The Brief History of a Very Big Book:The Making of the Tamil Encyclopaedia // நூல் அறிமுகம்

 




பலநேரங்களில் தமிழர்களின் லட்சியவாதம் கொண்ட முயற்சிகள் என்னை வியப்பில் ஆழ்த்துபவை. இவற்றுள் தனி மனிதர்களும் குழுக்களும் அடங்குவர். A.S.பன்னீர்செல்வன் எழுதிய கலைஞர் கருணாநிதியின் சுயசரிதையாக இருக்கட்டும்  தொ.மு.சி.. ரகுநந்தன் எழுதிய புதுமைப்பித்தன் சுயசரிதையாக இருக்கட்டும் ஆளுமைகள் பற்றி  அவை ஏற்படுத்தும் தாக்கம் பல நேரங்களில் ஊக்கமளிப்பவை .


 அதை போலவே குழுவாக ஒரு செயலை எடுத்துக்கொண்டு விடாபிடியாக லட்சியத்தோடு முடிப்பதற்கு இதுவரை என் வாசிப்பின் வழியே இரண்டு குழுவினரை கண்டடைந்துள்ளேன். ஒன்று தங்களது இளமை பருவத்தை அடகுவைத்து தேர்தல் அரசியலில் கலந்துகொண்டு 10 ஆண்டுகளில் தனது அண்ணனை முதலமைச்சராக்கிய அண்ணாவின் தம்பிகளை. மற்றொன்று அவினாசிலிங்கம், பெரியசாமி தூரன் ஆகியோர் தலைமையில் அமைந்த கலைக்களஞ்சிய குழுவை. 20 ஆண்டுகள் முயற்சி செய்து ஒரு செயலை வெற்றிகரமாக முடிக்க நமக்கு முந்தைய தலைமுறையிடமிருந்து தான் உத்வேகம் பெற முடியும் போல். 


தமிழ் கலைக்களஞ்சியத்தின் கதை என்ற நூலை வாசித்தபோது எனக்கு வரலாற்றின் மீது ஏற்பட்ட ஆர்வம் சலபதியின் மற்ற நூல்களை படிக்க தூண்டியது.  இன்னும் படித்துக்கொண்டிருக்கிறேன். சமீபத்தில் Permanent black வெளியீடாக தமிழ் கலைக்களஞ்சியத்தின் கதை நூல் ஆங்கிலத்தில் The Brief History of a Very Big Book:The Making of the Tamil Encyclopaedia என்ற தலைப்பில்  வெளியாகி இருக்கிறது. தமிழில் வாசித்த நூலை காட்டிலும் பல புதிய தகவல்களை இந்நூலில் சேர்த்திருக்கிறார் சலபதி. 


சமீபத்தில் பத்ம ஸ்ரீ விருது வாங்கிய எழுத்தாளர்  சிற்பி பாலசுப்ரமணியம் பதிப்பித்த பெரியசாமித் தூரன் நினைவு குறிப்புகள் நூல் புரட்டி கொண்டிருந்தேன். Thamarai Selvan எனக்கு அந்நூலை அன்பளிப்பாக வழங்கினார். அதில் பத்து  தொகுதிகள் கொண்ட கலைக்களஞ்சியம்,  குழந்தைகள் கலைக்களஞ்சியம் போன்றவற்றை மேற்பார்வையிட்டு வெற்றிகரமாக வெளியிட்டும் அவைகளில் ஏற்பட்டுள்ள பிழைகளை நீக்காமல் விட்டதற்காக குற்றவுணர்வு கொள்கிறார் தூரன். கலைக்களஞ்சியம் பற்றிய பல சுவாரசியமான தகவல்களை அந்நூலில் அவர் பகிர்ந்துள்ளார். (இந்நூலுக்கான Supplementஆக வாய்பிருப்போர் வாசிக்கலாம்)


