மாறாது என்று எதுவுமில்லை // நூல் அறிமுகம்

   



 பல நேரங்களில் நேர்காணல்களை ஒளி-ஒலி வடிவில் நுகர்வதைவிட எழுத்தாக வாசிப்பது சிறந்த அனுபவமாக அமைந்திருக்கிறது. பேரா. வசந்தி தேவி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் உடன் நடத்திய உரையாடல் ஆங்கிலத்திலும்(A CRUSADE FOR SOCIAL JUSTICE) தமிழிலும்(சமூக நீதிக்கான அறப்போர்) நீண்ட நெடிய புத்தகமாகவே வெளியாகி இருக்கிறது.  பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவனின் நேர்காணல்கள் எல்லாம் தொகுக்கப்பட்டு ஒரு நூலக படிக்க கிடைத்தது. இந்த இரண்டு நூல்களும் நேர்காணல் வகைமையில் மிக முக்கியமானவை, பல்வேறு புரிதல்களை நமக்கு அளிக்கவல்லவை. இந்த வகைமையில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் நூல் 'மாறாது என்று எதுவுமில்லை'. சமூக செயற்பாட்டாளர் பெஜவாடா வில்சனை எழுத்தாளர் பெருமாள் முருகன் நேர்கண்டுள்ளார்.காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தலைப்பே ஒரு மாற்றத்திற்கான நம்பிக்கையாக வெளிப்படுகிறது. நேர்காணல் அந்த மாற்றத்தை நமக்குள் ஏற்படுத்துகிறது. 


 எதேர்ச்சியாக ஜனவரி 11 இரவு வாசிக்க எடுத்தேன், முதல் பக்கத்திலையே 2015 ஜனவரி 12 வாழ்வின் மறக்கமுடியாத நாள் என்றும்    'எழுத்தாளர் பெருமாள் முருகன் செத்துவிட்டான் ' என்று எழுதி இருந்தார்பெருமாள் முருகன். உண்மையிலயே மாதொருபாகன் நாவலும் அதை சுற்றி நடந்த சர்ச்சைகளும் தான் என்னை இலக்கிய வாசிப்புக்கு அறிமுகப்படுத்தியது, பொங்கல் சமயத்தில் பூவரசன் மரத்தடியில் படுத்தபடி மாதொருபாகன் நாவலை படித்த அனுபவத்தை இந்த முன்னுரையை படித்துக்கொண்டே அசைபோட்டேன். 


"கோழையின் பாடல்கள்" கவிதை நூலை படிக்கும்போதெல்லாம் இந்த காலகட்டத்தில் பெருமாள் முருகன் அனுபவித்த வலியை உணரமுடியும். எந்தவொரு படைப்பாளிக்கும் நேரக்கூடாத அனுபவம் அது. ஜனவரி 12 அன்றே இந்நூலுக்கு அறிமுகம் எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் நேற்றிரவு தான் படித்து முடிக்க முடிந்தது, கால தாமதத்துக்கு வருத்தம். 


தகழி சிவசங்கர பிள்ளையின் 'தோட்டியின் மகன்' நாவல் தொடங்கி சமீபத்தில் வெளியாகி இருக்கும் தமிழ் பிரபாவின் 'கோசலை' நாவல் வரை ஏதோ ஒரு விதத்தில் மலக்குழி மரணங்களும், மலம் அள்ளும் மனிதர்களும் பதிவுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.  மஞ்சள் நாடகம் தொடங்கி விட்னஸ் திரைப்படம் வரை அனைத்து கலை புலத்திலும் மலக்குழி மரணங்கள் பற்றிய உரையாடல்கள் எதிரொலிக்க தொடங்கி இருப்பது வரவேற்கத்தக்கதே. 


சுத்தம்- அசுத்தம் என்ற இருமைகள் சாதியை பாகுபாட்டுக்கான காரணிகளில் முக்கியமான ஒன்று. இந்த சுத்த -அசுத்த கோட்பாட்டின் மூலமே தீண்டாமை நிலைநிறுத்த பட்டிருக்கிறது. அசுத்த பண்பு கொண்ட ஒன்றாக மனித மலம் அறியப்படுகிறது. இந்த வார்த்தையே முகச்சுளிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கிறது. ஆதிக்கசாதிகள் நீரில் மலம் கலப்பதை வாழ்நாள் சாதனை போல் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இன்னொருபுறம் மலக்குழி மரணங்கள் நடந்தவண்ணம் இருக்கிறது. கூடையில் தூக்கிச் சுமந்த காலம் போய் நகர்மயமாக்களில் விளைவாக குழியில்  இறங்கி இறப்பது அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இந்த நிலை சமீபகாலங்களில் அதிகரித்துள்ளது. நிலவுடைமை துளியும் குறையாமலிருக்கும் மாநிலங்களில் இன்னும் கூடையில் மலமள்ளும் நடைமுறையும் இருக்கவே செய்கிறது. இந்நிலையில் கையால் மலம் அள்ளும் வேலையே ஒழிப்பதற்காகவும் துப்புரவு பணியாளர்களுக்காகவும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருபவராக பெஜவாடா வில்சன் அவர்களுடனான உரையாடல் கவனம் பெறுகிறது.  


