கனிமொழி கருணாநிதி

   




20 ஆம் நூற்றாண்டில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை  அதிகம் கொண்ட சமூக அரசியல் இயக்கமாக திராவிட இயக்கம் விளங்கியது. பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளும் பெண் உடல் மீதான  ஆதிக்க மனநிலையும் நிறைந்திருந்த ஒரு பிற்போக்கு சமூகத்தில், சுயமரியாதை நிறைந்த பெண்  விடுதலையையும் அவர்களுக்கான பிரதிநிதித்துவதையும் பேசியதாலேயே இது சாத்தியப்பட்டது. சுயமரியாதை இயக்க மாநாடுகளின் ஒரு பகுதியாக நடந்த பெண்கள் மாநாடு இதற்கொரு சான்று. 


 இது தவிர்த்து Revolt போன்ற  திராவிட இயக்க இதழ்களில்  பெண் எழுத்தாளர்களின் பங்களிப்பு, முதல்இந்தி எதிர்ப்பு போரட்டத்தில் அதிகளவிலான பெண்களின் பங்கேற்பு என்று திராவிட இயக்கம் ஆரம்ப காலகட்டம் முதலே பெண்களின் இயக்கமாகவும் இருந்து வந்துள்ளது. 


பெரியாருக்கு பட்டம் கொடுக்கப்பட்ட பெண்கள் மாநாடு பற்றிய செய்தி ஓரளவுக்கு நாம் அறிந்திருந்தாலும். திமுக பங்கேற்ற முதல் தேர்தலில்  வென்ற 15 வேட்பாளர்களில் ஒருவர் பெண் என்பதும்  1967 அண்ணாவின்  முதல் அமைச்சரவையில் சத்யவானி முத்து இடம்பெற்றிருந்தார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. காங்கிரஸ் கட்சியின் முதல் அமைச்சரவையோடு ஒப்பிட்டால் இந்த மாற்றத்தை நம்மால் உணர முடியும்.1952 ராஜாஜி அமைச்சரவையிலும் அதை தொடர்ந்து அமைந்த காமராஜர் அமைச்சரவையிலும் ஒரு பெண் கூட இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  திமுக நேரடியாக  தேர்தலில் பங்கேற்க தொடங்கிய முதல் தேர்தலான 1957இல் தான் காங்கிரஸ் கட்சி ஒரு பெண் அமைச்சரை நியமிக்க முன்வந்தது. 


கலைஞரின் வசனம் இடம்பெற்ற பராசக்தி படம் தொடங்கி பெண்ணியத்தை அதிகம் பேசிய பணம் திரைப்படம் வரை திராவிட சினிமாவின் முக்கிய அங்கமாக பெண்ணியம் இருந்துவருகிறது.  இந்த பங்களிப்புகள் எல்லாம் பெரிதாக பேசப்படாமல் இருப்பதற்கு அவை பதிவுசெய்ய படாமல் இருப்பதே காரணம் என்று கருதுகிறேன்.  


நாகம்மையார், கண்ணம்மாள், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், குஞ்சிதம் குருசாமி, மீனாம்பாள் சிவராஜ், வீரம்மாள், எஸ்.தருமாம்பாள், நீலாவதி அம்மையார், மணியம்மையார், பொற்செல்வி இளமுருகு, மலர்முகத்தம்மையார், தாமரைக்கனி அம்மையார், திருவரங்க நீலாம்பிகை, சத்யவானி முத்து, மஞ்சுளா பாய், மிராண்டா கஜேந்திரன், லட்சுமி அம்மையார், பரிபூரணத்தம்மையார், சிவகாமி அம்மையார்,அலமேலு அப்பாதுரை போன்ற பெண்களின் பட்டாளத்தை கொண்டது திராவிட இயக்கம். வரலாறு பெரிதாக ஒளிபாய்ச்சாத இடங்கள் இவை. 


