மயிர் தான் பிரச்சினையா?

 




 நான் பள்ளி படிப்பை முடித்து 7  ஆண்டுகளும், கல்லூரி படிப்பை முடித்து 3 ஆண்டுகளும் ஆகிறது. பள்ளி படிப்பு முழுவதும் தனியார் பள்ளிகளிலும் கல்லூரி படிப்பை அரசு கல்லூரியிலும் படித்தேன். இரண்டாண்டுகள் நாமக்கல் பள்ளி வாழ்க்கையையும் அனுபவித்திருக்கிறேன். இந்நூலில் உள்ள கட்டுரைகளை படிக்கும்போது என்னால் என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை குறித்தான அனுபவங்களை அசைபோட முடிந்தது. இப்போது யோசித்து பார்த்தால் இதிலுள்ள கட்டுரைகளை எல்லாம் படித்துவிட்டு மனதளவில் சில மாற்றங்களுக்கு உள்ளாகும் ஆசிரியர்களாக ஒரு 3 பேர் தான் நினைவுக்கு வருகிறார்கள். அனேகமாக இன்றைக்கு இருக்கும் ஆசிரியர் தலைமுறை எவ்வித மாற்றங்களையும் விரும்பாத ஒன்றாக மாறிப்போய் உள்ளது என்றே தோன்றுகிறது. பெருமாள்முருகன், ஆ.இரா. வேங்கடாசலபதி போன்றவர்கள் விதிவிலக்கு. 


 Paulo Freire  எழுதிய 'Pedagogy of the Oppressed'  நூலை வசித்தபோது கல்வி குறித்தான ஒரு மாறுபட்ட பார்வை உருவானது. கல்வி என்பது ஒரு வழியில் அளிக்க கூடியது அல்ல, அது இருவழியிலானது. தனக்கு மட்டும் அனைத்தும் தெரியும் என்ற ஆசிரிய மனநிலை சரியான கல்வியை மாணவருக்கு கடத்தாது. அத்தகைய கல்வி ஒடுக்கும் ஒன்றாக தான் இருக்குமே ஒழிய ஒடுக்குமுறைக்கு எதிரான ஒன்றாக, சுய சிந்தனையை ஊக்குவிக்கும் ஒன்றாக நிச்சயமாக இருக்காது என்பதை அந்நூல் அழுத்தமாக பதிவுசெய்யும். தமிழ்நாட்டில் “அறிவொளி இயக்கம்” நடைமுறையில் இருந்த சமயத்தில் அந்நூல் மிக பரவலாக படிக்கப்பட்டு அதிலுள்ள கருத்துக்கள் செயல்படுத்தவும் பட்டுள்ளதை ஒரு ஆய்வு நூலில் படித்திருக்கிறேன் . 


இப்போது யோசித்தால் நான் பள்ளி கல்லூரிகளில் பயனுள்ள விஷயங்களை கற்று கொண்டதைவிட வெளியில் வந்த பிறகான இந்த 3 ஆண்டுகளில் தான் அதிகம் கற்றுக்கொண்டதாக உணர்கிறேன். நமது கல்வி துறையில் பாடத்திட்டம் முதற்கொண்டு கற்றல் முறை வரை பல குறைபாடுகள் இருக்கவே செய்கிறது. இந்நூல் அதில் முக்கியமான சில பிரச்சனைகளை பேசுகிறது. ஒரு கல்லூரி பேராசிரியர் இந்நூலை எழுதி இருப்பதும் அவர் மாற்றங்களை விரும்பும் ஒருவாராகவும் புதிய சிந்தனைகளை விரும்பும் ஒருவராகவும் இருப்பது இந்த கட்டுரைகளில் வெளிப்படுகிறது. 


சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான 'மயிர்' தான் பிரச்சினையா என்ற தலைப்பு  நூலில் தலைப்பாகவும் அமைந்திருக்கிறது.  அடைப்புக்குறிக்குள் (கல்விசார் கட்டுரைகள்) என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கி பொறியியல் கல்லூரி சிக்கல்கள் மருத்துவ கல்லூரி கலந்தாய்வு சிக்கல்கள், AYUSH மருத்துவ படிப்புகளுக்கு அரசு காட்டும் பாரபட்சம், Hand cricket , தாய் மொழி கல்வி, ஆன்லைன் தேர்வு முறை, ஆசிரியர்களின் அதிகாரம், ரோஹித் வெமுலா குறித்த நினைவுகள், JNU மாணவர் முத்துகிருஷ்ணன் குறித்தான கட்டுரை,சமச்சீர் கல்வி  என இந்நூல் பல முக்கிய கல்வியியல் சிக்கல்களை விரிவாகவே பேசுகிறது. 2009 இல் எழுதிய கட்டுரைக்கான தீர்வை 2023 கூட நாம் எட்டியதாக தெரியவில்லை. பல விஷயங்களில் தேங்கியே இருக்கிறோம். தமிழ்நாட்டில் புதிய கல்வி கொள்கை வகுக்கும் குழுவில் இந்நூல் ஆசிரியர் போன்ற சிந்தனையை  கொண்ட ஒருவர் இடம்பெற்றிருந்தால் கூட நம்பிக்கையாக இருக்கும். 


