தந்தை பெரியாரின் இறுதி நாள்களும் இதழ்களும்

  





ஆ.இரா.வேங்கடாசலபதி தொகுத்து பதிப்பித்துள்ள ‘வ.உ.சி வாராது வந்த மாமணி’ நூலை வாசித்து கொண்டிருந்தேன். நூலின் முன்னுரை ஒரு புதிய தேடலை தூண்டி விட்டது. காவிரிநாடன் தொகுத்த ‘தந்தை பெரியாரின் இறுதி நாள்களும் இதழ்களும்’ என்ற நூல் தான் அது.  வே. ஆனைமுத்து அவர்களது முன்னுரையுடன் 2005 இல் இந்நூல் வெளியாகி இருக்கிறது.


சலபதியின் முன்னுரையை வாசித்ததும்- ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கு சென்றதும் - நூலகத்தில் இந்த நூல் படிக்க கிடைத்ததும், என எல்லாம் ஒரே நாளில் அமைந்துவிட்டது. வானில் சிறகசைக்காமல் பறப்பது போன்ற உணர்வு அச்சமயத்தில் ஏற்பட்டது. இன்றைக்கு பெரியார் பிறந்தநாளில் ஒரு கட்டுரைக்கான கருவாக இந்நூல் அமைந்துவிட்டது. 


பிறந்தநாள் சமயத்தில் நினைவுநாள் பற்றி பேசுவது நியாயமற்றது என்றாலும், இந்த கட்டுரை நியாயம் கற்பிக்கும் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன். 


ராஜாஜி மறைந்து சரியாக ஓராண்டு இடைவெளியில் பெரியார் மறைந்தார், ராஜாஜியை விட 9 மாதம் இளையவரான பெரியார் அவரை விட மூன்று மாத காலம் அதிகம் வாழ்ந்தார். பெரியார் மறைந்த சமயத்தில் தமிழ்நாட்டு வெகுஜன தினசரிகள் தொடங்கி வார இதழ்கள், சிற்றிதழ்கள்,ஆங்கில பத்திரிகைகள் என அனைத்திலும் அவருக்கான அஞ்சலி குறிப்புக்கள் வெளிவந்தன. மலேசிய பத்திரிக்கையான ‘தமிழ்நேசனும்’ உருக்கமான அஞ்சலி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. இது தவிர்த்து பிற மாநில பத்திரிகைகளும் நிச்சயம் செய்தி வெளியிட்டிருக்கும் என்றாலும் அவை எல்லாம் இந்த தொகுப்பில் இடம்பெறவில்லை. இதற்கடுத்து எந்த பதிப்பும் வெளிவரவில்லை. முதல் பதிப்பு 2005.


இந்தியாவின் முக்கிய தலைவர்களிடமிருந்து பெரியாருக்கு அஞ்சலி குறிப்புக்கள் வெளிவந்தவண்ணம் இருந்துள்ளது. இந்திரா காந்தி, வி.வி.கிரி, ஜெயப்ரகாஷ் நாராயணன், கேரளா முதல்வர் அச்சுதானந்த மேனன், ஆந்திர முதல்வர் வெங்கல் ராவ், பஞ்சாப் முதல்வர் ஜெயில் சிங், மகாராஷ்டிரா முதல்வர் வி.பி.நாயக் போன்ற தலைவர்கள் எல்லாம் இரங்கல் குறிப்புகளை எழுதியுள்ளார்கள். 


தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசியல் கட்சி தலைவர்கள் தொடங்கி கவிஞர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள், தொண்டர்கள், என சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் வேதனை  வெளிப்பட்டுள்ளது. 


அனைத்து கட்சி கொடிகளும் அரை கம்பத்தில் பறக்கவிட பட்டுள்ளது. இந்திய தேசிய கொடி இரண்டு நாளைக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் கடையடைப்பு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. சினிமா அரங்குகள், சினிமா படப்பிடிப்புகள், அரசு நிகழ்ச்சிகள், போன்றவை எல்லாம் முழுவதுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. சிம்சன் நிறுவனம் விடுமுறை அளித்துள்ளது. 


