AMBEDKAR A LIFE - நூல் அறிமுகம்

 



Life should be great rather than long - Dr. B.R. Ambedkar 


நிகழ்காலத்தை பொறுத்தே, கடந்த காலம் பற்றிய சிந்தனை அணுகப்படுகிறது. இச்சிந்தனை அனைத்து துறைகளிலும் தாக்கம் செலுத்துகிறது. நிகழ்கால சம்பவங்களுக்கேற்ப கடந்தகால வரலாறுகள் மீள்வாசிப்புக்கு உள்ளாகின்றன. 1990 களுக்கு பின் அம்பேத்கர் பற்றிய ஆய்வும் , அவரது சிந்தனைகள் பரிணமித்த விதமும் வியப்பை ஏற்படுத்துபவை.


 இடதுசாரிகள் முதல்  வலதுசாரிகள் வரை அனைவராலும் சொந்தம் கொண்டாடப்படும் ஒருவராக சமகாலத்தில் அம்பேத்கர் திகழ்கிறார். அவரது கருத்துக்கள் மீது எந்த அக்கறையும் செலுத்தாமல் வெறும் பிம்பமாக அம்பேத்கரை தங்களவராக காட்டிக்கொள்ளும் போக்கு சில தரப்பினரிடம் வெளிப்படுகிறது. 


இந்நிலையில் அம்பேத்கரின் வாழ்கை வரலாற்று நூல் ஒன்றை சசி தரூர் எழுதி இருக்கிறார், அம்பேத்கரின் வாழ்க்கை(Life) பற்றி முதல் பகுதியும் அவர் விட்டு சென்ற மரபை(Legacy) பற்றி இரண்டாம் பகுதியும் பேசுகிறது. அம்பேத்கரை தொடர்ந்து வாசிக்கும் ஒருவருக்கு இந்நூல் திருப்தி அளிக்குமா? என்ற கேள்வி நூலை வாசித்து முடித்த சமயத்தில் தோன்றியது. 


அம்பேத்கரின் வாழ்க்கையை ஐந்து  பாகங்களாக பிரித்துக்கொள்கிறார் நூலாசிரியர், பிறப்பிலிருந்து 1923 வரை முதல் பாகமாகவும், 1923 முதல் மகத் சத்யாகிரஹம் நாசிக் மாநாடு என்பவை இரண்டாம் பாகமாகவும், வட்டமேசை மாநாடுகள் மூன்றாம் பாகமாகவும், இரண்டு அரசியல் காட்சிகளை(ILP, SCF) தோற்றுவித்த காலத்தை நான்காம் பாகமாகவும், அரசியலமைப்பு சட்ட வரைவு குழு தலைவர் முதல் இறப்பு வரையிலான பகுதிகள் ஐந்தாம் பாகமாகவும் இடம்பெற்றிருக்கிறது. 


அம்பேத்கர் வாழ்க்கை பற்றி மேலோட்டமான தகவல்களை மட்டுமே இந்நூல் கொண்டிருக்கிறது, முடிந்தளவுக்கு அனைத்து நிகழ்வுகளையும் தொட்டு காட்டி அதன் மூலம் தேடலை விரித்துக்கொள்ளும் பாங்கில் இந்நூல் அமைந்திருக்கிறது. அடிக்குறிப்புகளும், நூல் பட்டியலும் எதிர்கால அம்பேத்கர் ஆய்வாளர்களுக்கு துணைசெய்யும் வகையில் இருப்பதை உணரமுடிகிறது.  2022 வரை வெளியான அம்பேத்கர் பற்றிய அனைத்து முக்கியமான புத்தகங்கள் பற்றிய குறிப்புகளும் இதில் அடங்கும். 


 65 வயது வரை வாழ்ந்த அறிஞர் ஒருவரின் வாழ்க்கையை 250 பக்கத்தில் சுருங்குவது கடினம் தான், பல தகவல்களை ஆழமாகச்  சொல்ல முடியாது. ஆனால் 250 பக்கங்களை வாசிக்கும் தலைமுறை கூட இங்கு குறைந்து வரும் காலகட்டத்தில் வெகுஜன வாசிப்புக்காக இப்படி ஒரு நூல் வந்திருப்பது மகிழ்ச்சி. 


