தி.மு.க வரலாறு - நாவலர் நெடுஞ்செழியன்
திராவிட முன்னேற்ற கழகத்தை பற்றி சொல்லும்போது MLA கட்சி என்று சொல்லாமல் M.A கட்சி என்று சொல்வார்களாம், காரணம் திமுகவின் மேல்மட்ட தலைவர்கள் பெரும்பாலும் படித்தவர்களாக M.A பட்டம்பெற்றவர்களாகவே இருந்துள்ளார்கள்.
அண்ணா 1949இல் கட்சி தொடங்கிய போது கலைஞருக்கு 25 வயதும், EVK சம்பத்துக்கு 23 வயதும், நாவலருக்கு 29 வயதும், பேராசிரியருக்கு 27 வயதுமே ஆகி இருந்தது. அந்த சமயத்தில் கட்சியில் இருந்த பெரும்பாலானவர்கள் புதிய கனவுகளையும் லட்சிய வேட்கையையும் கொண்ட இளம் தலைமுறையாகவே இருந்தனர். இப்படி இருக்கையில் கட்சிக்கு உள்ளே இருந்து தங்களது கருத்துக்களை வெளியிடும் போக்கு ஆரம்பத்தில் அதிகமாகவும் பின்னர் குறைந்தும் இருப்பதை அவதானிக்க முடிகிறது. கலைஞர் மட்டும் தொடர்ந்து ‘நெஞ்சிக்கு நீதி’ எழுதுகிறார். இதை ஒரு அரசியல் கட்சியின் நிலைப்பாடுகளுக்கான காரணங்களை தெரிந்துகொள்ள பயன்படும் Insiders Accountஆக கருதி கொள்ளலாம்.
காலம் தோறும் இது போன்ற(Insiders Account) புத்தகங்கள் எழுதப்பட்டு வந்துள்ளன, குறிப்பாக அண்ணாவின், தீ பரவட்டும், ஏ தாழ்ந்த தமிழகமே, ஆரிய மாயை, எண்ணித் துணிக கருமம், ‘முரசொலி’ மாறனின் ஏன் வேண்டும் இன்பத் திராவிடம், திராவிட இயக்க வரலாறு, மாநில சுயாட்சி போன்ற பரவலாக வாசிக்கப்படும் புத்தகங்களை குறிப்பிடலாம்.
அந்த வரிசையில் EVK சம்பத் திமுகவை விட்டுப் பிரிந்து புது கட்சி தொடங்கிய சமயத்தில் நாவலர் நெடுஞ்செழியன் “தி.மு.க வரலாறு” என்ற புத்தகத்தை எழுதுகிறார். 1961 அரசியல் ரீதியாக தி.மு.கவின் வளர்ச்சியில் முக்கியமான காலக்கட்டம். அச்சமயத்தில் எழுந்த பல்வேறு விமர்சனங்களால் இது போன்ற ஒரு நூலை எழுத வேண்டிய தேவை உருவாகி இருக்கிறது. ஆகவே நாவலரின் பிற்கால செயல்பாடுகளில் முரண்பாடுகள் இருந்தாலும், அவர் எழுதிய இந்நூல் தி.மு.கவின் குரலாக எழுதப்பட்ட வரலாறுகளில் முக்கியமான ஒன்றாகும்.
அந்த காலகட்டத்தில் திமுகவை ஆய்வு செய்த வெளியூர் ஆய்வாளர்கள் பொத்தாம் பொதுவாக திமுகவை இனவாத கட்சி என்றும், பிரிவினை வாத கட்சி என்று எழுதிவிட்டு போவது இயல்பாக காணப்படும் ஒன்று. அந்த பார்வையை தூக்கி சுமந்துகொண்டிருக்கும் அறிவு ஜீவிகள் இன்றைக்கும் இருக்க தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் இது போல் வெகுஜன மக்களுக்காக எழுதப்பட்ட புத்தகங்களை ஒரு இடங்களில் கூட சான்றாக காட்டுவதில்லை. இது அந்த ஆய்வுக்கே மிக பெரும் போதாமையாகும்.
திமுக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து 1963 வரை திராவிட நாடு என்பது தான் அதன் முதன்மை கொள்கையாகவும் பிற கொள்கைகள் அதன் பின்னரும் இருந்துள்ளன. எந்த அளவுக்கு திராவிட நாடு முக்கியமான ஒரு கருத்தியலாக விளங்கியதென்பது இந்நூல் மூலம் மீண்டும் நிரூபணமாகிறது. அதே போல் கார்த்திகேசு சிவத்தம்பி போன்ற மார்க்சிய ஆய்வாளர்களால் திமுகவின் மீதி வைக்கப்படும் குற்றச்சாட்டுகளான, ‘திமுகவுக்கு தொடக்ககாலத்தில் சரியான பொருளாதார கொள்கை இல்லை’, போன்றவற்றிற்கு பதில் சொல்லும் விதத்தில் இந்நூலில் ஒரு தனி இயலே இருக்கிறது. தொழிலாளர் நலத்திலும், மக்கள் நலத்திலும் திமுக கொண்ட பார்வையை அந்த இயல் விளக்குகிறது.
கட்சிக்கும் சினிமா/நாடக கலைஞர்களும் எத்தகைய கொடுத்தால் வாங்கல் இருந்தது என்பதையும் இந்நூல் தெளிவு படுத்துகிறது. அந்த கால காங்கிரஸ் கட்சியில் தாண்டவமாடிய பணம்,ஊழல் போன்றவற்றை ஒரு புறம் விமர்சிக்கவும் நாவலர் தயங்கவில்லை. பெரியாரின் மீதும் காட்டமான விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளது. பெரியாரின் தர்க்கத்தையே நாவலர் கேள்விக்கு உள்ளாக்குகிறார்.
திமுகவின் வரலாற்று போக்கை சரியாக புரிந்துகொள்ள இந்நூல் முக்கியமான ஒன்றாகும், கிட்டத்தட்ட எண்ணித் துணிக கருமம் நூலில் prequel என்று இந்நூலை குறிப்பிடுவது மிகையாகாது.
1961 வெளியான பாதிப்பு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் இன்றைக்கும் படிக்க கிடைக்கிறது, நாவலரின் நூற்றாண்டை முன்னிட்டு(2021) வ.உ.சி நூலகம் இந்நூலை மறுபதிப்பு செய்துள்ளது. ஊடகர் AS . பன்னீர்செல்வம் ஒரு அருமையான அணிந்துரை ஒன்றை எழுதியுள்ளார். பல அறிய புகைப்படங்கள் இந்நூலில் இடம்பெற்றிருப்பது ஆர்வத்தை தூண்டும் விதத்தில் அமைந்திருந்தது. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாசிக்கவேண்டிய புத்தகம்.
Comments
Post a Comment