தமிழ்நாடு சட்டப்பேரவை யார்-எவர் ?

  





 திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ் மொழி சீர்திருத்தத்திலும்  அதனை  மக்கள்மய படுத்துவதிலும் எத்தகைய அக்கறையை கொண்டிருந்தது என்பதற்கு ஒரு சிறு செய்தி போதும். 

1957 தேர்தல் முதல் ‘Who is Who?’ என்று ஒரு ஆவணம் சட்டமன்ற துறை(Legislature Department) மூலமாக வெளியிடப்பட்டு வந்தது. அது சட்டப்பேரவை உறுப்பினர்களின் தனிப்பட்ட தகவல்களை கொண்ட ஒரு ஆவணமாக இருந்தது. அவர்கள் பிறந்த ஊர், பிறந்த தேதி,  பிடித்த பொழுதுபோக்கு, விருப்பமுள்ள செயல், தொழில், அதற்கு முன் அவர்கள் பணியாற்றிய துறை, மக்கள் சேவை, உறுப்பினர் முகவரி  போன்ற தகவல்கள் எல்லாம் அந்த ஆவணத்தில் இடம்பெற்றிருந்தது. அந்தந்த சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் பெறப்பட்ட தகவல்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு ஆவணமாக தான் இதை பார்க்கவேண்டி இருக்கிறது. 1967வரையிலும் இந்த ஆவணம் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிடப்பட்டு வந்தது. உறுப்பினர்களின் பெயருக்கு முன்னாள் ‘ஸ்ரீ’ என்ற கிரந்தை எழுத்தே பயன்படுத்தப்பட்டு வந்தது. 

1967 திராவிட முன்னேற்ற கழக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றதும் இதே ஆவணம் ‘தமிழ்நாடு சட்டப்பேரவை யார்-எவர் ?’ என்ற பெயரில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியாக தொடங்கியது. இந்த ஆவணத்தில் உறுப்பினர்களின் பெயருக்கு முன் ‘திரு’ என்ற தமிழ் சொல் பயன்படுத்த பட்டுள்ளது. 

மேலும் இந்த காலகட்டத்தில் தான் ஒன்றிய திட்ட குழுவின் அதிகாரபூர்வ இதழான Yojana இதழ் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ‘திட்டம்’ என்ற பெயரில் வெளிவர தொடங்கியது. இன்றுவரை இந்த இதழ் வெளியகி கொண்டிருக்கிறது. 

இதே காலகட்டத்தில் தான் மால்கம் ஆதிசேஷையாவின் முயற்சியில் UNESCOவின் அதிகாரபூர்வ இதழான Courier இதழ்(ஆசிரியர்: மணவை முஸ்தபா) தமிழ் மற்றும் இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாக தொடங்கி இருக்கிறது. ஒரு கட்டத்திற்கு பிறகு இந்த இதழ் நிதி பற்றாக்குறையினால்  நின்றுபோனது வருந்தத்தக்க செய்தி. 

1967 என்பது அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் மொழியியல் ரீதியாகவும் பல சீர்திருத்தங்கள் மற்றும் புதுமைகளின்  தொடக்க காலமாக அமைந்தது.

Comments