20/11/1916



இன்றைக்கு தமிழ்நாடு சட்டமன்றம் ஒரு பார்ப்பனரை கூட கொண்டிருக்கவில்லை, ஆனால் சரியாக 110 ஆண்டுகளுக்கு முன் இப்படியான நிலை இருக்கவில்லை. 1909, மிண்டோ-மார்லி சீத்திருத்தம் மேலவையில் இடங்களை அதிகரித்திருந்தது. இதை நிரப்புபவர்கள் பெரும்பான்மையினர் பார்பனர்களாகவே இருந்தனர். எண்ணிக்கையில் சிறுபான்மையனராக இருந்தாலும், ‘Ku-Klux-Klan' போல் ஆதிக்கம் செலுத்துவதில் பெரும்பான்மையினராகவே இருந்தனர்.


ஒரு பக்கம் ஆங்கிலேய அரசின் அதிகார அமைப்புக்குள் ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்கள், Home Rule இயக்கத்திலும் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் செயல்பட்டு வந்தனர் . அந்த இயக்கமே பார்ப்பனர்களின் இயக்கமாக பார்க்கப்பட்டது. அரசியல் துறையில் இத்தகைய ஆதிக்கம் நிலவ. சமய துறையில் சூத்திரர்களுக்கான நிலை வர்ண அடிப்படையிலான ஒன்றாகவே இருந்தது, எத்தனை பெரிய செல்வந்தர்களாகவே இருந்தாலும் அவர்களுக்கு ஆன்மீகம் அதிகாரம் அல்லது ஆன்மீக சுயாட்சி என்று எதுவும் அன்றைக்கு கிடைக்கவில்லை.


சமூகத்திலும், பொது வெளி தொடங்கி தனி வெளி வரை பார்ப்பனிய தன்மை நிறைந்து இருந்தது. பிராமணாள் ஹோட்டல்கள், ஆக்ரஹாரங்கள், பூநூல்காரர்கள் என அனைத்தும் ஒரு வித ஆதிக்கத்தை விளிம்பநிலை மக்கள் மீது செலுத்தி வந்தன. இங்கு விளிம்புநிலை என்பது அரசியல்-சமய புறக்கணிப்பையும் பிரதிநிதித்துவத்தையும் பொறுத்து அமைந்த ஒன்று.

இந்த ஆதிக்கம் பார்ப்பனர்- பிரிட்டிஷ் கூட்டுத்தனத்தால் விளைந்த ஒன்றாகும் , ஒரு புறம் அரசியல் நிர்வாக துறையில் ஆதிக்கத்தை கைப்பற்றிக்கொண்டு அரசியல் சுதந்திரம் கேட்டும் சாமர்த்தியமான அரசியலை பார்ப்பன வகுப்பார்கள் மேற் மேற்கொண்டிருந்தனர். இது பார்ப்பனர் அல்லாதாரின் இருத்தலை கேள்விக்குறியாக்கும் ஒன்றாக அமைந்தது. அரசியல் விடுதலையை விட சமூக விடுதலை பார்ப்பனர் அல்லாதாரின் முக்கிய நோக்கமாக இருந்தது.

இந்நிலையில் வைத்து தான் தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தின்(நீதி கட்சி) வருகையையும் அவர்களது கோரிக்கையையும் பார்க்கவேண்டும். அரசியல் - சமயம் - சமூகம் என அனைத்து நிலையிலும் பெரும்பான்மையினராக இருந்தும் அங்கீகாரம் அற்றவர்களாக பார்ப்பனரல்லாதார் இருந்தனர். இந்நிலையை உணராத பார்ப்பனரல்லாத வகுப்பினருக்கு கல்வி புகட்டி அவர்களையும் இந்த இயக்கத்தில் இணைப்பது நீதிக்கட்சியின் தலையாய கடமையாக இருந்தது. சாதி வேற்றுமை இன்றி இதை முன்னெடுக்க பார்ப்பனரல்லாதார் இயக்கம் முயன்றது.


சாதி ஒழிப்பு என்பது நீதிக்கட்சியின் மூல கடமையாக இருக்கவில்லை. மாறாக இங்குள்ள பெரும்பான்மை விளிம்புநிலை மக்களை அனைத்துவித தாழ்நிலைகளில் இருந்து மீட்கவேண்டும் என்ற எண்ணமே நிரம்பி இருந்தது.
அதற்கு முன்வரை குறிப்பிட்ட சாதிகளுக்கு பிரதிநிதித்துவம் மற்றும் அங்கீகாரம் என்றிருந்த அரசியல் சூழல் நீதிக்கட்சி காலத்தில் ஒரு பெரும் மக்கள்திரள் உள்ளடக்கும் சாத்தியங்களுடன் உருவாகி இருந்தது. பின்னாட்களில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் இந்த சாத்தியத்தை முழுதாக நிரப்பியது எனலாம். அனைத்து புலங்களிலும் ஆதிக்கம் செலுத்திவந்த பார்ப்பனர்களை தவிர மற்ற அனைவரையும் உள்ளடக்கிய ஒன்றாக பார்ப்பனரல்லாதார் அரசியல் இருந்தது.


இன்றைக்கு நிலப்பிரபுக்களின் கட்சி, மிட்ட மிராசுகளின் புகலிடம் என்றெல்லாம் விமர்சன குரல்கள் இருந்தாலும், அதிகாரத்தை கைப்பற்றுவதை கடந்து ஒரு உணர்வு அவர்களிடம் இருந்தது. இந்த உணர்வும் எண்ணமும் தான் அந்த இயக்கம் வெற்றிகரமாக நிலைபெற காரணமாக அமைந்தது. அந்த உணர்வை Self-respect, Non- Brahmin-ness, Struggle for recognition என்று வரையறுக்கலாம்.


இன்றைக்கு பார்பனரல்லாதரர் நிரம்பிய சட்டமன்றம் நமக்கு அமைந்திருந்தாலும் அதில் பெரும்பாலானவர்களிடம் Non-brahmin உணர்வு இருப்பதாக தெரியவில்லை.

சூத்திரன் அரசாள தொடங்கி ஒரு நூற்றாண்டு கூட முடியவில்லை என்பதை பார்ப்பனரல்லாதார் மனங்கொள்ளவேண்டும். நூற்றாண்டு கடந்தும் நீதிக்கட்சியின் இலட்சியங்கள் அனைத்தையும் நாம் அடைந்துவிடவில்லை, என்பதையும் மனதில் நிறுத்தி செயல்படுவது இந்நாளில் அவசியமாகும்.
Ku-Klux-Klan

Comments