தமிழ்நாட்டில் அனைத்து துறை கல்வி என்பதும் ஒருவித தேக்க நிலையை அடைந்துள்ளதாகவே தெரிகிறது. சொல்லிக்கொள்ளும் அளவிலான சமுகவியல், அரசியல் அறிவியல், பொருளியல் ஆய்வுகள் இங்கு நடைபெறவில்லை . சகட்டு மேனிக்கு திறந்துவிடப்பட்ட பொறியியல் கல்லூரிகள் ஓரளவுக்கான பொருளியல் வளர்ச்சியை முதல் தலைமுறை பட்டதாரி குடும்பங்களுக்கு வழங்கி இருந்தாலும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு என்று பார்க்கும்போது சுழியம்.


 இங்குள்ள கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆய்வின் மீதோ  ஆராய்ச்சியின் மீதி பெரிய அக்கறை எல்லாம் இருப்பதாக தெரியவில்லை பிறகெப்படி மாணவர்களுக்கு அந்த அக்கறை வரும்? ஏதோ ஒரு இடத்தில நமது கல்வி துறையில் தவறு நடந்துள்ளது அந்த தவறுகள் எல்லாம் ஒன்றுகூடி இதுபோன்ற செயலற்ற நிலையை உருவாக்கி இருக்கிறது. இதிலிருந்து மீள மீண்டும் ஆரம்பத்தில் இருந்து சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. அதற்கு ஒரு நிலையான அரசியல் சூழலும், நிபுணத்துவம் பெற்ற ஒரு கல்வி கண்காணிப்பு குழுவும் தேவைப்படுகிறது. 


அரசு மீண்டும் மீண்டும் நிபுணர்களை விட்டுவிட்டு NGOகளை நோக்கியே தனது கவனத்தை குவிக்கிறது. NGOகளால் தற்காலிக தீர்வுகளை தான் அளிக்க முடியுமே ஒழிய ஒரு சிக்கலின் அடிநாதத்தை அறிந்து அதற்கான நிரந்தர தீர்வுகளை முன்வைக்க அவர்களால் முடியாது. தமிழ்நாட்டு கல்வி துறைக்கு தற்போதைய தேவை நிரந்தர தீர்வுகள் தானே ஒழிய தற்காலிக தீர்வுகள் அல்ல. 


இந்நூலில் உள்ள கட்டுரைகள் போலவே ஓராயிரம் கட்டுரைகளை தமிழ்நாட்டு கல்வி சூழல் குறித்து எழுதலாம், ஆனால் ஆதற்கான தீர்வுகள் மட்டும் கிடைக்காமலே இருக்கிறது. ஆசிரியர்களிடத்திலும் எவ்வித மாற்றமும் தென்படுவதில்லை, பொறுப்பற்ற ஆசிரியர் சமுதாயம் “பொறுப்பற்ற மாணவர் சமுதாயமே” என்று திட்டி கொண்டிருப்பது தான் இன்றைக்கு நமது கல்வித்துறை அடைந்திருக்கும் இடம். 


இப்போதும் தொலைதூர கல்வியை பயின்று கொண்டிருக்கும் ஒரு மாணவ மனநிலையுடனே இருக்கிறேன். 'தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்'  என்ற பாடல் வரிகளை தமிழ்நாடு மெய்ப்பித்து விட்டது. இப்போது அடுத்த நிலைக்கு நகரவேண்டிய காலகட்டம், அரசும் அரசை சுற்றி இருக்கும் அதிகார வர்க்கமும் அடுத்த நிலையை சாத்திய படுத்துமாக. 


இதுபோல் இன்னும் ஒரு நூறு கட்டுரைகளாவது பெருமாள்முருகன் எழுதவேண்டும் என்பது தான் நான் அவருக்கு வைக்கும் அன்பு கோரிக்கை. விருப்ப ஓய்வு இதுபோன்ற கட்டுரைகளுக்கு வித்திடட்டும். 


கல்வியியல் சீர்திருத்தத்தில் அவர் தனியாக இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை நினைவூட்டி இந்நூலை அனைவர்க்கும் பரிந்துரைக்கிறேன். வாசித்து விவாதிப்போம். 





Comments

  1. அப்படியானால் திருமணம் செய்வோர்க்கு வயது தான் பிரட்சனையா என ஏன் ஐயா கேட்கவில்லை. காலத்திற்கு ஏற்றார் போல அதையும் மாற்றிவிடலாமே ஐயா

    ReplyDelete

Post a Comment