ஒரு ஆய்வாளருடனான சந்திப்பு!


 


“கள், காமம், காதல் இவற்றைவிடவும் போதை தருவது கருத்து. கருத்துகள் தரும் போதை அலாதியானது; முடிவற்றது” - ஆ.இரா.வேங்கடாசலபதி


திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியைப்பிடித்த ஆண்டான 1967இல் பிறந்தவர் ஆ.இரா.வேங்கடாசலபதி. சமகால தமிழ் ஆய்வு சூழலில் முக்கிய ஆளுமைகளை பட்டியலிட்டால் முதல் ஐந்து இடங்களில் சலபதி இடம்பெறுவார்.

குடியாத்தத்தில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். 9 ஆம் வகுப்புவரை CBSE பள்ளியில் படித்தவர், அம்மாவின் அழுகைக்கும் அடிபணியாமல் பிடிவாதமாக கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் அரசினர் மேல் நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். என் தலைமுறையில் எத்தனை பேருக்கு பாரதியையும் பாரதிதாசனையும் படித்துவிட்டு இந்த ஆர்வம் ஏற்படும் என்று தெரியவில்லை. 17 வயதில் வ.உ.சி. கடிதங்களைத் தொகுத்து புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறார். (என் 17 வயதை நினைத்து வருந்தி கொள்கிறேன்).

1994 இல் திராவிட இயக்கமும் வேளாளரும் நூலை எழுதி வெளியிட்ட போது அவருக்கு 27 வயது, அந்நூலை இன்றைக்கு படிப்பவர்கள் இத்தனை இளம்வயது ஆய்வாளனா இதை எழுதினான் என்று வியப்பார்கள். அந்நூல் ‘முகம்’ மாமணிக்கும் த.கோவேந்தனுக்கும் சமர்பிக்கப்பட்டிருக்கும். சலபதியை பெரிதும் கவர்ந்ததில் இவர்கள் முக்கியமாவார்கள்,அவரை கண்டெடுத்தவர்கள் என்று சொன்னால் கூட தகும், அவர்களுக்கு ஒரு வாசகனாக லட்சம் கோடி நன்றி.

தமிழக ஆய்வுலகில் தனக்கான இடத்தை அவர் சுயமாக உருவாக்கிக்கொண்டார், ‘பானை ஓட்டையானாலும் கொழுக்கட்டை வெந்துவிட்டது’ என்ற பழமொழியை அவரை பற்றிய சுயமதிப்பீடாக சலபதி சொல்லுவார். ஓட்டைப்பானையை மட்டும் வைத்துக்கொண்டிருக்கும் நான் அவ்வப்போது இந்த பழமொழியை நினைத்து என்னை நானே தேற்றிக்கொள்வேன்.

எழுதியவை, பதிப்பித்தவை, மொழிபெயர்ப்பு, ஆங்கில புத்தகங்கள் என மொத்தம் அவர் பெயரில் 46 படைப்புகள் அடங்கும். (சமீபத்தில் வெளியாகி இருக்கும் The Brief History of a Very Big Book: The Making of the Tamil Encyclopaedia வரை ). புதுமைப்பித்தன், பாரதி, வ.உ.சி, உட்பட பல தமிழ்சமூக ஆளுமைகளை முழுமை சித்திரங்களாக மாற்றி இருக்கிறார். ஆங்கிலத்திலும் தமிழ் சமூகம் பற்றி பல கட்டுரைகளை எழுதி இருக்கிறார். அந்த கட்டுரைகளின் அடர்த்தியும் மொழி வளமும் அபாரமானவை.

சலபதி JNU வில் இருந்தபோது Phd ஆய்வை முடித்ததும், ‘‘என்ன செய்யப் போகிற’’ என்று பணிக்கர் கேட்க. ‘‘தமிழ்நாட்டுக்குப் போகிறேன்’’ என்று சொல்லி இருக்கிறார். ‘‘வௌங்கமாட்ட. அங்கே வரலாற்று ஆய்வுகளே இல்லை’’ என்றாராம் பணிக்கர் . ‘‘அப்ப, அங்கதான நான் போகவேண்டும்’’ என்று சொன்னவர் சலபதி. இப்போது சலபதி எட்டி இருக்கும் உயரத்தை பார்த்தால் இந்த நிகழ்வை அவர் வாழ்க்கையின் Heroic moment என்றே குறிப்பிடலாம்.

கடின உழைப்பு, தொடர்ச்சியான வாசிப்பும் தேடலும், எழுத்தின் மீதான தீரா பிரியமும் இதை சாத்தியப்படுத்தி இருக்கிறது. என்னை பொறுத்தவரை இது Tip of the iceberg தான். எப்படி காந்தி என்றதும் ராமச்சந்திர குஹா வின் பெயர் தவிர்க்கமுடியாத ஒன்றாக உள்ளதோ, எதிர்காலத்தில் பெரியாருக்கு சலபதி அத்தகைய ஒரு Biographerஆக மிளிர்வார் என்பது என் திடமான நம்பிக்கை. தாயின் வருகைக்கு காத்திருக்கும் பசித்த குழந்தை போல் இந்த நூலின் வருகைக்கு நானும் காத்துக்கொண்டிருக்கிறேன்.

புறம் முடிந்தது அகத்துக்கு வருவோம்.