நிலத்தை பாதுகாக்க வீராத்தை மையமாக கொண்டு  'நாம்- பிறர்' என்ற இருமைகளை அடிப்படையாக கொண்டிருந்த இந்திய தேசிய காணோட்டம் ஆண் தன்மையை(masculine) கொண்டிருந்தது என்றால். தமிழ் மொழியை 'தாய் மொழி'  என்று முன் நிறுத்தியதன் மூலமும் மொழி சார்ந்த கடவுளை 'தமிழ் தாய்' என்றதன் மூலமும் மொழி சார்ந்த தேசத்தை(தாய் தமிழ்நாடு) எந்த வித இருமைகளுக்குள்ளும் அடங்காத திராவிட அரசியல் பெண் தன்மை(Feminine) கொண்டதாக இருந்தது. (தேசிய கவிஞரான பாரதி தந்தையர் நாடு என்று தான் இந்தியாவை முன்னிறுத்தினர் என்பது இங்கு குறிப்பிட தக்கது, ஹிந்துத்துவா முன்னெடுக்கும் பாரத மாதா என்ற நிலம் சார்ந்த சொல்லாடல் தனி கதை). 


திராவிட இயக்கம் கைக்கொண்ட பகுத்தறிவும், தமிழ் மொழியின் நெகிழ்வுத்தன்மையும், தமிழ் என்ற பரந்துபட்ட அடையாளத்திற்குள் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதே இதற்கு காரணமாக அமைந்தது.    பெர்னார்ட் பேட் போன்ற மொழியியல் ஆய்வாளர்கள் திமுகவின் செந்தமிழ் மேடைத்தமிழை பெண் தன்மை கொண்ட ஒன்றாக வரையறை செய்துள்ளனர். 


ஆதிக்க மனநிலை கொண்ட பார்ப்பன வகுப்பில் பிறந்திருந்தாலும் ஜெயலலிதா போன்ற ஒருவரை திராவிட இயக்கம் தலைவராக ஏற்றுக்கொள்ள இயல்பாகவே  பெண்தன்மை கொண்டிருந்த திராவிட கோட்பாட்டு அம்சங்களே காரணமாக அமைந்தது. 


‘புரட்சி’ தலைவி ஜெயலலிதா பெண்ணாக இருந்து முன்னெடுத்த அராஜக அரசியல்:  வீரம், துணிவு, வலிமை போன்ற ஆண்தன்மை உணர்வுகளாகவே வெளிப்பட்டது. அவரது சாதி இத்தகைய பண்புக்கு காரணமாக இருந்தது. தொண்டர்களை அழைக்க எம்ஜியார் கையாண்ட 'ரத்தத்தின் ரத்தங்களே' என்ற சொல்லாடலையே ஜெயலலிதா கையாண்டார்.  இங்கு ரத்தம் என்பது தலைவருக்கும்- தொண்டருக்குமான பிணைப்பை காட்டினாலும் வன்முறை, வெறி, வீரம்  போன்ற அராஜக கூறுகளை கொண்ட சொல்லாடலாக இருந்தது . 


இதற்கு நேர் எதிர் பண்பினை கொண்டிருந்தவர் கலைஞர் கருணாநிதி, இலக்கியம், சினிமா, அரசியல், குடும்ப வாழ்கை என அனைத்திலும் ஒரு மென்மையான போக்கினை அவர் கையாண்டார், அவர்  தனது தொண்டர்களை ‘எனதுயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே’ என்று மென்மையாகவே அழைத்தார்.  அனைவரையும் அரவணைத்து செல்லும் பண்பு அவரிடம் இருந்தது. பின்னாட்களில் அரசியலிலும் குடும்பத்திலும்  இதற்கான விலையை கொடுக்க நேரிட்டது. திமுகவை விட்டு வைகோ விலகி செல்ல வைகோவின் வீரம் செறிந்த பேச்சும், மென்மை தன்மையற்ற போக்கும் தான் காரணமாக இருந்தது. 


