MY AGITATIONS? நூல் அறிமுகம்

 





சத்யவானி முத்து அம்மையார் , பேரறிஞர் அண்ணா அமைத்த 1967 திராவிட முன்னேற்றக் கழக அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஒரே பெண். அவரது தந்தை நாகைநாதர், நீதி கட்சி, சுயமரியாதை இயக்கம் என திராவிட இயக்க ஈடுபாடுடையவர். சத்யவானி முத்து அம்மையாரின் கணவர் எம்.எஸ்.முத்து, தீவிரமான காங்கிரஸ் ஆதரவாளராக இருந்து ,முதல் இந்த எதிர்ப்பு போராட்டத்தின் போது காங்கிரஸ் இயக்கத்திலிருந்து விலகி சுயமரியாதை இயக்கத்தில் ஐக்கியமானார். மெட்ராஸ் சுயமரியாதை இயக்கத்தின் செயலாளராகவும் இவர் செயல்பட்டிருக்கிறார்.

1944 சேலம் மாநாட்டில் ‘திராவிடர் கழகம்’ உருவான போது அந்நிகழ்வில் சத்யவானி முத்து பங்கேற்றதாக அவரது சுயசரியாதை நூலில் குறிப்பிடுகிறார்.

‘My Agitations’ என்ற தலைப்பில், 1982 இல் இவரது சுயசரிதை வெளியாகி இருக்கிறது , செழியன் பதிப்பகம்(Justice Press) இந்நூலை வெளியிட்டுள்ளது . இந்நூலை சத்யவானி முத்து அம்மையார், அவரது தந்தை நாகைநாதர் அவர்களுக்கும் டாக்டர். அம்பேத்கர் அவர்களுக்கும் சமர்ப்பித்துள்ளார். சத்யவானி முத்து, அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராகவும்(1978-1984) சரண் சிங் தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தார் .

இந்நூல் ஒரு சுயசரிதை நூலக அறியப்பட்டாலும், ஒரு பிரச்சார தொனியை கொண்டிருக்கிறது. 1982 இல் இந்நூல் எழுதப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக நான் அவதானிக்கிறேன். ஜெயலலிதா 1982 இல் தான் கட்சியில் சேர்க்கப்படுகிறார், அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவியும் கொடுக்கப்படுகிறது. 1980ல் நடந்த மக்களவை தேர்தலில் திமுக 37 இடங்களை கைப்பற்றுகிறது. மேலும் அந்த தேர்தலில் அனைத்து தனி தொகுதிகளிலும்(Reserved) திமுகவும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியுமே வென்றிருந்தன. எம்ஜியார் தலைமையிலான அரசு அறிமுகப்படுத்திய பொருளாதார இடஒதுக்கீடு இந்த தேர்தலில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி இருந்தது. 1984 சட்டமன்ற தேர்தலில் இதன் தாக்கத்தினை குறைக்கவும், கலைஞர் மீது ஆதாரமற்ற பழியை சுமத்தவுமே இந்நூல் எழுதப்பட்டதாக தெரிகிறது.

நூலின் முதல் 40 பக்கங்கள் திராவிட இயக்க வரலாற்றையும் அதன் முக்கிய தலைவர்கள் பற்றியும் கூறுகிறது. பெரியாரையும் அம்பேத்கரையும் ஒரே நிலையில் வைத்தே பார்த்துள்ளார் சத்யவானி முத்து அம்மையார்.

பெரும்பாலான தலித்துகள் திக-திமுகவில் சேர்ந்து இயங்கினார்கள் என்றும் தங்களது உரிமை மீட்கும் இயக்கமாக இந்த காட்சிகளையே கருதினார்கள் என்றும் அதற்கு காரணமாக பெரியார் அண்ணா போன்ற தலைவர்கள் இருந்தார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.

பார்பனரல்லாதாரை பெரியாரின் பேச்சுக்கள் உசுப்பிவிட்டு ‘திராவிடர்கள்’ என்ற உணர்வை கேட்பவர் மத்தியில் உருவாக்கி இருந்தது. சாதி பட்டங்களுக்கு மாறாக ‘திராவிடன்’ என்ற பெயரை அவர்கள் இதழ்களில் பயன்படுத்தி வந்தார்கள். அந்தக்கால கட்டத்தில் வெளியான திராவிட இயக்க பத்திரிகைகளிலும் இதை காணலாம் என்று இந்நூலில் குறிப்பிடுகிறார்.

