ஒரு தலித் போராளி வாழ்வும்-காட்டிய வழியும்


 காலனிய காலத்து தமிழ்நாட்டில் தொடங்கி இன்று தலித் வரலாற்றியலும் தலித் முன்னோடி ஆளுமைகளின் சரித்திரமும் வந்தடைந்திருக்கும் இடம் கவனிக்கப்படத்தக்கது.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி பத்தாண்டுகள் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் முதல் இரண்டு பத்தாண்டுகள் அயோத்திதாசர் மற்றும் கோலார் தங்க வயல் வகையறாவின் காலகட்டம் எனலாம். (பார்க்க ஆலோசியஸ், ஸ்டாலின் ராஜாங்கம், கீதா, ராஜதுரை). 


இந்திய தேசிய  விடுதலை இயக்கத்தில் காந்தியின் வருகைக்கு முன்னும் மெட்ராஸ் மாகாணத்தில் நீதி கட்சியினரின் வருகைக்கு முன்னும் தலித் அரசியல் பௌத்த மதமாற்றத்தை முன்னிறுத்தும் ஒன்றாக இருந்தது. அதன் பின் இருபெரும் ஆளுமைகளாக  ரெட்டைமலை சீனிவாசனும் எம்.சி.ராஜாவும் மாகாண மற்றும் தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களாகவும் செல்வாக்கு செலுத்துபவர்களாகவும் திகழ்ந்தனர். 


பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் வருகையோடு கோலார் தங்க வயல்காரர்களும், மீனாம்பாள் போன்றவர்களும் இணைந்து பணியாற்ற தொடங்கினர். 1930களில் மதமாற்ற கோரிக்கை என்பது இந்திய அளவில் அம்பேத்கரால் முன்னெடுக்கப்பட்டது.  இஸ்லாம், கிறித்துவம், சீக்கிய மதங்கள் அவரது விருப்ப மதங்களாக விளங்கின .1935 பிப்ரவரி மாதம் ‘ தமிழ் மக்களுக்கு இஸ்லாம் மதமே பொருத்தமான’தென்று குடியரசில் பெரியார் தலையங்கம் எழுதினார். 


1935 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய அரசு சட்டத்தாலும்  அதை தொடர்ந்து கிளர்ந்த இரண்டாம் உலக போரின்(1939) சமயத்திலும் இந்த போக்கு மட்டுப்பட்டது. தேசியம் குறித்தான சிந்தனைகள் மதமாற்ற கோரிக்கையை பின்னுக்கு தள்ளின. ஜின்னாவின் ‘பாகிஸ்தான்’ கோரிக்கை இஸ்லாம் மதமாற்றத்தை மேலும் முடக்கிப்போட்டது. 


விடுதலைக்கு பிறகான தலித் அரசியல் இந்திய அளவில் இரண்டு பெரும் போக்குகளை கொண்டிருந்தது. காந்தியின் “ஹரிஜன சேவை சங்கம்” காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டையும், அம்பேத்கரின் scheduled caste federationகாரர்கள் பிராந்திய அளவிலான தேர்தல் அரசியலிலும் ஈடுபட தொடங்கி இருந்தனர்.  லேபர் கட்சி - Scheduled Caste Federation- குடிஅரசு கட்சி என்று அம்பேத்கரின் தேர்தல் அரசியல் பரிணாமம் இருந்தது.  


இந்திய அரசின் அமைச்சரவை பொறுப்புகளில் இருந்து விலகிய பிறகு பல லட்சம்  மக்களை உள்ளடக்கிய அம்பேத்கரின் பௌத்த மதமாற்றம் நாக்பூரில் நடந்தேறியது. பெரியாரும் இந்த காலகட்டத்தில் தலித்துகளுக்கு  பௌத்தத்தை பரிந்துரைப்பவராக இருந்தார். 1954இல்  பர்மாவில் நடைபெற்ற அனைத்துலக பௌத்த சமய மாநாட்டில்  அம்பேத்கர்-பெரியார் இடையிலான சந்திப்பு இதனை தெளிவு படுத்தி இருந்தது. 


