இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்: என்.வி. ரமணாவின் பேச்சும் செயல்பாடும்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி. ரமணாவின் பேச்சும் செயல்பாடும்

 





உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா 26 ஆகஸ்ட் 2022 அன்று ஓய்வு பெறுகிறார், தனது பதவிக்காலத்தில் அரசியலமைப்பைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி 29க்கும் மேற்பட்ட உரைகளை அவர் வழங்கியிருக்கிறார். 


ஆயினும் நாங்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 6 வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதும், நடுவர் மன்ற மறுஆய்வு தேவைப்படும் 53 வழக்குகள் முன்பிருந்ததை போலவே கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. 


இந்த வழக்குகளின் மனுதாரர்களுடன் நாங்கள் மேற்கொண்ட உரையாடல் மூலம் ஏமாற்றமும் நம்பிக்கையும் சேர்ந்தே மேல் எழும்புகிறது . 


“சட்டமன்ற மற்றும் நிர்வாக நடவடிக்கைகளின் நீதித்துறை மறுஆய்வு என்பது அரசமைப்பின்  முக்கிய பகுதியாகும். இது இந்திய அரசியலமைப்பின் ஆன்மா என்று நான் கூறுவேன். எனது பார்வையில், நீதித்துறை மறுஆய்வு என்ற ஒன்று  இல்லாதிருந்தால், நமது அரசியலமைப்பு சட்டத்தின் மீதான நம்பிக்கை மக்களிடையே  குறைந்திருக்கும்.”


நீதிபதி என்.வி. ரமணா இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த 16 மாதங்களில் அவர் ஆற்றிய 29 உரைகளில் இதுவும் ஒன்று. மேற்கண்ட பகுதி 23 ஜூலை 2022 அன்று ஆற்றப்பட்ட உரையின் ஒரு பகுதியாகும்.


ஆனால் , ரமணா தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில் அரசியலமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த 53 வழக்குகளை  விவாதிக்கும் நடுவர் மன்றம் எதுவும் அமைக்கப்படவில்லை. நடுவர் மன்றம் தேவைப்படாத தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளும் விசாரிக்கப்படாமலே கிடப்பில் போடப்பட்டுள்ளது . 


இந்த 53 வழக்குகளிலும் முன்பிருந்த தலைமை நீதிபதிகளின் பாதையையே ரமணாவும் பின்பற்றியுள்ளார் . நாங்கள் ஆய்வு செய்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த  வழக்குகளுக்கும் இதே நிலை தான், அதில் ஆறு வழக்குகளின் இன்றைய நிலையை மட்டும்  இனி காண்போம்:


- ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து (1,115 நாட்களாக நிலுவையில் உள்ளது)


-தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு  (1,816 நாட்களாக நிலுவையில் உள்ளது)


-அரசு கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக அரசு தடை விதித்த விவகாரம் (159 நாட்களாக நிலுவையில் உள்ளது)


- நலிவுற்ற பிரிவினருக்கான பொருளாதார இடஒதுக்கீடு(EWS) வழக்கு (1,323 நாட்களாக நிலுவையில் உள்ளது)


-கருத்து சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்திற்கு (UAPA) எதிராக தொடரப்பட்ட வழக்கு (1105  நாட்களாக நிலுவையில் உள்ளது)


-மதரீதியிலான பாகுபாடுகளை கொண்ட  குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 எதிரான வழக்கு (987  நாட்களாக நிலுவையில் உள்ளது)



"மாஸ்டர் ஆஃப் தி ரோஸ்டர்” எனப்படும்  தலைமை நீதிபதி 

தான்  அரசியலமைப்பு அமர்வுகள் உட்பட, அனைத்து அமர்வுகளை அமைக்கவும், அவர்கள் விசாரிக்கும் வழக்குகளை முடிவு செய்யவும், குறிப்பிட்ட அமர்வுக்கு வழக்குகளை ஒதுக்கவும் அதிகாரம் பெற்றவர்.ஆக வழக்குகள் விசாரிக்கப்படாமல் இருப்பதற்கும் தலைமை நீதிபதியே காரணம் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள். 


