முரசொலி முத்துவிழா சிறப்பிதழ்


 


இன்றைக்கு 'முரசொலி முத்துவிழா' சிறப்பிதழ் வெளியாகி இருந்தது, சில விஷயங்களை இங்கு எழுத வேண்டும் என்று தோன்றியது, அவற்றை மட்டும் எழுதுகிறேன்.


இரண்டாம் உலகப்போர் நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் கலைஞர் முரசொலியை(1942) தொடங்கியிருக்கிறார். முதலில் மாதம் ஒரு முறையோ இரு முறையோ சில சமயம் மூன்று முறை வரையிலும் ஒரு பக்க துண்டறிக்கை வடிவில்(⅛ demy paper) வெளியாகி இருக்கிறது . அதற்கே கலைஞர் கஷ்டப்பட்டு வெளியிட வேண்டிய தேவை இருந்துள்ளது. பின்னர் வார இதழாகவும், 1960 முதல் தினசரி பத்திரிக்கையாகவும் வெளியாகி இருக்கிறது.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் வெளிவந்த துண்டறிக்கைகளின் முகப்பில் "V" என்ற ஆங்கில எழுத்து இடம்பெற்றிருக்குமாம். ‘Victory’ என்று அர்த்தத்தை கொண்ட அந்த எழுத்து இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகள் வெற்றி முழக்கமாக கொண்டிருந்ததன் தாக்கத்தால் ஏற்பட்ட ஒன்று என்கிறார் க. திருநாவுக்கரசு.

முரசொலி தொடங்கப்பட்ட ஆண்டில் தான் அண்ணா ‘திராவிடநாடு’ இதழை தொடங்கி இருக்கிறார். சி.ப. ஆதித்தனார் “தினத்தந்தி” தொடங்கியதும் இந்த ஆண்டில் தான்.

கலைஞரும் கனகசுந்தரமும் முரசொலியை அச்சகத்தில் இருந்து தலையில் தூக்கி கொண்டு ஓடம்போக்கி ஆற்று மூங்கில் பாலத்தை கடப்பார்களாம். ‘மனோகரா’ வசன புத்தகம் அச்சடித்து விற்ற காசில் கலைஞர், ‘முரசொலி’ நடத்தினார் என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.

இவ்வளவு சிரத்தை எடுத்து ஒரு பத்திரிகை நடந்த வேண்டியிருந்த அவசியத்தை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அப்போது இருந்த வெகுஜன பத்திரிகைகள் எல்லாம் தேசியவாத(Nation-state) சிந்தனையை முதன்மையாக கொண்டு இயங்கியவை. திராவிட இயக்க பத்திரிகைகள் இதற்கு எதிரான அரசியலை முன்னெடுத்தது. அது மக்களை அடிப்படையாக கொண்ட ஒரு தேசியத்தை(People-Nation) சிந்தித்திருந்தது(திராவிட நாடு).

நீதி கட்சி தொடங்கி அடுத்த 30 ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்ட பத்திரிகைகளை திராவிட இயக்கத்தினர் நடத்தி வந்துள்ளார்கள்.
திமுக உருவான பின் திராவிட இயக்கத்தவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பத்திரிகைகளை நடத்தி இருக்க வாய்ப்புள்ளது என்கிறார் க.திருநாவுக்காசு. அதில் 400க்கும் மேற்பட்ட பத்திரிகை இதழ்கள் இன்றைக்கும் காண கிடைக்கிறதாம். பெரும்பாலான பத்திரிகைகள் அந்தந்த பகுதி சார்ந்து வெளியாகி இருக்கிறது.

மக்களை மையமாக கொண்ட அரசியல் சிந்தனையை மக்களிடம் கொண்டு சேர்க்க அவர்கள் நுகரும் விதத்தில் அதை வடிவமைத்து வெளிக்கொணர்வது முக்கியமான ஒன்றாகும் . ‘முரசொலி’ பத்திரிகை செய்திகளுடன் சேர்த்து பல கருத்து படங்களை கொண்டும் வெளிவந்தது. இன்றைக்கும் பல முகநூல் பதிவுகள் முரசொலியில் வெளிவருவதை மக்களை மையமாக கொண்ட அரசியல் சிந்தனையின் வெளிப்பாடாக தான் நாம் பார்க்கவேண்டும்.

முரசொலி காலத்திற்கேற்றார் போல் மாறியும் வந்துள்ளது, எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் கேள்விக்கேட்கவும், ஆளும்கட்சியாக இருந்த சமயத்தில் அரசுக்கும் மக்களுக்குமான இணைப்பு பாலமாகவும் இருந்துள்ளது.

சமீபத்தில் வெளியான "ஐக்கிய நாடுகளின் வளம் குன்றா குறிக்கோள்கள் பார்வையில் திமுக தேர்தல் அறிக்கை 2021" புத்தகத்தின் மதிப்புரையை தலை அங்கமாக வெளியிட்டிருந்தது முரசொலி. இது போலவே 2007 சமயத்தில் M.S.S Pandian எழுதிய “Brahmin and Non-Brahmin: Genealogies of the Tamil Political Present ” புத்தகத்தின் மதிப்புரையும் முரசொலியில் வெளிவந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். அறிவை ஜனநாயகமாக்கும் ஒரு மரபு முரசொலியில் தொடர்வது கவனிக்க தக்கது.

முரசொலியின் அறிவு சேவையும் அதன் மக்களமயப்பட்ட செய்தி ஆக்கமும் இன்னும் பல நூற்றாண்டு கடந்தும் தொடரவேண்டும்.

மாநிலத்தில் ஆளும்கட்சியாகவும், ஒன்றியத்தில் எதிர்கட்சியாகவும் செயல்படவேண்டிய நிர்பந்தம் திமுகவிற்கு உள்ளது. அதில் பெரும் பங்கினை முரசொலி கவனித்து கொள்ள வேண்டும்.

ஒரு மாநிலத்தின் குரலாக ஒலிக்கும் ஒன்றாகவே முரசொலி இதுவரை இருந்துள்ளது இனிமேலும் அப்படியே இருக்கவேண்டும்.

வாழ்க முரசொலி!

வெல்க அதன் திறன்!!




Comments