பாண்டிச்சேரியில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் கலைஞர், பாரதிதாசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தாக்கப்பட்டனர், சிலருக்கு பாதுகாப்பு கிடைத்தது. அந்த மாநாட்டில் அம்பேத்கரின் புகைப்படத்தை திறந்துவைக்க சத்யவானி முத்து அம்மையாரும், திராவிட நாடு வரைபடத்தை திறந்து வைக்க பேராசிரியர் அன்பழகனும் அழைக்கப்பட்டிருந்தாக குறிப்பிட்டிருக்கிறார். (இந்த தகவல் உண்மையானதா என்று உறுதிப்படுத்தப்பட வேண்டிய ஒன்று, அம்மையார் 1923இல் பிறந்தவர், 1944 இல் அவருக்கு 21 வயதே ஆகி இருக்க வாய்ப்புள்ளது பேராசிரியருக்கு 22).

அம்பேத்கரின் வாழ்கை குறித்தான பாடங்கள் பள்ளி புத்தகங்களில் இடம்பெறவேண்டும் என்பதில் அண்ணா தீர்மானமாக இருந்தார் என்ற செய்தியும் இந்நூலில் இடம்பெற்றிருக்கிறது. ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் சாதி இழிவில் இருந்து நீங்க கல்வியை ஆயுதமாக கொள்ள வெண்டும் என்றும் அண்ணா விரும்பியதாக இந்நூல் கூறுகிறது. 1952 தேர்தலில் திராவிட முன்ன்னேற்றக் கழகம் ஆதரித்த காட்சிகளில் Commonweal Party, Toilers Party தவிர்த்து scheduled caste federationம் ஒன்று என்பதும் இங்கு குறிப்பிடத்தகுந்த ஒன்று.

1967 தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் வென்று அண்ணாவின் அமைச்சரவையில் அரிசன நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அண்ணா மறைவுக்கு பின் உருவான கலைஞர் தலைமையிலான அமைச்சரவையிலும் அரிசன நலத்துறையே அம்மையாருக்கு ஒதுக்கப்பட்டது. சுயமரியாதை திருமணச் சட்டம், 1 ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டம், கை ரிக்க்ஷா ஒழிப்பு போன்றவற்றை வரவேற்று எழுதியுள்ளார்.

60களில் எதிர்கட்சியினரால் சென்னை குடிசைகள் மீது வீசப்பட்ட Phosphorus , பல குடிசைகளை தீக்கிரையாகியது. இவை எல்லாம் திமுக ஆட்சிக்கு வந்த பின்னரே நடக்க தொடங்கின. இந்நிலையில் தான் குடிசைமாற்று வாரியம் அமைக்கப்படுகிறது. இதையும் இன்னூலில் சத்யவானி அம்மையார் குறிப்பிட்டுள்ளார்.

ஈ.வி.கே சம்பத் கட்சியை விட்டு விலகிய சமயத்திலும், அண்ணா மறைந்த போதும் கட்சிக்குள் எத்தகைய நிலை இருந்தது என்பதை இந்நூல் விவரிக்கிறது. சம்பத் விலகிய போது அங்கு ஏற்பட்ட வெற்றிடம் அண்ணாவால் மிக சாமர்த்தியமான முறையில் கையாளப்பட்டது என்பதை இந்நூலில் விளக்கியுள்ளார். மேலும் அண்ணாவின் மறைவை தொடர்ந்து நாவலர் முதல்வராக ஆவதற்கு சத்யவானி முத்து அம்மையாரின் ஆதரவு இல்லாமல் போனதற்கு நாவலரின் சாதியே காரணமாக இருந்துள்ளது. அதனால் தான் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த கலைஞரை தான் ஆதரித்ததாக குறிப்பிடுகிறார். இவை எல்லாம் இந்நூலில் இடம்பெற்றுள்ள சாதகமான அம்சங்களாகவும், சில அவதானிப்புகளுக்கு வழிவகுக்கும் ஒன்றாகவும் இருக்கிறது.

