இந்திய இலக்கியச் சிற்பிகள் சுந்தர ராமசாமி

  






இலக்கியம் படிக்கும் நண்பர்கள் ‘ஜே.ஜே சில குறிப்புகள்’ நூல் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது எனக்கு சுந்தர ராமசாமி அறிமுகமானார். அது பெயரளவிலான அறிமுகம்தான். சலபதி எழுதிய “Tamil Characters” நூலில் இடம்பெற்ற ‘Sundara Ramasamy: Arch Modernist’ என்ற கட்டுரை சு.ரா பற்றிய கோட்டோவிய சித்திரத்தை எனக்குள் வரைந்தது. அன்று தொடங்கி சு.ராவின் எழுத்துக்களை படித்து வருகிறேன். ஜே.ஜே சில குறிப்புகளில் தொடங்கியது சு ரா உடனான எனது பயணம். சுந்தர ராமசாமி கவிதைகள், காற்றில் கலந்த பேரோசை, சுந்தர ராமசாமி சிறுகதைகள், நானும் என் எழுதும் ஆகிய நூல்கள் தற்போது  வாசிப்பில் இருப்பவை. எனக்கு சு.ரா எழுத்து வகைமையில் பிடித்தது அவரது கட்டுரைகள். ஆழ அகலம் கொண்ட வாசிக்க சுகமான எந்தவித சிரத்தையும் வேண்டி நிற்காத கட்டுரைகள் அவை. ‘கலைகள், கதைகள், சிறுகதைகள்’ என்ற கட்டுரை எனக்கு மிக பிடித்த கட்டுரைகளுள் ஒன்று. அப்படி ஒன்றாவது வாழ்நாளில் எழுதிவிட வேண்டும் என்று நினைத்ததுண்டு. 


சென்னை புத்தக கண்காட்சியில் சாகித்ய அகாடமி அரங்கில் புத்தகங்களை நோட்டம் விட்டுக்கொண்டிருக்கும்போது இந்திய இலக்கியச்  சிற்பிகள் என்று தலைப்பிட்ட பல்வேறு ஆளுமைகள் பற்றிய புத்தகங்களை பார்க்கமுடிந்தது, விலையும் 50 ருபாய் என்று நிர்ணயம் செய்ய பட்டிருந்தது. இது தான் வாய்ப்பு என்று 5ஆளுமைகள் பற்றிய புத்தகங்களை மற்றும் தேர்ந்தெடுத்தேன். அதில் முதலாமவர் சுந்தர ராமசாமி, அரவிந்தன் அந்நூலை எழுதி இருந்தார். 


இரண்டு நாட்களுக்கு முன் படிக்கலாம் என்று எடுத்தேன், முதல்நாளே 80 பக்கம் கடக்கும் அளவுக்கான  தன்மையினை அந்நூல் கொண்டிருந்தது. ஒரு இலக்கிய ஆளுமை பற்றியும் அவரது படைப்புகள் குறித்தும் ஒரு சிறு அறிமுகத்தை விறு விறு நடையில் எழுதி இருந்தார் இந்நூல் ஆசிரியர். சு.ரா சிறுகதைகளை நான் வரிசையாக படித்து  வருவதால் இதுவரை நான் வாசித்தவற்றுள் எனக்கு மிக பிடித்தது ‘அக்கறை சீமையில்’  என்ற சிறுகதை தான், அந்த கதை எனக்கு புதுமைப்பித்தனின் துன்பக் கேணியை நினைவூட்டியது. ‘பொறுக்கி வர்க்கம்’ என்ற கதையும் ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது.  கவிதைகளில் பல கவிதைகளை அடிக்கடி  எடுத்து படித்துக் கொள்வேன். கடற்கரைக்கு செல்லும்போதெல்லாம் என் பையில்  சு.ராவின் கவிதை நூல் இருக்கும். கவிதைகள், சிறுகதை பற்றி எல்லாம் அரவிந்தன் எழுதும்போது அதில் ஒரு ஆழமான வாசிப்பும் ரசனையும் வெளிப்படுகிறது. பல சிறுகதைகளை Highlight செய்தும் வைத்துக்கொண்டேன். அவரது சிறுகதையின் நடையில் உள்ள மாற்றத்தை மூன்று பகுதியாக பிரித்து விளக்கிய விதம் அருமையாக இருந்தது. 


