நவீன கல்விக் கொள்கையை நோக்கி.. மெக்காலே கூறியது என்ன?
இன்றைக்கு இந்திய மாநிலங்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்கு ஒரு காரணமாக ஆங்கில மொழி அறிவும், இருமொழி கொள்கையும் சொல்லப்படுகிறது. அறிவியல் மொழியாக ஆங்கிலத்தையும் தாய் மொழி தமிழையும் தக்கவைத்து கொண்டதே தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு காரணமாக சுட்டிக்காட்ட படுவதுண்டு.
ஆனால் இந்த ஆங்கில கல்வியின் தோற்றம் எப்போது நடந்தது ? அப்படி ஒரு மொழி இங்கு அறிமுகப்படுத்த வேண்டியதற்கான அரசியல் காரணங்கள் என்னென்ன? மெக்காலே ஏன் இதை செய்யவேண்டும்? சமகாலத்தில் De-Colonization என்ற பெயரில் இந்துத்துவ சக்திகளால் மெக்காலே விமர்சிக்கப்படுவதற்கான காரணங்கள் என்ன? போன்ற கேள்விகளுக்கு சில பதில்கள் இருக்கிறது.
19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சில முக்கியமான நிகழ்வுகள் நடந்தேறுகிறது Charter Act of 1813 அறிமுகப்படுத்தப்படுகிறது, ஊழல் கையூட்டு போன்ற காரணங்களால் துபாஷிகளின் வீழ்ச்சியும் இந்த காலகட்டத்தில் நடந்திருந்தது. Charter Actன் அறிமுகம் இந்தியர்களை நிர்வாகம் செய்யும் பொறுப்பையும், அவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பொறுப்பையும் பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு ஏற்படுத்தி இருந்தது.
அப்போது சமஸ்கிருதம் மற்றும் உருது மொழிகளை இந்தியர்களின் சட்டதிட்டங்களை கொண்ட மொழிகள் என்று ஆங்கிலேயர்கள் கருதியதால் கல்விக்காக ஒதுக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் நிதியை சமஸ்கிருதம் மற்றும் உருது கற்பிக்க பயன்படுத்தி வந்தனர்.
இந்த சமயத்தில் தான் வாராது வந்த மாமணி போல் மெக்காலே வந்தார். இந்தியர்களின் நிலையை மாற்ற அவர்களுக்கு விஞ்ஞான மற்றும் அறிவியல் கல்வி புகட்ட வேண்டிய அவசியத்தை House of Commonsஇல் எடுத்து வைத்தார். ‘சமஸ்கிருதம் மற்றும் உருது மொழிகளை கற்க நாம் செலவுசெய்வதன் மூலம் எந்த பயனும் இந்தியர்களுக்கு ஏற்படவில்லை. மூடநம்பிக்கைகளாலும், மடத்தனங்களாலுமே அவர்கள் வழிநடத்தப்படுகிறர்கள்’ கூறி வெதும்பி இருக்கிறார்.
நவீன கல்வியின் அவசியத்தை பற்றி மெக்காலே என்ன கூறினார், அவரது வாதம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதையெல்லாம் உள்ளடக்கிய “Minute by the Honourable T.B. Macaulay(2/2/1835)” அறிக்கை கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டு கழித்து தமிழ் மொழிபெயர்ப்பை கண்டுள்ளது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குனர் சுந்தர் கணேசன் அவர்களும், Frontline இதழின் முன்னாள் ஆசிரியரும் எழுத்தாளருமான ஆர். விஜயசங்கர் ஆகியோர் இந்த மொழியாக்கத்தை சாத்தியப்படுத்தியுள்ளனர். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக வெளியீடாக இந்நூல் படிக்க கிடைக்கிறது.
ஒரு பக்கம் இந்தி திணிப்பும், இன்னொரு புறம் புதிய கல்வி கொள்கையும் சேர்ந்து நம்மை சூழ்ந்து வரும் சமயத்தில், மெக்காலே மீதான அவதூறுகளும் அதிகரித்துள்ளது. நவீன கல்வி கொள்கை பற்றி மெக்காலே பேசியபோது இந்தி இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தகுந்த செய்தி. அவரது இந்த அறிக்கை முழுவதிலும் சமஸ்கிருதம் மற்றும் உருது ஆகிய மொழிகள் தான் சுட்டிக்காட்ட படுகின்றன.
மெக்காலேவின் வாதம் அன்றிருந்த சுதேசிகளிடம் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது. அப்போது சமஸ்கிருதம் அறிந்திருந்த வகுப்பாரை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை, பின் ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் ஓடி சென்று முதலில் கற்று கொண்டவர்களும் இந்த வகுப்பார் தான்.
மெக்காலேவின் நவீன கல்வி கொள்கையை சிலர் எதிர்ப்பதற்கான மூல காரணம், அது கல்வியை ஜனநாயகப்படுத்தியது என்பதற்காக தான். அவர் அறிமுகப்படுத்திய ஆங்கிலமொழியை படித்துவிட்டு இன்று அவரையே விமர்சிக்கும் தேசியவாதிகள் இங்கு இருக்க தான் செய்கிறார்கள்.