5 நடுவார்களை கொண்ட ஒரே ஒரு அரசமைப்பு அமர்வு  தான் இதுவரை தலைமை  நீதிபதி என்.வி. ரமணாவால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 2021 இல் ஏற்படுத்தப்பட்ட  அந்த அமர்வு, குஜராத் மாநில மின்சார ஒழுங்குமுறை நிறுவனமான உர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் மற்றும் மின் உற்பத்தி நிறுவனமான அதானி பவர் (முந்த்ரா) லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தக் கடமைகள் சம்மந்தப்பட்ட தகராறு தொடர்பான ஒரு சீராய்வு மனுவை(முடிவுபெறும் தருவாயில்)  விசாரித்தது. ஆனால்  இந்த வழக்கு ஐந்து மாதங்களுக்குப் பிறகு பிப்ரவரி 2022 இல் நீதிமன்றத்திற்கு வெளியே சமரசத்தில் முடிந்தது.


22 ஆகஸ்ட் 2022 அன்று, அதாவது அவர் ஓய்வு பெறுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு, ரமணா ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைத்துள்ளார். தில்லி அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே 2018 இல் நிர்வாகச் சேவைகள் மீதான கட்டுப்பாடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்திற்கு வந்த சட்டப் பிரச்சனையை விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட அந்த  அமர்வு விசாரணையை  இன்னும் தொடங்கவில்லை.


இது தவிர்த்து , நீதித்துறை சீர்திருத்தங்களுக்கான நீண்டகால கோரிக்கைகள், உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் கொலிஜியம் அமைப்பில் வெளிப்படைத்தன்மை, நீதிமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பு, நீதிபதிகள் தேர்வுக்கான அளவுகோல்களை நிர்ணயித்தல் போன்ற நீதித்துறை தொடர்பான பிற சிக்கல்களுக்கும் அவர் தீர்வுகாணவில்லை. 


 இதை தொடர்ந்து இவ் வழக்குகளில் சம்மந்தப்பட்ட  மனுதாரர்களுடன் நாங்கள் மேற்கொண்ட உரையாடல் ஏமாற்றமும் நம்பிக்கையும் கலந்தே ஒன்றாகவே இருந்தது.  



ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து (1,115 நாட்களாக நிலுவையில் உள்ளது)


ஒரு மாநிலத்தை அம் மாநில சட்டமன்றத்தின் ஒப்புதல்  இல்லாமல்  யூனியன் பிரதேசமாகத் மாற்றுவது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானதென்றும், பிரிவு  370 ஐ ரத்து செய்ய முடியாது என்றும் இந்த வழக்கை தொடுத்த மனுதாரர்கள் வாதிடுகிறார்கள். 


வழக்கின் பெயர்: மனோகர் லால் சர்மா vs யூனியன் ஆஃப் இந்தியா


கடைசி விசாரணை: தலைமை நீதிபதி ரமணா, நீதிபதி எஸ் கே கவுல், நீதிபதி ஆர் சுபாஷ் ரெட்டி, நீதிபதி பி ஆர் கவாய் மற்றும் நீதிபதி சூர்ய காந்த்


முதல் விசாரணை தேதி: 16 ஆகஸ்ட் 2019


விசாரணையின் கடைசி தேதி: 2 மார்ச் 2020 (30 மாதங்களுக்கு முன்பு)


விசாரணைகள்: 11


விசாரிக்க வேண்டி கடைசி கோரிக்கை: 25 ஏப்ரல் 2022 தலைமை நீதிபதி ரமணா முன்.


நீதிபதியின் பதில் : " பார்க்கிறேன்(லெட் மீ சீ)."


“சட்டத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாப்பதற்கும் சவாலாக இருப்பது , விரைவாகவும்  எளிதில் அணுகக்கூடிய வகையிலும் நீதி வழங்க தவறும் நீதி துறை தான்”  - தலைமை நீதிபதி ரமணா, ஸ்ரீநகர், 14 மே 2022.


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு , லடாக் என்ற இரண்டு ஒன்றிய பிரதேசங்களாக பிரித்த ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்புச்(2019) சட்டத்தை , அரசமைப்புக்கு எதிரானது என்று கோரி ஆகஸ்ட் 5 ,6 தேதிகளில் 23க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.