கனிமொழியை பெண் என்ற காரணத்தால் ஜெயலலிதாவின் வழித்தோன்றலாக முன்னிறுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை, திமுக தலைமைக்கே உரிய அனைத்து பண்புகளையும் அவர் கொண்டிருக்கிறார். ஸ்டாலின்,  கனிமொழி கருணாநிதி, உதயநிதி ஸ்டாலின் என்று முறையே திமுகவின் தலைமை படிநிலை  அமையவேண்டும் என்பது என் விருப்பம் . 


அப்பாவிடம் இருந்த குணங்கள் வந்ததாக நான் ஒப்புக்கொள்ள மாட்டேன், கனிமொழி, சுயம்பாக வளர்ந்தவர். விரும்பியதை செய்யும் தன்மையும், ஒரு விஷியத்தை சுயமாக கற்று தேறும் பண்பும் அவராக உருவாக்கி கொண்டது. பின்னாட்களில் அவருடைய அரசியலிலும் இது பிரதிபலித்தது. கவிஞராக இருந்து அரசில்வாதியாக ஆகியது , 2G வழக்கை பக்குவமாக எதிர்கொண்டது, கட்சியா? பதவியா? என்ற கேள்வி எழும் சமயங்களில்  எல்லாம் கட்சியை முதன்மையாக்குவது என அனைத்தும் மென்மையான ஒன்றாகவே அமைந்திருந்தது.  சென்னை சங்கமம், நெய்தல் திருவிழா போன்ற கலாச்சார முன்னெடுப்புகள் திராவிட இயக்க  தலைமைகளுக்கே உரித்தான ஒன்று.  


திராவிட இயக்கத்தின் மீது நியாமான விமர்சனமென்றால் கட்சியிலும் ஆட்சியிலும் சொற்ப அளவில் இருக்கும் பெண்கள் பிரதிநிதித்துவத்தை சொல்லலாம். உள்ளாட்சியில்  ஓரளவுக்கான பாலின பிரதிநிதித்துவத்தை சாத்திய படுத்தி இருந்தாலும் , மற்ற தளங்களிலும் அது சாத்தியப்பட வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே கனிமொழி, கட்சிக்குள் தனது பிடியை நிலைநிறுத்திக்கொள்ள கொள்ள முடியும். 


ஜெயலலிதாவாக தன்னை காட்டிக்கொள்ள முயலாமல் கலைஞர் கருணாநிதியின் இயல்புடன் இருப்பதே அவருக்கும் திமுகவின் எதிர்கால அரசியலுக்கும் ஆரோக்கியமானது. 


ஒன்றிய அரசியலில் முரசொலி மாறன் விட்டு சென்ற வெற்றிடத்தை கனிமொழி நிரப்பி இருக்கிறார். ஒன்றிய அரசியலில் கட்சியின் தலைமைக்கு நம்பத்தகுந்த ஒரு நபரையாவது நிலையாக வைத்திருப்பது திமுக பாணி அரசியல். சம்பத் தனி கட்சி தொடங்கியது முதலே இந்த சுதாரிப்பு தொடங்கி விட்டது. அண்ணாவே சில காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தது இதன் காரணத்தால் தான்.  மாறனுக்கு பிறகு கனிமொழி அவ்வாறான நம்பிக்கைக்குரிய ஒருவராக செயல்படுகிறார். மாறனால் அடையமுடியாத கட்சி பொறுப்புகளையும் கனிமொழி அடைவர் என்பது என் அவதானிப்பு. 


 கலைஞரின் மனசாட்சியாக மாறன் இருந்ததைப்போல் ஸ்டாலினின் மனசாட்சியாக கனிமொழி கருணாநிதி இருப்பார், அவருக்கே உரிய சுயம்புத்தனத்தால் அத்தகைய இடத்தை கனிமொழி அடைவார். 


பிறந்தநாள் வாழ்த்துகள்  












Comments