மனுஸ்மிருதி - பெண்கள்-சூத்திரர்களைப் பற்றி என்ன சொல்கிறது? - நூல் அறிமுகம்

 



“மனுஸ்மிருதி - பெண்கள்-சூத்திரர்கள் பற்றி என்ன சொல்கிறது?”  என்று தலைப்பிடப்பட்ட தொகுப்பு நூலை நவம்பர் 6 அன்று, ஒரு லட்சம் பிரதிகளை,  பொது மக்களிடம் இலவசமாக விநியோகிக்க முடிவெடுத்துள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி. 32 பக்கங்களை கொண்ட அந்த சிறு நூல் படிக்க கிடைத்தது.  


  இலவசமாக ஒரு நூலை பொது மக்களிடம் விநியோகிப்பது தமிழ்நாட்டு அரசியல் சூழலுக்கு புதிதல்ல, திராவிட இயக்கம் தொடங்கி பல்வேறு இயக்கங்கள் இந்த நடைமுறையை இன்றளவும்  பின்பற்றி வருகின்றன. Pamphlet  வடிவிலும், சிறு நூலாகவும் விலை ஏதுமின்றி  மக்களிடம் விநியோகம் செய்வதற்கு பின்னுள்ள நோக்கும் ஒன்று தான், பொதுமக்களை விஷயம் அறிந்தவர்களாக (Educating the Public) மாற்ற வேண்டும் என்பது. இது அரசியல்மயபடுத்தலின் ஒரு பகுதி. 


ஒரு இயக்கம் பத்திரிகை நடத்துவதற்கும், தொலைக்காட்சி சேவை நடத்துவதற்கும் பின்னல் என்ன நோக்கம் இருக்கிறதோ, சிறு நூல்களை விலையின்றி விநியோகிப்பதற்கு பின்னாலும் அத்தகைய நோக்கமே இருக்கிறது. அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னெடுக்கும் இந்த நூல் விநியோகம் என்பது சமகால தமிழ்நாட்டு  அரசியல் சூழலை கருத்தில் கொண்டால் மிக முக்கியமான நகர்வு. அதுவும் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த திட்டமிட்டிருக்கும் நவம்பர்  6 அன்று இந்நூலை மக்களிடையே பரப்புவது முக்கியமான அரசியல் செயல்பாடு.  


நியமன பொறுப்பை வகித்துக்கொண்டிருக்கும் தமிழக ஆளுநர் சனாதனம் பற்றி மேடையில் பேசுவது இயல்பாகி விட்டது, பேரறிஞர் அண்ணாவை திட்டிவிட்டு ஒரு பார்ப்பனர் பிழைப்பு நடத்தலாம் என்பது சாதாரணமாகி விட்டது, மனுஸ்மிருதியை நியாயமாக்கி பேசுவது அன்றாடம்காட்சி ஆகிவிட்டது , இன்னொருபக்கம் இந்து மத வெறி உணர்வுகளை தூண்டி அரசியல் செய்ய பாஜக என்ற கட்சியும், கலவர பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் தயார் நிலையில் இருக்கின்றன. நிர்வாகத்திலும் கல்வி நிறுவனங்களிலும் இந்துத்துவ சிந்தனை கொண்டவர்களது ஆதிக்கம் குறிந்ததாக தெரியவில்லை. 


தமிழ்நாட்டில் திராவிட சிந்தனை கொண்ட அரசியல் வர்கத்தை(Political Class) விட இந்துத்துவ சிந்தனை கொண்ட நிர்வாக வர்கம்(Bureaucratic class) ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக இருக்கிறது. அனைத்து துறைகளிலும் இந்துத்துவ சிந்தனையின் ஆதிக்கம் மட்டுப்படாமல் தொடரவே செய்கிறது. அதை மாற்றுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இது  போன்ற சில முன்னெடுப்புகள் மூலமே மாற்றங்களை அடைய முடியும். 


 சூத்திரர்கள் மற்றும் பெண்கள் குறித்து மனுஸ்மிருதியில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான அதே சமயத்தில் இழிவான ஸ்லோகங்களின் தொகுப்பாக இந்நூல் இருக்கிறது. அத்தியாயம் குறிப்பிடப்பட்டு எந்த பகுதி என்பது வரை அனைத்து குறிப்புகளும் இந்நூலில் துல்லியமாக இடம்பெற்றுள்ளது.  இந்த குறிப்புகள் எல்லாம் நான்கு ஆதார நூல்களின் அடிப்படையில் ஒப்பிடப்பட்டே அமைந்துள்ளன. ஆங்கில மொழி பெயர்ப்புகள் பயன்படுத்தப்படாமல் நேரடி 'சமஸ்கிருத- தமிழ்' மொழிபெயர்ப்பு ஆதார நூல்களே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.  அவை 


1. மனுதர்ம சாஸ்த்திரம், இராமநுஜாசாரியார், பதிப்பு நா.முத்துரங்க செட்டியார் - முத்துகோவிந்த செட்டியார் பு.க.சுப்புராய முதலியார் பிழைத்திருத்தி சபாபதி முதலியார் கல்விவிளக்க அச்சுக்கூடத்தில் அச்சடிக்கப்பட்டது. டிசம்பர் 1865.


