The Last Heroes - P. Sainath

   


  

இந்தியாவின் வெகுமக்கள் இயக்கங்கள் என்று எடுத்துக்கொண்டால் தேசிய இயக்கம், கம்யூனிச இயக்கம் , தலித்திய இயக்கம், திராவிட இயக்கம்  என்று வகைப்படுத்தலாம். சமகாலத்தில்  இந்துத்துவ இயக்கம் ஒரு வெகுமக்கள் இயக்கமாக வளர்ந்துவருவது வெளிப்படை. இந்த இயக்கங்களின் வரலாறு எழுதப்படும்போது அவ்வியக்கங்களின் முக்கியமான முகங்களே முதன்மைப்படுத்தப் படுவர். தேசிய இயக்கம் என்றால் காந்தி, நேரு , படேல், போஸ். கம்யூனிச இயக்கம் என்றால் எம்.என். ராய், அபானி முகர்ஜி, சிங்காரவேலர் போன்றவர்கள், தலித்திய இயக்கம் என்றால் அம்பேத்கர், கன்ஷி ராம் போன்றவர்கள் என்பதே வழக்கமாக இருந்து வருகிறது. 


இப்படியான மைய நீரோட்ட வரலாற்று எழுத்துக்களில் இருந்து சற்று விலகியும் சில புதிய வரலாற்று எழுத்துக்கள் அவ்வப்போது எழுதப்படுவதுண்டு. அவை இந்த இயக்கங்களின் பங்கேற்ற விளிம்புநிலை(Subaltern) மக்களின் வாழ்வியலை குறித்து பேசும். குறிப்பாக பெண்கள் மற்றும் தலித் பகுஜன்கள் ஆகியோரை சொல்லலாம். 


 அப்படி இந்திய தேசிய இயக்கத்தில் பங்கேற்ற முகம் தெரியாத முகங்களை பற்றி பேசும் நூல் தான் ஊடகர் P. Sainath எழுதி சமீபத்தில் வெளியாகி இருக்கும் “The Last Heroes - Foot Soldiers of Indian Freedom”. 


ஆனால் இந்த நூலிலும் சில தெரிந்த முகங்கள் இருக்க தான் செய்கிறார்கள். சங்கரய்யா, நல்லகண்ணு போன்ற தலைவர்கள் பற்றிய கட்டுரையும் இதிலடங்கும். இது தவிர்த்து பிற மாநிங்களில், குறிப்பாக மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களின் நடைபெற்ற காலனிய எதிர்ப்பு போராட்டங்களையும் அவர்களின் தற்போதைய நிலையையும் இந்நூல் பதிவுசெய்கிறது. 


இதுவரை பெரிதாக கேள்விப்படாத மற்றும் பேசப்படாத பகுதிகள் மீது இந்நூல் கவனம் குவிகிறது, விடுதலை போராட்டம் என்றால் காந்தி என்று பதிவாகிவிட்ட காலத்தையும் தாண்டி இப்போது விடுதலை போராட்டமென்ற ஒன்று நடைபெற்றதா என்ற நிலையை அடைந்து இருக்கிறது, சமூக கூட்டறிவு.  இங்குள்ள இளைஞர்கள் நுகர்வு கலாச்சாரத்தின் வருகையாலும் சமுகம் மீது அக்கறையற்றும்  இருந்துவருவதால்  இந்தியா வேறொரு காலனியத்தின் பிடியில் சிக்க கொண்டிருக்கிறது. இந்த நூலும் இதற்கு தீர்வு காண தான் எழுதப்பட்டுள்ளது. விடுதலை போராட்டம் எப்படி நடந்தது என்பதை விளக்க இந்நூலில் உள்ள விளிம்புநிலையினரின் வாழ்க்கை உதவுகிறது. 


இந்நூலில் இடம்பெற்ற ஒரு சிலரை தவிர பெரும்பாலான விடுதலை போராட்ட வீரர்கள் மறைவெய்திவிட்டனர். அவர்களில் பலர் தங்களின் வாழ்நாளில் ஒருமுறை கூட விடுதலை போராட்ட வீரருக்கான ஓய்வூதியம் வாங்காதவர்கள். காரணம் இந்திய அரசின் விதிமுறைகளின்படி அவர்கள் செய்த போராட்டமெல்லாம் விடுதலை போராட்டத்தில் அடங்காது என்பதால். 