இந்நூலில் Mission Impossible என்று தொடங்கி Bouquets and Brickbats என்று முடியும் அத்தியாய தலைப்புகள் கலைக்களஞ்சிய திட்டத்தின் உள்ளடக்கத்தை சொல்லி செல்பவை. கலைக்களஞ்சிய கதையை தாண்டி இந்நூலில்  பல தனிமனிதர்களை உயிர்த்தெழ வைத்துள்ளார் சலபதி. அகராதி என்று தலைப்பிட்டு மருத்துவத்துறை தகவல்களை கலைக்களஞ்சியமாக வெளியிட்ட  சாம்பசிவம் பிள்ளை அதில் முக்கியமானவர். பாரதி படைப்புகள்  நாட்டுடைமையாக்கத்தில் தெரிந்த அவிநாசிலிங்கனாரின் பாதி முகம் இந்நூலில் முழுதாகியுள்ளது. பெரியசாமி தூரன் என்ற மனிதரும் மிக பெரிய ஆளுமைக்கு சொந்தக்காரராக உயர்ந்து நிற்கிறார். இன்னும் பல கடலுக்குள் கிடக்கும் பனி பாறைகளின் நுனிகளை இந்நூல் நமக்கு அறிமுகப்படுத்துகிறது.   


சிங்காரவேலு முதலியார் எழுதிய அபிதான சிந்தாமணி அனைத்து தரப்பாரிடையும் ஏற்படுத்திய வரவேற்பை இரண்டு எடுத்துக்காட்டுகள் மூலம் விவரிக்கிறார் சலபதி, பெரியாரின் உதவியாளராக மணியம்மையார் இருந்தபோது பெரியார் இந்நூலை அன்பளிப்பாக வழங்கினாராம், முதல் இந்தி எதிர்ப்பில் சிறைசென்ற அண்ணாவின் கையில் அபிதான சிந்தாமணி நூலும் இருந்ததாம். 


இந்த உலகமும், இந்தியாவும், மாநிலங்களும் மிகப்பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகி கொண்டிருந்த காலகட்டத்தில் தான் தமிழ் கலைக்களஞ்சிய பணியும் நடைபெற்றது. உலகப்போர் முடித்து, காலனிய பிடியிலிருந்து நாடுகள் தங்களை விடுவித்துக்கொண்டிருந்த  இந்த காலத்தில் புதிய வரைபடங்களும் மாற்றி அமைக்கப்பட்ட நாடுகளின் எல்லைகளும் உருவாகி கொண்டிருந்தன. சோவியத் ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான பனி போர் உலகளவிலான மாற்றங்களை நிகழ்த்தி கொண்டிருந்தது. இந்தியாவில் இதே காலகட்டத்தில் தான் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன, பிராந்திய அளவிலான இலக்கியங்கள்/மொழிகளின் மீதான அக்கறை கல்வி புலத்தில் எதிரொலிக்க தொடங்கி இருந்தது.  


இந்த காலகட்டத்தில் தான் தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் பெருகி கொண்டே இருந்தது. விளிம்புநிலை மக்கள் சினிமா, நாடகம், வெகுஜன பத்திரிகைகள் மூலம் அரசியலை நுகர தொடங்கி இருந்தனர். சரியாக கலைக்களஞ்சியத்தின் பத்தாம் பாகம் வெளியான போது திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியை பிடித்திருந்தது.

அதன் பின் தூரன் குழந்தைகள் கலைக்களஞ்சிய பணியில் ஈடுபட தொடங்கினார்.


 உலகளவிலும் உள்ளூரளவிலும்  பெரு மாற்றங்கள் நடேந்தேறிய இந்த காலகட்டத்தில் வெளியான தமிழ் கலைகாஞ்சியம் குறைபாடுகள் கொண்ட ஒன்றாகவே இருந்தது . தூரனின் “பிழைகளை சரிசெய்து இருக்கலாமே” என்ற வெதும்பல் இதை நமக்கு உணர்த்துகிறது. ஆனாலும் இத்தகைய பணி வியத்தகு பணியே. 


