Theorizing Periyar

தாத்தா பெயர் கொ.வீ. பெரியசாமி, தீவிர பெரியார் தொண்டர்.

தாத்தா, 1954இல் தான் முதல் முறையாக பெரியாரின் பேச்சைக் கேட்டுள்ளார். தாத்தாவை அழைத்து சென்றவர் கூட்டம் முடிந்ததும் மூன்று புத்தகங்களை கொடுத்துள்ளார்.
1.பணம்பிடுங்கி பார்ப்பனர்
2. ராமாயண ஆராய்ச்சி
3. பெரியாருள் பெரியார்
7ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த தாத்தா, இந்த புத்தகங்கள் ஏற்படுத்திய தாக்கம் தான் பெரியார் மீதும் தி.க மீதும் பிடிப்பு ஏற்பட காரணம் என்கிறார்.
1949இல் 21 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை என்று அறிவிக்கப்பட்ட பிறகு, 1950களில் திராவிட இயக்கத்தால் வீரியமாக அரசியல்மயப்பட்ட நிலமாக தமிழ்நாடு உருமாறி கொண்டிருந்தது .
நேரடியாக வாக்கரசியலில் பங்கேற்கவில்லை என்றாலும் திக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரு அளவுக்கு சாமானிய மக்களிடம் செல்வாக்கு பெற தொடங்கி இருந்தன. தாத்தாவிடம் பெரியாரின் திக, அண்ணாவின் திமுக இரண்டில் எந்த கட்சியில் சேரலாம் என்று நண்பர் ஒருவர் கேட்க பெரியாரின் தி.க என்று சொல்லியுள்ளார்.
கிழக்கு சேலத்தில் குறிப்பாக ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், படையாச்சியூர் பகுதிகளில் திராவிடர் கழகத்து தோழர்கள் அதிகம் இருந்துள்ளார்கள். பெரியார் வந்தால் உள்ளூர் கட்சிகாரர்கள் வீட்டில் தங்கி கூட்டம் நடத்துவாராம். பெரியார் மீது ஏற்பட்ட ஆர்வம், தாத்தாவை கொள்கை பிடிப்புள்ள ஒரு மனிதனாக மாற்றியுள்ளது. கடவுள் மத மறுப்பு, சுயமரியாதை திருமணம், சாதி ஒழிப்பு என கொள்கைகள் ஆழமாக வேர்கொள்ளத் தொடங்கியுள்ளது தாத்தாவிடம்.
தனது திருமணம் பெரியார் தலைமையில் தான் நடைபெறவேண்டும் என்று தாத்தா தனது தந்தையிடம் சொல்லியுள்ளார். அவர் அதை மறுத்து "அய்யர் வச்சு தான் கல்யாணம் பண்ணி வைப்பேன், அப்படி இல்லனா உன் தம்பிக்கு பொண்ணு பாத்துக்குறோம்" என்று சொல்ல. பெரியார் தலைமையில் இல்லை என்றால் திருமணமே வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் தாத்தா .
அப்போது திருமணம் நடத்திவைக்க 100 ரூபாய் வாங்குவாராம் பெரியார், ஒரு பவுன் தங்கத்தின் விலையே 70 ரூபாய் தான், இருந்தாலும் 100 ரூபாய் செலவு செய்து சுயமரியாதை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். பெரிய பணக்கார குடும்பம் எல்லாம் இல்லை, விவசாயம் தான் வருவாய் ஆதாரம். இருந்தாலும் கொள்கைக்காக குடும்பத்தை எதிர்த்து இந்த நிபந்தனைகளை எல்லாம் விதித்துள்ளார்.
பின்னர் பராசக்தி திரைப்படத்தின் மூல கதை ஆசிரியரான ‘பல்கலைவாணர் பாவலர்’ பாலசுந்தரம் அவர்கள் தலைமையில் சுயமரியாதை திருமணம் நடந்தேறியது. போக்குவரத்து செலவு 30 ரூபாய்.
அதை தொடர்ந்து குடும்பத்தில் நடந்த திருமணங்கள் அனைத்தும் பார்ப்பன புரோகிதர் அற்ற சுயமரியாதை திருமணமாகவே நடந்தேறியுள்ளது.
பிராமணாள் ஹோட்டல் பெயர் நீக்கம், ரயில் நிலையங்களில் ஹிந்தி அழிப்பு, சட்ட எரிப்பு ஆகிய போராட்டங்களில் பங்கேற்றுள்ளேன் என்றார் தாத்தா. 1967 வரை பெரியார் ஆதரித்த காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கே வாக்களித்துள்ளாராம்.
இன்றைக்கும் கருப்புச்சட்டையை தவிர வேறு நிறங்களில் ஆடை அணிவதில்லை. ஊரில் 'கருப்புச்சட்டை காரர்' என்றே அறியப்படுகிறார். குடும்பத்தில் யார் மீதும் கொள்கைகளை திணித்ததில்லை. இன்றைக்கும் விடுதலை, உண்மை ஆகிய இதழ்களை தவறாமல் படிக்கிறார்.
இன்னும் நிறைய சுவாரசியமான வரலாற்றை சொன்னார். அவ்வப்போது எழுதுகிறேன்.
//
பெரியார் கொள்கைகள் நோக்கியும் திராவிட இயக்கம் நோக்கியும் சாமானிய மக்கள் ஏன் சென்றார்கள் என்பதை துல்லியமாக அவதானித்த அறிவுஜீவியாக MSS Pandiyan அவர்களை சொல்லலாம். (see. Brahmin and Non-Brahmin: Genealogies of the Tamil Political Present) தாத்தாவுடன் பேசும்போது அவரின் இந்த அவதானிப்பு மெய்ப்படுகிறது.
பெரியார் போன்ற Practical Philosopherஐ Theorize செய்யும்போது, அவர் காலத்தில் சாமானிய தொண்டர்களாக இருந்தவர்களிடம் உரையாடுவது முக்கியம் என்று நினைக்கிறேன். அந்த உரையாடல் தான் கோட்பாட்டு உருவாக்கத்திற்கு நெருங்கிய ஒன்றாக இருக்கும்.
மக்களிடமிருந்து எழுந்த உணர்வு+அறிவு பூர்வமான கோட்பாடுகளை புரிந்துகொள்வதின் மூலம் இங்கு நடந்த அரசியலை நாம் எளிதில் Theorize செய்துவிடலாம். அவர்களிடம் பேசாமல் மேலிருந்து உருவாக்கப்படும் கோட்பாடக்கங்கள் அனைத்தும் ஒரு கட்டத்திற்குமேல் தாக்குபிடிக்காது என்பது என் அனுமானம்.
இதுபோன்ற ஒரு உரையாடலை நிகழ்த்த தூண்டுகோலாக இருந்த தமிழ் காமராசன் அண்ணனுக்கு அன்பும் நன்றியும். //

Comments