Are Consultants a solution for Governance?

  




 தமிழ்நாடு அரசின் பெரும்பாலான திட்டங்கள் NGOகள் மூலமும் ஆலோசனை நிறுவனங்கள்(Consultancies) மூலமும் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுபவை. குறிப்பாக  பள்ளி கல்வி துறையின் முக்கிய திட்டங்களான 

1.எண்ணும் எழுதும் திட்டம்(மதிப்பு: 500 கோடி) மற்றும் Tamilnadu education fellowship ஆகிய திட்டங்கள் மதி என்ற NGO மூலம் செயல்படுத்த படுகிறது.

2.The education Alliance என்ற NGO 2018 முதல்  பல்வேறு பள்ளிகளிக்கும் NGOகளுக்குமான பிணைப்பை மேலாண்மை செய்யும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது.  

3.TN Green Fellowship என்ற திட்டம் Bharatidasan Institute of Management மூலம் செயல்படுத்தப்படுகிறது. 


இவை  தவிர்த்து அனைத்து துறைகளிலும் ஏதோ ஒரு வகையில் தனியாரின் பங்களிப்பு ஆலோசகர் என்ற பெயரிலும் திட்ட செயலாக்கத்தின் பொருட்டும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அரசு எந்திரம் முழுவதுமே Outsource செய்யப்பட்ட மேலாண்மை ஆலோசகர்களாலும், தொழில்நுட்ப வல்லுனர்களாலுமே செயல்பட்டு வருகிறது. அரசு அதிகாரிகளின் பங்களிப்பு நிர்வாகத்திலும் ஆட்சி முறையிலும் குறைந்து கொண்டே இருக்கிறது. இந்த போக்கு புதிய பொது மேலாண்மை(New Public Management) என்று அழைக்கப்  படுகிறது. அரசின் செயல்பாடுகளில் திறன் குறைவாக இருப்பதாக கூறி தனியாரின் பங்கேற்பு அரசுத்துறை செயல்திறனை(Efficiency) கூட்டும் என்ற ரீதியில் இது நியப்படுத்த படுகிறது. இத்தகைய போக்கு பல்வேறு சிக்கல்களை கொண்டிருக்கிறது. 


சில நாட்களுக்கு முன்பு Jeyannathann Karunanithi எனக்கு “Are Consultants a solution for Governance?” என்ற தலைப்பிட்ட கட்டுரை தொகுப்பை பகிர்ந்திருந்தார். புதிய பொது மேலாண்மை(NPM) பற்றிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு அது. ஆய்வு கட்டுரைகள், செய்தி கட்டுரைகள், நிபுணர்களின் அபிப்ராயங்கள், Case Study ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தொகுப்பாக இது அமைந்திருந்தது. இக்கட்டுரை இந்த தொகுப்பினை அடிப்படையாக வைத்து எழுதப்படுகிறது. இந்த தொகுப்பின் மைய கருவினை தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டு  சுருக்கமா பிரதிபலிக்க(Reflect) இக்கட்டுரை முற்படுகிறது. 


எஸ். நாராயணன் தனது “The Dravidian Years” புத்தகத்தில் திராவிட ஆட்சியின் பலமே அரசு நிர்வாகத்தில் அரசியல்வாதிகளின் பங்கேற்பு தான் என்று கூறி இருப்பார். இங்கு மக்களுக்கு நெருக்கமானவர்களாக அரசியல்வாதிகளே இருக்கிறார்கள். ஒரு சிக்கலுக்கு தீர்வு காண அரசியல்வாதிகளை அணுகினால் போதும் என்ற பொது புத்தி இன்றளவும் மக்கள் மனதில் பதிந்துள்ளது. இதன் காரணமாகவே அரசியல்வாதிகளிடம் மனுக்கள் அதிகளவில் அளிக்கப்  படுகின்றன.


 தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தில் அரசியல்வாதிகளின் பங்கேற்பு என்பது மக்கள் நல திட்டங்களை திறம்பட சொல்லப்படுத்த  உதவி உள்ளது. 1996-2002 முதலான காலகட்டம் ஒரு அரசின் நிர்வாக திறமைக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது, அரசு நிர்வாகத்தில் அரசியல்வாதிகளின் பங்கேற்பு இதற்கான காரணமாக சொல்லப்படுகிறது. ஒரு மாவட்ட செயலாளர் மாவட்ட ஆட்சியருக்கு இணையான அதிகாரத்தையும், பொறுப்புணர்வையும் கொண்டிருக்கிறார். இதனால் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவது அவரது பொறுப்பு மற்றும் அதிகாரத்தை  நிருபிக்க அவசியமான ஒன்றாக இருக்கிறது.  


1940 முதலே அமெரிக்கா போன்ற நாடுகளிலும், ரொனால்ட் ரெகன் , மார்கரெட் தட்சர் காலத்தில் ஐரோப்பாவிலும், 1990களுக்கு பிறகு உலகின் பிற பகுதிகளிலும் ஆலோசகர்கள் மற்றும் ஆலோசனை நிறுவனங்களின் செல்வாக்கு அரசு நிர்வாகத்தில் அதிகரிக்க தொடங்கியது. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தொழில்நுட்ப வல்லுனர்களின்(Technocrats) தேவையை அரசுக்கு உணர்த்தியது. இந்த சேவைகளை எல்லாம் அரசு குறைந்த செலவில் Outsource செய்ய முடிவெடுத்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அரசு நிர்வாகத்தில் ஆலோசர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி அரசின் கணிசமான நிதியை விலையாக கேட்டது. அரசும் வேறு வழியின்றி இந்த நிறுவனங்களுக்கே பணத்தை கொடுத்து ஆலோசனைகளையும் சேவைகளையும் பெற்று வந்தது. அரசு நிர்வாகத்தின் திறனை இது அதிகரித்துள்ளது என்பது போன்ற வெற்று கதையாடல்கள் கட்டமைக்கப்பட்டாலும் அரசு நிர்வாகம் கொண்டிருந்த பொறுப்பையும்(accountablity) அரசியல்வாதிகள் கொண்டிருந்த பொறுப்புணர்வையும் முற்றிலும் நிராகரித்தது. 


ஒரு தனியார் அமைப்பு அரசு செயல்படுத்தும் திட்டங்களை இடையீடு செய்தால் ஏற்படும் பல்வேறு போதாமைகளை இந்த புதிய பொது மேலாண்மை கொண்டிருக்கிறது.  மக்கள் நல திட்டங்கள் மீது அரசு திறம்பட செயல்படுத்தவேண்டிய பொறுப்பை இந்த NPM(New Public Management) வெகுவாக குறைத்தது. அனைவரும் அணுகும்(Knowledge Accessibility) வகையில் இருந்த தகவல்களை ஒரு தனியார் அமைப்பிடம் அடகு வைப்பதன் மூலம் ஒரு  தகவலை பொது மக்களுக்கு அணுக்கமற்ற ஒன்றாக மாற்றுகிறது NPM. அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இருக்கும் கடமையை இத்தகைய ஆலோசனை நிறுவனங்கள் முற்றிலுமாக தட்டி கழிகின்றன. ஒரு திட்டம் சரியாக செயல்படாமல் இருக்கும்பட்சத்தில் அரசும், அந்த திட்டத்தை செயல்படுத்திய  தனியார் ஆலோசனை அமைப்பும் எந்த வகையிலும் பொறுப்பேற்க்கும் அவசியம் ஏற்படுவதில்லை. மேலும் அரசியல் வர்க்கம் கொண்டிருக்கு ஜனநாயக அதிகாரத்தை ஏதுமற்ற ஒன்றாக இந்த NPM மாற்றுகிறது. தற்காலிக தீர்வுகளை மட்டுமே அளிக்கும் இதுபோன்ற ஆலோசனை நிறுவனங்கள் அரசு நிறுவகத்தின் நீண்டகால தன்மையை குறைத்து தற்காலிக தீர்வுகளை வழங்கும் அமைப்பாக அரசு அமைப்பை மாற்ற முயல்கிறது.  