இந்த வழக்கு இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக்கு வரவில்லை. 2019 , 2020 ஆகிய ஆண்டுகளில் நீதிபதி ரமணா தான் அரசியல் சாசன அமர்வுக்கு தலைமை வகித்தார்.  மேலும் மார்ச் 2, 2020 அன்று கூடிய அமர்வு, ஏழு பேர் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்ற விடுத்த கோரிக்கையை இந்த அமர்வு  நிராகரித்தது.


விசாரணைகள் மீண்டும் தொடங்குவதற்கு  மனுதாரர்கள் "தேதி” கேட்டபோது, ​​​​சபரிமலை தொடர்பான விசாரணையின் அட்டவணையைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என்று இந்த அமர்வு கூறியது.


 சபரிமலை வழக்கில்  மத சுதந்திரத்தின் வரம்பு மற்றும் நோக்கம் குறித்த கேள்விகளை எழுப்பி ,  ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வின் விசாரணைக்கு பரிந்துரைத்தது.  அதை தொடர்ந்து இந்த வழக்குக்கான  விசாரணை நடக்கவில்லை.


இந்த வழக்கை 2022 ஏப்ரலில் தலைமை நீதிபதி ரமணா அமர்வு முன் பட்டியலிட கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் பதில்: "பார்ப்போம்".


விடுமுறைக்கு பிறகு இந்த வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றார் ரமணா. ஜூலை 10க்கு பின் அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 


நமது நீதித்துறையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பொது வெளியில் பேசினாலும். நீதிமன்றங்களில் வழக்கை விசாரிக்கும் போது அவர்கள் பேசுவதற்கு மாறாக செயல்படுகிறார்கள்  என்கிறார் இந்த வழக்கில் மனுதாரரான மிர். 


மூன்றாண்டுகள் ஆகியும் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்காதது ஏமாற்றம் அளிப்பதாகவும், இந்த வழக்குக்கு முன்னுரிமை அளிக்கப்படாமல் இருப்பதற்கான காரணங்களையாவது உச்ச நீதி மன்றம் கூறியாக வேண்டும் என்றும் சொல்கிறார் ஜம்மு & காஷ்மீர் பீப்பிள் கானபெரென்ஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மிர். 


தொடர்ந்து பேசிய மிர், காஷ்மீருக்கு நடந்தது மற்ற மாநிலங்களுக்கு நடக்கலாம் எனவும், காஷ்மீர் மக்கள் அனைத்து அமைப்புகள் மீதும் நம்பிக்கையற்று இருக்கிறார்கள் எனவும், இந்த போக்கு ஆபத்தான ஒன்று எனவும் குறிப்பிட்டார். 


வழக்கு விசாரணை தாமதம் காஷ்மீரில் சூழலை மாற்றிவிடும், அது வழக்கின் முடிவுகளை பாதிக்கும் எனவே இந்த வழக்கை விரைந்து விசாரிக்கவேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கைக்கு, நீதிபதி கவாய் 'ஒரு சட்டத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்பப்பெற முடியும்' என்று சொல்லி நிராகரித்துள்ளார். 


சட்டத்தின் விளைவுகளை மக்கள் உணர தொடங்கிய பின்னர் எந்த மாற்றங்களையும் அவர்கள் மனதில் ஏற்படுத்த இயலாது, வேலைவாய்ப்பு, குடியிருப்பு ஆகிய மசோதாக்கள் ஏற்கனவே மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கிவிட்டன,  எனவே உச்சநீதி மன்றம் வழக்கை விசாரிக்க அவசரம் காட்ட வேண்டும் என்றார்  மிர். 



Adnan Ashraf Mir


தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு  (1,816 நாட்களாக நிலுவையில் உள்ளது)


தேர்தல் பத்திரங்கள் மூலம் முறையற்ற வகையில் அரசியல் கட்சிகள்  நிதிவசூலிப்பதாகவும் இது தேர்தல் ஜநாயகத்திற்கு எதிரானது என்றும் கூறும் மனுதாரர்கள். மாநிலங்களவையில் எந்த விவாதத்திற்கும் இடமின்றி  இந்த சட்ட மசோதா நிதி மசோதாவாக நிறைவேற்றப்பட்டது செல்லாது என்றும் வாதிடுகின்றனர்.  


