எல்லோரும் இந்நாட்டு மன்னர்

 




 

“If Tamil speakers constitute a people, there would be no need to construct them. They are an ontic presence. The construction of people as “Dravidian-Tamil” was a political process in which a pedagogy of democratic principles for self-governance was undertaken. In short, Infusion of the political into the social life is what constructs a people.”

(An excerpt from the book, Rule of the Commoner)   

இந்தியாவில் ஜனநாயக  அரசியல் கட்சிகள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. காங்கிரஸ், பாஜக  தொடங்கி மாநில கட்சிகளின் தோற்றம் வளர்ச்சி இயங்கியல் ஆகியவற்றை ஆராய்வது என்பது தொடர்ச்சியாக நடந்துவரும் ஒன்றே. அந்த வகையில் திமுகவின் அரசியலை கோட்பாட்டு நோக்கிலான ஆய்வாக முதலில் Marguerite Ross Barnett என்பவர் “The Politics of Cultural Nationalism in South India”புத்தகத்திலும் , அதன் பின் Narendra Subramanian என்பவர்  தனது “Ethnicity and Populist Mobilization: Political Parties, Citizens and Democracy in South India” புத்தகத்திலும் முயன்றுள்ளார்கள். இந்த இரண்டு கோட்பாட்டு நோக்கிலான ஆய்வுகளும் நிறைய சிக்கல்களையும் போதாமைகளையும் கொண்டுள்ள காரணத்தால், திமுகவின் ஆரம்பகால அரசியலை ஆய்வு செய்வது  அவசியமாகிறது. அத்தகைய தேவையை சமீபத்தில் வெளியான “Rule of the Commoner” என்ற இந்நூல்  பூர்த்திசெய்கிறது. 

இந்த நூல் Ideation, Imagination, Mobilization என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி திமுகவின் அடிப்படை தத்துவத்தையும், அது தொடங்கப்பட்டதற்கான வரலாற்று காரணங்களையும் முன்வைக்கிறது. இரண்டாவது பகுதி, மக்கள்நல அரசியல் எப்படி சாத்தியப்பட்டது என்பதையும், அது எந்தெந்த வகையில் கற்பனைசெய்யப்பட்டு மக்களிடம் முன்வைக்கப்பட்டது என்பதையும் விளக்குகிறது. மூன்றாவது பகுதி, அத்தகைய இலட்சியத்தை வென்றெடுப்பதற்கான அணிதிரட்டல் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பதையும், திமுக 1967இல்  ஆட்சியை பிடித்தததற்கான காரணங்களையும் விளக்குகிறது. இது தவிர்த்து திராவிட இயக்க அரசியல் பற்றிய ஆய்வுகளைப் படித்து வருபவருக்கு மயிர்சிலிர்ப்பை ஏற்படுத்தும் வகையில், முடிவுரை அமைந்துள்ளது. இந்த வகையில் திமுகவின் 1949 – 1967  வரையிலான அரசியலைப் புரிந்துகொள்ள இந்நூல் இன்றியமையாத ஒன்றாகும். 

இது வரை திமுகவின் மீதும் திராவிட இயக்கத்தின் மீதும் சுமத்தப்பட்ட அல்லது திணிக்கப்பட்ட எதிர்மறை முன்முடிவுகளான – அடையாள அரசியல், தமிழ் தேசியம் (கலாச்சார தேசியம்), இனவாதம், மொழிவெறி, வகுப்பு துவேசம் ஆகிவற்றை எல்லாம் இந்நூல் மறுஆய்வுக்கு உட்படுத்துகிறது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் எல்லாம் தவறவிட்ட அல்லது பெரிதாகக் கண்டுகொள்ளாத தரவுகளை இந்நூல் ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறது. குறிப்பாக அண்ணாவின் ஆரிய மாயை, பணத்தோட்டம், நீதி தேவன் மயக்கம், சந்திரமோகன், தீ பரவட்டும் போன்றவை அந்தக் காலகட்டத்தின் அரசியலை வெளிப்படுத்தும் கோட்பாட்டுப் படைப்புகளாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.  குறிப்பிடத்தகுந்த கள ஆய்வுகளும் இந்நூலுக்கு வலு சேர்த்துள்ளன