பெரும்பாலான வாழ்க்கை வரலாறு நூல்கள் அமைந்த பாணியிலேயே இந்நூலும் அமைந்திருந்தது என்றாலும், சு.ரா எழுதிய நாவலங்கள் குறித்து இடம்பெற்றிருந்த நெடுங் கட்டுரைகள் அந்த நாவலின் முழு கதையையும் நமக்கு தெரிவிக்கின்றன. நாவல் வாசித்தவர்களுக்கு இதில் எவ்வித சிக்கலும் இருக்க வாய்ப்பில்லை ஆனால்  சு.ரா பற்றி படிக்கும் ஒரு ஆரம்பகட்ட வாசகருக்கு அப்படைப்பின் மீதுள்ள ஆர்வம் இதனால் குறையுமோ என்ற எண்ணத்தை இக்கட்டுரைகள் ஏற்படுத்தின. மற்றபடி நூல் இறுதிகட்டத்தை நெருங்கும்போது அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தான பகுதிகளை படிக்கும்போது ஒரு வசீகரிக்கும் ஆளுமையாகவே சு.ரா தென்படுகிறார்.


தனது 20 வயதில் தமிழ் கற்று ஆழமாக வாசிக்க தொடங்கி பின்னர் தமிழ் இலக்கிய சூழலில் தனக்கான ஒரு இடத்தை உருவாக்கி கொண்டு இடையில் சில காலம் எழுதாமல் விட்டு பின்னர் மீண்டும் எழுத்து பேச்சு இதழியல்  என எல்லா வகையிலும் ஒரு முத்திரையை பதித்தவர் சு.ரா. இன்றைக்கும் அவரது படைப்புக்களை விரும்பி வாசிக்கும் என் போன்ற வாசகர்களே அவரது சமகால பொறுத்தப்பாடுக்கு எடுத்துக்காட்டு. 


தன் வாழ்நாள் முழுதும் ‘காலம்’ குறித்தான பெரும் கவலையை அல்லது அக்கறையை சு.ரா கொண்டிருந்தார்  என்று  அரவிந்தன் எழுதும்போது எனக்கு இது தான் தோன்றியது. தேடல் நிறைந்த மனிதனுக்கு காலம் குறித்த அக்கறை நிரம்பவே இருக்கிறது. அவன் துடிப்பாக இயங்க வெளியை விட காலம் உகந்த ஒன்றாக இருக்கிறது. தீர்மானித்து ஒரு செயலை முடிக்கவேண்டும் என்ற லட்சியம் காலத்தின் மீது அக்கறை கொண்ட தேடல் நிறுத்த ஒருவனுக்கு இருப்பது இயல்பு என்றே நினைக்கிறேன். மேலும் இந்த அக்கறையை அனைவரும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தோன்றுகிறது. 


128 பக்கங்களில் சு.ரா பற்றிய வரலாற்றை அறிந்துகொள்ள இந்நூல் பெரிதும் உதவும். சலபதியின் கட்டுரை ஒரு கோட்டோவியதை எனக்குள் ஏற்படுத்தியது என்றல் அரவிந்தனின் இந்நூல் அந்த கோட்டோவியத்திற்குள் சில பகுதிகளை நிரப்பி உள்ளது. இந்த ஓவியம் முழுமையடைவது இனி என் வாசிப்பை பொறுத்தே இருக்கிறது.  


வாய்ப்பும் ஆர்வமும் இருக்கும் நண்பர்கள் அவசியம் வாசிக்கலாம். 

Comments