'எழுதாக் கிளவி - நெடுவழி விளக்குகள்' ஓர் அறிமுகம்
Rupa Viswanath எழுதிய The Pariah Problem என்ற நூலில் இப்படி ஒரு குறிப்பு இருந்தது "19ஆம் நூற்றாண்டு வரையிலும் தமிழர்கள் என்ற அடையாளம் பறையர்களை உள்ளடக்கிய ஒன்றாக இருக்கவில்லை ", எத்தனை பெரிய அதிர்ச்சி தகவல் இது. இந்த இடத்தில தான் 1881 ஆம் ஆண்டு குடிமதிப்பு கணக்கெடுப்பின்போது பறையர்களை "ஒரிஜினல் தமிள்ஸ் " என்ற விண்ணப்பத்தை அயோத்திதாசர் ஆங்கிலயேர்களிடம் சமர்பிக்கிறார். அதாவது சாதியால் ஆட்கொள்ளப்பட்ட தமிழ் குடிகளிடமிருந்து தங்களை வேறுபடுத்திக்கொள்ள இதுபோன்ற அடையாளம் அயோத்திதாசரால் பயன்படுத்தப்பட்டது எனலாம். பூர்வம் - சமீபம் என்ற அயோத்திதாசரின் கலாச்சார தத்துவம் இந்த தெளிவை கொடுக்கிறது.
இதை தொடர்ந்து ‘திராவிடர்’ என்ற அடையாளம் உருப்பெறுகிறது - திராவிட பாண்டியன் - திராவிட மகாஜன சபை போன்ற இதழ்களும் அமைப்புகளும் தலித்துகள் மூலம் அரசியல் களத்துக்கு வந்த சொல்லாடல்கள் எனலாம். திராவிடர் என்ற அடையாளம், தமிழர் என்ற அடையாளத்தில் பறையர்கள் சேர்க்கப்படாததன் விளைவாக உருவான ஒன்றா என்ற கேள்வியையும் இங்கு எழுகிறது.
தலித்துகள் 'திராவிடர்' என்ற வர்ணஎதிர்ப்பு அடையாளத்தை உரிமைகோரிய அதே சமயத்தில் இங்குள்ள பிற இடைநிலைசாதிகள் வர்ண அடையாளமான 'சத்ரிய' அடையாளத்திற்கு சண்டையிட்டு கொண்டிருந்தன என்பதையும் வரலாற்றார்வலர்கள் மனங்கொள்ளவேண்டும்.
பின்னாட்களில் திராவிடர் என்ற அடையாளம் பார்ப்பனர் அல்லாதாரை குறிக்க, எம்.சி.ராஜா போன்றவர்கள் ஆதி திராவிடர் என்ற அடையாளத்தை தலித்துகளை குறிக்க பயன்படுத்த தொடங்குகிறார்கள். இதுவே இன்று வரை தொடர்கிறது. திராவிடர்- தமிழர் என்ற அடையாளங்கள் பின்னாட்களில் தலித்துகள் உட்பட அனைத்து பார்ப்பனர் அல்லாதாரையும் உள்ளடக்கிய ஒன்றாக வெளிப்பட்டது. இதற்க்கு இந்தி எதிர்ப்பு போராட்டமும் பின்னாட்களில் திமுகவின் அரசியல் செயல்பாடுகளும் முக்கிய காரணம் எனலாம். சமீபத்தில் வெளியான Rule of the commoner நூல் இதை விளக்கமாக பேசுகிறது.
திராவிட- தமிழர் என்ற பதம் அரசியல் அடையாளமாக மாறுவது நெடிய மரபை கொண்டே உருப்பெற்றுள்ளது. ஆனால் எப்படி தமிழர் என்ற பதம் பறையர்களை உள்ளடக்காத ஒன்றாக இருந்ததோ தமிழ்நாட்டு வரலாறும் அத்தகைய போக்கினையே கொண்டுள்ளது. இந்த வெற்றிடத்தை ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய ‘எழுதாக் கிளவி’யும், நெடுவழி விளக்குகள் ஆகிய புத்தகங்கள் ஒரு அளவுக்கு நிரப்ப முயல்கின்றன. நெடிய பயணத்தில் இந்த இரண்டு நூல்களையும் மைல் கற்கள் எனலாம்.