Gramsic, Laclau, Mouffe, Partha Chatterjee ஆகியோரின் ‘ஜனநாயக அரசியல் களம்’ என்ற சட்டகமும், Left Populism குறித்த ஆய்வுக் கருத்துக்கள் இந்நூலின் அநேக இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 திமுக தொடங்கப்பட்டதில் இருந்தே  இரண்டு விஷயங்களில் அது மிகத்தெளிவாக செயல்பட்டது. ஒன்று, சாமானிய  மக்களை அணிதிரட்டுவது(Construction of the people). மற்றொன்று, அவர்களை அரசியல் படுத்துவது(Formation of the political). சாமானிய மக்களை அரசியல்படுத்தி அவர்களை ஆட்சிக்கட்டிலை நோக்கி நகர்த்தியது திமுகவால் மட்டுமே சாத்தியமானது. Ross Barnettதனது புத்தகத்தில் சொல்வதை போல், வேறெந்த மாநிலத்திலும் நடக்காத வகையில் ஒவ்வொரு பொது தேர்தலிலும் பதிவாகும் வாக்கு சதவிகிதம் தமிழ்நாட்டில்  தேர்தலுக்கு தேர்தல் மிக அதிகமாகி வருகின்றது. இதற்கு காரணமாக சாமானிய மக்களின் வீரியமான அரசியல்படுதலை(Rapid Politicization of Commoners) குறிப்பிடலாம்.

திராவிடர் கழகத்திலிருந்த பிரிந்த திமுக அதுவரை இருந்த இன அடையாளமான ‘திராவிடர்’ என்பதை தவிர்த்து, ‘திராவிட’ என்ற நிலவியல் சொல்லாடலை பயன்படுத்த தொடங்கியது. அது தென்னிந்திய பகுதியை உள்ளடக்கிய ஒரு கூட்டாட்சி குடியரசை (திராவிடநாடு) தனது லட்சியமாகக் கருதியது. வெகுமக்களை அரசியல்படுத்த, அது தமிழ்/ தமிழர் என்ற அடையாளத்தை வெற்று குறிப்பானாக (Empty Signifier) பயன்படுத்திக் கொண்டது. அதன் உள் அர்த்தமாக பார்பனரல்லாதாரின் சாதி எதிர்ப்பு அரசியல் இருந்தது. திராவிடத் தமிழர் என்ற நவீன சாதியெதிர்பு அடையாளத்தை சாமானியர்களின் அடையாளமாக முன்னிறுத்தியது. இந்த வெகுமக்கள் நல அரசியல் குறிப்பிட்ட மக்கள் குழுவை எதிரியாகச் சித்தரிக்காமல், பார்ப்பனீயம் – இந்தி திணிப்பு – வடஇந்திய ஆதிக்கம் எதிர்ப்பு என்ற மேட்டுக்குடி  ஆதிக்க எதிர்ப்பை முன்னெடுத்தது. இதன் மூலம் பரந்துபட்ட மக்கள்திரளின் அபிலாசைகளை அது முன்னிலைபடுத்தியது. திராவிட நாடு அதன் லட்சியமாகவும், சாதி-மத-பார்ப்பனிய-இந்தி எதிர்ப்பு அதன் அரசியலாகவும், தமிழர் அடையாளம் என்பது அரசியல் குறியீடாகவும் திகழ்ந்தது. 


மேலும் இவை எல்லாம் திமுகவால் மட்டுமே நிகழ்த்தப்பட்டுவிடவில்லை. அதற்கு முந்தைய அரசியல் நடவடிக்கைகளும் காரணமாக இருந்தன  என்பதையும் நூல் ஆசிரியர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். 

கம்யூனிஸ்டுகளின் வர்க்கப்பார்வை இங்குள்ள ஏற்றத்தாழ்வுகளைப் பொருட்படுத்தாமல் போன காரணத்தால், அவர்கள் இங்கு நடந்த அரசியலிலிருந்து அந்நியப்பட்டு போனதையும் நூலின் ஒரு பகுதி பதிவுசெய்கிறது. 

சாமானிய மக்களை அரசியல்படுத்தி  கட்டமைக்க அவர்களுக்கு புரிந்த கலைவடிவங்களை பயன்படுத்துவதும், அவர்களால் நுகர முடிந்த பொழுதுபோக்கு வெளியை(Space) பயன்படுத்துவதும் அவசியமாகும். நாடகங்கள் மூலமும் சினிமா மூலமும் திமுக இதைச் செய்தது. ஒரு பெரும் இலட்சியத்தை அடைவதற்கான கனவை(Imagination) இத்தகைய திராவிட இயக்க நாடகங்களும் சினிமாக்களும் வெளிப்படுத்தின. மேலும் திமுக தலைவர்களின் நாடக மற்றும் சினிமா துறை  செயல்பாடுகள் எல்லாம் கட்சிக்கு நிதி திரட்டும் ஆதாரங்களாகவும் பயன்பட்டன. 