புதுமைப்பித்தன் பிறந்தநாள் அன்று சலபதியை நேரில் சந்தித்தேன், காதலியை முதல்முறை சந்திக்கப்போகும் போது இருக்கும் அதே பதற்றம். புத்தகங்கள் நிறைந்த அறையின் ஒரு மூலையில் அமர்ந்து கணினி திரையில் படித்துக்கொண்டிருந்தார். Nietzsche வின் Beyond Good and Evil நூலை அன்பளிப்பாக கொடுத்தேன், penguin edition இருக்கிறது என்று கூறினார். இருந்தும் அவரிடம் அந்நூலை ஒப்படைத்தேன்.

குடும்ப புராணத்தை கொஞ்சம் நேரம் நான் நிகழ்த்தினேன். அவரிடம் கேட்க விரும்பிய கேள்விகளை கேட்டேன். பதிலளிக்க விடாமல் குறுக்கிட்டு கேள்விகளாக கேட்டுக்கொண்டே இருந்தேன். பூவில் தேனெடுக்கும் தேனீயின் மனநிலை அப்போது எனக்கு வாய்த்திருந்தது.

வாசிப்பை பற்றி கேட்டார், பாராட்டவும் செய்தார். மொழி பயிற்சியின் அவசியத்தை பற்றி சொன்னார். தமிழுக்கு அந்த அறிவுரையை கடைபிடித்து வருகிறன, ஆங்கிலத்துக்கு முயன்று கொண்டிருக்கிறேன்.

“ஆஷ் அடிச்சுவட்டில்” என்ற நூலை அவரிடமளித்து கையெழுத்திட்டு தரும்படி கேட்டேன் "தனிமை கண்டதுண்டு அதில் சாரம் இருக்குதம்மா " என்ற வரிகளை எழுதி கையெழுத்திட்டு கொடுத்தார், இன்றுவரை பலமுறை அந்நூலை எடுத்துப்பார்த்து கொள்வதுண்டு. அவருடன் கழித்த அந்த நேரம் கனவு போல் இருந்தது. நீண்ட நாட்களுக்கு பின் அன்று டைரி குறிப்பை எழுதி இருந்தேன்.

வாசிப்பின் மூலம் மட்டும் ஆர்வம் ஏற்பட்டு, நான் சந்திக்கவேண்டும் என்று நினைத்து சந்தித்த முதல் ஆளுமை சலபதி . அந்தவகையில் அது என்றைக்கும் மறக்கமுடியாத நிகழ்வு. சலபதிக்கு முகம் மாமணியை சந்தித்த நிகழ்வு எப்படி ஒரு திருப்புமுனையாக அமைந்ததோ எனக்கு சலபதியுடனான சந்திப்பு அமைந்தது. (என் எதிர்காலம் இதை மெய்ப்பிக்கட்டும்.)

இரண்டாம் சந்திப்பு இதைவிட அதிக கேள்விகளுடனும் குறைவான நேரத்துடனும் நிறைய புத்தகங்களுடனும் நடந்தேறியது. முதல் சந்திப்பில் கிடைத்த காபி குடிக்கும் நேரம் கூட இரண்டாம் சந்திப்பில் வாய்க்கவில்லை. அன்று தமிழ்நாட்டுக்கு பிறந்தநாள். (அண்ணா பெயர்வைத்த நாள்)

பிடித்தவர்களுக்கு கடிதம் எழுதுவது வழக்கம் என்பதால் இரண்டு சந்திப்பிலும் கவனமாக எழுதியும் பிழை நிறைந்த கடிதங்களை அவரிடம் கொடுத்திருந்தேன். கூச்சத்தின் காரணமாக நான் சென்றவுடன் படிக்குமாறு வேண்டிக்கொள்வேன்.

நேரம் தவறாமை அவரிடம் பிடித்த பண்பு. ஏதாவது கூட்டம், பேசவேண்டும் என்றால் எவ்வளவு நேரம் பேசவேண்டும் என்று முன்கூட்டியே கேட்டுவிடுவார். மைக் அருகே சென்றதும் கையில் இருக்கும் கைகடிகாரத்தை கழற்றி மேஜை மீது வைத்துக்கொள்வார். இப்படி கச்சிதமாக அவரது பேச்சு இருக்கும். பேச்சு முடிந்ததும் கைகடிகாரம் , மீண்டும் கைக்கே வந்துவிடும். 10 நிமிடம் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு மணிக்கணக்கில் உரையாற்றுபவரல்ல.

அவரை சந்தித்த பிறகு என் வாசிப்பு விரிவடைந்திருக்கிறது, தமிழ் நூல்களின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது, நிறைய எழுதி இருக்கிறேன்(ஆக்கபூர்வமாக) , நிறைய தேடி இருக்கிறேன், பார்வையில் தெளிவு பிறந்துகொண்டிருக்கிறது, பக்குவப்பட்டிருக்கிறேன்.

2022இல் எனக்கு நடந்த நல்ல விஷயம் சலபதி.

அவருக்கு இன்று பிறந்தநாள்.

பிறந்தநாள் வாழ்த்துகள் சலபதி.
A.r. Venkatachalapathy


P.S: முதல் சந்திப்பின் போது எடுத்த படம், ஒரு ஆய்வாளரை முதல்முறை சந்திக்க சென்றதால் அப்போது எனக்கு பிரெஞ்சு தாடி வளர்ந்துகொண்டிருந்தது. 😅

Comments