வழக்கின் பெயர்: அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் vs யூனியன் ஆஃப் இந்தியா


கடைசி விசாரணை: முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நீதிபதி ஏ.எஸ். போபண்ணா மற்றும் நீதிபதி வி. ராமசுப்ரமணியம்


முதல் விசாரணை தேதி: 5 ஏப்ரல் 2019


விசாரணையின் கடைசி தேதி: 29 மார்ச் 2020 (30 மாதங்களுக்கு முன்பு)


மொத்த விசாரணைகள்: 8


விசாரிக்க வேண்டி கடைசி கோரிக்கை: 25 ஏப்ரல் 2022 தலைமை நீதிபதி ரமணா முன்.


நீதிபதியின் பதில்: "கருத்தில் கொள்கிறேன்."


"குடிமக்கள் சட்டத்தை பற்றி அறிந்திருப்பதன் மூலமும், அவர்களின் அன்றாட நடத்தையில் அதைப் பயன்படுத்துவதன் மூலமும், தேவைப்படும்போது நீதியை வலியுறுத்துவதன் மூலமும் நீதியை வலுப்படுத்த முடியும்." -தலைமை நீதிபதி ரமணா, பி.டி. தேசாய் நினைவு சொற்பொழிவு, 30 ஜூன் 2021.


02 ஜனவரி 2018, அன்று ஒன்றிய அரசு அறிமுகப்படுத்திய தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மனுதாரர்கள் எதிர்த்தார்கள், இது பெயர் தெரியாத வகையில் பெருநிறுவன நிதியை அரசியல் கட்சிகளுக்கு வந்து சேர வழி வகைசெய்யும் எனவும்  நிதி மசோதா என்ற பெயரில் இச்சட்டம் தவறாக நிறைவேற்றப்பட்டது செல்லாது  என்றும் அவர்கள் வாதிட்டனர்.


நவம்பர் 2019 இல் வெளியான விசாரணை ஊடக அறிக்கையானது, இந்திய தேர்தல் ஆணையம் (ECI), இந்திய ரிசர்வ் வங்கி , நிதி மற்றும் சட்டம் அமைச்சகங்கள் எவ்வாறு இப் பத்திரங்களை “பணமோசடி செய்வதை ஊக்குவிக்கும் என்றும் "தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்"  என்றும் கூறி தேர்தல் பத்திரங்களை எதிர்த்தன என்பதை வெளிப்படுத்தியது.


2019 ஏப்ரலில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்விடம் முதல்முறையும், மார்ச் 2021 இல் தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்விடம் இரண்டாவது முறையும் - இந்த சட்டத்திற்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் மனுதாரர்கள். 


அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் அமைப்பின் உறுப்பினர் ஜக்தீப் சோக்கரிடம் பேசியபோது, இந்த திட்டம் முறையற்ற வகையிலான பணத்தை ஆளும் கட்சிக்கு லஞ்சமாக கொண்டு சேர்கிறது என்றார்.  


மேற்கு வங்காளத்திலிருந்து ஒரு உதாரணத்தை ஏப்ரல் 5, 2022 அன்று மேற்கோள் காட்டி பேசிய  மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், தேர்தல் பத்திரங்கள் மூலம் 40 கோடி ரூபாயை ஒரு நிறுவனம்  மேற்குவங்க ஆளும் கட்சிக்கு லஞ்சமாக செலுத்தியுள்ளது ஜனநாயக விரோதமான செயல் என்பதை குறிப்பிட்டு, இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுமாறு தலைமை நீதிபதி ரமணா அமர்வை கோரினார். 


பெருந் தொற்றின் காரணமாக ஏற்பட்ட தாமதத்தை காரணம் காட்டி, இந்த வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக ரமணா தெரிவித்தார் . நான்கு மாத காலம் ஆகியும் இவ் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.


