Remembering MSS Pandian (1958-2014)

  



   இன்றைக்கு தமிழ் ஆய்வுப்பரப்பு மிக ஆரோக்கியமான ஒன்றாக இருக்கிறது, வாரம் ஒரு தமிழ்நாடு அரசியல்-பொருளாதாரம் சார்ந்த கட்டுரையையாவது முன்னணி ஆங்கில நாளேடுகளில் பார்க்கமுடியும். தமிழ்நாடு அரசியலையும் ஆளுமைகளையும் முன்வைத்து எழுதப்படும் புத்தகங்களும் அதிகரித்துள்ளது. ஆனால் 1980 களில் கூட இப்படி ஒரு நிலை இல்லை. மேற்கத்திய ஆய்வாளர்களும் உயர்சாதி காரர்களுமே பெரும்பாலான ஆய்வு நிறுவனங்களை நிரப்பி இருந்தனர். தமிழ் ஆய்வு சூழலும் மங்கிப்போன ஒன்றாக இருந்தது. திராவிட இயக்கம் அறிவியக்கமாக பார்க்கப்படாமல் கூத்தாடிகளின் இயக்கமாகவும், இனவெறி, தேசிய வெறி பிடித்த ஒன்றகவுமே சித்தரிக்கப்பட்டு வந்தது. 


இன்றைக்கு இந்த கண்ணோட்டங்கள் எல்லாம் ஓரளவுக்கு மாற்றப்பட்டு இருப்பதற்கு எம்.எஸ்.எஸ் பாண்டியனும் அவர் பாசறை மாணவர்களும் /ஆய்வாளர்களும் காரணம் என்றால் அது மிகையல்ல. The Dravidian Model,Rule of the Commoner,  Periyar: A study in Political Atheism போன்ற புத்தகங்கள் அவர் மாணவர்களாலும் அவருடன் நெருங்கி பழகியவர்களாலும் எழுதப்படுவது அவர் விட்டு சென்ற ஆய்வு பணியின் தொடர்ச்சியாகவே பார்க்கிறேன். 


விளிம்புநிலை மனிதர்களும், வெகுஜன அரசியல் பரப்பும், பெரியாரின் விமர்சன பார்வையும் பாண்டியனின் ஆய்வாக மட்டுமின்றி சிந்தனையின் அங்கமாகவும் இருந்தது. பிற்படுத்தப்பட்ட கிறித்துவ பின்னணியில் பிறந்து, தமிழ்நாட்டிலேயே Phd பட்டம் பெற்று, இங்கிருக்கும் அரசியலை , சமூக சூழலை, நம் மீதி மோசமான அபிப்ராயங்கள் கொண்டிருப்பவர்களிடம் 'நாங்கள் அப்படி இல்லை ' என்று சொல்வது பாண்டியனின் முக்கிய  நோக்கமாக இருந்தது. அவர் ஆங்கிலத்தில் மட்டும் எழுதியதற்கு இதுவும் ஒரு காரணம். 


இந்தாண்டு நான் சந்தித்த பெரும்பாலான மனிதர்களிடம் பாண்டியனை பற்றி தான் அதிகம் பேசி இருப்பேன், அதற்காக சந்தித்த மனிதர்கள் தான் அதிகம். அவர் வரித்துக்கொண்ட ஆய்வு பார்வை மிக முக்கியமான ஒன்று.  அது உருவான பின்னணியும் அவர் ஆய்வின் அடிக்குறிப்புகளும் சுவாரசியமானவை. பெரியார் பற்றிய கட்டுரை என்றால் துக்ளக் இதழில் இருந்து கூட ஒரு அடிக்குறிப்பு இடம்பெற்றிருக்கும். ஒரு ஆய்வை பற்றி அவருக்கு இருக்கும் சிந்தனையை சுற்றி இருப்பவர்களிடம் பேசுவதும் அவர்களிடம் விவாதிப்பதன் மூலம் அதை மெருகேற்றுவதும் அந்த கட்டுரையின் இறுதியில் தவறாமல் உதவியவர்கள் பெயரை குறிப்பிடுவதும் அவர் பண்பு என்றே சொல்லலாம். 


சொல்வதற்கு நிறைய உள்ளது, அவர் ஆய்வு பின்னணியை ஒரு ஆய்வாக செய்யலாம் என்றிருக்கிறேன். எப்போது முடியும் என்று தெரியாது ஆனால் பாண்டியனுக்கு என் அஞ்சலியை ஒரு புத்தகத்தை எழுதி தான்  தீர்த்துக்கொள்வேன். 


இன்றைக்கு எம்.எஸ்.எஸ் பாண்டியனின் பிறந்தநாள்.

16/12 






Comments