ஸ்டாலின் ராஜாங்கத்தின் ஆய்வெழுத்துக்களும் கட்டுரைகளும் தமிழ் அறிவுசூழலில் முக்கியமானவை, அவை விமர்சனமாகவும் அதே சமயத்தில் புதிய வரலாறாகவும் வெளிப்படுவது அவர் எழுத்தின் பலம். இந்த இரண்டு நூல்களையும் வாசித்து இரண்டுக்கும் சேர்த்து ஒரு அறிமுகம் எழுதவேண்டும் என்று தோன்றியதனால் ஏற்பட்ட விளைவு தான் இக்கட்டுரை.
தலித் வரலாறும் - ஆளுமைகளும்- போராட்டங்களும்- அனுபவங்களும் என இரண்டு நூல்களில் உள்ள கட்டுரைகளும் சேர்த்து தலித் வரலாற்றாய்வில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கின்றன. திராவிட இயக்க வாசிப்பின் ஒரு பகுதியாக தலித் விமர்சன எழுத்துக்களையும் வரலாறையும் அறிந்துகொள்வதை நான் ஒரு பயிற்சியாகவே கொண்டுளேன். இந்த பார்வை இளம் தலைமுறை தமிழ் ஆய்வாளர்களும் ஏற்படுத்திக்கொள்வது அவசியம் என்றே நினைக்கிறேன். திராவிட இயக்கத்தின் விடுபட்ட அல்லது அறியப்படாத பக்கங்களை தலித் வரலாறு இட்டு நிரப்புகிறது என்பது என் அவதானிப்பு.
‘எழுதாக் கிழவி’ நூல் இரண்டு வகையான கட்டுரைகளை கொண்டுள்ளது, நினைவுகளில் நிலைபெறும் வரலாறு மற்றும் வாசிப்பில் வசப்படும் வரலாறு . இந்த தலைப்புகளில் கீழ் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள் எல்லாம் வெவ்வேறு சமயங்களில் இதழ்களுக்காக எழுதப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டவை.
சாதி எதிர்ப்பின் காரணத்தால் கொல்லப்பட்ட வட்டார அளவிலான தலித் போராளிகள் அங்குள்ள மக்களின் நினைவுகளில் எப்படி நிலைத்து இருக்கிறார்கள் என்பதையும் அவர்களுக்கு சிலைகளும், நினைவு கற்களும், பாடல் போன்ற கலை வடிவங்களும் ஏற்படுத்தப்பட்டு எப்படி மக்களிடம் நிலைபெற்று இருக்கிறார்கள் என்பதை முதல் கட்டுரை பேசுகிறது.
ஆனந்த தீர்த்தர் - ஜார்ஜ் ஜோசப் - பென்னிகுயிக் பற்றிய கட்டுரை புதிய வரலாற்றை அறிமுகப்படுத்தியது, குறிப்பாக கேரளத்து சீர்திருத்தவாதியான ஜார்ஜ் ஜோசப் பிரமலை கள்ளர் சாதி மக்கள் மீதி ஆங்கிலேய அரசால் கொணரப்பட்ட கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடினர் எனவும் அதனால் அந்த சமூக மக்களிடையே இன்றளவிலும் தங்கள் குழந்தைகளுக்கு ‘ரோசாப்பூ’ என்று பெயர்சூட்டப்படுகிறது எனவும் அறியமுடிகிறது. வைக்கம் போராட்டத்தில் பெரும்பங்கினை ஜார்ஜ் ஜோசப் கொண்டுள்ளார் என்ற செய்தியை பழ.அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம் என்ற நூலின் மூலம் அறிந்தேன். SVR மற்றும் வ.கீதா தொகுத்த Revolt பத்திரிகை கட்டுரை தொகுப்பில் Gee J என்ற பெயரில் எழுதப்பட்ட கட்டுரைகள் ஜார்ஜ் ஜோசப் அவர்களால் எழுதப்பட்டவை என்ற குறிப்பும் இடம்பெற்றிருந்தது, அந்த வகையில் இக்கட்டுரை புதிய திறப்பை ஏற்படுத்துகிறது.