ஒருபுறம் பாராட்டுகள் குவித்தாலும் கலைக்களஞ்சிய திட்டம் மீது விமர்சனங்கள் எழாமல் இல்லை, “ஒரு சாராரின் ஆதிக்கத்தில் இருக்கிறது, மணிப்பிரவாள எழுத்துக்களை அதிகம் கொண்டதாக உள்ளது, அனைவரது பங்களிப்பையும் உள்ளடக்கிய ஒன்றாக இல்லை, அனைவருக்குமான படிப்பறிவும், கல்வி அறிவும் கிடைக்காமலிருக்கும் காலகட்டத்தில் இதுபோன்ற முயற்சிகளுக்கு நிதியை செலிவிட வேண்டுமா?” போன்ற விமர்சனங்கள் எல்லாம் எழுந்தது.    சில நியாயமான விமர்சனங்களுக்கு கலைக்களஞ்சிய குழு செவிசாய்த்து என்றாலும் பலருக்கும் அது திருப்திகரமானதாக இருக்கவில்லை. 


இந்த திட்டத்தை செயல்படுத்த நிதி திரட்டிய விதமும் சிக்கனமாக செலவிட்ட போக்கும் சமகால பெரும் திட்டங்களை தீட்டுவோருக்கு ஒரு முன்னோடி என்றே சொல்லலாம்.  


20 நூற்றாண்டு தமிழ் அறிவுசமூகம் முன்னெடுத்த பெரும் முயற்சிகளில் இம்முயற்சி குறிப்பிடத்தகுந்த ஒன்று, பதிவு செய்யாமல் விட்டிருந்தால் தெரியாமலே இருந்திருக்கும். தமிழில் ஒரு நூலும் ஆங்கிலத்தில் ஒரு நூலும் எழுதி இதை உலகறிய செய்த சலபதிக்கு தமிழ் சமூகம் கடன் பட்டுள்ளது. 

 

நீண்ட நாட்களுக்கு பிறகு Index  வைத்த ஒரு ஆங்கில நூலை படித்திருக்கிறேன், ஏனோதானோ எது பதிப்பிக்கப்படும் புத்தகங்களுக்கு இடையில் இந்த நூல் நேர்த்தியாக பதிப்பிக்கப்பட்டு வெளியாகியுள்ளது. பின்னிணைப்பாக தமிழ் கலைக்களஞ்சிய குழுவினருக்கும் Orient Longsmanபதிப்பகத்தாருக்கும் இடையில் போடப்பட்ட ஒப்பந்தம் ஒன்றும் இடம்பெற்றிருக்கிறது.    


 இதுபோன்ற ஒரு கலைக்களஞ்சிய முயற்சி தமிழ் சூழலில் வெற்றிகரமாக  நடைபெற்றுள்ளது என்பதே கர்வத்திற்குரிய ஒன்று. 


அகங்காரத்தால் போட்டி விக்கிபீடியா தொடங்கும் இக்காலகட்டத்தில் வேறுபட்ட சிந்தனைகளை கொண்டிருந்தவர்கள் ஓரிடத்தில் சங்கமித்து சாத்தியப்படுத்திய கலைக்களஞ்சிய பணியை வியக்காமல் இருக்கமுடியவில்லை.    


இந்த நூலை படித்து முடித்துவிட்டு, கலைக்களஞ்சியத்தை  Tamildigital libraryஇல் தேடி கொண்டிருந்தேன் சில பக்கங்களை புரட்டியும் கொண்டிருந்தேன் நூலை படித்த வியப்பு கொஞ்சமும் அடங்காமல் கண்கள் விரிந்தபடி கலைக்களஞ்சியம் எனக்குள் ஏதோ செய்துகொண்டிருந்தது .  


A.r. Venkatachalapathy 


😍

Comments