நவதாராளவாதத்தின்(neo-Liberalism) ஒரு அங்கமாகவே இந்த புதிய பொது மேலாண்மையை பார்க்கவேண்டி இருக்கிறது. ஒரு காலத்தில் மானுட நிலைமைகளை(Human Conditions) முன்னேற்ற வேண்டும் என்ற இலட்சியத்தை கொண்டிருந்த துறைகள், தற்போதைய காலகட்டத்தில் வெறும் திறன் உயர்த்த பாடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. மானுட நிலைமைகள் மீது எந்த அக்கறையுமற்ற வெறும் மேலாண்மையை மட்டும் நோக்கமாக கொண்ட ஆலோசனை நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் வருகைக்கு இதை மேலும் குறைக்கவே செய்திருக்கிறது. 


உலகம் முழுக்க இருக்கும் அரசுகள் புதிய பொது மேலாண்மையை செயல்படுத்தவும் ஆலோசகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை outsource செய்யவும் பல லட்சம் கோடிகளை செலவழித்து வருகின்றன.  PricewaterhouseCooper(PwC), Deloitte, Ernst & Young(EY), KPMG, BCG & Bain, McKinsey & Company போன்ற சர்வதேச ஆலோசனை  நிறுவனங்கள் இந்தியாவிலும் காலூன்றி செயல்பட தொடங்கி இருக்கின்றன. FY16இல் மட்டும் கிட்டத்தட்ட 750 கோடி ரூபாய்க்கும் மேல் இதற்காக இந்திய ஒன்றிய அரசு செலவளித்துள்ளது. இன்றைக்கு அனைத்து துறைகளிலும் ஊடுருவி இருக்கும் இதுபோன்ற நிறுவனங்களுக்காக அரசு செலவழிக்கும் தொகை நாம் நினைப்பதை விட அதிகமாக இருக்கும் என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம்.  


தமிழ்நாடு போன்ற அரசியவாதிகளின் தலையீடு அரசு நிர்வாகத்தில் அதிக அளவில் இருக்கும் மாநிலங்களில் இது போன்ற தற்காலிக தீர்வுகளை அளிக்கும் நிறுவனங்களின் வருகை முற்றிலுமாக இங்கிருக்கும் கட்டமைப்புகளை சிதைக்கவே செய்யும். பொறுப்பற்ற அரசு நிர்வாகத்திற்கே இதுபோன்ற நடவடிக்கைகள் வழிவகுக்கும். தற்காலிகமாக அதாவது அரசு காசு கொடுக்கும் வரை ஆலோசனைகளை வழங்கிவிட்டு நீண்டகால தீர்வுகளை வழங்காமல் இந்நிறுவனங்கள் விலகி கொள்ள கூடும். இதை எல்லாம் தாண்டி உண்மையிலயே இந்நிறுவனங்கள் நிபுணத்துவம் கொண்டவையா? என்ற கேள்வியும் எழுகிறது. ஏற்கனவே இருக்கும் அனுபவத்தின் அடிப்படையில் ஆலோசனை நிறுவனங்களின் ஆலோசனைகளுக்கு அரசு செவி சாய்க்குமானால் அதை விட கண்மூடித்தனம் ஏதாவது இருக்க முடியுமா?  


சமகாலத்தில் ஆலோசனை நிறுவனங்களின் தேவை இல்லையா என்றால் நிச்சயம் இருக்கிறது, தொழில்நுட்ப வல்லுனர்களின் தேவை அரசுக்கு அவசியம் தேவை படுகிறது. ஆனால் அவற்றை ஒரு நிரந்தர சிந்தனையாக அரசு யோசிக்க வேண்டும். Outsource செய்யாமல் அரசு அதிகாரிகளின் திறனை மேம்படுத்த, அல்லது அத்தகைய நிபுணத்துவம் பெற்றவர்களை நிரந்தரமாக பணியில் சேர்க்க அரசு முயல வேண்டும். அரசு நிர்வாகத்தின் நிரந்தர அங்கமாக இத்தகைய நிபுணர்கள் இருக்க வேண்டும். NPM தவிர்க்கமுடியாத சக்தியாக வளர்ந்திருந்தாலும், இதுபோன்ற அமைப்புகள் மீது அரசு கொண்டிருக்கும் அதீத சார்பு  எதிர்காலத்தில் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். 


Comments