ஏப்ரல் 2019  இல் இந்த வழக்கை விசாரிக்கும்படி கோரிக்கை எழுப்பியபோது, இதை இப்போது விசாரிப்பது தேர்தலில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்  நீதிபதி. அப்படி  தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு வழக்கை  விசாரிக்காமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை  என்றும் ஐந்து ஆறு முறை முயற்சி செய்தும் எந்த பயனும் இல்லை என்கிறார் சோகர்.  



Jagdeep Chhokar


கருத்து சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்திற்கு (UAPA) எதிராக தொடரப்பட்ட வழக்கு (1105  நாட்களாக நிலுவையில் உள்ளது)


இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமான UAPAவின் விதிகள் தெளிவற்றதாகவும், பேச்சு சுதந்திரத்தை மீறுவதாகவும், "நீதித்துறை தலையீடின்றி " அரசுக்கு பரந்த அதிகாரங்களை வழங்குவதாகவும் மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.


வழக்கின் பெயர்: சஜல் அவஸ்தி vs யூனியன் ஆஃப் இந்தியா


கடைசி விசாரணை: முன்னாள் தலைமை நீதிபதி கோகோய் மற்றும் நீதிபதி அசோக் பூஷன்.


முதல் விசாரணை தேதி: 9 செப்டம்பர் 2019


விசாரணையின் கடைசி தேதி: முதல் விசாரணைக்குப் பிறகு எதுவும் நடக்கவில்லை  (35 மாதங்களுக்கு முன்பு)


மொத்த விசாரணைகள்: 1


விசாரிக்க வேண்டி கடைசி கோரிக்கை: தெரியவில்லை


நீதிபதியின் பதில்: NA


"உலகின் குடிமக்களாகிய நாம் அனைவரும், நமது முன்னோர்கள் போராடி பெற்ற சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றை  நிலைநிறுத்தவும் மேம்படுத்தவும் அயராது உழைக்க வேண்டியது அவசியம்." - தலைமை நீதிபதி ரமணா, பிலடெல்பியா, அமெரிக்கா, 26 ஜூன் 2022


UAPA வுக்கு எதிராக 2019 முதல் பல்வேறு மனுதாரர்கள் உச்சநீதி மன்றத்திடம் முறையிட்டுள்ளார்கள், இது குற்றம் சாட்டப்பட்டவர்களின் பேச்சுரிமை மீது தேவையற்ற சுமையை ஏற்படுத்துவதாகவும், அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான ஒன்று என்றும் மனுதாரர்கள் வாதிடுகிறார்கள். 


சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த சஜல் அவஸ்தி, தாக்கல் செய்த மனுவில் UAPA சட்டதிருத்தத்தின் மூலம் அரசு  யாரை வேண்டுமானாலும் எந்த ஆதாரமமுமின்றி  ‘தீவிரவாதி’ என்று முத்திரை குத்தாலம் என்றும் அப்படி செய்வது அரசமைப்பு சட்ட பிரிவு 19 (1)(a) வுக்கு எதிரானது என்றும் கூறி இருந்தார் .


அப்போதைய , தலைமை நீதிபதி கோகோய், மத்திய அரசு பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியிருந்த போதிலும், விசாரணை நடைபெறவில்லை.


 ரமணா தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில், பல ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், UAPA வை பேச்சுரிமைக்கு எதிரானது என்றும் இச்சட்டம்  விமர்சனங்களை நசுக்க பயன்படுத்த படுகிறதென்றும் முறையிட்டிருந்தார்கள். 


நவம்பர் 2021 விசாரணைக்கு வந்த இந்த வழக்கை, பிறகு விசாரிப்பதாக கூறிய ரமணா, அதன் பின் விசாரிப்பதற்கான எவ்வித முனைப்பும்  காட்டவில்லை. 


ஒரு ஜாமின் மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம் UAPA சட்டத்திருத்தம் அரசிலமைப்புப்படி செல்லுபடியாகுமா என்பதை உறுதிசெய்யாமல் , டெல்லி உயர்நீதி மன்றம் விதித்த அரசின் மீதான கட்டுப்பாடுகளை செல்லாது என்று கூறி அவ்வுத்தரவை நிறுத்தி வைத்து.  


