History of Western Philosophy - Bertrand Russell


    



மதத்துக்கும் அறிவியலுக்கும் இடையே யாருமற்ற வெளி ஒன்றுலுள்ளது அந்த யாருமற்ற வெளியை தத்துவம் இட்டு நிரப்புகிறது என்கிறார் Bertrand Russell. தத்துவத்தின் மீது அதீத ஆர்வம் உண்டாவதற்கு Russell எழுதிய The Problems of Philosophy, Sceptical Essays, The Value of Philosophy போன்ற புத்தகங்கள் தூண்டுகோலாய் இருந்துள்ளன. ஒரு தத்துவ வரலாறு நூல் என்ற வகையில் Will Durant எழுதிய ‘The Story of Philosophy’ஐ  எளிமையாக எழுதப்பட்ட புத்தகம் என்பேன். அதை தொடர்ந்து வாசித்த புத்தகம் தான் “History of Western Philosophy”. 


Will Durant தனது புத்தகத்தில் ரோமானிய பேரரசின் வீழ்ச்சிக்கு பிறகான இடைக்காலத்தை(Medivel period) இருண்டகாலம் என்று சொல்லிவிடுவார். அந்த இடைக்காலத்தில் நிகழ்ந்த சிறியளவிலான தத்துவ வளர்ச்சி குறித்த செய்திகள் கூட அதில் இடம்பெற்றிருக்காது. 


ஆனால் இந்த புத்தகத்தில் பண்டைய கிரேக்க தத்துவத்திற்கும் நவீன மறுமலர்ச்சி தத்துவங்களுக்கும் இடையில் அமைந்திருந்த மத்தியகாலத்தில் கிருத்துவ திருச்சபைக்கும் மன்னர்களுக்கும் இடையில் நடந்த இழுபறிகளையும் சண்டைகளையும் அதற்கான அரசியல் சமூக சூழ்நிலைகளையும் விளக்கி இருக்கிறார் Russell. இந்த புத்தகத்தை அவரது Magnum Opus என்றே  குறிப்பிடலாம்.  


ஒரு தத்துவவாதியை அந்தந்த காலகட்டத்தின் விளைவாகவும்(effect) காரணகர்த்தாவாகவும்(Cause) குறிப்பிடலாம் என்கிறார் Russell. அந்த காலகட்டத்தில் நிலவும் சமூக சூழல், அரசியல், மற்றும் சமூக நிறுவனங்கள் ஆகியவற்றின் வெளிப்பாடக ஒரு  தத்துவவாதி திகழ்கிறார். அவர் கொண்டுள்ள தத்துவ சிந்தனைகளை வைத்து பிற்காலத்திய அரசியலையும் சமூக நிறுவனங்களையும் அவர் மாற்றியமைக்க கூடிய காரணியாகவும் விளங்குகிறார்.


 600 B.C முதல் சமகாலத்திய தத்துவவாதிகள் வரை இரண்டு தரப்பாக பிரிந்துள்ளார்கள் அதில் ஒரு தரப்பு சமூகத்தில் கூட்டுத்துவத்தை  வலுப்படுத்த வேண்டும் என்றும் மற்றொருதரப்பு அதில் சில தளர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றுமே வாதிட்டது வந்துள்ளார்கள்.


ஒரு நாட்டினுடைய வரலாறை புரிந்துகொள்ள அங்கு நடந்த தத்துவார்த்த மாற்றங்களை படிக்க வேண்டும்.  அந்த நாட்டில் எழுந்து அடங்கிய அல்லது அடங்கி எழுந்த தத்துவங்களை படிப்பதன் மூலம் அதன் வரலாற்றையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.  


இந்த புத்தகம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது பண்டைய தத்துவம், கத்தோலிக்க தத்துவம் மற்றும் நவீன தத்துவம். அந்தந்த காலகட்டத்தில் நடந்த அரசியல் மாற்றங்களை சுட்டிக்காட்டி அதனால் உண்டான தத்துவங்களையும் தத்துவவாதிகளையும் பற்றி விரிந்துரைக்கிறார் நூல் ஆசிரியர். 


பண்டைய கிரேக்க தத்துவத்தின் எழுச்சியில் தொடங்கி அம்பேத்கரின் ஆசிரியரான John Deweyன் Pragmatism குறித்த தகவல்களோடு முடிகிறது இந்நூல். உலகப்போர் முற்றுப்பெறும் சமயத்தில் இந்த நூலும் எழுதி முடிக்கப்பட்டுள்ளது. அப்போது சோவியத் ரஷ்யா நாஜி ஜெர்மனியை வீழ்த்தி இருக்கவில்லை. 


ரோமானிய பேரரசின் வீழ்ச்சியை தொடர்ந்து அங்கு அமைதியான சூழல் நிலவவே இல்லை, போரும் சண்டையும் சூழ்ந்த ஒரு நிலையில் தான் ஐரோப்பா இருந்தது. இதன்காரணமாக தேவாலயங்களின் செல்வாக்கு அதிகரித்தது, மக்களும் நிலையற்ற சூழலின் காரணமாக மதத்தை அனைத்திற்கும் தீர்வாக பார்க்க தொடங்கினார்கள். 


Protestant இயக்கத்திற்கு பிறகு மதத்தின் செல்வாக்கு சமூக அரசியலில் குறைய தொடங்குகிறது. முதலில் இத்தாலியிலும் பின்னர் Alpsமலைத்தொடருக்கு வடக்கே உள்ள பகுதிகளிலும் மறுமலர்ச்சி நடக்க தொடங்குகிறது.   அந்த சமயத்தில் சில அறிவியல் நடவடிக்கைகளும் புதிய கண்டுபிடிப்புகளும் நிகழ, அறிவொளி இயக்கம் வலுப்பெற தொடங்குகிறது. அமெரிக்க புரட்சி, பிரெஞ்சு புரட்சி ஆகியவை அரசியல் தத்துவ உருவாக்கத்தின் முக்கிய காலகட்டமாக விளங்குகிறது. 


இதன் பின் Romantic Movementன் விளைவாக தனிமனிதவாதமும்(Individualism) அகநிலையும்(Subjectivity) முன்னிலை பெற தொடங்குகிறது. அது சார்ந்த தத்துவங்களும் வலுப்பெற தொடங்குகின்றன. 


வர்க்கம் குறித்தான சோசியலிச தத்துவத்திற்கு அறிவியல் காரணங்களை மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் கண்டடைகிறார்கள். அது ஐரோப்பாவிலும் உலகின் பிற பகுதிகளிலும்  குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை செலுத்துகிறது. 


இப்படி தத்துவம் குறித்த ஒரு வரலாறாக இந்நூல் விரிகிறது, 1950க்கு முன் வரை தத்துவ வரலாற்றை புரிந்துகொள்ள இந்நூல் இன்றியமையா ஒன்றாகும். Russell குறிப்பிடும் தகவல்கள்,  அதை தத்துவதோடு தொடர்புபடுத்தும் விதம் ஆகியவை எல்லாம் அருமை. 


தத்துவத்தின் மீது ஆர்வமுள்ள நண்பர்கள் அவசியம் வாசிக்கவேண்டிய புத்தகம். எனக்கு இந்நூலை பரிந்துரை செய்த அண்ணனுக்கு அன்பும் நன்றியும். 


முழுதும் வாசித்து முடிக்க ஓராண்டு பிடித்தது, சில சமயம்  வாசிப்பில் நான் காட்டும் சலிப்புக்கு இந்நூல்  எடுத்துக்காட்டு. 




Comments