கக்கன் மற்றும் சிவாஜி சிலைகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கட்டுரைகள் அனேகமாக தமிழ் சூழலுக்கு புதியவை, இந்த கோணத்தில் கூட பார்க்கலாமா என்ற பார்வையை ஏற்படுத்திய கட்டுரையாக இதை சொல்வேன். தமிழ்நாட்டில் அனைத்து இடங்களும் ஏதோ ஒருவகையில் அரசியல்மயப்பட்டவை(Politicized Space), தலைவர்களின் பெயர்களை சிலைகளை, நினைவு சின்னங்களை ஆகியவற்றை கொண்டிருப்பவை. அதிலும் சாதியம் எப்படி வெளிப்படுகிறது என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.
டி.எம்.உமர் பாரூக் என்றறியப்பட்ட டி.என்.மணி என்ற தலித் தலைவர் பற்றிய கட்டுரையும் பொன்னுத்தாயி முன்னெடுத்த தலித் கல்வி நிறுவன முயற்சிகள் பற்றிய கட்டுரையும், பௌர்ணமி என்ற இதழை நடத்தி பௌத்தம் பற்றிய விழிப்புணர்வை 1980 களில் தலித்துகளிடையே ஏற்படுத்திய ‘பௌர்ணமி’ குப்புசாமி பற்றிய கட்டுரையும் நிறைய தகவல்களை உள்ளடக்கியவை. இத்தகைய முன்னெடுப்புகள் எல்லாம் ஒருவகையில் ஊக்கமளிப்பவையாக இருக்கிறது எனலாம்.
நடராசனும்-தாளமுத்துவும் இந்தி எதிர்ப்பில் உயிரிழந்தவர்கள் என்ற அளவில் மட்டுமே அறியப்பட்டுவரும் சூழலில், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுத்த தலித்துகள் பற்றிய ஒரு கட்டுரை இந்தி எதிர்ப்பு குறித்தான புதிய தகவலை நமக்களிக்கிறது, கோலார் தங்க வயலை சேர்ந்த சாக்கிய பௌத்த சங்கத்தவரும், மீனாம்பாள், சிவராஜ் போன்ற தமிழ்நாட்டு தலித் தலைவர்களும் சுயமரிதை இயக்கத்தோடும் தனித்தமிழ் இயக்கத்தோடும் சேர்ந்து இந்தியெதிர்ப்பில் பங்கேற்ற வரலாறும் அதன் பின்னணியும் விளக்கப்பட்டிருக்கிறது. பெரியாருக்கு ‘பெரியார்’ பட்டம் கொடுத்ததும் மீனாம்பாள் என்ற தலித் பெண்மணி என்பது மீனாம்பாள் சிவராஜின் ஆளுமைக்கு ஒரு சான்று. இவர்களது வாழ்கை வரலாறு எல்லாம் விரிவாக எழுதப்படவேண்டும் என்ற எண்ணமும் அச்சமயத்தில் ஏற்பட்டது. வரும் தலைமுறை ஆய்வாளர்கள் அதை செய்வார்களாக.
வீரம்மாள்- வீராசாமி என்ற இரு தலித் ஆளுமைகளின் செயல்பாடுகள் அக்கால போக்கினை பிரதிபலிப்பவை, கல்வி பணியில் தொடங்கி பின்னர் சுயமரிதை இயக்க தொடர்பு ஏற்பட்டு பின்னாட்களில் காங்கிரஸ்- பக்தி சார்பு என்று வீரம்மாளின் வாழ்கை இருந்துள்ளது, ஓவியா எழுதிய ‘கருஞ்சட்டை பெண்கள்’ நூலிலும் வீரம்மாள் பற்றிய சிறு குறிப்பு இடம்பெற்றிருந்தது. அம்பேத்கரியம்- பெரியாரியம் என்ற இரண்டு தத்துவங்களையும் உள்வாங்கி இயங்கியவராக வீராசாமி வெளிப்படுகிறார்.
