எழுக நீ புலவன் - நூல் அறிமுகம்




பாரதி பற்றி எனக்கு எந்த காலத்திலும் நேர்மறையான எண்ணமும் நல்ல அபிப்ராயமும் இருந்ததில்லை, இந்நூல் அப்படி ஒரு எண்ணத்தை ஒரு அளவுக்கு மாற்றியுள்ளது. பாரதி பற்றியும் அவர் வாழ்ந்த காலத்தின் புற சூழல் எப்படி இருந்தது என்பதை பற்றியும் இந்நூலில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மூன்று விதமான பொருண்மைகளுக்குள் இந்த கட்டுரைகளை வகைப்படுத்தலாம் என்று நினைக்கிறேன். 1 . பாரதியின் அரசியல் செயல்பாடுகள் 2 . பாரதியின் இதழியல் பணிகள் 3 . பாரதி மீதான பிறரது பார்வை மற்றும் பாரதியின் பிறர் மீதான பார்வை . முதல் இரண்டு பொருண்மைகள் மிகுதியாகவும் மூன்றாவது சற்று குறைவானதுமான கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.

நூலின் முக்கியமான அம்சம், பாரதியின் பணிகளை மிகைப்படுத்தாமல் உள்ளதை உள்ளபடி அணுகுவது தான். பார்ப்பன பாரதியாக இருந்தாலும் முற்போக்கு பாரதியாக இருந்தாலும் ஒளிவு மறைவு ஏதுமின்றி இவர் இப்படி தான் என்று சொல்லும் போக்கு, ஒரு ஆய்வாளன் ஆளுமை பற்றற்று இருத்தல் எவ்வளவு முக்கியம் என்பதை கூறி செல்கிறது. ‘பாரதியும் மொழியின் நவீனமயமாக்கமும்’ முதலான கட்டுரைகள் என்னுடைய இந்த கூற்றிற்கு சான்று.

பாரதியை சுதேசி இயக்கத்தின் குழந்தை என்கிறார் சலபதி, சுதேசி இயக்கமும் அதை தொடர்ந்து நிகழ்ந்தேறிய அரசியல் செயல்பாடுகளும் பாரதியின் மீது ஏற்படுத்திய தாக்கம் அவரை தீவிரவாத தேசியத்தின்(Radical Nationalism) பிரதிநிதியாக ஆக்கியது. அவரது செயல்பாடுகளும் தமிழ்நாட்டில் ஏற்பட்ட தேசிய அரசியல் எழுச்சியும், பாரதியின் அரசியல் மற்றும் இதழியல் செயல்பாடுகளை ஆங்கிலேய அரசு முடக்குவதற்கு காரணமாக அமைந்து போனதில் வியப்பில்லை.

1904 முதல் 1920 வரை நீண்ட அவரது எழுத்து வாழ்க்கையை போல் ஏற்ற இறக்கங்களை கொண்ட ஒரு எழுத்து வாழ்க்கை இல்லை எனலாம். அதற்கு பல்வேறு புற காரணங்களே முதன்மையாக இருந்துள்ளன, விடுதலை இயக்கத்தை முடக்கும் ஆங்கிலேய அரசின் செயல்பாடுகள் ஒரு பக்கமிருக்க, நூல் பதிப்பிக்கும் முறையிலும் மாற்றம் இந்த காலகட்டத்தில் தான் ஏற்படுகிறது. புரவலர்(Patrons) முறையிலிருந்து சந்தாதாரர்(Subscription) முறைக்கு மாறும் ஒரு போக்கும்(Transition Phase) இந்த காலகட்டத்தில் நடப்பது மனங்கொள்ளத்தக்கது. ‘நமக்குத் தொழில் கவிதை’ என்ற கட்டுரை இது சார்ந்த தகவல்களை கொண்டதாக அமைந்துள்ளது.

பாரதி பற்றி ஆங்கிலேய நிருபர் நெவின்சன் எழுதி இருந்ததையும் அதை பாரதி அறிந்திருந்த செய்திகளும் சுவாரசியம் மிகுந்தவை. நெவின்சன் பாரதியை பற்றி மட்டுமல்ல பிட்டி. தியாகராயர் பற்றி கொண்டிருந்த சிறு குறிப்பும் இந்நூலில் இடம்பெற்றிருக்கிறது.

பாரதியின் புதுவை பிரவேசமும் முதல் உலகப்போர் ஏற்பட்ட காலமும் ஊடறுத்து நின்றன. அந்த சமயத்தில் பாரதியின் எழுத்துப்பணி என்னவாக இருந்தது என்பதையும் உலகப்போர் சமயத்தில் பாரதி எத்தகைய அபிப்ராயங்களை கொண்டிருந்தார் என்பதையும் மையமாக கொண்டு ஒரு கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. இந்தியா வார இதழும் விஜயா தினசரியும் தடைசெய்யப்பட்ட நீண்ட நாட்களுக்கு பிறகு சுதேசமித்ரனில் 'தராசு' என்ற பத்தி எழுத்தை பாரதி எழுதி வந்தார். அது பற்றிய குறிப்புகள் இக்கட்டுரையில் இடம்பெற்றிருக்கிறது. “எழுக, நீ புலவன்” என்ற கட்டுரை தராசு பத்தி பற்றி மேலும் விரிவாக பேசுகிறது. பாரதி - பாரதிதாசன் சந்திப்பு எப்போது நடந்திருக்கும் என்ற அவதானிப்பையும் இக்கட்டுரை கொண்டுள்ளது. பாரதிதாசன் 'நீயே எனது குரு' என்று சொன்னதற்காக 'எழுக, நீ புலவன்' என்று சொன்ன பாரதியின் வரிகள் நூலின் தலைப்பாக அமைந்திருப்பது அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தையும் பின்னாட்களில் இந்த புலவன் எழுவான் என்பதற்கு சமிக்ஞை போலவும் அமைத்திருக்கிறது.