15 ஜூன் 2021, ஜாமீன் மனு தொடர்பான உத்தரவில், தில்லி உயர் நீதிமன்றம் UAPA வின் கீழ் பயங்கரவாதச் செயலுக்கான வரையறையை "தெளிவற்றது" என்று கூறி இருந்தது. மேலும் "சாதாரண குற்றங்கள் எல்லாம் எவ்வளவு  மோசமான குற்றங்களாக இருந்தாலும் UAPA வின் கீழ் வராது" என்றும் கூறியது. மூன்று நாட்களுக்குப் பிறகு 18 ஜூன் 2021 அன்று, டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை "முன்னோடியாகக் கருதக் கூடாது" என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது .


UAPA குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஒரு பத்திரிக்கையாளரும் மனுதாரருமான ஷியாம் மீரா சிங், UAPA மீதான மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்காதது ஆச்சரியமாக இருப்பதாக கூறினார். 


UAPA  வழக்கில் FIR போடப்பட்டதில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை எனவும், இதன் மூலம் அவரால் வெளிநாட்டுக்கு செல்லமுடியாமல் இருப்பதையும் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி வருந்தினார். 


எப்போதாவது காட்டப்படும் சிறு கருணையை தவிர்த்து நீதித்துறை மீதான நம்பிக்கையை அவர் முற்றிலும்  இழந்துவிட்டதாக கூறினார். நீதித்துறையின் சமரச போக்கினை சுட்டிக்காட்டிய அவர் கீழமை நீதி மன்றங்களின் நிலையும் மோசமாக இருப்பதாக குறிப்பிட்டார். 



Shyam Meera Singh


ஒன்றிய அரசின் நலிவுற்ற பிரிவினருக்கான பொருளாதார இடஒதுக்கீடு(EWS) வழக்கு (1,323 நாட்களாக நிலுவையில் உள்ளது)


தலித், பழங்குடியினர் அல்லது பிற்படுத்தப்பட்ட அளவுகோல்களை மறுத்தும் பிற சமூக காரணிகளைக் கருத்தில் கொள்ளாமலும் , பொருளாதார அளவுகோல்களின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும்  இடஒதுக்கீடு என்பது  அரசியலமைப்புக்கு எதிரானது என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.


வழக்கின் பெயர்: யூத் ஃபார் சமத்துவம் vs யூனியன் ஆஃப் இந்தியா


கடைசி விசாரணை: முன்னாள் தலைமை நீதிபதி பாப்டே, நீதிபதி சுபாஷ் ரெட்டி மற்றும் நீதிபதி கவாய்.


முதல் விசாரணை தேதி: 12 மார்ச் 2019.


விசாரணையின் கடைசி தேதி: ஆகஸ்ட் 5, 2020 (24 மாதங்களுக்கு முன்பு).


மொத்த  விசாரணைகள்: 6


விசாரிக்க வேண்டி கடைசி கோரிக்கை: தெரியவில்லை.


நீதிபதியின் பதில் : NA


"நான் சமூக நீதியின் தீவிரமான ஆதரவாளர். திறமைகளை வளப்படுத்த, சட்டக் கல்வியில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நான் உறுதியாக ஏற்றுக்கொண்டு அதனை முன்மொழிகிறேன்." -தலைமை நீதிபதி ரமணா, புது தில்லி, 10 மார்ச் 2022.


9 ஜனவரி 2019 அன்று, பாராளுமன்றம் 103வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது, இது அரசியலமைப்பின் 15 மற்றும் 16 வது பிரிவுகளைத் திருத்தியது. இச் சட்டத்திருத்தம்  பொருளாதார அளவுகோல் அல்லது குடும்ப வருமானத்தின் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை மற்றும் அரசு வேலைகளில் 10% இட ஒதுக்கீடு செய்ய அரசுக்கு அதிகாரம் அளித்தது.


இடஒதுக்கீட்டுக்கு விதித்திருந்த 50 % உச்சவரம்பை இத்திருத்தம் மீறுவதாக கூறி  20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டன. 


