அண்ணா: தமிழ் சமுகத்தை தாழ்வுணர்ச்சியில் இருந்து மீட்டவர்


 


//இந்த பதிவை இப்படி எழுதவேண்டும் என்று நினைத்திருக்கவில்லை, இன்று விடியற் காலைக்கு சற்று முன் விழிப்பு வந்தது, Perumalmurugan எழுதி "அண்ணா உருவாக்கிய முட்டாள் நான்" என்று முடியும் கட்டுரையை வாசித்தேன், அந்த சிறு கட்டுரை ஏற்படுத்திய தாக்கத்தால் இந்த நூல் அறிமுகம் இவ்விதத்தில் அமைந்துள்ளது. இப்போது நீங்கள் அதை படிக்கலாம். //

அண்ணா பற்றி ஆங்கிலத்தில் வெகுஜன வாசிப்புக்காக எழுதியவர்கள் குறைவு என்றே நினைக்கிறேன், அப்படி எழுதியவர்களுள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களே மிகுதி. R . கண்ணன் ஒரு நூலை எழுதி இருக்கிறார். ஆ. இரா. வேங்கடாச்சலபதி தனது Tamil Characters நூலில் ‘C.N. Annadurai: Gentle Persuader’ என்றொரு கட்டுரையை எழுதி இருக்கிறார். பெரியார் குறித்து கட்டுரை(Periyar, 1879-1973 Sniper of Sacred Cows) எழுதிய சுனில் கிலானி, அண்ணாவை பற்றி எழுதியதில்லை. ராமச்சந்திர குஹா சில இடங்களில் குறிப்பிட்டு எழுதி இருக்கிறாரே தவிர தனியாக எந்த கட்டுரையும் எழுதவில்லை. மாநிலங்களவையிலும் மக்களவையிலும் அண்ணாவை மேற்கோளிட்டு பேசுபவர்கள், பேசியவர்கள் பலர். அண்ணா பற்றி வெளியான ‘மாபெரும் தமிழ்க்கனவு’ என்ற நூல் ஆங்கிலத்தில் வெளியாக இருக்கும் செய்தியை அறிந்தேன். வந்தால் மகிழ்வேன்.
கேரளாவை சேர்ந்த பத்திரிகையாளர்,T.J.S George எழுதி வெளியான சமீபத்திய ‘The Dismantling of India: In 35 Portraits’ நூலில் “C.N. Annadurai and M. Karunanidhi: The Rise of Dravida” என்ற கட்டுரை இடம்பெற்றிருந்தது. நான் அறிந்த வரையில் இந்திய தலைவர்களையும் இந்திய ஆளுமைகளையும் பற்றி எழுதிய எவரும் இத்தனை தமிழர்களின் வாழ்க்கையை எழுதியதில்லை. இந்நூலில் இடம்பெற்றிருக்கும் 35 கட்டுரைகளில் 7 கட்டுரைகள் தமிழர்களை பற்றியவை. 20 சதவிகிதம் தமிழர்கள். M.G.R, ஜெயலலிதா, ரஜினிகாந்த், அப்துல் காலம், வீரப்பன், நம்பி நாராயணன் ஆகியோர் பற்றிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றிருக்கிறது. பெரியார், காமராஜர், ராஜாஜி பற்றிய குறிப்புகளும் இதில் அடங்கும். தென் இந்தியாவை சேர்ந்த ஒருவர் எழுதியதால் கூட இப்படியாக இருக்கலாம். நவீன இந்திய வரலாற்றில் தென் இந்தியாவின் மறக்கப்பட்ட வரலாறுகள் மேலெழுந்து வருவதை சமகால நூல்கள் வெளிப்படுத்துகின்றன. (See: Manu.S.Pillai and Kavitha Rao)
T.J.S George, அண்ணாவை பற்றி சிலாகித்து எழுதிய கட்டுரையை தான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அண்ணாவையும் கலைஞரையும் ஒரே கட்டுரையில் எழுதி இருப்பதும் அதற்கு 'திராவிடத்தின் எழுச்சி' என்று துணை தலைப்பிட்டிருப்பதும் பொருந்தி போகும் ஒன்று . தேச கட்டமைப்பில் மொழிகளின் உரிமைக்காக சமர் செய்தவராக அண்ணாவை குறிப்பிடுகிறார் கட்டுரையாளர். அண்ணா இந்தியாவை செதுக்கிய தலைவர்களுள் ஒருவராக நினைவுகூறப்படாமல் போனதற்கு இந்தியாவின் பழமைவாத கதைசொல்லிகளே காரணம் என்கிறார்.
பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய மூவரும் திராவிட இனமக்களின் பண்புகளை செழுமைப்படுத்திய மும்மூர்த்திகள் என்று கூறி, இப்படி ஒரு வாக்கியத்தை பயன்படுத்துகிறார் 'While much of Periyar’s revolutionary thrust came from his emotional commitment to causes he considered dear, Annadurai was driven by his intellectual bend of mind.' மேலும் ‘Anna was a small man, Physically and Socially’ என்று எழுதியதை படித்தபோது, மயிர்சிலிர்த்தது . அவர் எட்டிய உயரத்தை அறிந்த ஒருவர் இந்த வாக்கியத்தை படித்தால் மயிர்சிலிர்ப்பை நிச்சயம் அடக்கமுடியாது.
இந்த சிலிர்ப்புக்கு தனிப்பட்ட காரணங்களும் இல்லாமல் இல்லை. பள்ளிக்காலத்தில் உயரம் குறைவாக தான் இருப்பேன், அதனாலேயே முதல் பெஞ்ச், பள்ளி விழாக்களில் நிற்கவைக்கும்போது முதல் ஆளாகவோ அல்லது அதற்கு அடுத்த ஆளாகவோ நிற்கவைக்க படுவேன். குள்ளம் என்பதால் உருவ கேலியும் மிகுதி. உயரம் ஏற்படுத்திய தாழ்வு மனப்பான்மையை அறிவின் மூலம் தான் கடந்து வர முடிந்தது. நன்றாக படித்ததால், நான் குள்ளம் என்பதை மறந்து, படிக்கிற மாணவன் என்ற பெயர் கிடைத்தது. அதன் பின் 12 வகுப்பு சமயத்தில் உயரமும் அறிவும் வளர்ந்தது. கல்லூரியில் 173 cms ஐ அடைந்தேன். பார்ப்பவர்கள் எல்லாம் 'வளர்ந்துட்ட' என்பார்கள், தாழ்வுணர்வை கடந்துவிட்டதாக தோன்றும். Jeyannathann Karunanithi அண்ணனுடன் ஒருமுறை அண்ணாவின் உயரம் மற்றும் சமூக பின்புலம் பற்றி பேசியது இப்போது நினைவில் வந்து செல்கிறது. ஒரு சராசரி திராவிடனுக்கு(பார்ப்பனரல்லாத தமிழனுக்கு) அண்ணா என்றைக்குமே inspiration தான்.
அண்ணா மூன்று ஆளுமைகளின் தத்துவங்கள் மூலம் கவரப்பட்டார், என்று கூறி லிங்கன் , கரிபால்டி, மாஜினி ஆகியோரை குறிப்பிடுகிறார் ஜார்ஜ். இந்த அவதானிப்பை இதற்கு முன் எங்கும் படித்ததில்லை. மேற்குலக சிந்தனைகளை கற்றுத்தேர்ந்த ஒருவராக அண்ணா இருந்தார் என்று தெரியும், அவர் அதை எளிமைப்படுத்தி தன் தம்பி தங்கைகளுக்கு கடத்த விரும்பினார். இதனாலேயே ‘Annadurai was all substance, all brain, all heart’ என்கிறார் நூலாசிரியர்.
20 ஆம் நூற்றாண்டில் திராவிட-தமிழர் என்ற அடையாளம் உருவானதற்கு அண்ணா என்ற 'அறிஞரும், அரசியல்வாதியும்' தான் காரணம் என்கிறார். கட்டுரையின் முடிவு “Political India was in thrall to Indo-Germanic attitudinising until this unassuming David stood up to the Aryan Goliath. Annadurai should not remain undiscovered by history.” இப்படி அமைந்துள்ளது சால பொருந்தும் ஒன்றாக இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக கலைஞர் பற்றிய கட்டுரையும் இடம்பெற்றிருக்கிறது. கலைஞர் எழுதி புகழ்பெற்ற, 'கோவிலிலே குழப்பம் விளைவித்தேன்…..' என்ற பராசக்தி திரைப்பட வசனம், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு கட்டுரையின் இறுதியில் இடம்பெற்றுள்ளது, அதை தொடர்ந்து கட்டுரையாசிரியர் எழுதுவது ‘We are left wondering those words were written in 1952. They sound so much like life in the 2020s’. ஒரு கட்டுரையை படித்து இத்தகைய மகிழ்ச்சியில் திளைப்பது இது இரண்டாவது முறை, (சலபதி எழுதிய 'அந்த காலத்தில் காபி இல்லை' கட்டுரையை படித்தபோது இப்படிதான் இருந்தது.)

