The rule of sudhra had begun


   


அண்ணா 1967இல் முதலமைச்சராகிய தருணத்தை , A.N.சட்டநாதன் இப்படி குறிப்பிடுகிறார் "The rule of sudhra had begun". சூத்திரன் அரசாள கூடாது என்று சொன்ன வாய்கள் எல்லாம் அன்றைக்கு மூடி கொண்டது. சூத்திரன் அரசாளும் போராட்டத்தை தொடங்கி-முடித்து வைத்தவர் அண்ணா.

அப்படிப்பட்ட அண்ணாவின் ஆளுமையை நம் தமிழ்ச் சமூகம் முழுமையாக உணரவில்லை. அவர் வாழ்ந்த காலத்தில் அண்ணாவின் செயல்பாடுகளை மதிப்பிட்டால் அவருக்கு இணையாக செயல்பட்ட அரசியல் தலைவர் எவருமில்லை. அண்ணாவின் மறைவுக்கு பின் இந்த இடத்தை கலைஞர் மிக கச்சிதமாக நிரப்பினார்.
கட்சி - சட்டமன்றம் - மாநிலங்களவை என அவரது பரந்துபட்ட அரசியல் செயல்பாடு ஒரு பக்கம் இருக்க. சினிமா- எழுத்து - பத்திரிக்கை- இலக்கியம் போன்ற தனி துறை செயல்பாடுகள் ஒரு பக்கம். மேடை பேச்சு தனி ரகம்.
திராவிட இயக்க பேச்சு என்ற ஒன்றை நேர்த்தியாக கட்டமைத்ததில் அண்ணாவின் பங்கு முக்கியமானது. அந்த அடுக்கு மொழி செந்தமிழ் அதுவரை மேடையில் புழங்கி வந்த வட்டார கொச்சை தமிழ் வழக்குகளை தூக்கி தூர வீசி பொது மேடைகளை சாதி நீக்கம் செய்தது.
இதற்கடுத்து தான் ஆட்சி அதிகாரத்தில் இருந்த இரெண்டாண்டுகளில் அவர் செய்த சாதனைகள் அனைத்தும்.
பெரிய அரசியல் பின்புலம் இல்லாத குடும்பம், படிக்க கஷ்டப்படும் நிலையில் தான் அவர் குடும்பத்தின் பொருளாதார சூழலும் இருந்துள்ளது. செங்குந்த முதலியார் சாதி சங்க மாநாட்டில் பெரியாரை முதல் முறை சந்தித்து அதன் பின் நெருங்கிய தொடர்பு ஏற்படுகிறது. பின்னர் நீதி கட்சியின் பொது செயலாளர். திராவிடர் கழக உருவாக்கத்தில் முக்கிய பங்கு. பெரியாரிடமிருந்து பிரிவு. இளம் தொண்டர் படையை கொண்ட திமுக உருவாக்கம். தேர்தல் அறிக்கை என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது. தேர்தல் அரசியலில் பங்கேற்க ஜனநாயக ரீதியாக எடுத்த முடிவு. இடையில் பல போராட்டங்கள். ஒத்துழைக்காத உடல்நிலை. ஆட்சி அதிகாரம். மறைவு. என சுருக்கமாக அண்ணாவின் அரசியல் வாழ்க்கையை விரித்து கொள்ளலாம். இதில் ஓவ்வொரு காலகட்டமும் முக்கியமானவை. கொஞ்சம் பிசகி இருந்தாலும் ஒரு ஒடுக்கப்பட்ட தேசிய இனமாக தமிழ்ச்சமூகம் மாறி இருக்கும்.
அண்ணாவின் இருமொழி புலமையை பற்றி தனியாக குறிப்பிட வேண்டும். தமிழுக்கு நிகரான ஆங்கில புலமையை அவர் கொண்டிருந்தார். அண்ணாவின் Homeland இதழில் வெளியான கட்டுரைகள் மற்றும் மாநிலங்களவை உரைகளை படித்து பார்த்தல் இந்த கூற்று மெய்ப்படும். அத்தகைய இரு மொழி புலமையை திராவிட இயக்கத்தவர்கள் உருவாக்கி கொள்ள வேண்டும்.
அண்ணாவின் பிறந்தநாளில் அவரது பன்முக ஆளுமையை வியப்பது மட்டுமல்லாமல், நாமும் அத்தகைய நிபுணத்துவத்தை பெறுவதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும்.
நமக்கான முன்னோடி/Inspiration என்று கருதிக்கொள்ள வெகு சில ஆளுமைகளே தமிழ்நாட்டு அரசியல் சூழலில் இருக்கிறார்கள், அவர்களது குடும்ப பின்னணியை நம்முடைய குடும்ப சூழலோடு எளிதாக ஒப்பிட்டுவிட முடியும்.
அண்ணா அதில் முதன்மையானவர். அவரிடம் இருந்து பெற்றுக்கொள்ள என்ன தான் இல்லை? அண்ணாவின் பிறந்தநாளில் இத்தகைய ஒரு பார்வையை ஏற்படுத்தி கொள்வது முக்கியமான ஒன்றாக நான் கருதுகிறேன்.
அண்ணா வாழ்க.

Comments