ஐந்து நாட்கள் விசாரணைக்கு பிறகு, ஆகஸ்ட் 5, 2020 அன்று, அப்போதைய தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற முடிவு செய்தது. அதன்பிறகு இவ்வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. 


தலைமை நீதிபதி ரமணா காலத்தில், ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை ஏற்படுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.


இந்த மனுவுடன் தொடர்பில்லாத டெல்லி உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சஞ்சய் கோஸிடம் பேசியபோது , தள்ளிப்போகும் விசாரணை தற்போது இருக்கும் நடைமுறை தொடரவே வழிவகுக்கும் என்றும் இது தவறான முன்னுதாரணமாக அமையும் என்றும் குறிப்பிட்டார். 


 குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 எதிரான வழக்கு (987  நாட்களாக நிலுவையில் உள்ளது)


2019 இல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் பாரபட்சமானது என்றும்,  இது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் மனுதாரர்கள் வாதிடுகின்றனர். இச்சட்ட திருத்தம் மதத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது என்றும், பிரிவு 21-ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையை மீறுவதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். 


வழக்கின் பெயர்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் vs யூனியன் ஆஃப் இந்தியா


கடைசி விசாரணை: முன்னாள் தலைமை நீதிபதி பாப்டே, நீதிபதி கவாய் மற்றும் நீதிபதி சூர்ய காந்த்


முதல் விசாரணை தேதி: 18 டிசம்பர் 2019


விசாரணையின் கடைசி தேதி: 22 ஜனவரி 2020 (31 மாதங்களுக்கு முன்பு)


மொத்த விசாரணைகள்: 2


விசாரிக்க வேண்டி கடைசி கோரிக்கை: தெரியவில்லை


நீதிபதியின் பதில் : NA


“படித்த இளைஞர்கள் சமூக யதார்த்தத்திலிருந்து விலகி இருக்க முடியாது. உங்களுக்கு ஒரு சிறப்பு பொறுப்பு உள்ளது... நீங்கள் தலைவர்களாக செயல்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அரசியல் உணர்வு மற்றும் ஆக்கபூர்வமான  விவாதங்கள் நமது அரசியலமைப்பின் லட்சியங்களை அடைய  ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி  வழிநடத்தும். ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு பொறுப்பான இளைஞர்கள் இன்றியமையாதவர்கள்.” -தலைமை நீதிபதி ரமணா, தேசிய சட்டப் பல்கலைக்கழகம், டெல்லி, 9 டிசம்பர் 2021.


பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு டிசம்பர் 2019 அன்று CAA சட்டதிருத்தத்தை ஏற்படுத்தியது . ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்த சட்டம் விரைவான குடியுரிமை வழங்குகிறது. இதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்கள் வெடித்தன. அரசு இதுவரை முறையான விதிகளை வகுக்காததால், இச்சட்டம் அமல்படுத்தப்படவில்லை.


CAA வை எதிர்த்து இதுவரை 200க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்ய பட்டுள்ளன, . CAA என்பது முஸ்லீம்களை விலக்குவதால், அனைவருக்குமான அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் அரசியலமைப்பின் 14 வது பிரிவை மீறுகிறது என்றும் இச்சட்டம் அரசையலமைப்புக்கு விரோதமானது என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள். 


அப்போதைய தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு 18 டிசம்பர் 2019 மற்றும் 22 ஜனவரி 2020 ஆகிய தேதிகளில் இரண்டு விசாரணைகளை நடத்தியது மற்றும் இச் சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்தது. கடைசி விசாரணை 22 ஜனவரி 2020 அன்று நடந்தது. அதன் பிறகு எந்த விசாரணையும் நடைபெறவில்லை .


20 மே 2020 அன்று, அஸாமில் மட்டும் நடைமுறைப்படுத்தப்படும்  சட்டத்திற்கு தடை கோரிய மற்றொரு மனு, தலைமை நீதிபதி பாப்டேவின் அமர்வுக்கு  விசாரணைக்கு வந்தது. அந்த அமர்வு சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்து, மத்திய அரசு பதில் அளிக்க கோரி நோட்டீஸ் மட்டும் அனுப்பியது.