அன்றைக்கு நடக்கவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் நிறுத்தப்பட்டு, துக்கம் அனுசரிக்க பட்டுள்ளது. பாதியில் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சிவாஜி கணேசனும், எம்.ஆர்.ராதாவும் பெரியாரை பார்க்க ராஜாஜி அரங்கத்திற்கு வந்துள்ளனர். கலைஞர் அஞ்சலி குறிப்பை வாசித்து கொண்டிருக்கும்போதே கண்ணீர்விட்டு அழுதுள்ளார். நாவலர் வானொலியில் துக்கத்தை பகிர்ந்து கொள்கிறார். பெரியாரின் இறுதி ஊர்வலத்தின் நிகழ்வுகளை சென்னை வானொலி நிலையம் நேரலையில் ஒலிபரப்பி கொண்டிருக்கிறது.  


பெரியாரின் உடல் ராஜாஜி ஹாலில் இருந்து அண்ணாசாலை வழியாக பெரியார் திடலில் அடக்கம் செய்வதற்காக கொண்டுசெல்லப்பட்டது. 


பெரியசாமி தூரன், நெ.து.சுந்தரவடிவேலு, ராஜ்மோகன் காந்தி, ஆளுநர்  கே.கே.ஷா  போன்றவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். 


கலைஞர், காமராஜர்,MGR, நாவலர்,ப. உ. சண்முகம், பி.ராமமூர்த்தி, எம் கல்யாணசுந்தரம், சி. சுப்பிரமணியம், ஜெகஜீவன் ராம், ம. பொ. சிவஞானம், எம்.எ.முனுசாமி, சத்யவானி முத்து, எஸ்.எஸ். ராமசாமி படையாச்சி, போன்ற தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். 






முரசொலி தொடங்கி விடுதலை, தினத்தந்தி, நாத்திகம், மக்கள் குரல், அலையோசை, தினமணி, நவசக்தி, விடிவெள்ளி, நவமணி, ஜனசக்தி, அறமுரசு, தாமரை, சுதேசமித்திரன், நவ இந்தியா போன்ற தினசரிகளும். கல்கி, ஆனந்த விகடன், மஞ்சரி, துக்ளக் போன்ற வார மற்றும் சிற்றிதழ்களும். ஆங்கிலத்தில் தி ஹிந்து, தி மெயில் போன்ற பத்திரிகைகளும் அஞ்சலி குறிப்புகளை வெளியிட்டுள்ளன. துக்ளக் மற்றும் கல்கி இதழ்களில் வெளிவந்த அஞ்சலி குறிப்புகள் அதன் தொனிக்காகவே கவனிக்கத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது. கல்கி இதழின் முகப்பு பெரியாரின் புகைப்படத்தை கொண்டு வெளியாகி இருக்கிறது. 


இதில் பெரும்பாலான பத்திரிகைகள் பெரியாரின் வாழ்க்கை குறிப்புகளை சுருக்கமாகவும், அவரது அரசியல் செயல்பாடுகளை ஓரிரு வரியிலும், சமகால செய்திகளை விரிவாகவும் பதிவு செய்துள்ளன. கவிஞர்கள் எழுதிய கவிதைகளும், ஓவியர்கள் தீட்டிய ஓவியங்களும், ஊர்வலத்தின் புகைப்படங்களும், பெரியாரின் தனி படங்களும் இடம்பெற்றிருப்பது மனங்கொள்ளத்தக்கது. 


பெரியார் - ராஜாஜி ஆகிய இருவருக்குமான நட்பை அனைத்து பத்திரிகைகளும் குறிப்பிட்டுள்ளன. தமிழக அரசியலின் இரண்டு பெரியோர்களை இழந்து தமிழ்நாடு தவிக்கிறது என்ற தொனியில் இச்செய்திகள் அமைந்துள்ளன. 


பெரியார் குறித்து மறைந்த அரசியல் தலைவர்கள் கொண்டிருந்த கருத்துக்கள் பத்திரிகைகளில் நினைவு கூற பட்டிருக்கிறது. பெரியாரின் 89 ஆம் பிறந்தநாளில் அண்ணா நிகழ்த்திய "வசந்த காலம்" என்ற உருக்கமான உரை முரசொலியில் வெளியாகி இருந்தது. 


