துப்பட்டா போடுங்க தோழி

  



  ‘துப்பட்டா போடுங்க தோழி’ நூலுக்கான அறிமுகத்தை  இரண்டு விதமாக தொடங்கலாம் என்று நினைத்திருந்தேன். தெளிவான ஒன்றை தேர்ந்தெடுக்க மனம் வரவில்லை என்பதால் இரண்டையும் எழுதுகிறேன். 


முதலாவது


கல்லூரி முதலாண்டு , சென்னையில் படித்து கொண்டிருந்தேன். அதற்கு முன் வரை நகர வாழ்க்கை பழக்கப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை. கல்லூரியில் இருக்கும் பெண்கள் ஏன் துப்பட்டா போடாமல் சுற்றி கொண்டிருக்கிறார்கள் என்று பல நேரம் ஆணாதிக்க மனம் இதயம் போல் துடித்து அடங்கும். எந்திர பொறியியல் மாணவன் என்பதால் என் வகுப்பில் பெண்களின் எணிக்கை மிக குறைவு. அவர்களிடம் நேரில் சென்று பேசும் தைரியம் ஒருநாளும் எனக்கு வாய்த்ததில்லை , இதில் துப்பட்டா போட சொல்வதெல்லாம் பகற்கனவு என்றிருந்தேன்.  ஒரு நாள் வந்தது வாய்ப்பு, என் அக்கா படித்த கல்லூரியில் தான் நான் படித்தேன். ஒரு முறை என்னை சந்திக்க வரும்போது, துப்பட்டா போடாமல் சுடிதார் அணிந்து வந்தார். பேசி கொண்டிருக்கையில் ஏதோ சொல்லிவிட்டேன். இன்று வரை என் மனதை உறுத்தும் ஆணாதிக்க செயல்பாடுகளில் அதுவும் ஒன்று. 


பெண்களின் ஆடை, அவர்களது விருப்பம் என்பதை உணரவே எனக்கு நான்காண்டு கல்லூரி வாழ்க்கை தேவைப்பட்டது. இருந்தும் ஏதோ ஒரு வகையில் ஒரு ஆணாதிக்கவாதியாகவே இந்த நூல் அறிமுகத்தை எழுதுகிறேன்.  


இரண்டாவது 


அம்பையின் “உடலெனும் வெளி” நூலின் முதல் பகுதியை வாசிக்கையில் வரலாறு நெடுக பெண்களை மொழி கூட எப்படி ஒடுக்குகிறது என்பதை அறிய முடிந்தது. சாபத்தில் கூட 'உன் பொண்டாட்டி வயிற்றில் பெண் பிறக்க' போன்ற சாபங்கள். பழமொழிகளில் "முருங்கையை ஒடிச்சு வளர், பெண்ணை அடிச்சு வளர்", "அதிர்ந்து வராத புருசனும் மிதந்து வராத அரசியும் பிரயோசனம் இல்லை" போன்றவை இயல்பாக பயன்படுத்த பட்டிருக்கின்றன. கெட்ட வார்த்தைகள் பெரும்பாலும் பெண்ணை மையமிட்டவையாக இருப்பது வழக்காகி விட்டது. இது ஒரு புறமிருக்க, மரபை மீறி வளரும் தலைமுறையினரிடம்  கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களை கொண்டாடுவது பெருகி வருகிறது. ‘சேலை காட்டுனா தான் அழகா இருக்க’, ‘பொட்டு வச்சிக்கோ நல்லா இருக்கும்’, ‘தலையை பின்னி போட்டா உனக்கு செட் ஆகும்’ இப்படி பல மென்மையான கலாச்சார  அறிவுரைகள் காதில் விழுவது இயல்பாகி வருகிறது. 


சினிமா, நாடகங்கள் போன்ற வெகுஜன ஊடகங்கள் தொடங்கி இத்தகைய நவீன கலாச்சார திணிப்பை அனைத்து வகையிலும் ஒரு பெண் சந்திக்கிறார். இதை எல்லாம் கடக்கவும் மீறும் நம்பிக்கையை கொடுக்கவும் எழுதப்பட்ட நூல் தான் “துப்பட்டா போடுங்க தோழி”. 