கலைஞர் மீது தலித்துகள் கொண்டிருக்கும் நம்பிக்கையை குழைக்கவும், கலைஞர் மீது எதிர்மறை பிம்பத்தை வாக்காளர்களிடையே உருவாக்கவும் நூலில் கடைசி 30 பக்கங்கள் எழுதப்பட்டுள்ளதாக தெரிகிறது. அடைப்படை தர்க்கமற்ற சில வாதங்களை அம்மையார் முன்வைக்கிறார். குறிப்பாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் சட்டம் தலித்துகளுக்கு எந்த நன்மையையும் செய்யப்போவதில்லை என்று எழுதிவிட்டு, அதற்கு காரணம் அவர்கள் ஏற்கனவே கிராமங்களில் உள்ள சில கோவில்களில் அர்ச்சகர்களாக இருப்பதாக குறிப்பிடுகிறார். மேலும் இந்த சட்டத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்ததை வரவேற்கும் தொனியில் எழுதி இருக்கிறார்.

சட்டநாதன் ஆணையம் பட்டியலினத்தவர் இடஒதுக்கீட்டில் எந்த மாற்றங்களையும் மேற்கொள்ள பரிந்துரைக்காத பட்சத்தில் 16 % இல் இருந்து 18% ஆக கலைஞர் உயர்த்தி வழங்கியதை சமர்த்தியமாக குறிப்பிடாமல் தவிர்த்து விடுகிறார்.

ஒன்றிய- மாநில அரசுகளிடையிலான சிக்கலும் சத்யவானி முத்து அம்மையாரின் விமர்சனத்தில் புதைந்துள்ளது. அரிசன நலம் என்பது ஒன்றிய பட்டியலின் கீழ் வரும் ஒன்றாகும், அதன் நிதி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க படும் போது இங்கு ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியில் எப்படி செலவழிக்கப்பட்டதோ அதே முறையில் தான் திமுகவும் செலவளித்துள்ளது. ஆனால் அதை ஏதோ திட்டமிட்ட சதியை போல் குறிப்பிடுகிறார் அம்மையார்.

இதை போன்றே உண்மைகளை திரித்து அல்லது அவரது நோக்கத்திற்கு ஏதுவாக அமைத்துக்கொள்ளும் போக்கில் தான் விமர்சனங்கள் எல்லாம் இடம்பெற்று இருக்கின்றன.

திமுகவின் முன்னணி தலைவர்கள் எல்லாம் அன்றைக்கு கலைஞரை விட்டு பிரிந்ததற்கு பல காரணங்களை அடுக்கலாம், குறிப்பாக அனைவரை விடவும் வயதில் இளையவரான கலைஞர் மீதான பொறாமை, அவரது சாதி, போன்றவற்றை குறிப்பிடலாம்.

அக்காலத்தில் இந்நூலுக்கான எதிர்வினைகள் ஏதானும் வெளிவந்தனவா என்றும் தெரியவில்லை. பிற்காலத்தில் சத்யவானி முத்து அம்மையார் மீண்டும் திமுகவில் இணைந்தது, இந்நூல் எழுதப்பட்டதற்கான நோக்கத்தையே சிதைத்தது. கடைசி வரை நூலின் தலைப்பும் உள்ளடக்கமும் முரண்படும் ஒன்றாகவே இருக்கின்றது.

இந்நூல் எதற்காக எழுதப்பட்டது என்ற அவதானிப்புகளையும், நூல் பேசிய சில உண்மைகளையும் இக்கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் அன்றைக்கு கொள்கை பிடிப்புடைய பல தலைவர்கள் திமுகவை விட்டு விலகியதற்கான பலதரப்பட்ட காரணங்கள் பெரும் ஆய்வை வேண்டி நிற்கின்றன.

அடுத்தாண்டு நூற்றாண்டு காணவிருக்கும் சத்யவானி முத்து அம்மையாருக்கு ஒரு Biography எழுதப்பட்டால். திராவிட இயக்கத்தின் பெண் ஆளுமைகளில் முக்கியமான ஒருவரின் வாழ்கை வரலாறு தமிழ்சமுகத்தால் நினைவு கூறப்படும்.

🙂

Comments