்கும் தமிழ்நாட்டில் நல்ல நிலையில் இருக்கும் சமூகங்களில் பார்ப்பன சமூகமும் ஒன்று என்பது சொல்லி தெரியவேண்டிய விசயமல்ல. இத்தகைய தவறான பொருத்தப்பாடு நியாயமற்ற ஒன்று.

பார்ப்பனர்களின் இடப்பெயர்வுக்கு அவர்களின் சுயமுனைப்பும், சமூக முதலும்(Social Capital) தான் முக்கிய காரணங்களாகும், திராவிட இயக்கம் என்பது வெறும் வினையூக்கியாக(Catalyst) தான் செயல்பட்டுள்ளது.

புத்தகத்தை எழுதியவருள் ஒரு உள்நபர் (பார்ப்பனர்) மற்றும் வெளிநபர் இருந்தாலும் எப்படியோ அந்த பார்ப்பன சார்பும் சுய சாதித்தனமும் வெளிப்பட்டு விடுகிறது.

தமிழ்நாட்டு பார்ப்பனர்களை பற்றி அறிந்துகொள்ள விரும்பும் நண்பர்கள் வாசிக்கலாம், சில தரவுகளும் காண கிடைக்கிறது. வாய்ப்புள்ள நண்பர்கள் அவசியம் வாசிக்கவும்.



Comments