துப்பட்டா போடுவதில் தொடங்கி, கல்யாணம், அரசியல், குழந்தை பேறு, காதல், குடும்பக் கட்டுப்பாடு, உடை, நட்பு வட்டம், பயணம், வாகனம் ஓட்டுதலின் அவசியம்  போன்ற பரந்துபட்ட தலைப்புகளில் கட்டுரைகள்  இந்நூலில் இடம்பெற்றுள்ளன.


பெண்களுக்காக எழுதப்பட்ட கட்டுரைகள் என்ற தொனி பல இடங்களில் வெளிப்பட்டாலும், ஆண்களுக்கும் இதிலிருந்த எடுத்துக்கொள்ள நிறையவே உள்ளது. பல கட்டுரைகளில் "தோழர்களே" என்று இருபாலருக்கும் பொதுவான மொழிநடையில் எழுதி இருக்கிறார். 


அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள், சந்திக்கும் மனிதர்கள், அவர்களுடன் நடக்கும் உரையாடல்கள் போன்றவற்றை தான் இந்நூல் பேசுபொருள் ஆக்கி இருக்கிறது. வெகு இயல்பாக ஒரு உரையாடலில் வெளிப்படும் ஆணாதிக்கம் எப்படியான ஒன்றாக இருக்கிறது, குடும்ப அமைப்பு உருவாக்கும் அடக்குமுறைகள் எல்லாம் எதற்காக பெண்களை மையமிட்ட ஒன்றாகவே உள்ளது போன்ற சிக்கலான கேள்விகளுக்கு நடைமுறைத்தனமிக்க பதில்களை மிக எளிதாக இந்நூல் சொல்ல முயல்கிறது. 


ஆண்களுக்கு இருக்கும் சிறப்புரிமைகளை கருத்தில் கொண்டே அவனது பெண்ணியம் பேசப்படவேண்டும். "பாலின சமத்துவத்தை விரும்பும் அனைவரும் பெண்ணியவாதிகள் தான்" என்ற Chimamanda Ngozi Adichie யின் மேற்கோள் நூல் முழுக்க ஏதோ ஒரு வடிவில் நமக்கு நினைவூட்டப்பட்டு கொண்டே இருக்கிறது. 


இது தவிர்த்து சில சினிமா மற்றும் புத்தக பரிந்துரைகள் இந்நூலில் அடங்கும். முதலில் கட்டுரைகளாக எழுதப்பட்டு பின்னர் நூலக தொகுக்கப்பட்டதால், எழுதப்பட்ட சமயத்தில் படித்தால் ஏற்படும் பொருத்தப்பாடு இப்போது குறைந்திருப்பதை உணர முடிகிறது. பல கட்டுரைகள் இன்னும் ஆழமாக இருந்திருக்கலாம் என்றும் தோன்றியது. 


We Should All Be Feminists என்ற சிறு புத்தகத்தை பல இடங்களில் இந்நூல் நினைவுபடுத்தியது. Toilet seat புத்தகமும் சில இடங்களில் இந்நூலுடன் ஒன்றி போகிறது.  


பக்குவப்பட்ட ஒரு மனிதனாக பரிணமிக்க இந்நூல் நிச்சயம் உதவும். தமிழ்சூழலில் பெண்களின் அனுபவங்களை இலக்கியமாக்குவது என்ற வகைமையை தாண்டி இது போன்ற காத்திரமான கட்டுரைகளை எழுதுவதும் அவசியம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்படி எழுதப்பட்டால் மட்டுமே குறைந்தபட்ச மாற்றத்தை சமூகத்தில் எதிர்பார்க்கமுடியும். 


இந்நூலை எழுதிய கீதா இளங்கோவன் அவர்களுக்கும், வெளியிட்ட Her stories பதிப்பகத்தார் ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்தும் நன்றியும். 





 



Comments