மற்ற 6 தமிழர்கள் பற்றிய கட்டுரையும் முக்கியமானவை, படித்துவிட்டேன். அவற்றை எல்லாம் நூல் அறிமுகம் எழுதும்போது விரிவாக எழுதுகிறேன். இருந்தாலும் சில அவதானிப்புகளை இங்கே குறிப்பிடவிரும்புகிறேன். இதில் உள்ள தமிழர்களில் சிலர் பிறப்பால் வேறு மொழி அடையாளங்களை கொண்டவர்கள். எம்ஜியார், ரஜினிகாந்த் போன்றவர்கள் எல்லாம் இன்றைக்கு தமிழ்நாட்டின் முகங்களாக அறிய படுபவர்கள் . இந்த ஜனநாயக பண்பும் பரந்துபட்ட பார்வையும் தமிழர்களுக்கு மரபாக இருக்கும் ஒன்றா? அல்லது நவீன கால திராவிட இயக்க அரசியல் செயல்பட்டால் உருவான ஒன்றா? என்றால், என்னை பொறுத்தளவில் இரண்டுமே தான். சீமான் பேசும் தமிழ்த்தேசியமும் அண்ணா பேசிய திராவிடநாடும் இங்கு தான் வேறுபடுகிறது.
திராவிட-தமிழர்களிடம் இருக்கும் 'Cosmopolitanism, Tolerance, Self-respect, Socio-Political Hybridity' எல்லாம் பிற இந்திய மாநிலங்களில் பார்க்கமுடியாதவை. அந்த வகையில் அண்ணா தமிழ் சமுகத்தை தாழ்வுணர்ச்சியில் இருந்து மீட்டவர். அவரை திட்டுவது என்னையும் என்ன சுயமரியாதையையும் திட்டுவது போன்றது.

Comments