சினிமாக்காரர் திலிப் குமாருக்கும் அம்பேத்கருக்குமிடையே இருந்த உறவை எழுதும் சசி தரூருக்கு ஏனோ, அம்பேத்கர் - பெரியார் இடையே நடந்த முக்கியமா சந்திப்பை(Burma, 1954) பதிவு செய்ய மனம் வரவில்லை. இந்த காங்கிரஸ் காரர்களுக்கு பிராந்தியங்களை, பிராந்திய தலைவர்களை மையமாக வைத்து எழுதும் வரலாறு இன்னும் வாய்க்கவில்லை போலும். சசி தரூர், தென் இந்தியாவை சேர்ந்த ஒருவராக இருந்த போதிலும், இந்த சந்திப்பு பற்றியும் பெரியார் - அம்பேத்கர் இடையே நிலவிய கொள்கை உறவு பற்றியும் எந்த தகவலும் இடம்பெறவில்லை. ஒரு தென் இந்தியனாக இது எனக்கு மாபெரும் குறையாக படுகிறது. 


இந்நூல் அம்பேத்கரின்  நிறைகளை மட்டும் சுட்டும் ஒன்றல்ல விமர்சனங்களையும் கொண்டிருக்கும் ஒன்று தான் என்று சொல்லிவிட்டு, நான்கு குறைகளை பட்டியலிடுகிறார் சசி தரூர். அவை 


1.ஆதிவாசிகள் பற்றி அம்பேத்கர் கொண்டிருந்த கருத்து

2.ஹிந்துக்களையும் ஹிந்து மதத்தையும் அவர் விமர்சித்த விதம் 

3.காந்தியிடம் அவர் கொண்டிருந்த தீராத முரண்பாடு 

4.மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தின் மீது அவர் கொண்டிருந்த ஈடுபாடு 


என்னை பொறுத்தளவில் முதல் மற்றும் நான்காம் விமர்சனம் ஒரு அளவுக்கு ஏற்புடைய ஒன்றாகும்,  அதுவும் நான்காவது விமர்சனத்திற்கு பதில் சொல்ல அம்பேத்கரியர்களிடம் நியாயமான வாதமே உள்ளது. இரண்டு மற்றும் மூன்றாம் விமர்சனம் சசி தரூர் கொண்டிருக்கும் நம்பிக்கையின் காரணமாக எழும் ஒன்று. அது தனிநபரது கருத்தியல் சார்ந்தது.  ஒரு தலித்தாகவோ அல்லது விளிம்புநிலை பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவராகவோ இருக்கும்பட்சத்தில் இதை ஒரு விமர்சனமாக மனம் ஏற்காது. 


நூலின் இறுதியில் இடம்பெற்றிருக்கும், CODA பகுதி அம்பேத்கரின் வாழ்க்கை பற்றியும் அவரது சிந்தனை மரபு பற்றியும்  சுருக்கமாக சொல்லி செல்கிறது. சமகாலத்தில் அம்பேத்கரை மீதான பார்வை எப்படி இருக்கிறது என்பதையும் ஒரு பகுதி சொல்கிறது. 


அம்பேத்கர் பற்றி வாசிக்கும் ஒரு ஆரம்பகட்ட வாசகருக்கு இந்நூலை பரிந்துரைக்கலாம், விமர்சனம் கலந்த பார்வையோடு இந்நூலை அணுகுவது உகந்தது. ஆய்வாளர்கள் புத்தக பட்டியலை பயன்படுத்தி கொள்ளலாம், தரமாக இருக்கிறது. நூலை படித்துவிட்டு டாக்டர் அம்பேத்கர் குறித்து  தேட தொடங்க வேண்டும். 


இதுவே இந்நூல் கூறும் மறைமுக  செய்தி. 




Comments