நீதிக்கட்சியும் காங்கிரஸும் தலித்துகளை எப்படி பார்த்தன என்பதையும் எம். சி.ராஜா போன்ற தலித் தலைவர்கள் இந்த இரண்டு இயக்கங்களையும் அதன் தலைவர்களையும் எப்படி பார்த்தார்கள் என்ற குறிப்புக்கள் முக்கியமாவை, நீதிக்கட்சியின் மூலவர்களுள் ஒப்பிடுகையில் டிஎம்.நாயர் பற்றி கடைசி வரை எம்.சி.ராஜா நல்ல அபிப்ராயத்தையே கொண்டிருந்திருக்கிறார். நாயரின் புகழ்பெற்ற spur tank உரையும் அது ஏற்பாடுசெய்யப்பட்ட விதமும் அதில் தலித்துகளின் பங்கும் இதுவரை நான் எங்கும் படித்திடாதவை அந்த உரையை சுற்றி நிகழ்ந்த அரசியலை ஒரு கட்டுரை நம்முன் படைக்கிறது.
நந்தனார் கதையும் அதை நவீனத்திற்கேற்ப சுவாமி சகஜானந்தர் எப்படி பயன்படுத்தினர் என்பதை பற்றியும் ஒரு கட்டுரை பேசுகிறது. நந்தனார் பற்றிய ஒரு சுருக்கமா வரலாற்றை சொல்லிவிட்டு அது சகஜானந்தர் போன்றவர்களால் பயன்படுத்தப்பட்டு, பின்னர் அம்பேத்கரின் The Untouchables: Who Were They? and why They Became Untouchables நூல் நந்தனாருக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்டது என்ற செய்தியும் கோர்த்துப்பார்க்க வேண்டியவை. சகஜானந்தர் பின்னாட்களில் தேசியத்தில் சேர்ந்து நீர்த்துப்போன செய்தி அவர் நினைவுகூரப்படாமல் போனதற்கான காரணமாக இருக்கலாம்.
திராவிடன் பறையன் தமிழன் என்ற பெயர்களுக்கு பின்னல் இருக்கும் அரசியலோடும் அது அயோத்திதாசர் ரெட்டைமலை சீனிவாசன் எம்.சி.ராஜா போன்ற தலைவர்களால் எப்படி அணுகப்பட்டது. அவர்கள் உடன்பட்டு முரண்பட்ட இடங்கள் என்னென்ன என்பதை பற்றி நூலின் கடைசி பேசுகிறது.
இப்படி ஒரு பரந்துபட்ட தன்மைகளை கொண்ட கட்டுரைகளோடு இந்நூல் நிறைவடைகிறது. ‘நெடுவழி விளக்குகள்’ நூல் இதன் தொடர்ச்சியாக இந்த அடித்தளத்துடன் ஒரு வரலாற்றை கூற முயல்கிறது. அதில் காலனிய கால தலித் இயக்க செயல்பாடுகள் அதிகம் இடம்பெற்றிருக்கிறது எனலாம், 1980 களுக்கு முன்பான தலித் இயக்க செயல்பாடுகளையும் இந்நூல் நமக்களிக்கிறது . மேலும் கடந்த தசாப்தத்தில்(2011-2020) மறைந்த தலித் ஆளுமைகள் குறித்த நினைவுஅஞ்சலி குறிப்புகளும் இடம்பெற்றிருக்கிறது.
அம்பேத்கரின் ரானடே பற்றிய உரை நூலக வெளிவந்தது ‘ரானடே காந்தி ஜின்னா’ என்ற மூன்று தலைவர்களை பற்றியும் அம்பேத்கர் அந்நூலில் குறிப்பிட்டிருப்பார், அம்பேத்கரின் புகழ்பெற்ற வாக்கியங்களில் ஒன்றான "Humans are mortal. So are ideas. An idea needs propagation as much as a plant needs watering. Otherwise both will wither and die." இந்நூலில் தான் இடம்பெற்றிருக்கும். இந்த நூல் குறித்தான பகுப்பாய்ப்பு முக்கியமான ஒன்று . முதல் கட்டுரையாக அது இடம்பெற்றிருக்கிறது.