ஒரு விடுதலை போராட்ட வீரருக்கும் அவரது 20 சகாக்களுக்கு சமைத்துப்போடும் ஒரு பெண் விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர் தானே. யார் ஒருவரையும் கொல்லாமல் காட்டில் பதுங்கி இந்திய தேசிய ராணுவத்திற்கு(INA) உளவு வேலை பார்க்கும் ஒருவர் விடுதலை போராட்ட வீரர் தானே?  உள்நாட்டிலுள்ள சாதி மற்றும் வர்க்க பாகுபாடுகளுக்கு எதிராக குரல் எழுப்பியவர்களும் நிலவுடைமை ஆதிக்கத்துக்கு எதிராக போராடியவர்களும் இந்தியாவின் சமூக விடுதலையை பேசிய விடுதலை போராட்ட வீரர் தானே? 


இப்படி ஒரு வெகுமக்கள் இயக்கத்தின் மூலகல்லாக இருந்த எளியமக்களை தான் கடைசி கதாநாயகர்கள் என்கிறார் சாய்நாத். இதிலுள்ள 15 பேரை போல் பல கோடி நபர்கள் இந்திய விடுதலைக்காக களத்தில் போராடி சிறைசென்றுள்ளனர், சிலர் ரகசியமாக உதவி செய்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை இவர்களின் வாழ்க்கையை வைத்து கற்பனை செய்துகொள்ளலாம். 


காந்தி, பகத்சிங், சுபாஷ் சந்திர போஸ் போன்ற தலைவர்களால் உந்தப்பட்டு அதன் காரணமாக போராட்டக்களம் கண்டவர்களாக இவர்கள் இருந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட விடுதலை வீரர்களுள் ஒருவரான துரைசாமி மோடியை விமர்சித்து விட்டார் என்பதற்காக அவரை தேச துரோகி என்றும், பாகிஸ்தானி உளவாளி என்றும் விடுதலை போராட்டத்தில் பங்கேற்காதவர் என்றும் சங்பரிவாரங்கள் பொய் பரப்புரை செய்துவருவதை இந்நூல் ஆசிரியர் குறிப்பிட்டு வெதும்புகிறார். இந்தியா தற்போது சந்தித்துவரும் பிரச்சனை முற்றிலும் புதிதான ஒன்று, மதவாத பாசிசத்திற்கு இந்தியாவில் இதற்கு முன் எவ்வித வரலாற்று ரீதியிலான எடுத்துக்காட்டும் இல்லை என்பதை தான் இது சுட்டுகிறது.


சங்கரய்யா மற்றும் நல்லகண்ணு ஆகியோர் பற்றிய கட்டுரைகள் சிறப்பாக இருந்தது, பல கட்டுரைகள் உருக்கமானதாகவும் பரிதாபத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவும் இருந்தது. என்ன காரணத்தாலோ சாய்நாத்தின் முந்தைய நூலான “EveryBody Loves a Good Drought” ஏற்படுத்திய பொறுப்புணர்வை இந்நூல் ஏற்படுத்தவில்லை. ஒருவேளை வரலாற்றில் இருந்து முற்றிலும் அந்நியமாக்கப்பட்ட தலைமுறையை சேர்ந்தவன் என்பதாலா? என்பதும் விளங்கவில்லை.  

 

ஒவ்வொரு கட்டுரையின்  இறுதியிலும் இடம்பெற்றிருக்கும் புகைப்படங்களுக்கான QR இணைப்பு  புதிய முயற்சி. PARI என்ற இணைய ஊடகத்தில் வெளியான கட்டுரைகளின் மேம்படுத்தப்பட்ட பாதிப்பு இது என்பதை அனுமானிக்க முடிகிறது. 


தேசிய விடுதலை இயக்கத்தை போலவே அனைத்து வெகுஜன  இயக்கங்களுக்கும்  இதுபோன்ற விளிம்புநிலையினர் தான் ஆதாரமாக இருந்துள்ளனர், அவர்களுடைய வரலாறும் பதிவு செய்ய படவேண்டும் என்பதை தான் இந்நூல் அழுத்தமாக சுட்டிக்காட்டுகிறது. 


இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற கணக்கற்ற தொண்டர்படையின் வரலாறும் பிற திராவிட இயக்க தொண்டர்களின் வரலாறும் இதுபோல்  எழுதப்பட்டால் சிறப்பாக இருக்கும். 


இந்தாண்டு வெளியான முக்கியமான நூல்களின் பட்டியலில் இந்நூலும் அடங்கும். 




Comments