துப்புரவு பணியை, தூய்மை பணி என்றழைப்பதன் மூலம் அந்த வேலைக்கு ஒரு புனித தன்மையை வழங்கவே நாம் முற்படுகிறோம், துப்புரவுதொழிலார்கள் மீதான எவ்வித அக்கறையும் அதில் வெளிப்படுவதில்லை. Gig-Work என்ற எவ்வித நலவாரியமும் அமைப்பு கட்டுமானமும் இல்லாத ஒரு தொழிலாளாக துப்புரவு  தொழில் மாற்றமடைந்துள்ளது. தனியார் நிறுவங்களின் வருகையும் அரசின் நிதி சுமையும், அரசு துறைகளில் கூட இந்த அமைப்பற்ற நிலைமையை சாத்தியப்படுத்தியுள்ளது. ஒப்பந்த ஊழியர்களாகவே இவர்கள் பார்க்கப்படுகிறார்கள். 


உலகம் முழுக்கவே இத்தகைய துப்புரவு பணி என்பது நடைமுறையில் இருந்தாலும் இந்தியாவில் மட்டும் குறிப்பிட்ட சாதியின் தொழிலாக இது இருக்கிறது. பதினைந்தாம் நூற்றாண்டில் இந்திய பயணம் மேற்கொண்ட பாஹியான் என்ற சீனர் எழுதிய வரலாற்று குறிப்பில் கூட மலமள்ளும் தொழிலில் ஒரு சமூகத்தவர் ஈடுபட்டிருந்தனர் என பதிவுசெய்திருக்கிறார். ஏற்கனவே இருந்த நிலை தான் பிரிட்டிஷ் வருகைக்கு பிறகு நிறுவனமயபட்டுள்ளது. இந்தியா அரசியல் விடுதலை அடைந்த பின்னரும் கூட இந்த நிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்கிறார் வில்சன். 


இந்த நேர்காணலில் என்.ஜி.ஓகள் பற்றி இவர் கூறும் பகுதிகள் ஒரு சமூக செயற்பாட்டாளராக இவர் மீதான மதிப்பை கூட்டுகிறது, என்.ஜி.ஓகள் தற்காலிக, தனிநபர் சார்ந்த தீர்வுகளை வழங்கும் அமைப்புகளாக பார்க்கும் பார்வை 35 ஆண்டு கள செயல்பாட்டின் விளைவு என்றே நினைக்கிறேன். அரசையே  என்.ஜி.ஓகளிடம் அடகுவைக்கும் போக்கு தீவிரமடைந்து வரும் இதுபோன்ற காலகட்டத்தில் வில்சன் போன்ற அனுபவமிக்க கள செயல்பாட்டாளர்களின் கூற்றுக்கு சார்ந்தோர் செவிசாய்க்கவேண்டும்  


தீர்வு என்பது அரசிடமும் சட்டமியற்றுவோரிடமும் அதை செயல்படுத்துவோரிடமுமே இருக்கிறது என்ற இவரது கூற்று கவனிக்கத்தக்கது. இப்படியான துப்புரவு தொழிலார்கள் பற்றியும் அவர்களுடனான அனுபவம் பற்றியும் ஆழ அகலங்களை கொண்ட நேர்காணலாக இது அமைந்துள்ளது. கடைசி பகுதியில் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசும் வில்சனிடம், சமூக அக்கறையே அதிகம் வெளிப்படுகிறது. 


“இன்றைய காந்திகள்” என்று ஒரு நூல் சில ஆண்டுகளுக்கு முன் வெளியானது, அதில் சில முக்கிய ஆளுமைகள் இடம்பெற்றிருந்தனர். அதை போலவே “இன்றைய அம்பேத்கார்கள்” என்று ஒரு நூல் வருமானால் அதில் பெஜவாடா வில்சனின் பெயர் இடம்பெற அனைத்து தகுதியும் கொண்டிருக்கிறது. இந்த  நேர்காணல் அதற்குச் சான்று. 


வாய்ப்புள்ளோர் அவசியம் வாசிக்கவேண்டிய நூல். 





Comments