AISCF(All India Scheduled Caste Federation) என்று அழைக்கப்படும் பெடெரேஷன் பற்றியும் அது தமிழ்நாட்டில் பெற்றிருந்த செல்வாக்கு பற்றியும் இங்குள்ள முற்போக்கு இயக்கங்களுடன் அது எப்படி செயலாற்றியது என்பது பற்றியும் ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது, அதில் வரும் ஒரு குறிப்பு புதிய அவதானிப்புக்கு அடிகோலிட்டது. 1954 இல் நடந்த குடியாத்தம் இடைத்தேர்தலில், காமராஜருக்கு எதிராக போட்டியிட்ட பெடரேஷன் வேட்பாளருக்கு ஆதரவாக ராமசாமி படையாச்சியின் உழைப்பாளர் கட்சி(Toilers Party) ஆதரவளித்தது தான். இது ஒரு பெரும் ஆய்வுக்கான அம்சத்தை கொண்ட தகவல். சமத்துவசங்கு, சூரியன், உரிமை, ஜெய் பீம் போன்ற இதழியல் முயற்சிகளையும் இக்கட்டுரை முக்கியத்துவ படுத்துகிறது.
காந்தி தொடங்கிய ஹரிஜன சேவா சங்கமும் அம்பேத்கரின் பெடரேஷனும் எதிர் நிலைப்பாடுகளை எடுத்த தருணங்களும் உள்ளன, அது போலவே தேர்தல் சமயத்தில் அரிஜன சேவா சங்கம் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்தது, முதுகளத்தூர் கலவரம் வரையிலும் ஹரிஜன சேவா சங்கத்தின் தாக்கம் இருந்ததை அறியமுடிகிறது. AISCF பின்னாட்களில் குடிஅரசு கட்சிக்கு வேர் போல் அமைந்தது. இந்த இரு இயக்கங்களில் பங்காற்றிய ஆளுமைகளும் வாசிப்புக்கு புதியவர்கள்.
அழகிய பெரியவனின் "வில்லிசை" என்ற நாவல் பற்றிய கட்டுரை தலித் இயக்க முன்னோடிகள் பற்றிய வரலாறு புனைவில் எப்படி இடம்பெறுகிறது என்பதாக இருந்தது, இந்த நாவலை வாசிக்கவேண்டும் என்ற ஆர்வத்தையும் இக்கட்டுரை தூண்டுகிறது.
மதுரை பிள்ளை பற்றிய கட்டுரை இந்த தொகுப்பிலேயே சிறந்த கட்டுரை என்பேன், இதுவரை தலித்துகள் மீதிருந்த பொதுபுத்தியை இக்கட்டுரையில் இடம்பெறும் செய்தி மீளாய்வுக்குட்படுத்துகிறது. மதுரை பிள்ளையின் செயல்பாடுகள் எல்லாம் வியப்பளிக்கக்கூடியவை. தலித் என்றாலே நலிந்தவர் என்றிருக்கும் பார்வையை இக்கட்டுரை புரட்டிபோடுகிறது. மதுரை பிள்ளை ஒரு வள்ளல் போல் செயல்பட்டார். சென்னையில் பிறந்து ரங்கூனுக்கு சென்று செல்வம் சேர்த்து ஆங்கிலேயர்கள் கட்டுரை பட்டங்கள் எல்லாம் சேர்த்து, துபாஷியாக செயல்பட்டு, லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராக இருந்து , வணிக தேவைக்காக கப்பல் ஒன்றையும் வாங்கி, அதை தொடர்ந்து பரோடா மன்னருடனான சந்திப்பு, ரோம் நகரத்தில் போப்பாண்டவருடனான சந்திப்பு என ஒரு சாகசமான வாழ்க்கையை இவர் வாழ்ந்துள்ளார். பிள்ளை என்ற பின்னொட்டு அன்றைக்கு தலித்துகளின் பெயர்களுக்கும் பின்னும் இடம்பெற்றிருந்தது என்ற செய்தி சாதியின் சிக்கலான தன்மைக்கு ஒரு சான்று. இவர் மறைந்தபோது வெளிவந்த இரங்கல் குறிப்புக்கள் இவர் மீதான மதிப்பை இன்னுமின்னும் அதிகரிக்கிறது.