மெக்காலேவின் இந்த அறிக்கையை படிக்கும்போது அவரது நோக்கம் தெளிவாகிறது, அவர் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமானால், 'இந்த லட்ச ரூபாய், இந்திய இலக்கியத்தை புதுப்பிப்பதற்கு மட்டுமின்றி பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு அறிவியல் ஞானத்தை அறிமுகம் செய்து மேம்படுத்துவதற்குமானது' என்கிறார். இத்தகைய அறிவியல் ஞானம் பெறுவதற்கு ஆங்கிலம் அவசியம் என்கிறார். அதே போல் பிரிட்டனில் ஆங்கிலம் கற்று சரளமாக பேசும் இந்திய சுதேசிகள் பற்றியும் அவர் குறிப்பிடுகிறார்.
"தாய் மொழி மூலம் தற்போது கற்பிக்க முடியாத சூழலில் உள்ள அம்மக்களுக்கு நாம் கல்வி கற்பிக்க வேண்டும்" என்ற வார்த்தை அந்த காலகட்டத்தின் கல்வி முறையை அம்பலப்படுத்துகிறது. குருகுலங்களும் மதராஸாக்களும் கற்பித்த கல்வி எதற்கும் உதவாத அறிவியலற்ற கல்வியாக இருந்தது. மேலும் தமிழ் போன்ற வழமையான மொழிகளின் இலக்கியங்களை பதிப்பிக்கும் பணி அப்போது தொடங்கி இருக்க வில்லை. எல்லிஸ் திராவிட மொழி குடும்பங்களின் ஒற்றுமை புள்ளியை பொது வெளிக்கு அறிமுகப்படுத்திய காலகட்டமாகவும் இது இருந்துள்ளது.
ஆங்கில கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி பேசும்போது, சமஸ்கிருதத்தில் இருக்கும் மூடத்தனங்களையும் அவர் விமர்சிக்க தவறவில்லை, ஒரு இடத்தில 'அமிழ்தும் வெண்ணையும் நிரம்பி வழியும் கடல்களைக் குறித்துப்பேசும் புவியியலை ஏற்றுக்கொள்வோமா?' என்று நக்கலடிக்கிறார். அதே போல் துறை சார் நிபுணத்துவம் பெற்ற மொழியாக சமஸ்கிருதத்தை விட ஆங்கிலமே விளங்குகிறது என்பது அவரது வாதமாக இருந்துள்ளது. ஆங்கிலம் இங்குள்ள சுதேசிகளை, விளிம்பு நிலை மக்களை மேம்படுத்த உதவும் என்று அவர் கருதினர். அது நம்மை மேம்படுத்தியுள்ளது என்பதே சமகால யதார்த்தம்.
உணவுக்கும், மரியாதைக்கும் வழியற்ற ஒரு மொழி கல்வியை(சமஸ்கிருதம், உருது) இவர்கள் இத்தனை ஆண்டுகளாக கற்றுள்ளார்கள் என்று வெதும்புகிறார், சமஸ்கிருதம் மற்றும் உருதுவில் இருக்கும் சுதேச சட்டநூல்களை கற்க தான் இவ்வளவு தொகை என்றால், அதன் தேவை ஒரு பொதுச்சட்டத்தால் முடிவுக்கு வரும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது என்று எச்சரிக்கவும் செய்கிறார். பின்னாட்களில் Indian Penal Codeஐ அறிமுகப்படுத்தியவரும் மெக்காலே தான் என்பது கூடுதல் செய்தி.
இங்குள்ள சுதேச கல்வியில் இருக்கும் மூடநம்பிக்கைகளை விமர்சித்து, அதை நவீனமாக்கவேண்டும் என்ற நோக்கமே அவரிடம் இருந்துள்ளது என்பதையே இந்த ஆறிக்கையின் வாயிலாக அறியமுடிகிறது.
மேலும் கல்வி என்பது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவர் கருதினார். அதற்கு நவீன அறிவியல் பண்புகளை கொண்ட ஆங்கிலம் அவசியம் என்றும் அவர் நினைத்திருந்தார். இதுவே நவீன ஆங்கில கல்வியை இங்கு அறிமுகப்படுத்துவதற்கு ஆரம்ப புள்ளியாக அமைந்தது.
இன்றைக்கு மெக்காலே பற்றி வாய்க்கு வந்ததை உளறிக்கொட்டுபவர்கள் இதை எல்லாம் படித்திருக்க வாய்ப்பில்லை, படித்திருந்தால் அவர்கள் அப்படி பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள். உண்மையை உரக்க சொல்ல நாம் அனைவரும் இந்நூலை படிக்க வேண்டும். மெக்காலேவின் நோக்கம் மகத்தான ஒன்றாக இருந்திருக்கிறது. அதனை பொதுவெளியில் எடுத்துவப்பதற்கு இந்நூல் நிச்சயம் பயன்படும்.
நூலின் பின்இணைப்பாக, இந்திய தேசிய ஆவண காப்பகத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த அறிக்கையின் ஆங்கில வடிவம் இடம்பெற்றுள்ளது.
அடுத்த பதிப்பு வரும்போது, இன்னும் சில கூடுதலான வரலாற்று தகவல்களையும் இந்நூலின் முன்னுரையில் இணைக்கவேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள்.
Comments
Post a Comment