அம்பேத்கரின் இறப்புக்கு பிறகு 1990கள் வரை அகில இந்திய தலித் இயக்கம் தளர்வுற்று போய் இருந்தது எனலாம். உள்நாட்டளவில் 1950 கள் முதலே காங்கிரஸின் தேசிய சிந்தனைக்கு எதிரான பிராந்திய அளவிலான தேசிய சிந்தனைகளின் உருவாக்க காலகட்டமாகவும், அண்டை நாடுகளுடனான போரும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதிக்கம் மேலோங்கிய கலகட்டமாகவும் இருந்தது. 


1952 இல் நடந்த பொது தேர்தலில் Scheduled caste federation  வேட்பாளர்களை ஆதரித்த திமுக, 1957 முதல் நேரடி தேர்தலின் பங்கேற்க தொடங்கியது. 1957 களில் திமுக பள்ளு -பறையர் கட்சி என்றே அறியப்பட்டதாக சொல்கிறார் ஆய்வாளர் எஸ்.வி.ராஜதுரை. 


பசுமை புரட்சிக்கு பிறகும் 1969இல் கலைஞர் முன்னெடுத்த நில சீர்திருத்தங்கள் மூலமும் தலித் - தலித் அல்லாதாருக்கிடையிலான பூசல் மேலோங்க தொடங்கியது. அனைவரையும் உள்ளடக்கிய திராவிட நாடு என்ற திமுகவின் குடிஅரசு சிந்தனை(Republican ethos) இந்த காலகட்டத்தில் நீர்த்து போய் இருந்தது  , மேலும் ஒற்றை அடையாள ஒற்றுமைக்கான சாத்தியப்பாடுகளை குறைந்தது.  சாதிய பிரச்சனைகளால் உருவான குடிசை எரிப்புகளை சம்பவங்களை  தொடர்ந்து குடிசை மாற்று வாரியங்களை தொடங்கினர் அப்போதைய முதலமைச்சர் கலைஞர். சட்டநாதன் ஆணையம், ராஜமன்னார் குழு போன்ற ஆணையங்களை  அமைத்து இதுபோன்ற சமூக-அடையாள சிக்கல்களுக்கு தீர்வுகாணும் முனைப்பில் இறங்கினார் கலைஞர் கருணாநிதி. அதிமுக என்ற சிந்தனையற்ற பிம்ப அரசியல் கட்சியின் உருவாக்கமுமம்  நெருக்கடி நிலையும் இத்தகையிலான ஒருங்கிணைப்பை சுக்குநூறாக உடைத்து போட்டது. 


1980களில் சாதிய ரீதியிலான கட்சிகளின் அணிதிரட்சி தமிழ்நாடு முழுக்க நடக்க தொடங்கியது. அதிமுக தெந்தமிழகத்தின் கணிசமாக வாக்காளர்களை  சாதி செல்வாக்கின் காரணமாக தன்வயப்படுத்தி இருந்தது. 


1970களின் இறுதியில் இந்நூலின் நாயகனான டி.எம்  மணி போன்ற தலித் விடுதலை போராளிகள் பிராந்திய அளவில் முக்கியமான ஆளுமைகளாக உருவாக தொடங்கினர். அவர்கள் அம்பேத்கர் முன்னெடுத்த மதமாற்றத்தை மீண்டும் கையிலெடுக்க தொடங்கினார்கள். ஒரு பக்கம் இந்துத்துவ இயக்கமும் இதே காலகட்டத்தில்  ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்திருந்தது. 


வட தமிழகத்தில் புரட்சி இயக்கங்களின் வருகையும் ஈழ போராட்டமும் இதே காலகட்டத்தில் தான் நடந்தது. சட்டப்பேரவையில் திமுக வலுவிழந்து போய் இருந்தது, இதன் விளைவு மக்களை புரட்சி இயக்கங்களை நோக்கி நகர்த்தியது. வீரப்பன் போன்ற தீவிரவாதம் பேசிய தலைவர்கள் அரச பயங்கரவாதத்தால் உருவாகி இருந்தனர்.  


