சேஷாத்திரிகளும் நாராயணன்களும் சுப்ரமணியன்களும் கண்ணையன்களும்
இயல்பாகவே தமிழ்நாட்டில் இருக்கும் பாப்பனர்களுக்கும் மேட்டுகுடிகளுக்கும் திராவிட இயக்கத்தின் மீதான ஒவ்வாமை இருக்கிறது. அந்த வெறுப்பும் ஒவ்வாமையும், அதிகார இழப்பின் மூலம் ஏற்பட்ட ஒன்று.
திராவிட இயக்கம் நீதிக்கட்சிக்கு முன்பிருந்தே ஆன்மீக, சமூக மற்றும் அரசியல் அதிகாரத்திற்கு எதிராகவும், அத்தகையக அதிகாரங்களை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும் செயல்பட்டு வந்தது. இது அனைத்து தளங்களிலும் நடந்தேறியது.
அரசியல் தளத்தில் ஊறி போய் இருந்த சமஸ்க்ருதமயப்பட்ட பார்ப்பனிய அதிகாரத்தை அது தமிழின் துணைகொண்டு அடித்து நொறுக்கியது. இந்த எழுச்சி விளிம்புநிலை மக்களால் முன்னெடுக்கப்பட்டது, நடராசன், தாளமுத்து கீழப்பளுவூர் சின்னச்சாமி ஆகியோரின் உயிர் கொடை இந்த விழிம்புநிலை மக்களின் பங்கேற்பினை தான் நமக்கு சுட்டுகிறது.
திராவிட இயக்கம் முன்னெடுத்த மொழி அரசியல், பற்று என்ற அளவில் தான் இருந்ததே ஒழிய, வெறியாக ஒரு நாளும் இருக்கவில்லை. எம்ஜியாரை மலையாளி என்று சொன்னாலும், எம்ஜியார் தேர்தலில் போட்டி இடவேகூடாது என்று சொல்லவில்லை. ஆனால் இந்துத்துவம் சோனியா காந்தி அம்மையாருக்கு ஏற்படுத்திய நெருக்கடி இவ்விரு இயக்கங்களுக்கு இடையில் நிலவும் வேற்றுமைக்கு ஒரு சான்று. (திராவிட இயக்கத்தையும் இந்துத்துவதையும் ஒப்பிட்டு ஒரு அறிவாளி எழுதி இருந்தார், எனக்கு இவர்களை எல்லாம் நினைத்தால் கலைஞர் சிறுவனின் பூணூலை பார்த்து சிரிக்கும் காட்சி தான் நியாபகம் வருகிறது. )
சேஷாத்திரிகளும், நாராயணன்களும், சுப்ரமணியன்களும், கண்ணையன்களும் இன்றைக்கு கொண்டிருக்கும் திராவிட இயக்க வெறுப்பு அதிகார இழப்பில் மூலம் ஏற்பட்ட விளைவு தான். மக்களிடம் இது போன்று வெறுப்பெல்லாம் இல்லை, அப்படி இருந்திருந்தால் 50 ஆண்டுகள் அரசியல் ஆட்சி தளத்தில் பொருத்தப்பாடோடு இருப்பதே கடினமாகி இருக்கும். இங்குள்ள மேட்டுக்குடிகளுக்கு தான் இந்த சிக்கல் இருக்கிறது.
இவர்கள் தலித்திய தலைமைகளோடு ஏற்படுத்திக்கொள்ளும் கூட்டும் திராவிட இயக்க விமர்சனத்துக்கு ஏதுவாக இருக்கிறது. தலித்துகளுக்கு ஆதரவாக காட்டிக்கொண்டு திராவிட இயக்கத்தின் மீதி மேட்டுக்குடி தனமான விமர்சனங்களை முன்வைப்பதில் இப்பிரிவினர் வல்லவர்கள்.
மொழி போர் பற்றியும் அதன் மூலம் நாம் பெற்ற உரிமை பற்றியும் இவர்கள் கொண்டிருக்கும் பார்வையை , ku klux klan , Afro-அமெரிக்கர்களுக்கு எதிராக கொண்டிருந்த வெறுப்போடு ஒப்பிடலாம். பார்ப்பனர்களுக்கும் மேட்டுக்குடிகளுக்கும் எதிராக செயல்பட அரசியலை தாங்கிக்கொள்ளவும், புரிந்துகொள்ளவும் இவர்களால் முடிவதே இல்லை.
1950கள் முதலே நாடகமும் சினிமாவும் பார்ப்பனர் அல்லாதார் கைகளுக்கு வந்து சேர்ந்ததை பார்ப்பனர்களால் தங்கி கொள்ள இயலவில்லை, வெகுஜன பணப்பை கொண்ட இந்த ஊடகங்கள் சமஸ்கிருத நீக்கத்துக்கு உள்ளானது. இது பெரும்பாலும் அனைத்து தளங்களிலும் வெளிப்பட்டது, அரசியல், பத்திரிகை, மேடை பேச்சு என அனைத்திலும் சமஸ்கிருத நீக்கம் நடைபெற்றது. இதை தனித்தமிழ் இயக்கத்தின் பெயரில் எழுதினாலும் பகுத்தறிவு தன்மையையும் சுயமரியாதை உணர்வையும் தமிழ் மொழி கொண்டிருப்பதற்கு திராவிட இயக்கம் தான் மூல காரணமாகும்.
சமஸ்கிருதத்தில் சுயமரியாதை உணர்வு எதுவும் இல்லை என்பது தான் உண்மை, அதற்கு இந்தி அரசியலும், இந்துத்துவமுமே சாட்சி. அது அதிகாரத்தை செலுத்தும் ஒன்றாக தான் இருந்துள்ளதே தவிர உரிமை கோரும் ஒன்றாக இருந்ததில்லை. வெகுஜன தன்மையை அந்த மொழி கொண்டிருக்கவில்லை.
திராவிட இயக்கத்தால் சுயமரியாதை உணர்வு கொண்ட தமிழர்களுக்கு இந்த மொழியை எல்லாம் படிக்கவேண்டிய அவசியமும் இல்லை, அப்படி படித்தாலும் அது சுயத்தை கேள்விகேட்கும் ஒன்றாகவே இருக்கும். வேலைநிமித்தமாக தேவை என்றால் கற்றுக்கொள்வதில் தமிழருக்கு தயக்கம் எதுவும் இருப்பதில்லை.
தன்னை சாதியற்ற ஒருவராக காட்டிக்கொள்வது பார்ப்பனர்களுக்கு எளிமையான ஒன்று, காரணம் அவர்கள் சாதியின் அதிகார பீடத்தில் இருப்பதால் தான். நான் சாதியற்ற லிபரல், சாதியற்ற கம்யூனிஸ்ட், சாதியற்ற அம்பேத்கரிஸ்ட் என்று மார்தட்டிக்கொள்ளும் பார்ப்பனர்களின் வீடுகளுக்கு சென்றால் உண்மைநிலை புரியும். அவர்கள் முக சுபாவமே வெறுப்பின் வெளிப்பாடாக தான் இருக்கும்.
அண்ணாவை idiot என்று சொன்னவருக்கும், திராவிட இயக்கத்தை இந்துத்துவதோடு ஒப்பிட்டவருக்கும் ஒரு பதில் இருக்கிறது. அது அண்ணாவே சொல்லி சென்ற ஒன்று தான்,
"சிரித்திடு நரியே போற்றி!
ஒட்டுவித்தை கற்றோய் போற்றி!
உயர் அநீதி உணர்வோய் போற்றி!"
போற்றி போற்றி போற்றி!
Comments
Post a Comment