ஆர்ப்பாட்டத்தின் அசைவுகள்




ஒரு முதுகலை அரசியல் அறிவியல் மாணவனாக, தமிழ்நாட்டில் நடந்த, நடந்து கொண்டிருக்கிற அரசியல் இயக்கங்களை பற்றி வாசிப்பதையும் எழுதி பார்ப்பதையும் ஒரு பயிற்சி என்றே நான் கருதுகிறேன்.
அந்த வகையில், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு பின் இந்தி திணிப்பு என்ற சொல்லாடல் மீண்டும் இந்திய அரசியல் அரங்கில் பரவலான வெளிச்சத்தை பெற்றுள்ளது. இடையில் சிறிதும் பெரிதுமாக எதிர்ப்புகள் நடந்திருந்தாலும் தற்போது எழுந்திருக்கும் இந்த கோரிக்கை என்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது.
வள்ளுவர் கோட்டத்தில் இருக்கும் அண்ணா சிலைக்கு பின்பகுதியில் மேடைஅமைக்கப்பட்டு திமுக மாணவரணி மற்றும் இளைஞரணி ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில்" கையில் நோட்டு போனவுடன் ஒரு பார்வையாளனாக கலந்துகொண்டேன். அண்ணா சிலை நிழலில் அடைக்கலமானேன்.
அங்கு நடந்த சில அரசியல் செயல்பாடுகளை , அசைவுகளை, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட விதத்தை பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன் .
ஆர்ப்பாட்டம் இளைஞரணி மற்றும் மாணவரணி நடத்துவதால், கரைவேட்டிகள் குறைவாகவும் கால்சட்டைகள்(pants) அதிகமாகவும் தென்பட்டன. சென்னை வடக்கு-மேற்கு- கிழக்கு-மத்திய- தெற்கு என மாவட்ட செயலாளர்களும், தொண்டர்களும், சென்னை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் நிகழ்வில் பங்கேற்றிருந்தார்கள். பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. தமிழ்நாட்டில் மாறிவரும் பொருளாதார நிலைமைகளை அப்போராட்டம் பிரதிபலித்தது எனலாம்.
அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களில், இருந்த வாசகங்களும் எழுப்பப்பட்ட முழக்கங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக,
“இந்தி திணிப்பை ஏற்கமாட்டோம்! எங்கள் தாயை இழக்கமாட்டோம்! “
“இந்திமொழி வேண்டுமா? இந்தியா வேண்டுமா?”
“இந்தியாவை துண்டாடும் RSSன் சித்தாந்தம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் ! “
“இந்திக்கு தாய் பாலா!
மற்ற மொழிக்கு கள்ளி பாலா!”
“கல்வி கொள்கை மற்றும் இந்தி திணிப்பை அனுமதியோம்!”
“உணர்வு மிக்க தமிழுக்காக உயிரையும் கொடுப்போம்! “
இது போன்ற பல வாசகங்களும், முழக்கங்களும் ஆர்ப்பாட்டம் முழுமைக்கும் நிறைந்திருந்தது.
தொண்டர்கள் நிற்கும் இடத்திற்கும் மேடைக்குமான இடைவெளியும் உயரமும் குறைவாகவே இருந்தது. அரசியல் ரீதியாக கவனிக்கப்படவேண்டிய ஒரு செயல்பாடு இது. அதை போலவே மக்களுடன் மிக எளிதாக பிணைத்துக்கொள்ளும் ஒரு தொனியில் உதயநிதியும் பேசினார்.
மற்ற கழக உறுப்பினர்களை காட்டிலும், அவரது பேச்சில் செந்தமிழ் நடை குறைவாகவே இருந்தது, ஆனால் அவரது பேச்சுக்கு கிடைத்த வரவேற்பு பிறர் பேசும்போது கிடைக்காதது போல் இருந்தது. அரசியல் வெளியில் பேசப்படும் மேடை தமிழில் நடந்திருக்கும் பெரும் மாற்றம் என்று இதை குறிப்பிடலாம்.
தயாநிதி மாறன், தாயகம் கவி, சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் பேச்சும் எழுச்சி நிறைந்த ஒன்றாக இருந்தது, மெட்ராஸ் IITல் இந்தியை திணிக்க "அவா விடமாட்டா" என்று தயாநிதி மாறன் சொல்லியபோது சிரிப்பொலிகள் எழுந்து அடங்கின.
கட்சி சார்ந்த ஆர்ப்பாட்டம் என்பதால் தலைமைக்கான கோஷங்கள் அதிகமாகவும், கருத்தியல் சார்ந்த கோஷங்கள் குறைவாகவும் இருப்பதை பார்க்கமுடிந்தது. இது போராட்டமாக மாறும்போது இத்தன்மை மாற்றமடையும், கருத்தியலுக்கான முக்கியத்துவம் அதிகமாகவும் தலைமைக்கான முக்கியத்துவம் குறைவாகவும் இருக்கும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் குறைபாடாக நான் பார்ப்பது, கலைஞர் போன்ற பேச்சாளர்களின் இல்லாமையை தான். சீமான் பேச்சில் வெறும் உணர்வு மட்டும் தான் இருக்கும், கலைஞர் பேசும்போது அறிவு கூடுதலாகவும் உணர்வு குறைவாகவுமே இருக்கும். சில சமயம் இரண்டும் சமஅளவில் இருக்கும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இரண்டுமே குறைவாக இருந்ததாக தான் தோன்றியது. இந்த குறைபாடு பெரும் சிக்கலை உருவாக்கவல்லது, விரைவில் இதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது என் பரிந்துரை.
இந்த ஆர்ப்பாட்டம் இந்தி திணிப்புக்காக மட்டும் நடத்தப்பட்ட ஒன்றல்ல, அதிகார குவிப்புக்கும், ஒற்றைமயப்படுத்தலுக்கும் சேர்த்து நடத்தப்பட்ட போராட்டமாக தான் தெரிந்தது. கல்விக்கும், அதிகாரக்குவிப்புக்கு எதிராகவும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை விட மொழி உணர்வுக்கும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் அதிகளவில் முக்கியத்துவம் இருந்தது.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஒலிக்கப்பட்ட நாகூர் ஹனிபாவின் பாடல்கள் மயிர் சிலிர்ப்பை ஏற்படுத்தின, அதற்கு முன்பு வரை சிலிர்க்காத மயிர் அப்போது சிலிர்த்ததே இந்த ஆர்ப்பாட்டத்தின் தன்மைக்கு ஒரு சான்று. எழுச்சி இருந்தது, அது உணர்வெழுச்சியாக இல்லை என்பதே இதன் அர்த்தம். ஆனால் இவை எல்லாம் தீர்வுகளை கொண்ட சிக்கல்கள் தான்.
ஆரம்பகட்ட எதிர்ப்பை பதிவுசெய்வதில் இது ஒரு வெற்றி ஆர்ப்பாட்டம் என்பதில் இரண்டு கருத்தில்லை, ஆனால் கருத்தியல் ரீதியாக மேலும் மேம்பட்ட ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் தான் 2024 தேர்தலில் மக்களை சென்றடைய உதவும்.

Comments