இன்றைக்கு இந்துத்துவம், தனது மதவாத அரசியலுக்கு பயன்படுத்தும் ராமன், விநாயகன் போன்ற கடவுள்களைதான் திராவிட இயக்கம் தொடக்க காலத்தில் தீவிரமாக எதிர்த்தது. வைணவ இலக்கிய மரபை மட்டுமல்லாமல், சைவ சமய இலக்கிய மரபையும் திராவிட இயக்கம் தீவிரமாக எதிர்த்தது. அந்த எதிர்ப்பு பொதுவெளியில் ரா.பி.  சேதுப்பிள்ளை, சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழ் பண்டிதர்களுடன் ஜனநாயக பூர்வ விவாதமாக மலர்ந்தது. தமிழ்மொழியை நவீனமாக்கவும் அதிலிருக்கும் மத பிற்போக்குத்தனங்களை விமர்சிக்கவும் ஒரு நாளும் தயங்கியதே இல்லை. இது போன்ற மூடநம்பிக்கை எதிர்ப்பு பிரச்சாரங்களை கலைத்துறை மூலம் முன்னெடுத்தது திராவிட இயக்கம். 

அதுபோலவே இங்கிருக்கும் சாமானிய பார்ப்பனரல்லாத திராவிட தமிழர்களின் இலக்கியங்களை வரலாற்று எதிர் கதையாடல்கள் மூலம் நிறுவ முயன்றது. பாரதிதாசன் எழுதிய ‘இரணியன்’ நாடகமாக இருக்கட்டும், அண்ணா எழுதிய ‘நீதி தேவன் மயக்க’மாக இருக்கட்டும், அல்லது ராஜாஜி கல்கி இதழில்  எழுதிய இராமாயணத்துக்கு எதிராக முரசொலியில் கலைஞர் முகஜி என்ற புனைபெயரில் ஆற்றிய எதிர்வினையாக இருக்கட்டும், மணிக்கொடியில் வெளிவந்த புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’ சிறுகதைக்கு எதிர்வினையாக குடிஅரசு இதழில் சீலன் எழுதிய ‘அக்ரஹாரம்’ கதையாக இருக்கட்டும், இப்படி தொடர்ந்து எதிர்கதையாடல்களை(Counter-Narratives) திமுகவும் திராவிட இயக்கமும் முன்வைத்துக்கொண்டே இருந்தது. பிற்காலத்தில் எடுக்கப்பட்ட திராவிட இயக்க சினிமாக்களிலும் இது பிரதிபலித்தது. மக்களை அரசியல்படுத்துவதன் மூலமாக தான் கட்டமைக்க விரும்பிய சமூகத்தை நாடகம் மற்றும் சினிமாவின் மூலம் கடத்தியது திமுக. 

நூலின் முக்கியமான பகுதி மூன்றாவது பகுதியான Grassrootதான். சாமானிய மக்களை அரசியலின் ஒரு அங்கமாக்குவது எளிதான காரியமல்ல. அதற்கு தீவிர உழைப்பும் பிரச்சாரமும் போராட்டங்களும் தேவைப்பட்டது. அதைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட நெருக்கடிகளும் ஏராளம். காங்கிரஸ் கட்சிக்கு இருந்த பணபலமும் செல்வாக்கும் திமுகவிடம் அன்றைக்கு இருக்கவில்லை, அவர்களிடம் இருந்ததெல்லாம் ஆற்றல்மிகுந்த இளைஞர்களும், திராவிடநாடு என்ற கூட்டுக் குடியரசு என்கிற லட்சியமும்தான். 

கிளை கழகம், ஒன்றிய கழகம், மாவட்ட கழகம் , பொதுக்குழு என   கீழிருந்து மேல் எழுப்பப்பட்ட கட்சி கட்டமைப்பு, சுயமான திட்டமிடலை மேற்கொள்ள ஏதுவாக அமைந்தது. இப்படி இருந்த கட்சியின் ஜனநாயகமான கட்டமைப்பு கட்சியின் வளர்ச்சிக்கு எப்படி துணை நின்றது என்பது தனியான ஆய்வுக்குரிய அம்சமாகும். 

நூலில் மிகவும் உணர்பூர்வமான Case study ஒன்றும் இடம்பெற்றுள்ளது கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பதை தண்டபாணி (எ) பண்ணன், நாராயண் சிங் (எ) உடுமலை நாராயணன் ஆகியோருக்கிடையிலான உறவின் மூலம் புரிந்துகொள்ளலாம். 

மக்களை திரட்ட தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது என்பது திமுகவின் யுக்திகளில் ஒன்றாக இருந்தது. அவை அனைத்தும் நியாமான போராட்டங்களாக இருந்தன.  திமுகவின் ஐம்பெரும் தலைவர்களைத் தாண்டி கலைஞர் போன்ற ஒரு தலைவர் கட்சியில் செல்வாக்கு பெற இது போன்ற தொடர் போராட்டங்கள் முக்கிய காரணமாக இருந்தன. இப்படிப்பட்ட போராட்டங்கள் ஒரு தனி இயலில் விளக்கப்பட்டுள்ளது. 