1963 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற "washington march " என்ற Blacks இயக்கத்தின் மூலம் உத்வேகம் பெற்று, 1980 களில் இந்திய குடிஅரசு கட்சி தலித்துகள் மீதான வன்முறைகளுக்கு எதிராக மேற்கொண்ட 'march to madras ' என்ற பேரணிக்குறித்தும் அதை சுற்றி நடந்த அரசியல் நிகழ்வுகள் குறித்தும் இக்கட்டுரை பேசுகிறது. Blacks Movement மற்றும் Dalit movement இடையில் இருந்த ஒற்றுமை கூறுகளை இந்த கட்டுரையில் பார்க்கமுடிகிறது.
பசவலிங்கப்பாவின் கன்னட இலக்கிய மற்றும் சாதி எதிர்ப்பு செயல்பாடுகள் பற்றிய கட்டுரையும் பல புதிய செய்திகளை கொண்டே இருந்தது. ஒடுக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளும் அதற்கு எதிரான செயல்பாடுகளையும் இக்கட்டுரை பேசுகிறது. தமிழ் தலித் இலக்கியங்களின் முன்னோடிகளாக மராத்திய மற்றும் கன்னட இலக்கியங்களை சுட்டிக்காட்டி அதில் கன்னட இலக்கியை செயல்பாடுகளை நமக்கு காட்சிப்படுத்துகிறது.
2017 - 2022 ஆண்டுகளில் மறைந்த முக்கியமான அதே சமயத்தில் பெரிய ஊடக வெளிச்சம் பெறாத தலித் ஆளுமைகளாக அ. சேப்பன், வை.பாலசுந்தரம், ஆ.சக்திதாசன், தலித் ஞானசேகரன் போன்றவர்கள் பற்றிய குறிப்பும் இந்நூலில் இடம்பெற்றிருக்கிறது. தலித் சுப்பையா பற்றிய கட்டுரை அவரது பாடல்களை அறிமுகப்படுத்தும் வகையிலும் முக்கியமான ஒன்றாக மிளிர்ந்தது.
இரண்டு நூல்களும் தலித் வரலாற்றியலின் புதிய பக்கங்களை நமக்கு திறந்துவிட்டுள்ளது, இதுவரை வரலாற்றில் கேள்விப்படாத அல்லது பேசப்படாமல் விடுபட்ட தகவல்களை இக்கட்டுரைகள் நமக்களிக்கின்றன.
மொழி என்பதே அதிகாரத்தை உள்ளடக்கிய ஒன்று தான், அந்த மொழியை கொண்டு எழுதப்படும் வரலாற்றிலும் இந்த அதிகாரம் ஆளும் சாதி /வர்க்க சார்பு கொண்ட ஒன்றாகவே இருக்கிறது. இதன் மூலம் பல அறியப்படாத வரலாற்று நிகழ்வுகள் நமக்கு கிடைக்காமலே மறைந்துபோய் விடுகின்றன.
இது போன்ற நூல்கள் அப்படி மறைந்த வரலாறுகளை மீட்டெடுக்கிறது. சாதி எதிர்ப்பு என்ற தளத்தில் தலித் முன்னோடிகளின் செயல்பாடுகள் ஊக்கமூட்டும் தன்மை கொண்டவை.
அந்த வகையில் இவ்விரு நூல்களும் முக்கியமானவை, பல புதிய திறப்புகளை தமிழ் வரலாற்றாய்வில் ஏற்படுத்துபவை.
தமிழ்நாட்டு வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் வாசிக்கவேண்டிய நூல்கள் இவை.
வாழ்த்துகளும் அன்பும் Stalin Rajangam
Comments
Post a Comment