யுனைடெட் அகென்ஸ்ட் ஹேட் குழுமத்தின் உறுப்பினர் பனோஜ் யோத்ஸ்னா லஹிரியிடம்  பேசியபோது, முழு நாடும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் சட்டத்தின் மீது கடும் அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்திய பிறகும் உச்சநீதி மன்றம் இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது நியாயமற்றது என்றும் இதை விட எப்படி தெளிவாக பேசுவது என்றும் கேள்வி எழுப்பினார். 


தலைமை நீதிபதி ரமணா தனது முற்போக்கு முகத்தை  தனது உரைகளில் மட்டுமல்லாது , தீர்ப்புகள் மூலம் உச்சநீதிமன்றத்தில் காட்டியிருக்க வேண்டும் என்றும்  லஹிரி கூறினார்.


கண்டுகொள்ளப்  படாத பிற பொதுநல வழக்குகள்


பலமுறை கோரிக்கை விடுத்தும், நீதிபதி ரமணா கண்டுகொள்ளப்படாத ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. 


மிக சமீபத்தில் நடந்த , பெகாசஸ் வழக்கை கூட தலைமை  நீதிபதி ரமணா விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. பத்திரிகையாளர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோரை உளவு பார்க்க  இஸ்ரேலிய ஸ்பைவேரை ஒன்றிய அரசாங்கம் பயன்படுத்தியதா? என்பதை விசாரிக்க கோரிய மனுக்களை நீதித்துறை துளியும்  கண்டுகொள்ளவில்லை. 


ஜூலை 22, 2021 முதல் நிலுவையில் உள்ள 11 மனுக்கள், ஆகஸ்ட் 12, 2022 அன்று பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அனால் இவ்வழக்கு இப்போது ரமணா ஓய்வு பெற்ற பிறகு செப்டம்பர் 2 அன்று விசாரணைக்கு  பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும்  உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையிலான தொழில்நுட்பக் குழு தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.


 கர்நாடக மாநிலக் கல்வி நிறுவனங்களில் மாணவிகள்  ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்துள்ள அரசின் முடிவை தூக்கிப்பிடிக்கும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின்  தீர்ப்புக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம்  விசாரிக்க வேண்டும் என ஒரு வழக்கறிஞர் கோரினார். நீதிபதிகளில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தேதி எதுவும் தெரிவிக்காமல் வழக்கை ஒத்தி வைத்தார் தலைமை நீதிபதி ரமணா . இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு 159 நாட்கள் ஆகிவிட்டது. விசாரணையில் இதுவரை  எந்த அசைவும் இல்லை. 


ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில், ஹிஜாப் வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டிய  இரண்டு மனுக்கள் தலைமை நீதிபதி அமர்வு முன் வைக்கப்பட்டன. தலைமை நீதிபதி ரமணா  விசாரிப்பதாக  உறுதியளித்தார். ஏப்ரல் 26 அன்று, "இரண்டு நாட்கள் காத்திருங்கள்" என்றார். ஜூலை 13 அன்று, “அடுத்த வாரம் வரை காத்திருங்கள்” என்றார். வழக்கு இதுவரை விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. 


சாதாரணமாக விசாரணை கோரி எழுப்பப்படும் சிறப்பு விடுப்பு மனுக்களை(SLP) 5 -6 தினங்களுக்குள் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது வழக்கம்,  ஆனால் பல மாதங்கள் ஆகியும்  இவ்வழக்கை விசாரிக்காமல் இருப்பது உச்சநீதிமன்றத்தின் மெத்தனத்தையும் தயக்கத்தையுமே காட்டுகிறது என்கிறார் ஹிஜாப் வழக்கின் வழக்கறிஞர் ஃபௌசியா ஷகில்.  


(சௌரவ் தாஸ் ஒரு புலனாய்வு பத்திரிகையாளர்)


நன்றி 


சவுரவ்  தாஸ் 

மற்றும் ஆர்டிகிள் 14 


English Version


Lots Of Speeches, But No Action In Cases Of National Importance: The Legacy of Chief Justice Ramana



Comments

  1. அருமையாக இருந்தது மொழியாக்கம்

    ReplyDelete

Post a Comment