 அதற்கடுத்த ஆண்டில்(1974) வெளியிடப்படும் Year bookல் டெக்கான் ஹெரால்ட் இதழ் இந்தியா முழுக்க நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்திய வரைபடத்தில் குறித்துள்ளது, அதில் தமிழ்நாட்டில் பெரியாரின் மறைவை மறக்கமுடியா நிகழ்வாக குறிப்பிட்டிருப்பது அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் அமைந்துள்ளது. 


1947இல் தமிழ்நாடு முழுக்க உள்ள தி.மு.கழகத் தொண்டர்கள் ஜனவரி 3 ஆம் நாளை பெரியாரின்  நினைவுநாளாக அனுசரிக்க வேண்டும் என்ற  தலைமை கழக அறிவுறுத்தலின் பெயரில் அந்நிகழ்வு கடைபிடிக்க பட்டிருக்கிறது. 


பெரியார் மறைந்த அன்றைக்கு, தி.க- தி.மு.கவுடன் இணைக்கப்படுமா? அல்லது தி.க கலைக்கப்படுமா? போன்ற கேள்விகள் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர், பெரியார் தொடங்கிய இயக்கம் தனித்து இயங்கும் என்றும் எந்த கட்சியுடனும் இணையாது என்றும் பதிலளித்துள்ளார். 


கலைஞரின் மறைவை நேரில் பார்த்த தலைமுறையினரான நமக்கு பெரியாரின் மறைவின் போது எந்தெந்த வகையில் துக்கம் அனுசரிக்கப்பட்டது என்பது பற்றி எல்லாம் இந்நூலை வாசிக்கும்போது தெரிய வருகிறது. ஒரே செய்தியை வெவ்வேறு ஊடகங்கள் எப்படி பிரசுரிக்கின்றன என்பதையும் அவதானிக்க முடிகிறது. அஞ்சலி குறிப்புகள்,இறுதி ஊர்வலம்,வாழ்கை வரலாறு, கவிதை, கருத்துப்படம், ஓவியம், சுவாரசியமான நிகழ்ச்சிகள் என இந்நூல் முழுக்க ஆச்சரியமூட்டும் செய்திகள் இடம்பெற்றிருக்கிறது. 


இந்நூலில் விடுபட்ட பத்திரிகைகளும் நிறைய இருக்கலாம் அவற்றை எல்லாம் தேடி தொகுத்து வெளியிடுவது இந்த தலைமுறை ஆய்வாளர்களின் கடமையாகும். 


பெரியாரின் புகழ் 21ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டதல்ல, அவர் வாழ்ந்த காலத்திலேயே மிகுந்த செல்வாக்குள்ள தலைவராக இருந்துள்ளார். இந்திய அளவில் அனைவராலும் மதிக்கத்தக்க தலைவராகவும் மாற்றுக்கருத்துக்கு மதிப்பளிக்கும் ஒருவராகவும் பெரியாரை பல அரசியல் தலைவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர். 


இந்த தொகுப்பு நூல் மேலும் செம்மைப்படுத்தப்பட வேண்டும், மேலும் அண்ணாவின் மறைவின் போது வெளியான பத்திரிகை செய்திகளையும் தொகுத்து இதுபோன்று நூலாக்க வேண்டும். ‘மாபெரும் தமிழ் கனவு’, ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ போன்ற தொகுப்பு நூல்களுக்கு இணையான அம்சங்களையும் தகவல்களையும் 500 பக்கங்களுடைய இந்நூலும் கொண்டுள்ளது. 


செம்மைப்படுத்தி பதிப்பித்தால், திராவிட இயக்க ஆய்வுக்கு நிச்சயம் உதவும். 

பிறந்தநாளில் நினைவுநாள் பற்றிய செய்திகளை  நினைவுகூர்ந்ததும் இதற்காக தான். சார்ந்தோர் கவனத்திற்கு சென்றால் மகிழ்வேன். 










Comments