அன்றே சொன்னார் பெரியார்

  




பெரியாரின் கொள்கைகளுள் குறைவான முக்கியத்துவம் கொடுக்கப்படுவது பெரியாரின் பெண்ணியத்திற்குதான் . திராவிட இயக்கத்தின் மீது நியாயமான விமர்சனமாக பெண் விடுதலையையும் பெண்கள் பிரதிநிதித்துவதையும் சொல்லலாம். பெரியார்  பேசிய பெண்ணியத்தையும் பிரெஞ்சு தத்துவவியலாளர் Simone de Beauvoir பேசிய பெண்ணியத்தையும் ஒப்பிட்டு வெளியாகி இருக்கும் நூல் தான் “அன்றே சொன்னார் பெரியார்”. 


இருவர் பேசிய பெண்ணியத்தின்  அடிப்படையாக அந்நியமாதல்(Alienation) என்ற கோட்பாட்டை சொல்லலாம். ஆண்களுக்கு இருக்கும் அனுகூலங்களில் இருந்தும் பொது இடங்களில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளில் இருந்தும் அந்நியமாகி போய் இருந்த பெரும் திரளை நோக்கி இருவர் பேசிய பெண்ணியமும் அமைந்திருந்தது.


 இந்தியாவில் பெண் அடிமைத்தனம் என்பது பல அடுக்குகளை கொண்டிருந்தது. சாதி- ஆண்மை-கற்பு என அவற்றை வரையறுக்கலாம். இருபதாம் நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகளில் நடந்த  சில முற்போக்கு இயக்க நடவடிக்கைகள் பெண் விடுதலையை பேசின. பல நேரங்களின் அது செயல்பாடாகவும் அமைந்தது. பெண்களுக்கு வாக்குரிமை, தேவதாசி முறை ஒழுப்பு, பொது இடங்களில் பெண்களின் புழக்கம், குழந்தை கட்டுப்பாடு என இச்செயல்பாடுகள் அமைந்திருந்தன. பெரியார் பேசிய பெண்ணியம் இந்த காலத்தை சேர்ந்தது என்றாலும் இன்றுவரை பொருத்தமுடைய ஒன்று. 


மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக பிரெஞ்சு நாட்டில் Simone de Beauvoir பேசிய பெண்ணியத்திற்கு பின் நிகழ்ந்த எழுச்சி இரண்டாம் பெண்ணிய அலையாக குறிக்கப்படுகிறது . உலகப்போரால் விளைந்த வெறுமை ஏற்படுத்திய அந்நியமாதல் ஆண்களை விட பெண்களை மேலும் விளிம்புநிலையினராக ஆக்கி இருந்தது. இந்நிலையில் தான்The Second Sexநூல் 1949இல் வெளிவருகிறது. 


பெரியார் பேசிய பெண்ணியம் அந்நியமாதலுக்கு தீர்வாக பகுத்தறிவை முன்வைத்தது. Simone de Beauvoirவின் பெண்ணியம் இருத்தலியமாக(Existentialism) அமைந்தது. பெண்களின் இருதலுக்கான காரணிகளை மட்டும் அலசிய The Second Sex நூல் அதற்கான தீர்வுகளை முன்வைக்கவில்லை. ஆனால் பெரியாரின் பகுத்தறிவு பெண்ணியம்(Rational Feminsim) தீர்வுகளை கொண்டதாக இருந்தது. லட்சியவாத தீர்வுகளாக இருந்தாலும் அவற்றை அடையவேண்டும் என்ற சிந்தனையை கொண்டிருந்தது. 


ஆண்மை ஒழிய வேண்டும், கற்பு என்ற பதம் ஒழிய வேண்டும், திருமணம் என்ற ஒன்று தேவையற்றது, குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமை பெண்களின் முடிவை பொறுத்து அமைய வேண்டும், விதவை என்ற சொல்லுக்கு இணையாக விதவன் என்ற சொல் இருக்க வேண்டும். விபச்சாரி என்ற சொல்லுக்கு இணையாக விபச்சாரன் என்ற சொல் இருக்க வேண்டும். போன்ற தீர்வுகளை பெரியார் முன்னவைத்தார். பெண் கல்வியின் அவசியத்தை பெரியார் பேசினார். 


இருவர் பேசிய பெண்ணியமும் அடர்த்தியின் பொருட்டு   வேறுபட்டாலும், இரண்டையும் ஒப்பிடுவது பல முக்கியமான அவதானிப்புகளுக்கு வழி வகுக்கிறது. 


அத்தகைய அவதானிப்புகளின் தொகுப்பு தான் இந்நூல். இருவர் பேசிய பெண்ணிய கருத்துக்களையும் ஒப்பிட்டு அவற்றுக்கு இடையில் இருக்கும் ஒற்றுமை வேற்றுமைகளை நமக்களிக்கிறது. 


பெரியாரின் பெண்ணிய கருத்துக்கள் எப்படி காலத்தால் முற்பட்ட ஒன்றாக இருந்தது என்பதை இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. இன்னும் விரிவாக எழுதப்பட்டிருக்க வேண்டிய நூல் 50 பக்கங்களில் சிறு வெளியீடாக அமைந்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. 


தமிழில் வெளியாகி இருக்கும் இந்நூல் ஒரு பெண் மருத்துவரால் எழுதப்பட்டிருப்பது வரவேற்கத்தகுந்த முன்னெடுப்பாகும். நூல் ஆரம்பகட்ட வாசகருக்கு ஒரு அறிமுகத்தை கொடுக்கும். இருந்தும் பெரும் ஆய்வை வேண்டி நிற்கும் ஒன்று தான். 


 Bertrand Russelஎழுதிய  “Marriage and Morals” நூலோடு பெரியாரின் “பெண் ஏன் அடிமையானா”ள் நூலை ஒப்பிட்டு எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு நீண்டநாட்களாக இருந்தது. ஆனால் இதை ஒரு ஆண் செய்வதை விட பெண் செய்தல் பொருத்தமாக இருக்கும் என்ற எண்ணத்தால் அதை செய்யவில்லை. இந்நூலை ஒரு உதாரணமாக கொண்டு அதை யாரேனும் முயன்றால் மகிழ்வேன். 


தொடர்ந்து நல்ல நூங்களை வெளிக்கொண்டுவரும் ‘நிகர்மொழி’ பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. நிகர்மொழி பதிப்பகத்தார் அவர்களுக்கும் நூல் ஆசிரியர் மருத்துவர்.ராதிகா முருகேசன் அவர்களுக்கும் எனது வாழ்த்தும் பாராட்டும். 


நூலை பெற
https://periyarbooks.com/ta/andre-sonnaar-periyar.html


Comments