கீழப்பழுவூர் சின்னசாமி உயிர்நீத்து தொடங்கிவைத்த, 1965இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்தும் அதை காங்கிரஸ் அரசு  கையாண்ட விதம் பற்றியும், திமுக அணுகிய போக்கைப் பற்றியும் ஒரு தனி இயலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கூடலூர் மற்றும் பொள்ளாச்சியில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கள ஆய்வு செய்திகள் காங்கிரஸ் அரசு செய்த அரச வன்முறைகளை வெளிச்சமிட்டு காட்டுகிறது. 

இந்திய குடிஅரசும் திமுகவும் 1949இல் தான் உருவாகிறது, திராவிடநாடு என்ற தனி குடியரசின் கனவுகளுடன் திமுக தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறது. பின்னர் 1963இல் பிரிவினைத்தடை சட்டத்தின் விளைவாக  திராவிடநாடு கோரிக்கையை கைவிடும் நிலை ஏற்படுகிறது. அதன் பின் திராவிடநாடு என்ற லட்சியம் மாநில சுயாட்சி என்ற வகையில் மாற்றம்பெறுகிறது . அதன் வெளிப்பாடு (Expression) மாறி இருந்தாலும் உள்ளர்த்ததில்(Content) எவ்வித மாற்றமும் இருக்கவில்லை. திமுக அமைத்த தேர்தல் கூட்டணிகள் சுவாரஸ்யமாவை, திமுகவின் முதல் நான்கு பொது தேர்தல் குறித்த செய்திகள் தனி இயலாக இடம்பெற்றுள்ளது. 

Marguerite Ross Barnett, Narendra Subramanian ஆகியோரது ஆய்வுகளில் உள்ள போதாமைகளை சுட்டிக்காட்டி நூலின் முடிவுரை நீள்கிறது. ஜனநாயகத்தின் அங்கமாக மக்களை உணரவைப்பதற்கு சமூகத்தை அரசியல்மயபடுத்துவது இன்றியமையாத ஒன்றாகும். திமுகவின் அரசியல் அதைதான் நிகழ்த்தி காட்டியது. 

இன்றைக்கு ராகுல் காந்தி போன்றவர்கள் கூட தன்னை ஒரு தமிழனாக உணர்கிறேன் என்று சொல்வதற்கு பின்னல் இருக்கும் உளவியலை கட்டமைத்ததே திமுகவின் அரசியல் செயல்பாடுகள்தான். தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுத்தவர்களாக எண்ணற்ற தெலுங்கு மற்றும் கன்னட மாணவர்கள் இருந்தார்கள்.  திமுக யாரையும் இன ரீதியாக அந்நியமாக்கவில்லை. VP ராமன் போன்ற பார்ப்பனர்கள் கூட கட்சி தலைமைக்கு மிக நெருக்கமானவர்களாக இருந்துள்ளார்கள். திமுகவிற்கு வாக்களித்துவிட்டு திருப்பதிக்கும் மொட்டை அடிக்கும் எத்தனையோ ஆத்திகர்கள் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். இத்தகைய பன்மையான போக்கு இந்தியாவில் வேறெந்த அரசியல் இயக்கங்களிடமும் இருக்கவில்லை. 

எல்லாவற்றையும் விட தமிழ்நாட்டில் பிறந்து இங்கு நடந்த அரசியலை ஆய்வு செய்து அதை விளக்குவதும், அதற்குத் தேவையான கோட்பாட்டுச் சட்டகத்தை உருவாக்குவதும் ஆக்கபூர்வமான செயல்பாடாக பார்க்கிறேன். MSS Pandian எழுதிய “Brahmin and Non-Brahmin: Genealogies of the Tamil Political Present”என்ற புத்தகமும், Kalaiyarasan A., Vijayabaskar M ஆகியோர் எழுதி சமீபத்தில் வெளியான “The Dravidian Model: Interpreting the Political Economy of Tamil Nadu”புத்தகமும் இந்த “Rule of the Commoner”புத்தகமும் மிக நெருக்கமாக இருப்பதற்கு அது நம்மவர்களால் எழுதப்படுகிறது என்பதும் ஒரு காரணமாக இருக்கிறது. இது போல் திமுகவின் 1967க்கு பிறகான அரசியலும் ஆய்வு நோக்கில் எழுதப்பட வேண்டும் என்பது என் போன்ற சாமானிய வாசகர்களின் ஆசையும் எதிர்பார்ப்பும். தமிழ்நாட்டு அரசியல் மீது ஆர்வமுள்ள அனைவரும் அவசியம் வாசிக்கவேண்டிய புத்தகம்.


Rule of the Commoner DMK and Formations of the Political in Tamil Nadu, 1949–1967 by Rajan Kurai Krishnan, , Ravindran Sriramachandran, VMS Subagunarajan

Comments