 2. மனுநீதி எனும் தர்ம சாஸ்த்திரம் உரையாசிரியர் பிரம்மபீடம் இளைய பீடாதிபதி அன்னை ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா - இந்து பப்ளிகேஷன் 2011.

 

3. ஸ்த்ரீகளுக்குரிய பத்ததி - ஸ்ரீத்ர்யம்பகரமகி அவர்களால் தொகுக்கப்பட்டு எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அய்யர் அவர்களால் வெளியிடப்பட்டப் புத்தகம் (1957)


4. மனுதர்ம சாஸ்திரம் - திருலோக சீதாராம், பதிப்பாசிரியர் சிரோமணி, பாகவத சூடாமணி ஏ.கே.கோபாலன் (1961


மநுஸ்மிருதி என்பது ஒரு சட்ட நூல், அதில் குறிப்பிடப்படும் விதிகள் அனைத்தும் சூத்திரர்கள் மற்றும் பெண்கள் ஆகியோரின் சுயமரியாதைக்கும் சுதந்திரத்திற்கும் எதிராகவே அமைந்திருக்கிறது. அப்படிப்பட்ட இழிவான செய்திகளின் தொகுப்பாக இச்சிறு நூல் அமைந்துள்ளது. படிக்க படிக்க சுயமரியாதை உணர்வு தான் மேலெழுகிறது(இருப்பவர்களுக்கு நிச்சயம் எழும்). 


அரசியல் தளத்தில் ஓரளவுக்கான முற்போக்கு மாற்றங்களை நாம் அடைந்திருந்தாலும் ஆன்மீக தளத்திலும் கலாச்சார தளத்திலும் மனுசாஸ்திர மேலாண்மையே தொடர்கிறது. இதற்கு எதிரான போரை புத்தர் தொடங்கி பெரியார் அம்பேத்கர் என அனைத்து சிந்தனையாளர்களும் நிகழ்த்தி வந்துள்ளார்கள். தற்போது இத்தகைய எதிர் கலாச்சார(Counter-culture)  நடவடிக்கைகள் குறைந்திருந்தாலும் கூட அதற்கான தேவை குறையவில்லை என்பதை தான் அரசியல் சூழல் சுட்டிக்காட்டுகிறது. 


இதுபோன்ற அறிவூட்டும் செயல்பாடுகள் நடைபெறுவது அரசியல்மயப்படுத்தலுக்கான ஆரமபாகட்ட நகர்வாகவே பார்க்கவேண்டியுள்ளது. ஒரு பக்கம் அரசியல் தளத்தில் “திராவிட மாடல் பயிற்சி பாசறைகளும்”, கலாச்சார புலத்தில் இதுபோன்ற முற்போக்கு நடவடிக்கைகளும்  நடைபெறுவது ஆரோக்கியமான ஒன்றாகும். 


இந்நூலுக்கு மக்களவை உறுப்பினர் தொல் திருமாவளவன் அவர்கள் எழுதி இருக்கும் முன்னுரை, அவர் முனைவர் பட்டத்தை மிளிரச் செய்கிறது. நூலை வாசிக்க இயலாதவர்கள் கூட அந்த முன்னுரையை வாசித்துவிடுவது அவசியம். 


நூலின் மற்றுமொரு சிறப்பம்சம், நூலின் இறுதியில் அம்பேத்கரின் ‘Who Were the Shudras?’ நூலில் சிறு குறிப்பு இருப்பது தான், அம்பேத்கரை தன்வயப்படுத்த முயன்று கொண்டிருக்கும் இந்துத்துவ சக்திகளுக்கு சரியான எதிர்வினையாக இதை பார்க்கலாம். 


சுயமரியாதை உள்ளவர்கள் சூத்திரர்களாக இருக்க முடியாது, அப்படி சுயமரியாதை அற்ற சூத்திரர்கள் இந்நூலை படிக்கவேண்டும். பெரியார் எதற்காக சூத்திரப்பட்டம் நீங்க போராடினார் என்பதை இதை படிக்கும்போது உணர முடியும்.  


சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் எதிராக பேசும் மனுஸ்மிருதியை அம்பலப்படுத்தும் செயல்பாட்டை தலித் அடையாளம் கொண்ட ஒரு  அரசியல் கட்சி முன்னெடுப்பது வரவேற்க தக்கதாகும்.  இந்துத்துவ சக்திகளை எதிர்கொள்ள தலித்-சூத்திரர் கூட்டணியின் அவசியத்தை இதன் மூலம் நாம் உணரலாம். 


 இச்சிறுநூலை வெளியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வாழ்த்துகளும் பாராட்டும். 


Comments