சாதிய- மத ரீதியிலான நெருக்கடிகளை தமிழ்நாட்டு தலித்துகள் எதிர்கொண்டவிதத்தை  மீனாட்சிபுரம் மத மாற்ற நிகழ்வின்  மூலம் அனுமானிக்கலாம். இளையபெருமாள், டி.எம்.மணி போன்ற தலைவர்கள் சமூக கொடுமைகள் தான்  இதுபோன்ற  மதமாற்றங்களுக்கு காரணமாக குறிப்பிட்டனர்.  இந்த காலம் முதலே தலித் விடுதலை இயக்க நடவடிக்கைகளை ஒரு புறம் முன்னெடுத்துக்கொண்டே இஸ்லாம்  மதமாற்றத்தை மக்களிடம் பரப்பி வந்தார் டி.எம்.மணி. 


இந்திய அளவில் பௌத்த இயக்கத்தின் வீழ்ச்சியும், அதை இந்துத்துவ இயக்கம் அபகரித்திருந்ததும்  டி.எம்.மணி போன்றவர்களை இஸ்லாத்தை தீர்வாக முன்னெடுக்க வித்திட்டது. 


எழுபதுகள் முதலே தீவிரமாக இயக்க நடவடிக்கைகளை முன்னெடுத்த டி.எம்.மணி மறையும் வரை எந்த இடதுசாரி இயக்கங்களுடனும் ஒன்றிணையவில்லை. சமுதாயம் குறித்தான கம்யூனிஸ்டுகள் முன்வைத்த  வர்க்க பார்வையை அவர் நிராகரித்தார். 


பாமாவின் “கருக்கு” நாவல் உள்ளிட்ட தலித் இலக்கிய வகைமைகளை ‘இழிவை’ காரணம்காட்டி டி.எம்.மணி நிராகரித்தார். பறை மேளத்தை அவர் நிராகரிக்கவும் இழிவு என்ற கருத்தே காரணமாக இருந்தது. 


1990களில் அம்பேத்கரின் நூற்றாண்டும், தொல்.திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்றவர்களின் வருகையும் டி.எம்.மணி போன்றவர்களை ஊடக வெளிச்சத்துக்கு வெளியே திருத்தியது. மருத்துவர் ராமதாசுக்கு 'தமிழ்குடிதாங்கி' பட்டம் , தமிழ் தேசியம், தலித்துகளை சுட்டுக்கொன்ற  வி.பு  இயக்கத்துக்கான ஆதரவு, தேர்தல் அரசியல், சாதி மறுப்பு திருமணங்கள் போன்றவற்றை அவர் விமர்சித்ததோடு மட்டுமல்லாமல் இவை யாவும் சாதி ஒழிப்பை வழங்காத தீர்வுகளாக சுட்டிக்காட்டினார். 


இஸ்லாம் மதமாற்றத்தை பரப்பி வந்த  டி.எம்.மணி 2007இல்  டி.எம்.உமர் பாரூகானார். அம்பேத்கர் சொன்னதை போலவே இவரும் 'இந்துவாக சாகவில்லை'. 


1970 தொட்டு 2015 வரையிலான தமிழ்நாட்டின்  தலித் அரசியல் இயக்க  போக்குகளை “ஒரு தலித் போராளி: வாழ்வும்-காட்டிய வழியும்” என்ற இச்சிறு நூல் பேசுகிறது. அ.  மார்க்ஸ் எழுதி இருக்கும் இந்நூலை சீர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. வரலாற்று ஆர்வலர்கள் தவறவிடக்கூடாத நூல் 


பி.கு: இதுவரை நான் வாசித்த நூல்களை வைத்து மட்டுமே இதுமாதிரியான கதையாடலை(Narrative) முன்வைத்துளேன். அன்பர்கள் மேலும் இந்த தலைப்பில் படித்து பார்வையை விசாலமாக்கி கொள்ளவும்.

Comments