எட்டயபுர ஜமீன்தார்கள் பற்றியும் பாரதியின் இருவேறு சுயசரிதை முயற்சிகள் பற்றியும் 'வம்சமணி தீபிகை' என்ற பெயரில் பாரதி எழுதத் தவறிய எட்டயபுர வரலாறு பற்றியும் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள் என் வாசிப்புக்கு புதிதான ஒன்றாக இருந்தது.

‘விஜயா’ : பாரதி ஆசிரியனாக விளங்கிய ஒரே நாளிதழ் என்ற கட்டுரை ‘பாரதியின் கருத்துப்படங்கள்’ என்ற கட்டுரையோடு சேர்த்து வாசிக்கப்படவேண்டிய ஒன்று . மக்களுக்கு ஒரு செய்தியை கடத்தவேண்டும் என்ற முனைப்பை கொண்ட பாரதி அதை எளிமையாக்க கருதுபடங்களை கைக்கொள்கிறான். இந்த கட்டுரை பாரதியின் கருத்துப்படங்கள் பற்றி மட்டுமல்லாமல் இந்திய இதழியலில் கருதுபடங்களின் சுருக்கமான வரலாற்றையும் கொண்டே இருக்கிறது.

மிகவும் ஈர்த்த கட்டுரைகளில் ‘தாகூர் திக்விஜயம் : பாரதி பார்வையில் தாகூர்’ என்ற கட்டுரையை முதன்மையாக சொல்லலாம், எழுத்தின் மூலமாக ஒருவரை அறிந்துகொண்டு அதை வைத்துமட்டுமே அவரை பற்றிய ஆளுமையை கோட்டோவியம் போல் உருவாக்கி கொள்வது பாரதியிடம் எப்படி நிகழ்ந்தது என்பதை பற்றி வாசிக்கும்போது எனக்கு ஆதர்சமான எழுத்தாளர்களுடனும் அதை பொருத்தி பார்க்க முடிந்தது.

“பாரதியின் உயிரியல் வாரிசுகள் அறிவுலக வாரிசுகளாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை” என்று முடியும் கட்டுரை நூல் விமர்சனத்தை இப்படியும் எழுதமுடியுமா என்பதற்கு உதாரணம் போல் இருந்தது. சலபதியின் நகைச்சுவை நிறைந்த எழுத்து நடையை இக்கட்டுரையிலும் பார்க்க முடிகிறது.

பாரதியை புரிந்துகொள்வதற்கு அவன் வாழ்ந்த கால சூழலையும் தெரிந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த காலத்தில் எத்தனை முற்போக்கு கருத்துக்களை கொண்ட பார்ப்பனராக இருந்தாலும் பாரதி செயல்பட்ட எல்லையை தாண்டி செயல்பட்டிருக்க முடியுமா என்று சொல்ல இயலாது. வாழ்ந்த காலத்தில் பெரிதாக கொண்டாடப்படாமல் இறந்து 40 ஆண்டு கழித்து படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டு அதன் பின் நூற்றாண்டில் ஒரு பேரெழுச்சி நடந்து இன்றைக்கு பாரதியும் பாரதி ஆய்வுகளும் அடைத்திருக்கும் தூரம் தமிழ் அறிவுலகத்தின் மீது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

இதில் பல தனி மனிதர்களின் பங்களிப்பும் அவர்களில் சமகாலத்தவர்களில் பெரும்பாலானவர்கள் பார்ப்பனர் அல்லாதாராக இருப்பதும் இந்த மண்ணின் பக்குவமான அரசியலையும் கூறிச் செல்கிறது.

‘நாள் மலர்களும் நாட்படு தேறலும்’ என்ற தலைப்பில் அமைந்திருக்கும் முன்னுரையில் சலபதி கேட்டிருப்பதை போல் இந்நூலில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் 'நறுமணமும் தேள்கடுப்பும்' நிறைந்தவை. சக்கையான நடையில் இல்லாமல் செம்மையாக எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைகள் ஒரு ஆய்வாளருக்குள் இருக்கும் தமிழ் பண்டிதரை நமக்கு வெளிப்படுத்துகிறது. அந்த வகையில் "எழுக, நீ புலவன்" என்ற பாரதியின் வரிகள் பாரதி ஆய்வாளர்களின் செவிகளுக்கு சென்று சேர்ந்துள்ளது. பாரதியை எழச் செய்ததில் இவர்களது பங்கு குறிப்பிடத்தக்கது என்று நினைக்கிறேன். சலபதி அந்த வரிசையில் முதன்மையானவர். இந்நூல் அதற்கு சான்று.

A.r. Venkatachalapathy
காலச்சுவடு

Comments