"ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்" - முரசொலி மாறன்
“Rise, oh rise! Rise today: Tomorrow the obstacles Will be greater.” -Mazzini.
முரசொலி மாறன் இறப்பு என்பது கலைஞருக்கும் திமுகவுக்கும் பேரிழப்பு என்பது சமீபத்தில் வெளியான "Karunanidhi A life" என்ற புத்தகத்தின் வழியாக தெரிந்து கொண்டேன். அதன் பின்னர் தான் அரசியலிலும் சரி குடும்ப வாழ்க்கையிலும் சரி கலைஞர் ஒரு வித கையறு நிலையை சந்தித்தார். மாறன் திமுகவின் மூளையாக செயல்பட்டவர் என்றால் அது மிகையாகாது.
இளம் வயதில் திமுக திராவிட நாடு கேட்ட சமயத்தில் மாறன் எழுதிய "ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்" என்ற புத்தகம் பெரிய வரவேற்பை பெற்றது, அண்ணா ஒரு அறிமுக உரை எழுதி இருப்பார். மாறனின் கருத்தாழமும் அறிவு கூர்மையும் அவரை வாசிப்பவருக்கு தெரியும். உலக அறிஞர்களின் மேற்கோள்கள் உள்ளூர் அரசியல் வாதிகளின் மேற்கோள்கள், அண்ணாவின் வஞ்சப்புகழ்ச்சி, கலைஞரின் உவமை என ஒரு அற்புத கலவையாக இந்த நூலை எழுதி இருப்பார்.
திமுக ஒரு அரசியல் கட்சி அல்ல அது ஒரு அரசியல் இயக்கம் என்று தலைவர்கள் சொல்லிக் கேட்டிருப்போம், இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. நாம் தமிழர் ஒரு அரசியல் கட்சி, மக்கள் நீதி மையம் ஒரு அரசியல் கட்சி, அதிமுக ஒரு அரசியல் கட்சி இந்த கட்சிகளுக்கு கொள்கையை வகுக்க, கோட்பாடுகளை பரப்புவதை பற்றி கவலை எல்லாம் இல்லை தேர்தல் வந்தால் வாக்குறுதிகளுடன் மக்களை சந்திக்க வருவார்கள், தேர்தல் முடிந்த பின் நாள் முழுக்க பறந்த ஈசல் போல் சிறகுதிர்த்து ஒதுங்கிக் கொள்வார்கள். மக்கள் மீதான அக்கறை துளியும் இவர்களுக்கு இல்லை, கொள்கையை கேட்டல் தலை சுற்றும், சிலர் அதை பற்றி அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை.
ஆனால் திமுக இயங்கிக்கொண்டே இருக்கும் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் போராட்டங்களில் உடன் நிற்கும் அதன் கொள்கைகள் மாநாடுகள் மூலமும், புத்தகங்கள் மூலமும் பரப்பப்பட்டு கொண்டே இருக்கும். இயக்கம் என்பது நிரந்தரமான ஒன்று கட்சி என்பது தீபாவளி பொங்கல் போல்.
இன்றைக்கு தேசிய இனங்கள் பற்றி பேசும் தோழர்கள் இனவாதமும், ஆதிக்க வாதமும் பேசி வருகிறார்கள்(சிலரை தவிர), ஆனால் அது திராவிட நாடு கோரிக்கை உச்சத்தில் இருந்த சமயம் ஒரு அறிவு செழுமை நிறைந்த புத்தகத்தை எழுதி இயக்கத்திற்கு வலு சேர்த்துள்ளார் மாறன்.
திராவிட நாடு இன்றைக்கு சாத்தியமா? என்றால் சாத்தியம் தான், அதற்கான நேரத்தை அது எடுத்துக் கொள்கிறது, கலைஞர் கூட 2010 க்கு பின் நடந்த ஒரு நிகழ்வில் "தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் திராவிட நாடு திராவிடருக்கே என்ற லட்சியத்தை வென்றெடுக்கலாம்" என்று கூறி இருப்பார். அந்த கனல் அதற்கான எரிபொருள் கிடைக்கும் வரை உழன்று கொண்டிருக்கும், தேவை ஏற்படின் தீயாய் பற்றி எரியும். திராவிட நாடு கோரிக்கையும் அப்படிப்பட்டது தான், இந்திய தேசியம் தன்னை வலுவானதாக மாற்றிக் கொள்ளும் அதே வேலையில் திராவிடம் தன்னுடைய வலுவை கூட்டி கொண்டு தான் இருக்கும். இது பிரிவினை முழக்கம் அல்ல, உரிமை முழக்கம். அதற்கான தேவை இருக்கிறதா என்றால் கொரோனாவில் இருந்து நாம் பாடம் கற்க வில்லை என்று தான் அர்த்தம்.
Nehru, ambedkar,T M panikar, achariya, Mazzini, john selly போன்றவர்களின் தேசியம் பற்றிய கருத்துக்களை மேற்கோள் காட்டி, திராவிட நாடு கோரிக்கைக்கு வலு சேர்த்துள்ளார் மாறன் அவர்கள்.
தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கு இது ஒரு அறிவாயுதம், திராவிடம் பேசும் என் போன்றவர்களுக்கு இது ஒரு இலக்கண நூல். அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய புத்தகம். மாறன் அவர்களின் மாநில சுயாட்சி புத்தகத்தை வாசிப்பதற்கு முன் இதை வாசிக்கவும்.
வென்றே தீருவோம்
வாழ்க திராவிடம்
வளர்க பகுத்தறிவு
BOOK: ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்
AUTHOR: ‘முரசொலி’ மாறன்
இந்நூலை பரிந்துரைத்த Vignesh அண்ணனுக்கு நன்றியும் அன்பும்.
MUST READ.
Comments
Post a Comment