தம்மம் சரணம் கச்சாமி

      





மண்டல்-மந்திர் -மார்க்கெட் என்ற அரசியல் தான் 90 களுக்கு பிறகான இந்திய ஒன்றிய அரசியலின் அடிநாதமாக இருந்து வருகிறது. 21 ஆம்  நூற்றாண்டின்  தொடக்கம் முதல் இந்த வரிசையில் மோடியின் குஜராத் வன்முறையும் இணைந்து. மண்டல்- மந்திர்-மார்க்கெட்- மோடி என்பதாக பரிணமித்திருக்கிறது. இவை நான்கும் இன்றைக்கு எட்டி இருக்கும் நிலை இந்தியாவின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் ஒன்றாக வளர்ந்துள்ளது. 


இந்த பருந்துபார்வையில் தான், அதே 90 களின் பிற்பகுதியில் நூற்றாண்டை அடைந்த அம்பேத்கரின் எழுச்சியையும் அதை இந்துத்துவம் தனதாக்கி கொள்ள எடுத்துக்கொள்ளும் சிரத்தையும் அணுகவேண்டும். 


ஒரு காலத்தில் இந்துத்துவம் எதிர் அம்பேத்கரியம் (Arun Shourie) என்று தொடங்கிய இந்த அரசியல் யுத்தம் அதன் பின் இந்துத்துவம் + அம்பேத்கரியம்(Ma Venkatesan, Vasumithra) என்பதாக மாறி, அம்பேத்கரியம் நீர்த்து போய்க்கொண்டும் இந்துத்துவம் எழுச்சி அடைந்துகொண்டும் இருக்கின்றது. 


இதற்கான காரணங்களை நேரு மற்றும் பெரியாரை முன்னிறுத்தி பட்டியலிடலாம் என்று நினைக்கிறேன். இந்துத்துவம் மற்றும் சங் பரிவாரங்கள் தங்களுக்கு துளியும் ஆகாத தலைமைகளாக(தத்துவங்களாக) பார்ப்பது இவர்கள் இருவரையும் தான். 


நேரு பேசிய சீர்திருத்த செகுலரிஸமும் பெரியாரின் பகுத்தறிவு நாத்திகம் கலந்த பிராந்திய சுயாட்சி அரசியலும் இந்துத்துவத்திற்கு எதிரான ஒன்றாக அமைத்தது எனலாம். சாவர்க்கர் சிந்தித்த இந்து ராஷ்டிரம் என்ற கனவிற்கு இந்த இரு தத்துவங்களும்(தலைமைகளும்) நேரெதிராக அமைந்தன. 


சாவர்க்கர் எழுதிய வரலாற்று எழுத்துக்களையும் நேரு எழுதிய Discovery of india வையும், பெரியாரின் தேசியம் பற்றிய சிந்தனைகளையும்  ஒப்பிட்டால் இந்த முரண்பாட்டை  உணர்ந்துகொள்ள முடியும். 


அம்பேத்கரை இவர்கள் அபகரிக்க முயல்வதற்கு சாதகமான ஒன்றாக இருப்பது மதம் மற்றும் மொழி ஆகிய இரண்டு குறித்தும் அம்பேத்கர் கொண்டிருந்த கொள்கைகள் என்றே நினைக்கிறேன். அவர் வேறு பல காரணங்களுக்காக இத்தகைய கொள்கைகளை கொண்டிருந்தாலும் சமகால சாதக பாதகங்களை கருத்தில் கொள்ளும் இந்துத்துவம் அதை இந்துத்துவ கொள்கைக்கு சாதகமான ஒன்றாகவே பார்க்கிறது. 


தமிழ்நாட்டில் சில அழிவு சக்திகளும் இதற்கு துணை போகாமல் இல்லை. பெரியார் எதிர் அம்பேத்கர், திராவிடம் எதிர் தலித்தியம், OBC எதிர் SC என தொடர்ந்து பல கதையாடல்களை கட்டமைத்து இந்துத்துவத்தை வார்த்தெடுக்க முயன்றனர். இது ஒரு அளவுக்கான வெற்றியை தமிழ்நாட்டில் எட்டி வடக்கில் பாமக எதிர் விசிக வாகவும் தெற்கில் புதிய தமிழகம் எதிர் திராவிடம் என்றும் மேற்கில் அதிமுக+பாஜக என்ற வகையிலும் தற்போது செயல்பட்டு வருகிறது. 


பிரித்தலும் அதன் பின் அழித்தலும் தான் எல்லாவிதமான ஆதிக்க தத்துவங்களின் பொது பண்பாக இருந்துள்ளது. இதை கணித்து இதற்கு எதிரான செயல் திட்டத்தை தீட்டும் அறிவுஜீவிகள் குறிவைத்து முடக்கப்படுவது நடைமுறையாக பின்பற்ற பட்டு வருகிறது. 


இதன் உச்சத்தை தான் சமகாலத்தில் நாம் பார்த்து வருகிறோம். 


அம்பேத்கர் பெரியார் போன்ற தலைவர்கள் நடைமுறைக்கு ஏற்ப்ப தங்களது தத்துவங்களை வடித்து கொண்டவர்கள். இலட்சியவாதத்தை கடந்த ஒரு யதார்த்த பண்பு இவர்களிடம் இருந்தது. இன்றைக்கும் போராட்டங்களிலும் எதிர்ப்புணர்வை பதிவு செய்வதிலும் இவர்களது மேற்கோள் தவறாமல் இடம்பெறும். இதை நீர்த்து போக செய்வது இந்துத்துவ செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. 


இந்த தத்துவங்கள் தீவிர தன்மையை இழக்கும் போது மக்களிடம் இருந்து எளிதில் அந்நியப்பட்டும் விடுகின்றன. பௌத்தமும் இந்து மதமும் ஒன்று என்று சொல்வதன் மூலம் பௌத்தம் என்ற தத்துவம் தனது தீவிர தன்மையை இழக்க நேரிடுகிறது அதை தொடர்ந்து எதிர் தத்துவத்துடன் ஒரு வித சமரசத்தை எட்ட முயல்கிறது. இது ஆதிக்க சக்திகளின் வெற்றிக்கும் சீர்திருத்த சக்திகளின் தோல்விக்கும் வழி வகுக்கிறது. அம்பேத்கரின் நினைவுநாளில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் இந்த செயல்திட்டத்தை ஒரு வடிவம் தான். அம்பேத்கரை இந்து என்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்றும் சித்தரிக்க முயல்வது இத்தகைய செயல்திட்டத்தின்  நீட்சி. 


இன்றைக்கு இந்து மக்கள் கட்சி முன்னெடுத்திருக்கும் இந்த தன்வயமாக்கம் என்பது வட இந்தியாவில் வெற்றி பெற்ற ஒன்று, தமிழ்நாட்டில் இது செயல்படாமல் இருப்பதற்கு திராவிட அரசியலோடு சேர்த்து பேசப்படும் அம்பேத்கரியம் தான் ஒரே காரணம். இதை சிதைக்க முயலும் நட்பு சக்திகளையும் களையெடுக்க வேண்டும். 


தம்மம் சரணம் கச்சாமி


Comments